குரு அரவிந்தன்
காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயிலின் கும்பாபிஷேகம் சென்ற வியாழக்கிழமை 2023, தைமாதம் 26 ஆம் திகதி சிறப்பாக நடந்தேறியது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம் நடப்பது ஒரு சாதாரண பாரம்பரிய நிகழ்வுதான். ஆனால், இலங்கையில் இப்போது, அதாவது யுத்தத்திற்குப் பின்னாக நடக்கும் இத்தகைய கும்பாபிஷேகங்கள் காலத்தால் முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். காரணம் யுத்தகாலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்த அனேகமான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இக்காலத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் அனேகமான இந்துக் கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டிருந்தன. ஏற்கனவே இந்த மண்ணில் இருந்த, காலத்தால் முந்திய மிகப் பழைய கோயில்களான இவை தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இந்துக் கோயில்கள் இங்கு புதிதாக அமைக்கப்படவில்லை, மீண்டும் புதிப்பிக்கப்பட்டன என்பதைப் பதிவு செய்து ஆவணப் படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
காங்கேசந்துறையில் உள்ள குருவீதி, காங்கேசந்துறை – யாழ்ப்பாணம் வீதியில் தொடங்கி கிழக்கு நோக்கிச் சென்று வயிரவர் கோயிலடியில் திரும்பி வடக்கு நோக்கிச் சென்று நடேஸ்வராக் கல்லூரி வீதியில் முடிவடைகின்றது. இறங்கண்ணியவளை என்று இந்தச் சுற்றாடலைக் குறிப்பிடுவார்கள். ஒல்லாந்தர் காலத்தில், அதாவது 1656 ஆம் ஆண்டு சுண்ணாகத்தில் பிறந்த வரதபண்டிதர் ‘குருநாதர் கிள்ளைவிடு தூது’ என்ற தனது நூலில் குருநாதர் பற்றிப் புகழ்ந்து பாடியிருக்கின்றார். சங்க இலக்கியங்களில் காதலர்கள் தூது விடும் முறைகள் பல பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே போலத்தான் இறைவன் மீது கொண்ட அளவுக்கு அதிக பக்தி காரணமாகச் சுற்றாடலில் வாழ்ந்த இளம் பெண்ணொருத்தி, குருநாதருக்குக் கிளியைத் தூது விடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. தென்னை, பனை, மாமரங்களின் சோலையாக, இயற்கைச் சூழல் இருந்ததால் கிளிகளும் குயில்களும் இங்கே அதிகமாகக் குடியிருந்தன.
கோயிற்கடவை என்ற இந்த இடத்தில் உள்ள, கசாத்துறை என்ற பழம்பெரும் துறையில் ‘காங்கேயன்’ என்ற மாவை முருகக்கடவுள் தென்னிந்தியாவில் இருந்து, சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியால் வரவழைக்கப்பட்டு, வந்து இறங்கிய துறை என்பதால் இந்த இடம் ‘காங்கேசந்துறை’ என்ற பெயரைப் பெற்றது. குருநாதசுவாமி என்று அழைக்கப்படுகின்ற முருகனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இலக்கியமாக இந்தக் கிள்ளைவிடு தூது அமைகின்றது. அதனால்தான் இறங்கண்ணியவளை அழகன் முருகனுக்குக் கிளியைத் தூது அனுப்புகிறாள் தலைவி.
‘திருவள்ளுவருரைத்த செய்யுட் பயனைப்
பெருகநினைந் தச்சமறப் பேசி முருகுமலர்ச்
சோலைப் பசுங்கிளியே சொல்லுங் குருநாதர்
மாலைதனை நீவாங்கி வா.’
இங்கே இதைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் குருநாதர்தான் எங்கள் குலதெய்வமாக இருக்கிறார். குருநதாசுவாமி குடியிருந்த மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோயிலின் மடத்தில், யுத்த காலத்தில் இந்திய இராணுவம் தங்கியிருந்தபோது அவர்களில் சிலர் இந்துக்களாக இருந்ததால் அவர்களும் கோயிலில் வழிபாடு செய்தார்கள். அதன் பின் வந்து தங்கியிருந்த இலங்கை இராணுவத்தினர் 2016 ஆம் ஆண்டு அந்த இடத்தை விட்டு பின்வாங்கிய போது முற்றாக இடித்து அழித்து தரைமட்டமாக்கி இருந்தார்கள். மேற்கு வீதியில் இருந்த அவர்களின் எல்லை வேலியைச் சென்ற வாரம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வீதியை விட்டுத்தந்து சற்றுத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.
குருநாதசுவாமி கோயிலும், அருகே வீதிக்கு வடக்கே இருந்த மிகப் பழமை வாய்ந்த நாச்சிமார் கோயிலும் தமிழர்களின் வரலாற்றைக் குறித்து நிற்பதால் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும், அந்த மண்ணில் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்ததன் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே ஊர்மக்கள் பலரின் விருப்பமாக இருந்தது. நாச்சிமார் கோயில் இப்பொழுதும் அதிபாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டு இருப்பதால், எம்மால் இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. இந்த முயற்ச்சியில் தனிமனிதனாக நின்று, ஊர்மக்களின் பொருளாதார உதவியுடன் இந்தப் பணியைச் சிறப்பாக நிறைவேற்றித் தந்த கோயில் நிர்வாகியாக இருந்த திரு. சங்கரப்பிள்ளை அவர்களின் பேரன் கோகுலசங்கர் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், மூலவிக்கிரகத்தைக் கவனமாகப் பாதுகாத்துக் கொடுத்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினருக்கும், பக்தர்கள், மற்றும் ஊர்மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பாரம்பரியமாகத் தமிழர்கள் வாழ்ந்த மண் என்பதைப் பொதுவாக அங்கிருந்த ஆலயங்களும், கல்விக்கூடங்களும், நூலகங்களும் தான் தமிழரின் வரலாற்றை எடுத்துச் சொல்லும். இந்த வகையில் இந்தக் கோயில் மட்டுமல்ல, கல்விக்கூடத்தையும் ஆலயமாகவே எம்மவர்கள் கருதுவதால், நடேஸ்வராக் கல்லூரியும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டதில் அதிபர், ஆசிரியர், பழைய மாணவர் சங்கங்களுக்கும் நன்றி சொல்லத் தமிழ் மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்கால நிலைகருதி ஆலய வளாகங்களில் சிறு குறிப்படங்கிய ‘நடுகல்’ ஒன்றை வைப்பதும் எமது வரலாற்றைப் பதிவு செய்ய உதவியாக இருக்கும் என்பது பக்தர்கள் விருப்பமாகும். ஓம் குருநாதா!
- இரு கவிதைகள்
- ஓ மனிதா!
- அகழ்நானூறு 13
- மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]
- காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு
- இரண்டு ரூபாய்….
- இரவுகள் என்றும் கனவுகள்.
- கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி
- இரண்டாம் தொப்பூழ்க் கொடி
- படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை
- புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
- பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
- முத்தப் பயணம்
- சருகு
- நித்தியகல்யாணி
- தேர் வீதியும் பொது வீதியும்…
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
- வேரில் பழுத்த பலா
- நெய்வேலி பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்