நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….

author
0 minutes, 7 seconds Read
This entry is part 3 of 9 in the series 4 டிசம்பர் 2022

அழகியசிங்கர்

            சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார்.  அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக ‘கசடதபற’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.

 

            க்ரியா என்ற பதிப்பகம் அவருடைய ‘வேலி  மீறிய கிளை’ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அது ஒரு கவிதைத் தொகுதி.  1976ஆம் ஆண்டு வெளியானது.

 

            அவரைப் பற்றிய சிறிய குறிப்பு தருவது அவசியம்.

 

            திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சாண்டார் கோயில் எனப்படும் உத்தமர்கோயிலில் 1945-ம் ஆண்டு பிறந்தார். சென்னை ஜெயின் கல்லூரியில் வேதியியல் படித்து, அதே கல்லூரியில் விளக்குநராகப் பணியில் சேர்ந்தார்.  பின்னர், தத்துவம் படித்து, தத்துவம், வேதியியல் துறைகளில் விரிவுரையாளராக பணியாற்றினார். 

 

            சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் மனைவி, சகோதரியுடன் வசித்து வந்தார்.   இரண்டு மகன்கள்.

 

            அவர் இந்த ஆண்டு  நவம்பர் மாதம் இறந்து விட்டார்.  

 

            1976ஆம் ஆண்டில் பிரசுரமான ‘வேலி  மீறிய கிளை’ என்ற க்ரியாவின் கவிதைத் தொகுதிக்குப் பிறகு ஜெயராமனே தன் முயற்சியில் ‘நாரணோ ஜெயராமன் கவிதைகள்’ என்ற முழுக் கவிதை தொகுதியை  2019ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.

 

            முழுக் கவிதைகளைக் கொண்ட இத் தொகுதியை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்.

 

            இரண்டாவது ‘வாசிகள்’ என்ற தலைப்பில் கீழ் 9 கதைகள் கொண்ட தொகுப்பு வெளிவந்தது. இது 2021ஆம் வெளிவந்தது. 

 

            1970களில் கசடதபற என்ற சிற்றேடு வந்த சமயத்தில் தொடர்ந்து எழுதிய  நாரணோ ஜெயராமன் கசடதபற நின்றவுடன் அவர் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்தி விட்டார். 

 

            ஜெயராமன் 1976 ஆண்டு அவர் எழுதிய முன்னுரையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

 

            ‘எதுவும் முடிந்த முடிவு இல்லை என்கிற நிலையில் அந்தந்தக் கண எழுச்சிகள் நான் எழுதுபவை ஆகின்றன.  என் கவிதைகள் நிகழ்வதும் இவ்வண்ணம்தான் வார்த்தைகள் ஏற்கனவே இருப்பவைதாம்.  அனுபவச் சூட்டில் புது உக்கிரம் பெற்று கவிதையில் தங்கள் இடத்தைத் தேடிப் பிடிக்கின்றன.  கவிதை கருக்கொண்டு, இரத்தமும் சதையுமாகி, காகிதத்தில் ஜனிக்க என்று ஒவ்வொரு நிலைக்குமான கால இடைவெளி மிகச் சொற்பமாகவே என்னைப் பொறுத்தவரையில் இருந்து வருகிறது.  கவிதை காகிதத்தில் எழுதப்படுகையில் ஓர் உள்ளுணர்வும், ஊகமும் வழிகாட்ட வரிகள் தங்கள் அமைப்பைப் பெறுகின்றன.  என் கவிதையின் இலக்கணம் இதுதான்.’

 

            நான் முதலில் அவர் கவிதைகள் பற்றியும், மிகக் குறைவாக எழுதிய சிறுகதைகளைப் பற்றியும் கூறலாமென்று நினைக்கிறேன்.

 

            ‘வேலி  மீறிய கிளை’ தொகுப்பில் வெளிவந்த கவிதைகள் 1972-1976 என்கிற கால இடை வெளிக்குள் எழுதப்பட்டவை. 

