‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 4 seconds Read
This entry is part 2 of 12 in the series 1 ஜனவரி 2023

1. பூனைமனம்

வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில்

நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட

கருப்புப்பூனையும்

அறிமுகமானோம்.

நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point

வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன?

அது ஆணா பெண்ணா தெரியாது.

அதற்கு எத்தனை வயது – தெரியாது.

அது எங்கிருந்து வருகிறது – தெரியாது.

அதற்கான நீள்வட்டப்பாதையின் ஆரம், விட்டம் –

சுற்றளவு

– எதுவுமே தெரியாது.

விளங்கவியலாச் சீட்டுக்குலுக்கலனைய வாழ்வியக்கத்தில்

குறைகாலம் கூட்டுச்சேர்ந்தது போலவே

கையாட்டி விடைபெறாமல் காணாமல் போனது.

தாறுமாறாய்ச் சீறிப்பாயும் இரண்டு, மூன்று,

நான்கு சக்கர வாகனங்களில் அறைபட்டிருக்குமோ

என்ற நினைப்பில்

அடிவயிறு கலங்குகிறது.

நான் தரும் தண்ணீர் பால்சோறைவிட மேலான

அறுசுவை சைவ அசைவப் பதார்த்தங்கள்

அதற்கென்றே ஓர் அழகிய தட்டில் வைத்துத்

தரப்படும்

புதிதாய்த் திறக்கப்பட்டிருக்கும் உணவு விடுதியின் பக்கமாய்

நிழலடர்ந்த மரத்தடியில் குடிபெயர்ந்திருக்கிறது

என்று எனக்கு நானே தெரிவித்துக்கொள்கிறேன்.

‘மனதின் பாரத்தை இறக்கிவைக்க

கண்ணில் படும் மதில்மேல் ஏறிக்கொள்ளப் பழகவேண்டும்

கற்பனையில் கிடைத்த பூனைக்கால்களோடு’

என்று

என்றேனும் நாங்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால்

என்னிடம் சொல்லக்கூடும்

என்னருமை black commando.

*** ***

2 .கண்ணும் கருத்தும் கருப்புப்பூனையும்…….

ஒரு பூனையின் கண்களுடைய பார்வையை

பின் தொடர முடியாதவர்கள்

அது எலியை மட்டுமே தேடுகிறது என்று

துண்டு போட்டுத் தாண்டாத குறையாய்

திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் அந்தப் பூனை எங்கெல்லாம் திரிந்தலைகிறது

எதற்காகச் சுற்றிச்சுற்றி வருகிறது என்று

எதுவுமே தெரிந்துகொள்ள முயலாதவர்கள்

அது யார் வீட்டிலோ பால்பாத்திரத்தை

உருட்டித்தள்ளி உறிஞ்சிக்குடிக்க

ஓடிக்கொண்டிருப்பதாக பதவுரை எழுதித்தள்ளுகிறார்கள்.

மூடிய என் வீட்டு வாசல் காலையில் திறக்கும்வரை வெளியே மோனத்தவமியற்றிக்கொண்டிருக்கும்

கருப்புப்பூனைக்கு black commando என்று செல்லப்பெயரிட்டிருந்தது

அதற்குத் தெரியுமோ  – தெரியவில்லை.

வீட்டில் புகுந்து ரகளை செய்கிறது என்று குடியிருப்புவாசிகளில் ஒருவர் சொன்னபோது

அத்தனை பொறுமையாக வாசலுக்கு அப்பால் காத்திருந்து

’தாழ் திறவாய்’ என்று சன்னமாக மியாவ் இசைக்கும் அந்த அன்புப்பூனையையா களவாணியென்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

அன்பும் மரியாதையும் செய்யாத அதிகாரவர்க்கத் தினருக்கு எதிராக பூனையும் கிளர்ந்தெழுந்து

புரட்சி செய்வது இயல்புதானே?

பரஸ்பர மரியாதையும் அபிமானமும்

பூனைக்கு மட்டும் பிடிக்காமலா போகும்?

உள்ளும் வெளியும்

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கப்பால்

எல்லாப் பார்வைகளும் பார்க்கமுடியாதவையே.

மரத்தின் அடியில் நின்றுகொண்டு உச்சிக்கிளையை

அண்ணாந்துபார்க்கும்

பூனைப்பார்வையின் தொலைநோக்குக்கருவி

மனிதப்பார்வையின் விரிந்தகன்ற கண்களின்

வலையகப்படாது.

அதோ அந்தக் குடிசையில் வாழும் முதியவரை

அன்றாடம் தெருவோரப் பொதுக்கழிப்பறைக்கு

வழிநடத்திச்செல்லும்

குறுவால் சாம்பல் நிறப் பூனைக்கு

இருநூறு கண்கள் என்று பெருமையோடு

சொல்லிக்கொள்வார் பெரியவர்.

போன வருடப் புயலில்

வேரறுந்த மரங்களின் நுண்வடிவமாய்

கால்பரப்பி இறந்துகிடந்தது

இன்னொரு கருப்புப்பூனை.

பிரம்மாண்ட கார்கள் அணிவகுத்துநிற்கும்

அடுக்குமாடிக் குடியிருப்பில்

இல்லாத லிஃப்ட்டுக்குள் நுழைந்தபடி

மூன்றாம் மாடி தாண்டியிருக்கும் மொட்டைமாடிக்கு

ஏறியேறி யிறங்கியிறங்கியவாறு

மழையிலும் வெயிலிலும் நாளொன்றில்

பனிரெண்டு மணிநேரம் பார்க்கும் செக்யூரிட்டி

ஆறாயிரத்தியைந்நூறு ரூபாய் சம்பளம்

போதாதென்று கூறி

சிறிது உயர்த்தித் தரும்படி கோரியதால்

வேலைத்திறன் போதாதென்று வீட்டுக்கு

அனுப்பிவைக்கப்பட்டார்.

கிடைக்கும் பற்றாக்குறை ஊதியத்தில்

சிறிய மாலையொன்று வாங்கி

வீதியோரப் புதரில் வாகாய் குழிவெட்டி

புயலில் பலியான பூனைக்கு

இறுதிச்சடங்கு செய்தவர் அவரே.

அழுந்த மூடியிருந்தாலும் அவ்வமயம்

அந்தப் பூனையின் கண்கள் நிச்சயமாக

ஒரு கணம் திறந்து

அவரை அன்பும் நன்றியுமாகப் பார்த்திருக்குமென்றே

தோன்றுகிறது.

இனி black commando பூனை திரும்பவும் வருமோ

தெரியாது…..

ஆனால் எங்கிருந்தாலும் நானிருக்கும் திசைநோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் என்பது என் நம்பிக்கை.

நானும் தெரியாத அதன் இருப்புநோக்கி

என் அகக் கண்களை என்றும் திறந்துவைத்திருப்பேன்

என்பதும்….

Series Navigationஹேப்பி நியூ இயர்போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *