பாலையும் சிலப்பதிகாரமும்

author
1 minute, 21 seconds Read
This entry is part 5 of 6 in the series 8 ஜனவரி 2023

                ( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே )

  காவடி மு. சுந்தரராஜன்

பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை நிறுவவே இக்கட்டுரை.

 சிலப்பதிகாரத்தில், காடு காண் காதையில்,

 கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி

வேத்தியல் இழந்த வியனிலம் போல

வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

தானலந் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்                                   காலை எய்தினிர் காரிகை தன்னுடன்

என்ற பாடல் உள்ளது. ‘பாலை என்பது ஒரு தனி நிலமல்ல’ என்போர், இந்தப் பாடலின்,

“……முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்….”

என்ற மூன்று வரிகளைத் தான் முக்கியச் சான்றாகக் கொள்கிறார்கள்!

                 மேற் சொன்ன சிலப்பதிகாரப் பாடலில்,

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் “

என்றுதான் உள்ளதே யன்றி அப்படி ஏற்படுவது தான் பாலை என்றில்லை. ‘பாலை என்பதோர் படிவம்’ என்பதற்குப் ‘பாலை போன்ற’  என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ‘ படி’ என்றால் நகல் / பிரதி, படிவம் என்றால் ஒன்றதன் உருவம், தோற்றம் என்பது தான் பொருள். எனவே, பாலையின் உருவத்தை / தோற்றத்தைக் குறிஞ்சியும், முல்லையும் கொள்வன என்பது தான் பொருள்! குறிஞ்சியும் , முல்லையும் திரிவதால் தான் பாலை உருவாகிறது எனப் பொருள் கொள்ளுவது, பொருத்தமன்று. ‘படிவங் கொள்ளும்’  என்ற சொற்பயன்பாடு தோற்றம் கொள்ளும் என்பதைக் குறிப்பதாக மட்டுமே உள்ளது.

      பாலை என்றவுடன் சகாரா, தார் போன்ற தற்போதைய பெரிய பாலைவனங்களைக் கற்பனை செய்யக் கூடாது. தமிழகத்தில் அவை போன்ற பகுதிகள் இருந்ததாக எந்தக் குறிப்பிலும் இல்லை. வறண்ட பகுதியைக் குறிப்பிடவே பாலை என்ற சொல் அந்தக் காலத்தில் பயன் படுத்தப் பட்டது. இப்போது போலவே மழை குறைவான, நீர் குறைவான வறண்ட பகுதிகள் பண்டையத் தமிழகத்திலும் இருந்திருக்கத் தான் வேண்டும்.. மழை மறைவுப் பகுதிகளும், ஆறுகள் பாயாத பகுதிகளும் கடுமையான வறட்சியுடன் தான் இருந்திருக்க முடியும். அப்பகுதிகள் தான் பாலை என அழைக்கப் பட்டுள்ளன. நீரின்மையால், விவசாயமின்றி அந்நில மக்கள் ஆறலைத்துண்ணும் கள்வர்களாக இருந்துள்ளனர்.

      சங்கப் பாடல்களை எடுத்துக் கொண்டால் பாலைத் திணைப் பாடல்கள் நிறைய உள்ளன. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். ஐங்குறுநூறில் 100 பாடல்கள் உள்ளன. நிரந்தரமில்லாத ஒரு நிலத்தின் மீது இத்தனை பாடல்களா?

     அப்படியொரு தனி நிலம் இருந்திருக்க வில்லையெனில், அந்நிலத்திற்கான தனியான இனம், வாழ்க்கை இயல்பு, தெய்வம், பொழுதுகள், ஒழுக்கம், தாவரங்கள், விலங்குகள் போன்றவை அந்தப் பாடல்களில் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

பாலை நிலத்தின்,

கருப்பொருட்கள்

  • தெய்வம்: கொற்றவை
  • மக்கள்: விடலை, காளை, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்,
  • பறவைகள்: பருந்துகழுகு
  • மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
  • மலர்கள்: மராம்பு
  • பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
  • பறை : ஆறலை, சூறைகோள்
  • தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
  • உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
  • நீர்: கிணறு
  • விலங்கு: வலுவிழந்த புலி
  • யாழ்: பாலையாழ்
  • ஊர்: குறும்பு