 

            அந்தக் காலத்தில் வெளிவந்த சிற்றேடுகளில் வெளியான கவிதைகளும், நாற்றங்கால் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இரண்டு கவிதைகளும் அடங்கும்.

 

            பிர்மிள் தர்முஅரூப்சிவராம் என்ற பெயரில் ஜெயராமன் கவிதைகளுக்கு ஒரு முன்னுரை வழங்கி உள்ளார். 

 

            இரண்டு மூன்று பக்கங்கள் கொண்ட அந்த முன்னுரையில் பிரமிளின் முன்னுரை படிப்பவரை இன்றும்கூட  கூட ஓட ஓட விரட்டும். 

 

            அதில் ஒரு வரியை மட்டும் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

 

            ‘வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான்.  புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டிக்கிறான்.

 

            இது போதும். 

 

            ஜெயராமன் கதைகளையும் எழுதியிருக்கிறார் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர் எழுதவில்லை.  குறிப்பாகக் கதைகளை எழுதவில்லை.  ஆனால் கவிதைகள் மட்டும் தொடர்ந்து எழுதியும் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை. இப்போது முழுத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

 

            அவர் கடைசியாக எழுதிய ‘வாசிகள்’ கதை ஜøன் 1975 பத்திரிகையில் பிரசுரமானது. 

 

            வாசிகள் தொகுதியில் அவர் குறிப்பிட்டுள்ள முன்னுரையில், ‘சமீபத்திய இலக்கியப் படைப்புகளை அளித்துவரும் இளந்தலை முறை எழுத்தாளர்கள் என்னுடைய இச்சிறுகதைகளைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதை அறிய நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

            ‘வாசிகள்’ கதை முழுவதும் அப்சர்வேசன்.  அதை உன்னிப்பாக அவதானிக்கிறார்.  உள்ளேயும் வெளியேயும் காண்கின்ற ஒரு பார்வைதான் கதை.  இதைத் துல்லியமாக விவரிக்கிறார்.  எழுபதுகளில் வெளிவந்த சிறுபத்திரிகைகக் கதைகள் பெரும்பாலும் இப்படிப்பட்ட போக்கைத்தான் வெளிப்படுத்துகிறது.

 

            இதற்குக் காரணம் மௌனி. ஜே கிருஷ்ணமூர்த்தி. ஜெயராமன் ஜே.கிருஷ்ணமூர்த்தியால் பாதிக்கப்பட்டவர். 

 

            ஒரு கட்டத்தில் எழுதுவதையே நிறுத்திவிட்டார்.  இதே பார்வையை விஸ்தாரமாகவும் வெற்றிகரமாகவும் முயன்றவர் நகுலன். 

 

            சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நண்பர் வருகைக்காக ஸ்டேஷனஙூல் உள்ள கான்டின் பக்கம் காத்திருக்கிறார்.  அவரைச் சுற்றி நிகழும் சம்பவம்தான் கதை. காத்துக்கொண்டவருக்கு நண்பர் வரவில்லை என்ற ஆதங்கம்.  

 

            நண்பனைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

 

‘என்ன பேசறோம்னு தெரியாது பேசற ஆட்கள்.  என்ன கேட்கிறோமென்று தெரியாது கேட்கி ஜனங்கள். எல்லாம் தெரிந்தும் ஜனங்களோடு பேசத் தெரியாத அறிவுஜீவிகள்.  சூழல் எப்படியிருக்கு பார்த்தியா?’

 

            இந்தக் கதையின் சாரம்சம் இவ்வளவுதான்.  இப்படியே எழுதிக்கொண்டு போகலாம்.  ஏன் ஒன்பது கதைகளுக்கு மேல் எழுதவில்லை? இன்னும் அவர் கதைகள், கவிதைகள் பற்றி ஆராயலாம். 

                                                                        (இன்னும் வரும்)  

              

Series Navigationகுக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி – 21 – 28ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *