-முனைவர் என்.பத்ரி, கல்வியாளர், மதுராந்தகம்-603 306.
’இளமையில் வறுமை கொடிது’என்கிறார் ஔவையார். ஆனால் சமீப காலங்களில் சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பச்சிளங்குழந்தைகள் கூட ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பிறந்த சில மணித்துளிகளிலேயே திருடப்பட்டு முன்பின் தெரியாதவர்களிடம் ஒரு வணிகப்பொருளாக விற்கப்படுவதும் வாடிக்கையாகி கவலை தருகிறது. உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் கடவுளின் அற்புத படைப்புகளே. தாய்மை என்பது ஒரு தவம். ஒரு குழந்தையை தீண்டும்போது நம் மனமும், உடலும் பரவசம் அடைவது உண்மையே. குழந்தைகள் நம் நாட்டின் எதிர்கால தலைவர்கள்.நன்கு வார்க்கப்பட்டு வளர்க்கப்படவேண்டியவர்கள். அப்போதுதான் எதிர்கால சமூகம் சிறப்பாக இருக்கும்.சட்டங்கள் அனைத்து குழந்தைகளும் அனைத்து உரிமைகளையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.ஆதரவற்ற குழந்தைகளை ,குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர் தத்து எடுத்து வளர்ப்பது சமீபகாலங்களில் சமூகத்தில் பரவலாக காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால் தத்து எடுப்பதில் நடைமுறைசிக்கல்கள் பல உள்ளன. குழந்தைகளை தத்து எடுக்கும் வழிமுறைகளில் குழந்தையின் பெற்றோர்களிடம் இருந்து முறைப்படி நேரடியாக பெறுவது, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆதார மையத்தின் மூலம் ’இணையத்தில்’ பதிவு செய்து குழந்தைகளை தத்து எடுப்பது ஆகிய வழிமுறைகள் நடப்பில் உள்ளன.
குழந்தைகள் நலன் ஒரு நாட்டின் பண்பாட்டினை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். நமது இந்திய பண்பாட்டின் பெரிய பலமும், அடித்தளமும் குழந்தைகளும், குடும்ப அமைப்பும்தான்.இது உடைந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை திருமணஉறவின் மூலம் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே எடுத்துக்கொள்கிறார்கள். குடும்ப அமைப்பில் சுயக்கட்டுப்பாட்டும் ஒழுக்கமும், அன்பும் ஊட்டப்பட்டு ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்படுகிறார்கள்.ஆனால் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இவை வாய்ப்பதில்லை. நம் நாட்டில், ஏறத்தாழ 30 லட்சம் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் கூறுகிறது. இதில் 4.70 லட்சம் குழந்தைகள் அரசின் காப்பகங்களில் இருப்பதாக இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது.
ஆதரவற்ற குழந்தைகளை கண்டெடுப்பவர்கள் முறையான வழிமுறைகளை அறிந்தவர்களாக இருந்தால், அவர்களை அரசு அல்லது தனியார் காப்பகங்களில் ஒப்படைப்பது வழக்கம். இவ்வாறு சேர்க்கப்படும் குழந்தைகள், அந்த மையங்களில் அறுபது நாட்கள்வரை தங்க வைக்கப்படுகிறார்கள். அந்தக் கால அவகாசத்திற்குள் யாராலும் உரிமை கொண்டாடப்படாத குழந்தைகள் அரசு தத்தெடுப்பு நிறுவனங்களில் சேர்க்கப்படுகிறார்கள். நடைமுறையில், அதற்கு பிறகு அந்த குழந்தைகளை ` அரசு தத்தெடுப்பு வள ஆதார மையத்தின்’ சட்ட விதிமுறைகளைப் பின்பற்றித்தான் எவரும் தத்து எடுக்க முடியும். குழந்தைகளை குற்ற சம்பவங்களுக்காக கடத்துவது, தனிப்பட்ட நபர்கள் ஆதரவற்ற குழந்தைகளை இன்னொருவருக்கு தத்து கொடுப்பது, முறைகேடாக விற்பது போன்றவற்றை தடுக்க சட்டத்தில் வழிகள் செய்யப்பட்டுள்ளன.