 உரிப்பொருட்கள்

  • அக ஒழுக்கம் : பிரிதல்
  • புற ஒழுக்கம் : வாகை

        குறிஞ்சியும், முல்லையும் சில கால கட்டங்களில் வறட்சியால் மாறுவது தான் பாலை என எடுத்துக் கொண்டால், செழிப்பான காலத்தில் பாலையே இல்லாமல் போய் விடும் தானே? வறட்சிக் காலத்தில் குறிஞ்சி, முல்லையின் குறவர்களூம், ஆயர்களும் பாலைக் குரிய எயினர் / மறவர் களாக மாறித் தத்தம் தெய்வங்களான சேயோனையும், மாயோனையும் தூக்கி யெறிந்து விட்டுப் பாலையின் கொற்றவையைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்களா என்ன? பின்னர் செழிப்புத் திரும்பியவுடன், எயினர்கள் மீண்டும் குறவர்கள் / ஆயர்கள் ஆகி விடுவார்களா என்ன?

     பாலை என்றோர் நிலம் தனியாக இல்லை என்பதற்குச் சிலப்பதிகாரத்தைத் துணைக்கழைப்போர் , சிலப்பதிகாரத்தின் மேற்சொன்ன பாடல் வரிகளுக்கு முன்னும், பின்னும்  வரும் வரிகளை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

“…….அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.” ,  “பொய்மையும் வாய்மை யிடத்த……”

இந்த இரண்டு குறள்களின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் படித்து விட்டு, வள்ளுவர் ‘ அறம் செய்யாதிருப்பதே நல்லது ‘ என்றும் ‘பொய் பேசலாம்’ என்றும் சொல்லியிருக்கிறார் என்று வாதிடுவதற்கு ஒப்பானது தான், சிலப்பதிகாரத்தின் அந்த மூன்று வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு முடிவு செய்வது.. இந்த வரிகளுக்கு முந்தைய வரிகளையும் பின் வரும் வரியையும் சேர்த்துப் படித்து விளக்கம் பெறுவதே சாலச் சிறந்தது.

 கோத் தொழிலாளரொடு கொற்றவன் கோடி – அரசியற்றொழி லினையுடைய அமைச்சர்களோடு  சேர்ந்து முறை செய்யாது அரசன் கொடுங்கோல் ஆட்சி செய்ததால் ;  வேத்தியல் இழந்த வியனிலம் போல – ஆட்சிப் பொலிவிழந்த நாட்டினைப் போல் ; வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் – வேனிலாகிய அமைச்சனொடு வெவ்விய கதிர்களையுடைய ஞாயிறாகிய அரசன்;  தான் நலம்திருக – நலம் வேறுபடுதலான் ( உக்கிரமாகத் தகிப்பதால் ) ;  தன்மையிற் குன்றி – தமது இயற்கை கெட்டு ; முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து – முல்லை குறிஞ்சி என்னும் இருதிணையும்  நல் இயல்பு இழந்து ( செழிப்பை இழந்து );  நடுங்கு துயர் உறுத்து – தம்மைச் சேர்ந்தோர் நடுங்கும் வண்ணம் துன்பத்தினை யுறுவித்து ( வெப்பத்தால் வாட்டி );  பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை -. பாலை எனப்படும் வடிவினைக் கொள்ளும் இக் காலத்து ; எய்தினிர் காரிகை தன்னுடன் – இக்காரிகையோடு வந்தீர் ;

    “ கொடுங்கோல் ஆட்சியில் நாடு கெடுவது போல், வேனில் காலத்தில் கதிரவன் வழமையை விட அதிக வெப்பத்தைப் பாய்ச்சினால் செழிப்பான குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகள் கூடச் செழிப்பிழந்து பாலையின் வடிவத்தைக் கொள்ளுவன. அப்படியொரு வெம்மை தகிக்கும் காலகட்டத்தில் கண்ணகியை அழைத்து வந்துள்ளாயே “ என்று மறையவர் ஒருவர் கோவலனைப் பார்த்துக் கேட்பதைத்தான் இந்த எட்டு வரிகளும் காட்சிப் படுத்து கின்றன. குறிப்பிட்ட மூன்று வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, ‘ கொள்ளும் என்பதோடு முற்றுப் புள்ளி வைக்காமல், காலை’ என்ற வார்த்தையைச் சேர்த்துப் படித்தால் தான் ‘பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை, என்ற வரி முழுமை பெறும். அப்பொதுதான் முழுப் பொருளும் தெரிய வரும். செழிப்பான குறிஞ்சியும், முல்லையும் கூடப் பாலை போல் ஆகுமளவிற்கு, வேனலும், வெய்யிலின் கொடுமையும் இருக்கும் காலகட்டத்தில் கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் மூவரும் அப்பாலைப் பகுதியைக் கடந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டவே மேற்சொன்ன வரிகள்.

     சரியில்லாத ஆட்சியாளர்களால் கெட்டழியும் நாடு. நல்லாட்சியர் பொறுப்பெடுத்தால் சரியாகி விடும் தானே! அதே போல், கதிரவன் வேனலின் இயல்பான வெப்பத்தை மட்டுமே பாய்ச்சினால், செழிப்பிழந்த குறிஞ்சி, முல்லை நிலப் பகுதி இயல்புக்கு மாறி விடும் தானே! ஆட்சியாளர்களின் கொடுங்கோல் ஆட்சியும், கதிரவனின் வழமை மீறிய வெப்பமும் தற்காலிகமானவை தானே! எனவே இளங்கோ அடிகள் வேனலின் வழமை மீறிய வெப்பத்தினால் எற்படும் வறட்சியின் காரணமாகத் தற்காலிகமாகப், பாலை போல் தோற்றமளிக்கும் பகுதியைத் தான் இங்கு குறிப்பிடுகிறார் என்பது தான் சரியாக இருக்க முடியும்.

     பின்னால் வரும் வேட்டுவ வரிப்  பாடல்களில், பாலை நிலமும் அந்நிலம் வாழும் எயினர் / மறவர், அவர்தம் வீரம், அவர்தம் வாழ்க்கை முறை, அவர்கள்தம் தெய்வம், ( ஐயை / கொற்றவை ) அதற்கான கோவில் போன்றவையும் வருவது இங்கு ஊன்றி நோக்கற் பாலது.  நிரந்தரமல்லாத, தற்காலிகமாகத் தோன்றும் ஒரு நிலப் பரப்பில், நிரந்தரமான மக்கள் இனமோ, வாழ்விடமோ அந்நிலத்திற்கான தெய்வம் உறையும் கோவிலோ நிச்சயம் இருக்க முடியாது!

     அந்நிலத்திற்கென்று தனியான ஒழுக்க நெறிகள், இயல்புகள், போன்றவை எப்படி வந்திருக்க இயலும்? பழந் தமிழ் இலக்கியங்கள் கூறும் ஐவகை மூத்த நிரந்தர இனங்களான குறவர், எயினர் / மறவர் , ஆயர் ( இடையர் ), உழவர், பரதவர் என்ற ஐந்தில், எயினருக்கு மட்டும் நிரந்தர நிலம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. காலம் காலமாக இந்தக் கருத்து நிலவி வருவது மிகவும் வியப்புக் குரிய ஒன்று.

      அதிலும் எந்த வரிகள் பாலை நிரந்தரமல்ல என்ற கருத்தை நிறுவ எடுத்தாளப் படுகின்றனவோ அதே வரிகள் இடம் பெற்றுள்ள அதே சிலப்பதிகாரத்தில் பாலை நிரந்தர மானது என்பதற்கான சான்றுகள் காணப் படுகின்றனவே. அவ்வரிகளுக்குப் பின்னால் வரும் வேட்டுவ வரிப்  பாடல்களில், பாலை நிலமும் அந்நிலம் வாழும் எயினர் / மறவர், அவர்தம் வீரம், அவர்தம் வாழ்க்கை முறை, அவர்கள்தம் தெய்வம், ( ஐயை / கொற்றவை ) அதற்கான கோவில் போன்றவையும் வருகின்றனவே!  

    கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரிகளில் பதிவாகி உள்ளன. பாலை நிலத்து ஆறலை கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவ வரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள்.. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும்.

ஆங்கு,
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர். உப்பால்-

…………………………………………………………..

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து, மற்று அது
முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ; பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், மேவிய விரையும்,
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,
கோடும், குழலும், பீடு கெழு மணியும்,
கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,
கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி-

…………………………………………………………….

மதியின் வெண் தோடு சூடும் சென்னி,
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து,
பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;
நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து
அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;
வளை உடைக் கையில் சூலம் ஏந்தி;
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலைஆட்டி;
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;

  “ வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருக “  என்ற வரியில் சொல்லப் படும் வழக்கத்துக்கு மாறான அதீத வெப்பம், ஐவகை நிலங்களுக்கும் பொதுவானதே! அப்படியிருக்கையில் குறிஞ்சி, முல்லை நிலங்களை மட்டும் அந்தகைய நிலையால் பாதிப்படையும் நிலங்ககளாக இளங்கோ அடிகள் குறிப்பிடுவது இங்கு கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. அவையிரண்டுமே ஏற்கனவே பாலையோடு எல்லை கொண்டிருப்பது தான் காரணம். ஏற்கனவே பாலையென்ற நிரந்தரமான நிலம் இல்லாவிடில் இது எப்படிச் சாத்தியம் ஆகும்?

   சிலப்பதிகாரத்தின் இது தொடர்புள்ள வரிகள் அனைத்தையுமே  எடுத்துக் கொண்டு திறந்த மனதுடன் ஆய்வு செய்தால் தான் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனம் வரும். ஆனால், குறிப்பிட்ட மூன்று வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதிலும் ஒரு வரியை முழுமையாகக் கொள்ளாமல், அவற்றைச் சான்றாகக் கொண்டு பாலை நிலம் பற்றி ஏற்கனவே கருத்துக் கூறிய நமது முன்னோர்களது மேதைத் தன்மையை எண்ணத்தில் வைத்துக் கொண்டு ஆய்வு செய்தால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மனம் வராது.

    பாலை நிரந்தரமல்ல என்ற கருத்தை நிறுவத் தொல்காப்பியமும் துணைக்கழைக்கப் படுகிறது

மாயோன் மேய காடு உறை உலகமும், 
சேயோன் மேய மை வரை உலகமும், 
வேந்தன் மேய தீம் புனல் உலகமும், 
வருணன் மேய பெரு மணல் உலகமும், 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச் 
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே  ( பொருள் – 5 )
 

       தொல்காப்பியர் பாலையை ஒரு தனி நிலமாக இந்தச் செய்யுளில் குறிப்பிடவில்லை. நிலங்களை நான்காகவே காட்டுகிறார்! இப்பாடலில் பாலையைக் குறிப்பிடாவிடினும், பின் வரும் செய்யுள்களில் அதற்கான பொழுதையும், உரிப் பொருளையும்  குறிக்கின்றார்.

பொழுது :

  நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. ( பொருள் – 11 )

  பின்பனிதானும் உரித்து என மொழிப. ( பொருள் – 12 )

 இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர். ( பொருள் – 13 )

பாலைக்கு, வேனில், பின் பனி பெரும் பொழுதுகளாகவும், நண்பகல் சிறு பொழுதாகவும் காட்டப் படுகின்றன.

உரிப் பொருள்: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் 
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை 
தேருங் காலைத்திணைக்குரிப் பொருளே. ( பொருள் – 16 )
  பாலைக்குப் ‘பிரிதல்’ உரிப் பொருளாகக் கூறப் படுகிறது

       இது முரண் இல்லையா? ஏதாவது தகுந்த காரணம் இல்லாமலா இப்படிப் பட்ட அடிப்படை முரண்பாட்டுடன் அவர் நிலங்களைப் பகுத்திருப்பார்?! தொல்காப்பியர் காலத்திலும் அவருக்கு முன்பும் நாலு வகை நிலங்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் எனக் கொண்டால், பொருள் – பாடல் 5 ஐத் தவிர நிலங்களை ஐந்தாகக் கூறும், பிற தொல்காப்பியப் பாடல்களை எப்படிக் கொள்வது என்ற கேள்வி எழுகின்றது! இங்கு மற்றொன்றும் நோக்கற்பாலது.

  (https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16/31115-2016-07-01-02-33-36………..அதனால் ஐந்திணைகள் அகத்திணை ஏழிலும் சிறப்புப் பெறு கின்றது. ஆகவே இது ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ (தொல்.கள.1) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்திணை களில் பாலை எனும் திணை நடுவணது எனும் சொல்லாலேயே அகத்திணையியலில் குறிக்கப்படுகிறது. அகத் திணையியலில் பாலை எனும் சொல் குறிப்பிடப்பட வில்லை.

    மேலும் நடுவணது பாலை என்பதை உரையாசிரியர்களின் உரைகளின் வழி அறிய முடிகிறது. “பாலை என்னும் குறியீடு எற்றாற் பெறுதும் எனின் வாகை தானே பாலையது புறனே (புறத்.15) என்பதனாற் பெறுதும்”1 என்று இளம்பூரணர் கூறுகின்றார்.