தத்து எடுப்பவர்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கண்டறிந்த பின்னரே குழந்தைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்கள். ஒப்படைக்கப்படவேண்டும்.மேலும் குறிப்பிட்ட கால இடைவெளி காலங்களில் தத்து எடுத்திருக்கும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் அரசு தொடர்ந்து கண்காணித்து குழந்தைகள் கண்ணியமாக நடத்தப்படுவதையும்,வளர்க்கப்படுவதையும் உறுதிசெய்கின்றது.
கரோனா நோய்த்தொற்றினால் இந்தியாவில் சுமார் 1.2 லட்சம் குழந்தைகள், பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கின்றனர்.இந்தக் குழந்தைகளை தமிழ்நாடு அரசு, அரசு காப்பகங்களில் தங்க வைத்து, அவர்களின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் குழந்தைகளுக்கு பதினெட்டு வயதாகும் போது வட்டியுடன் கிடைக்கும் வகையில் குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் இப்போது வங்கி வைப்புத் தொகையாக செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. ஊடகங்களில் செய்தியாகமட்டும் ஒளிபரப்பாகும் இந்தசெயல்முறை ,அரசின் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த்துறைகள் மூலமும் மக்களை சென்றடைய வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் ஆதரவற்ற குழந்தைகள்,அவற்றில் சேர்வதற்கான வழிமுறைகளை வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர்களை இன்னும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநில தத்தெடுப்பு வள ஆதார மையத்தை முறைப்படுத்த வேண்டும்.இதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவைப்படும் உதவிகள் விரைவாக கிடைக்கச்செய்வதில் அரசும் பொதுமக்களும் தம் தம் பணியினை சுணக்கமின்றி விரும்பி ஆற்ற வேண்டும்.
சாலையோரங்களிளும், பொது இடங்களிலும் பதினெட்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளை காணும்போது அவர்களைப் பற்றிய தகவல்களை குழந்தைகளுக்கான உதவி எண் 1098க்கு தெரிவித்தல், அல்லது அந்தக் குழந்தைகளை மீட்டு காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசு காப்பகங்களில் போன்றவற்றில் சேர்ப்பதற்கான முனைப்புகளில் பொது மக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ்நாட்டில் 22 சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்று என தத்தெடுக்கும் நிறுவனங்கள் உருவானால் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். ஒரு பக்கம் பதிவு செய்து விட்டு குழந்தைகளுக்காக காத்திருக்கும் பெற்றோர்கள், இன்னொரு பக்கம் பெற்றவர்களால் கைவிடப்பட்டு அன்புக்காக ஏங்கும் குழந்தைகள் ,இவர்களை சட்டப்படி இணைக்கும் அன்புப் பாலமாக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.வாய்திறந்து பேசி உதவிகளை கேட்க முடியாத இந்தஆதரவற்ற குழந்தைகளும் மற்றக்குழந்தைகள் பெறும் அத்தனை உரிமைகளையும் பெற வேண்டும். அதைநோக்கி நாம் ஒவ்வொருவரும் நம்மாலான கடமையை செய்ய தவறுதல் கூடாது.
தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில் தெரு,செங்குந்தர்பேட்டை,
மதுராந்தகம்-603 306.கைப்பேசி
9443718043/7904130302nbadhri@gmail.com
- அகமும் புறமும் கவிதையும்
- குக்குறுங்கவிதைக்கதைகள் / சொல்லடி சிவசக்தி – 21 – 28
- நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ
- பிரபஞ்ச மூலம் யாது ?
- குழந்தைகளை கொண்டாடுவோம்
- ரொறன்ரோவில் விவசாய, மின் அலங்காரக் கண்காட்சிகள்
- யாருக்கு மாப்பிள்ளை யாரோ…
- கோயில்களில் கைபேசி