   தொல்காப்பியத்தில் ஐந்திணையே அகத்திணை என்பது போல ஐந்திணையின் இலக்கணக் கூறுகளைப் பலபட விரித்துரைப்பக் காணலாம். அகத்திணையியல் 55 நூற்பாக்களைக் கொண்டது. அகத்திணை எனப் பொதுப்பெயர் பூண்டிருந்தும் இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறிகளையே விரித்து மொழிதல் காண்க.

    களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் எனப்படும் பிற நான்கு இயல்களும் கூட ஐந்திணை நுவலும் அமைப்பினவாகவே உள. ஐந்திணைக் காதல் அற நலத்தது, உலகம் நன்னயங்களை நோக்கிச் சங்கப் புலமையினோர் ஐந்திணைத் துறைகளையே பெரிதும் பாடினர்.2

ஐந்திணையானது இயற்கைப் பின்னணியோடும், நிலப்பின்னணியோடும் இணைந்த மக்களின் பாலியல் சார்ந்த உணர்வுகளைப் பிரதிபலிப்பனவாகும். ஐந்திணைகளில் நடுவில் உள்ள பாலையைத் தவிர பிற நான்கு திணைகளுக்கும் நிலப்பாகுபாடு வகுத்தமைக்கப்பட்டுள்ளது……)

    தொல்காப்பியர் பாலை நிலத்திற்கான பொழுது, உரிப்பொருளைக் குறிப்பிட்டிருக்கையில், அப்படியொரு நிலம் தனியாக இல்லை என்று எப்படி ஒரு முடிவிற்கு வர முடியும்? சிலப்பதிகார வரிகளுக்கு, குறிஞ்சி, முல்லை திரிந்து தான் பாலை உருவாகும்; பாலை என்று தனி நிலம் கிடையாது என்று பொருள் கொண்டால், அதே கருத்தைத் தொல்காப்பியரும் சொல்லியிருக்க வேண்டுமே?

https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25114

   தமிழர் தம் வாழ்வியலை நிலங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தனர். அவ்வகையில் தமிழ் நிலம் ஐந்நிலமாகப் பிரிக்கப் பெற்றது. அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும்.அவற்றுள் குறிஞ்சிக்குரிய  கடவுளாக முருகனும் முல்லைக்குரிய கடவுளாகத் திருமாலும் மருதத்திற்குரிய கடவுளாக இந்திரனும் நெய்தலுக்குரிய கடவுளாக வருணனும் குறிக்கப்படுகின்றனர். இத்தகைய அமைப்பு முறையில் ‘கொற்றவை’ பாலை நிலத்திற்குரிய  கடவுளாகச் சுட்டப்படுகிறாள். மறவர்கள், எயினர்கள் எனப்பெறும் இருபெரும் பிரிவினர்கள் கொற்றவையைத் தெய்வமெனப் போற்றியதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியம் பாலை நிலத்தின் கடவுளாகக் கொற்றவையை  வெளிப்படக் குறிக்கவில்லை எனினும், புறத்திணையில் ஒருதுறையாய்க் கொற்றவைநிலை என்பதனைப் படைத்துக் காட்டுகிறது.
 
‘‘மறங்கடை கூட்டிய  குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’’


– என்பது தொல்காப்பியம். மாற்றாருடன் போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றி வேண்டி வணங்கிச் செல்லும் நிலையே ‘கொற்றவை நிலை’ என்பதாகும்.

https://www.tamilvu.org/courses/diploma/d021/d0212/html/d0212228.htm

கொற்றவை நிலை

    கொற்றம் – வெற்றி, கொற்றவை – வெற்றியைத் தரும் தாய்த்
தெய்வம். நிலை – நிலைமை, முறைமை. வழிபடும் முறைமை.
வழிபடும் முறைமை பல வகைப்படும். அவை, பராவல், பழிச்சுதல்,
பலி நேர்தல், சூளுரைத்தல் என்பனவாம். கொற்றவையைப்
பராவியது கொற்றவை நிலை எனப் பெற்றது

      எனவே, மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படியில், தமிழ் மண்ணில் பாலைக்கென்று தனி நிலமில்லை என்று இதுகாறும் கருதி வந்தது தவறு என்பது கண்கூடான உண்மை! 

காவடி மு. சுந்தரராஜன், கோவை. 9842231074; indianthaatha@yahoo.com

Series Navigationஇசை!மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி –  கமல்   
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *