தினை – நாவல் ( பூர்வாங்கம் )

This entry is part 5 of 8 in the series 5 பெப்ருவரி 2023

இரா முருகன்


சில குறிப்புகள் 


1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும்

2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது.  நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது அனுபவமாக இது இருக்கலாம்

3)நாவலின் மொழிநடை பண்டிதத் தமிழிலிருந்து பாமர மொழிப் பயன்பாடு வரை பரவியிருக்கும்

4)தினை ஃபாண்டஸி, மாய யதார்த்தம், சர்ரியலிசம், அறிவியல் புனைவு தளங்களில் நிகழும். இது நடக்குமா என்ற கேள்விகளுக்கு இடம் இல்லை. எதுவும் நடக்கக் கூடியது அல்ல. நடக்கலாம் ஒரு நாள்.

5) தினை நாவலிலிருந்து take away ஏதும் கிடைத்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.

6)இதற்கு முன் என் பெருநாவல்கள் அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகியவை திண்ணையில் பிரசுரமாகி வாசகர் ஆதரவை ஈர்த்தது போல், தினைக்கும் வாசகர் ஆதரவை எதிர்பார்க்கிறேன்,

தினை வருகிறது. வாசிக்க வாருங்கள்


மலைப் பிரதேசம் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்த பொழுதில் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. இது வழக்கம்தான்.

முக்கியமாகக் காட்டுப் போத்துகளும் எறும்பு தின்னிகளும் முதலில் பறக்கும். அடுத்து நரிகள் ஊளையிட்டபடி தெற்கு வடக்காகப் பறந்து போகும்.   

முயல்கள்? கிழக்கிலிருந்து மேற்காகப் பறக்கும்.

எலிகள்? அவை பறந்தால் என்ன, பறக்காவிட்டால் என்ன?

யானைகள்? அவை பறந்து நிறைய சேதம் விளைவித்ததால் அவற்றுக்கு அந்தத் திறன் இல்லாதபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் மதம் பிடித்து மதநீர் வாயில் கசியும்போது அவை தரைக்கு சற்றே உயரமாக, அதாவது ஒரு ஐந்து வயதுச் சிறுவன் உயரத்தில் பறப்பதாகச் சொல்லப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சிகள்? அவை பறக்காமலா? வண்ணத்துப்பூச்சிகள் உயிர் வாழ்வது சூழலை அலங்காரம் செய்யத்தான். விதவிதமான வண்ண  இறகுகளோடு  அதிக பட்சம் ஒரு வாரம்  உயிர்த்த பிறகு அவை பழைய காலக் களிமண் அடுப்புகளில் புகுந்திட எரிந்து படும். அதனால் பத்து நாளுக்கு ஒரு முறை புதிய வண்ணத்துப் பூச்சிகள் பளிச்சென்று அழுத்தமான, வெளிர் நீல வண்ணங்களில் பறந்து சுற்றுப்புறத்தை ரம்மியமாக்கி சீக்கிரம் உயிரை விடும்.

மற்ற விலங்குகள் பறக்கும் என்றாலும் வண்ணச் சிறகுகள் முளைத்த ஒரே இனம் வண்ணத்துப் பூச்சிகள் தாம். வண்ணத்துப் பூச்சிகள் விலங்குகள் என்று யார் சொன்னது? இல்லை என்று யார் சொன்னது?

புலிகள்? இங்கே புலி, சிறுத்தைகள் கிடையாது.

கரடிகள்?  நூறு கல் தூரத்தில் எந்த திசையிலும் கரடிகள் இவிடம் இல்லை. நூறு வருடம் முன் வடக்கிலிருந்து வந்த ஒரு கரடி இங்கே இருக்கப்பட்ட மனுஷ்ய ஆரணங்குகள் ஏகமானவர்களை மயக்கி சதாநேரமும் இணைசேர்தலில் ஈடுபட்டு இருந்ததாகக் குறுவரலாறு சொல்கிறது. பெரும் வரலாற்றில் புணர்ச்சி இடம் பெறுவது அபூர்வம்.

கருவுறுதலோ போகம் நுகர்வதில் அலுப்போ ஏற்படாமல் அந்த ஆரணங்குகள் சிருங்காரத்தில் திளைத்திருந்ததால் அவர்கள் சிறகின்றிப் பறக்கத் தொடங்கி விட்டதாக ஆவணப்படுத்தப்பட்ட செய்திக்குறிப்புகள் சொல்கின்றன.

ஒரு காலை நேரத்தில் காணாமற்போன அந்தக் கரடி இணையருக்கு அப்புறம் ஒரு சில மானுடர்கள் பறந்திருக்கலாம். அது குறித்த ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

மீன்? மீன் இரண்டு நிலைகளில் தான் உயிர்க்கும். தண்ணீரில் அல்லது தீனித் தட்டில். அவை பறந்தால் ஆகாரம் குறைந்து விடும் என்பதால் யாரும் மீன்களை வைத்துச் சோதித்துப் பார்க்கவில்லை.

நண்டுகள் கூடப் பறக்கும் இங்கே. என்றாலும் நாய்கள் பறந்தபடியே அவற்றைக் கைப்பற்றி வாயிலிட்டுச் சுவைத்துத் துப்பும் விளையாட்டில் மும்முரமாக ஈடுபடும் என்பதால் நண்டுகள் வளைகளிலேயே இருந்து வளர்ந்து இறக்க விதி செய்யப்பட்டிருக்கிறது.

கோகர் மலை என்பது பரந்து விரிந்த மலையும் மலை சார்ந்த இடமும், கடந்த நூறாண்டுகளில் கவர்ந்தெடுத்த மருத நிலமும், பாலையும் எல்லாம் சேர்ந்த மிகப்பெரிய பூமியாகும். ஆயிரம் மைல் குறுக்குவெட்டில் விரியும் நாடு இது.

கோகர் மலையில் இவை தவிர நிறையக் காணப்படுகிறவை நரித்தண்டிக்கு, என்றால், நரி அளவுக்குப் பெருத்த கரப்புகள் மற்றும் கீரி அளவு பருத்த செந்தேள்கள். இரண்டும் ஒரே தரத்திலான வலிமை கொண்டவை. பேச இயலாவிட்டாலும் மனுஷர்களோடு தொடர்பு ஏற்படுத்திப் பயமுறுத்துகிறவை.

கோகர் மலைநாட்டை ஆட்சி செய்யும் அரசு யந்திரமாக இயங்குவது கரப்புகளும் தேள்களும் சேர்ந்த அமைப்பு தான். மனிதன் அவற்றைக் கண்டு பயந்து, மனம், உடல் ரீதியாக அடிபணிந்து, அவற்றுக்குச் சேவகம் செய்வதில் களி கூர்ந்து, திருப்தி அடைந்து வாழ்ந்து வருவது வழக்கம். பறக்கும் செந்தேள்கள். யோசித்துப் பார்க்கவே பயமாக இல்லையா?

கோகர் மலைநாட்டில் இப்படி சிறிதும் பெரியவையுமான விலங்குகள் பறப்பது ஒரு இருநூறு வருடமாக நிகழ்வது. மலையில் பிறப்பெடுத்து இங்கேயே உயிர்க்கின்ற  பிராணிகள் மலையை விட்டுப் போகவேண்டி நேர்ந்தால் அப்போது தாற்காலிகமாக இறகுகள் காணாமற் போகும்.

மற்ற குறிஞ்சி நிலப்பரப்பு உயரங்களைவிட இந்தக் குன்றுப் பிரதேசத்தின் உயரம் அதிகம். நூற்று முப்பத்தைந்து அடி மேலேறிப் போகும்போதும் நூற்று முப்பத்தெட்டு அடி கீழே இறங்கும்போதும் அளவு காட்டும் மலை இது. இரண்டும் சரியான அளவுதான்.

இங்கே உள்ளே நுழைய, உள்ளிருந்து வெளியே வர சில நியமங்கள் உண்டு.

பறக்கும் விலங்குகளின் மலை என்பதால் இயற்கையைப் பாதுகாக்க இங்கே மனிதர்களும் கரடிகளும் சிகரெட், பீடி, சுருட்டு ஆகிய லாஹிரி வஸ்துக்களைச் சுருட்டிய குழல்களைப் புகைக்கக் கூடாது என்பது விதி.

தேள்களுக்கும் கரப்புகளுக்கும் இடையே காமம் பெருகெடுக்கவும், சதா இனப்பெருக்கம் ஏற்படவும் மலையின் ஆட்சி தனி அறிவியல் ஆய்வு நடத்தி ஓரளவு பெண் கரப்புகளை காமுறும் ஆண்செந்தேள்கள் தோன்றின.   அவை கலவிக்குப் பிறகு சொட்டச்சொட்ட காதல் மிக்கூற நனைந்திருக்கும் பெண்கரப்பை இனிப்பு மிட்டாய் போல்  முழுங்கிவிட முடியும் என்பதால் அந்த இனக்கவர்ச்சி ஏற்பட்டது என்பது அரசு பாதுகாத்து வைத்திருக்கும் ரகசியம். அந்த ஜோடி சேர்க்கும் திட்டம் அதற்கு அப்புறம் முன்னேற்றம் காணவில்லை.

பெண் தேள்களும் ஆண் கரப்புகளும் அதே போல் இனக்கவர்ச்சி கொண்டு காமுற விருப்பம் தெரிவிக்கவில்லை. பெண் தேள்கள் காதல் செய்யும்போது கொடுக்கை உயர்த்திக் கரப்பு ஆண்களைக் கொட்டி அவற்றை இறந்து போகச் செய்து விடும். குறி விழைந்து கிட்டாத கோபம் அது.

எனினும் ஆண் கரப்பு மற்றும் ஆண் தேள்கள் ஒன்றின்மேல் மற்றது இனக்கவர்ச்சி கொண்டு   கால்களால் ஒன்று மற்றதை அணைத்துக் கொண்டு குதித்துப் பறந்த செய்தி ஆவணப்படுத்தப் படவில்லை. என்றால், ஆவணப்படுத்தப்பட்டு நீக்கப்பட்டன.

இது தவிர, ஆய்வு மூலம் தேள்கள் மனுஷ ரூபம் கொண்டு செயல்பட ஏறக்குறைய வெற்றிகரமாக வழி கண்டுபிடிக்கப்பட்டது கோகர் மலையில் தான். ஆண் தேள்கள் மனிதராகும்போது சிடுசிடுவென்று கோபம் மிகக்கொண்டு அலைந்ததால் அந்த மனுஷ ஆண்களை வைத்து வேலை வாங்குவதும், வருமானம் ஈட்டுவதும் முடியாமல் போனது.

பெண் தேள்கள் அழகான மனுஷ்யப் பெண்களானபோது எல்லா உயிரினங்களும் அவற்றைப் பாராட்டின. என்றாலும் சூரியன் எழும்போது பெண்ணான அந்தத் தேள் சூரியன் மறையும்போது  தேளாக மாறுவதைத் தடுக்க முடியாமல் போனதில் மலையரசாங்கத்துக்கு ஏமாற்றம் தான்.

நேரக் கட்டுப்பாட்டின்படி பெருமாற்ற மருந்து குத்திவைக்க வந்து சேரமுடியாமல் போகிற தேள்ப் பெண்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் அளிக்க முடியவில்லை. மாதவிலக்கு போல், பெண்டிர் உருமாற்ற வலியும் துன்பமும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரைக்கப் படுவது வாடிக்கையாகும்.

சமவெளிப் பிரதேசங்களில் நிலவும் கதை ஒன்றில் தேள்ப் பெண் திரும்ப முடியாத ராத்திரி ஒன்றில் மானுடக் காதலனுடன் காதல் அனுபவித்திருக்கும்போதே தேள்மை மேல்வர, மானிடம் வென்று அந்த ஆணின் அணைப்பில் கரைந்து இறந்து போவது நிகழ்ந்ததாம். அவன் தேக்கு மரத்தில் செய்த கட்டையால் தேள்பெண்ணை அடித்துச் சிதைத்து, கொடுக்கு பிய்ந்தவளாக உருமாறிக்கொண்டு வந்த அப்பெண்ணைப் பெருவெளியில் எறிந்த கதை  அது.

பாம்புகள் வேறு பல தலங்களில் பறந்து கொண்டிருந்தாலும் இந்த மலையில் அவை பறப்பதில்லை. அவை எதிரிகள் பட்டியலில் வருடக் கணக்காக இருந்து அண்மையில் நீக்கப்பட்டன. அவை நிலத்தடியில் சீவித்திருக்கும் மண்புழுவோடு ஒரே குழுவாகக் கணக்காக்கப் படுகின்றன. மண்புழு, பாம்பு ஆகியவை மற்ற உயிரினங்களுக்கு உணவாகக் கருதப்படும்.

சிலந்திகள் எட்டுக் காலோ அதற்கு மேலோ இருந்தால் சின்னஞ்சிறியவை என்றாலும் பிரம்மாண்டமானவை என்றாலும் கடும் எதிரிகளாகக் கருதப்படும். அவற்றோடு எந்த விதமான சீராட்டமும் விலக்கப்பட்டுள்ளது. கரப்புகள் சிலந்திகளைக் கண்டு காமுறுபவை என்ற தகவலும் ஆவணப்படுத்தப் படவில்லை.

மயில்கள் நரகல் புழு இனமாகக் கருதப்படுதல் கட்டாயம் என்று மலையரசாங்கத்தின் சார்பில் அடிக்கடி விளக்கப்படுகிறது. மகா குரூபியான அவற்றை நரகல் புழு இனத்தில் சேர்ப்பது மூலம் பெயரளவிலாவது கொஞ்சம் வனப்பு மயில்களுக்கு ஈயப்படும்.  அவைகள், என்றால் ஆண் மயில்கள் அசிங்கமாகத் தோகை விரித்து ஆட எக்காலத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண் மயில்கள் குதத்தைக் காட்டி அசைத்து ஆடுவது நகைச்சுவையின்பால் பட்டதால் அனுமதிக்கப் பட்டுள்ளது.

தேள், கரப்பு  என்ற பெயர்கள் கூறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சகல உயிரினங்களின் தலைவர்களான இவர்கள் வரக் கண்டால், அல்லது வெளிச்சம் குறைத்த கழிவுநீர் நல்வாடையடிக்கும் சுகவாசத் தலங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கண்டால், பணிவோடு வணங்கி வழிமாற வேணும்.  அந்த வாடை கோகர் மலைநாட்டின் அதிகாரபூர்வமான நறுமணமாக அங்கீகரிக்கப்பட உள்ளது.

மலைக்கு வேறு இடங்களில் இருந்து அனுமதியில்லாமல் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எப்போதாவது விருந்தினர்கள் வரும்போது அவர்கள் சிகப்புத் தலைப்பாகையை ஆணாக இருந்தால் அணிய வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தற்காலிகமாகத் தரைக்கு அரையடி மேலே கோழிகள் போல் பறந்து திரியச் சிறகுகள் ஏற்படுத்தப்படும்.

 விருந்தாளிகள் தெருவில் நடந்தோ பறந்தோ போகும்போது மலைநாட்டினர் அவர்கள் மேல் சிறிய உருளைக் கிழங்குகளை விட்டெறிந்து வணக்கம் சொல்வது விரும்பத்தக்க வழக்கமாகும். வேக வைத்த வள்ளிக்கிழங்குகளையும் அவர்கள் மேல் எறியலாம். கிழங்குகள் மலையடிவாரக் கிடங்கில் இலவசமாகக் கிடைக்கும். கிழங்குகளை எந்த சந்தர்ப்பத்திலும் இடுப்புக்குக் கீழே எறியக் கூடாது.

காலத்தை வென்றது இந்த மலைநாடு. இங்கே அரசமைப்பின் கட்டளைப்படி ஒரே நாள் அடுத்தடுத்தோ அங்கிங்காகவோ நிகழலாம். நேற்றைக்குத்தானே இதெல்லாம் நடந்தது என்பது போன்ற இது தொடர்பான கேள்விகள் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும். அதே போல் சில தினங்கள் கேலண்டர்களில் இருந்து நீக்கப்பட்டு நிகழாமல் ஆக்கப்படும்.

உறங்கும்போது ஏற்படும் கனவுகள் அரசமைப்புக்குத் தெரிவிக்கப்பட வேண்டியவை. கனவுகளை நினைவில் வைத்துக்கொள்ள அரசு அமைப்பு மருத்துவ மனையில் தகுந்த மருந்து சிரிஞ்ச் வழியாக மாதாமாதம் பிருஷ்டத்தில் ஏற்றப்படும். குறியிலும் செலுத்தப்படலாம். உறங்குவதும் சொப்பனம் காணுவதும் கட்டாயமானவை. அவை வராத பட்சத்தில் அரசு அமைப்பு மருத்துவ மனையில் அதற்கு வேண்டிய மருந்து அளிக்கப்படும்.

பூங்காக்களிலும் மண்டபங்களிலும் கௌரவ அரசுப் பெருமக்களான கரப்பு இனத்தாரும், தேள் இனத்தாரும் இருக்கைகளிலோ அல்லது அடியிலேயோ இருந்தால் அவர்கள் நகர்ந்து போனதற்கு அப்புறமே மற்றவர்கள் அந்த இருக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரியமான கரப்பு, தேள் வம்சத்தினர் மேல் சிறு வயதில் இருந்தே மனுஷக் குழந்தைகள் அன்பும் மரியாதையும் செலுத்த வகுப்புகளில் கற்றுத் தரப்படும். இந்த வகுப்புகளுக்கு மனுஷக் குழந்தைகள் வருவது கட்டாயமானது. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட மனுஷ இனத்தார் ஆண், பெண், அலி அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சியாளர்களான தேள், கரப்பு இனத்தாருக்கு  மரியாதை செலுத்துவது குறித்து நடைபெறும் வகுப்புகளில் பங்குபெறுவது கட்டாயமானது.

கோகர் மலைநாடு அங்கமான பால்வீதிப் பிரபஞ்ச வெளி,  பொது உயர் நிர்வாகமாக multi verse பன்மைப் பிரபஞ்ச ஆட்சியில் உள்ளது. பன்மை பிரபஞ்ச வெளி-பால்வீதிப் பிரபஞ்ச வெளி-சூரிய மண்டலம்-பூமி-கோகர் மலைநாடு என்று விலாசம் சொல்லும்.

நாம் பல பிரதிகளாக இப் பன்மைப் பிரபஞ்ச வெளியில் உயிர்த்துக் கொண்டிருக்கலாம். எனவே உங்களைப் போல் வீதியில் ஒருவரோ சிலரோ எதிர்ப்பட்டால் எந்த ஈடுபாடும் காட்டாமல் நேரே பார்த்துக்கொண்டு நடத்தல் செய்யத் தகுந்தது. நலம் விசாரிப்பும், என்ன உண்டீர்கள், எத்தனை இணையர் உமக்கு போன்ற விசாரிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.

ஆட்சி செய்கிற உள்நாட்டு அமைப்பு,   பிரபஞ்ச அமைப்பு பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதும் இன்னார் ஆட்சியாளர் என்று ஊகிப்பதும், நீங்கள் ஆள்கிறவர்களில் ஒருவரா என்று யாரையும் கேட்பதும் தடை செய்யப்பட்ட செயல்களாகும். பேச இயலும் இனங்கள் இயலாதவற்றில் பிறந்தவர்களைப் பகடி செய்வது வறுத்த பட்டாணி கொறித்தபடி தெருவில் நடந்து போகும் மிகுந்த அவமரியாதை காட்டும் செயலுக்கு ஈடானது.

நாவல்  தினை அத்தியாயம் 1                            CE 5000

தேளம்மை பதட்டத்தோடு இரு புறமும் மணல் அடித்துக் கவிந்த தெருவில் நடந்தாள். அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அவள் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தது. காலை சிற்றுண்டி பரிமாறி தலையை ஈரம் காயத் துடைத்து விட்டு நீளமான ஒற்றைச் சடைப் பின்னலாக தேங்காய் எண்ணெய் சீராகத் தடவிப் பின்னிப் பகலெனிலும்   தாழம்பு சடையில் தைத்தது அவள் தான். அது அவளைப் பெற்ற அம்மாவா அல்லது அம்மாவின் எண்ணிறந்த பிரதிகளில் ஒருத்தியா தெரியவில்லை.

ஆனாலும் அவள் காட்டிய அன்பு இதமாக இருந்தது. செயற்கையோ என்னமோ, இதம் அவசியமாகப் பட்டது என்பதால் மாற்று பிரபஞ்சத்துக் குண லட்சணங்களில் அதற்குத் தனி இடம் உண்டு.

 அம்மாவும் மகளும் என்று இருவரும் தேள் வம்சத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பது முக்கியமான அடிப்படைகளில் ஒன்று. மிகப் பெரும்பாலும் இளைய தலைமுறையினர் இரு வம்சப் பின்னணி கொண்டவர்களாக இருக்கும். மனித வம்சமாக முழுத் தேள் இனத்தை உருமாற்றும் நாள் வரும்போது அந்தப் புது இனம் மகாப் பிறவிகளாக அடையாளம் காட்டப்படும்.

மகாப் பிறவிகள் வந்த பிறகு, ஏற்கனவே இருக்கும் தேளடிமை கறுந்தோல் மனிதர்கள் வெட்டுக்கிளிகளாகவும், கரப்படிமை செந்தோல் மனிதர்கள் உருட்டுப் புழுவாகவும் உருமாற்றப் படுவார்கள்.

நரகல் உருட்டும் புழுக்கள் என்று பொது உரையாடலில் அருவருப்பு தவிர்க்கும் நாகரிகம் கருதிச் சொல்வதற்கு இல்லை.  உருட்டுப் புழுக்களின் வழுவழுத்த உடல்கள் ருசியானவை. அதுவும், உண்டது பாதி சீரணமான வயிற்றோடு உள்ளவை. கரப்பு இனத்தவர் விரும்பி உண்ணும் உணவு அவை.

பறத்தல் குறைவான திசைவெளியில் தேவையான உயரத்தில் பறந்தாள் தேளம்மை. ஆய்வுக் கூடத்துக்கு  பத்து நிமிடங்களில், பிரத்யேகமாக அனுமதி பெற்றுச் செய்யும் பறப்பில் வந்து விட முடிந்தது. அங்கே இவள் வருவதற்காக அவள் பிரதியாக உருவான தேளம்மை ஒருத்தியும் வேற்றுப்  பிரபஞ்சத்தில் பிறந்த தேனம்மை ஒருத்தியும் காத்திருந்தார்கள்.   

தேனம்மை பல பிரபஞ்சங்களிலும் பெரும்பான்மையாக இருக்கும் மனுஷ ஜாதியில் பிறந்தவள். தேள்களின் சாம்ராஜ்ஜியத்தில் விரைவில் வெட்டுக்கிளியாக உருமாறுவாள். அதற்கு முன் தேளம்மைக்கும் தேளம்மை பிரதிக்கும் தேனம்மையின் நினைவுகளும்,   உணர்வும் கடத்தப்பட, அருகருகே மூவரும் இருக்கக் கடத்தல் தொடங்கியது.

 தொடங்கும்போது்  தேனம்மை ஆர்வமும் உற்சாகமுமாகச் சிரித்தாள். வெட்டுக்கிளியாக இப்படி அழகாகப் பல்தெரிய சிரிக்க முடியாது என்று தேளம்மை நினைத்தாள். கடத்தல் உணர்வுகள், நினைவுகள் என்று பகுதி பகுதியாகப் போக மாலை ஆறு மணிக்கு ஆய்வகத்து ஒலிபெருக்கிகள் தேளம்மை மனித உருவத்தில் இன்னும் ஒன்றரை மணி நேரம் மட்டும் இருப்பாள் என அறிவித்தன. அந்தரங்கம் சார்ந்த இந்தச் செய்தியைப் பொது ஒலிபரப்பாகச் செய்திருக்க வேண்டாமே என்று தேளம்மைக்குத் தோன்றியது.

இன்றைக்கு நினைவணுக் கடத்தலை அளவு தெரியாமல் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் தேளம்மைக்குத் தோன்றியது.

ஆய்வு-ஓருரு என்ற அறிவிப்பு வெளிச்சமின்றித் தெரியும் ஆய்வு மண்டலத்தில் அவள் நுழைந்தபோதே அவளுடைய உடல் மாறுதல் அடைய ஆரம்பித்திருப்பதை உணர்ந்தாள்.

நிலத்தடி ஆய்வு வெளிக்கு ஓடும்போது  சைரன் மெல்ல ஒலித்தது. உள்ளே இருந்து ஏழு பேர் ஒரே நேரத்தில் வெளியே வந்தார்கள். எல்லோரும் தேளம்மைக்குப் பரிச்சயமான யாரோ  போல் இருந்தார்கள்.  சுவரில் படர்ந்த திரையில் பூச்சிகளின் இறகு இசைக் குழுவைச் சத்தம் குறைத்து  ஒரு கரப்பர் நடத்திக்கொண்டிருந்தார்.

ஓ ஓ ஓ என்று தேளம்மை கூப்பிட்டது மிகச் சன்னமான ஒலியாக அவள் வாயிலிருந்து கேட்க, டாக்டர் அந்த அறைக்குள் மட்டும் இருபது மடங்கு ஒலிபெருக்கப்பட்ட குரலில் என்ன விஷயம் என்னை ஏன் அழைக்கிறாய் பெண்ணே என்று கேட்டார்.

நான் இன்றைக்கு வீட்டுக்குப் போகமாட்டேன் என்று வீட்டில் என் அம்மாவுக்கு எப்படித் தெரிவிப்பேன் டாக்டர் என்று தேளம்மை பின்னும் கேட்டாள். டாக்டர் ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தார். மனுஷ உயிர்கள் எதையாவது யோசித்துப் பேசும் முன்னர் இப்படி அமைதி காப்பதில் இருக்கும் கம்பீரம் தேளம்மைக்கு மனம் கவர்ந்த ஒன்றாகத் தெரிவது. அவர் பேசுவதற்காகக் காத்திருந்தாள்.

பெண்ணே, உன் வீட்டில் உனக்காக யாரும் காத்திருக்கப் போவதில்லை. உன் அம்மா என்று யாரும் இல்லை. உன் வீடும் இல்லை. நீயே இன்னும் இரண்டு தினத்தில் இருப்பாயா யாராக இருப்பாய் யாராக இறப்பாய் என்று நிச்சயப்படுத்த தீர்மானமாகப் போகிறது. யோசித்துப் பார். நான், நீ, அவர்கள், அது, அவை, நாள், இரவு, எங்கே, எப்போது எல்லாம் இல்லாத உன்னதமான வாழ்வு. அது உனக்குக் காத்திருக்க நீ சின்னச் சின்னதாகக் கவலைகளை மனதில் ஏன் தேக்கி இருக்கிறாய்? யாரிடமும் நீ தாமதமாக வீடு திரும்புவாய் என்று சொல்லி அனுப்பத் தேவையில்லை தேளரசி.

ஐயா நான் தேளம்மை என்று அவசரமாகத் திருத்தினாள் அவள்.

அழகான மனுஷித் தலையும் உடல் இறுதிப் பகுதியில் இன உறுப்பு படர்ந்திருக்க, பெருந் தொடைகள் உடையின்றி மின்ன, அங்கே கீழே தொடங்கிய வளைந்து நிமிர்ந்த கொடுக்கு உள்ளே கருநீல நிறத்தில் மின்னும் விஷத்தோடு ததும்ப பாதி தேளான தேளம்மை ஏமப் பெருந்துயில்-முன் அரங்கில் Pre-Cryostasis Bay கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டாள். ஏமப் பெருந்துயிலில் அமிழ இங்கே சிலர் காத்திருப்பில் – தொந்தரவு செய்யாதீர் என அறிவிப்பு சொன்னது.

 மயக்க மருந்து செலுத்துகிற மனுஷ மருத்துவரின்   கையிடுக்கு நறுமணம் நாசியில் பட தேளம்மைக்குத் தன் தேள் வடிவம் பற்றிய பிரக்ஞை நிலைக்கத் தொடங்கியது.

பெரிய நகரத்தின் பாதாளச் சாக்கடை பற்றியதான நினைவு அது. கருத்து அடையாகச் சுவர்போல் கசடு நாறி நீள நெடுக துர்கந்தத்தோடு கழிவும், மனிதக் கருவும் அடித்து வர வேகமின்றி ஓடிவரும் பாதாளச் சாக்கடைக் கரையில் அந்த வாடை, இருளில் தேள்களின் காலனியில் திமிர்த்துச் சுற்றி அலைந்திருந்தாள் தேளம்மை.

அவள் கழிவு மலையேறி கழிவுநீர் ஓடையில் குதித்து அவ்வப்போது கழிவு ஓடைப் பெருக்கில் வேறேதாவது பிராணிகளை அடித்து வரும்போது முதல் தாக்குதலாக கொடுக்கைச் சுழற்றி எதிரியின் உடலில் மிருதுவானதாகத் தோன்றும் இடத்தில் கொட்டிவிட்டு நிற்பாள்.

அவளுக்கும் பயம் உண்டாகி இருந்தது. தன்னைப் போல் ஏழு எட்டு மடங்கு பெரிதாக வளர்ந்து, கத்திபோல்  கூர்மையான பலப்பல கால்கள் அடுக்கி இருக்க பெரும் கண்களால் விழித்துப் பார்த்தபடி முன்னே வரும் கரப்புகள் பயமுண்டாக்குகிறவை. அவற்றோடு வம்பு வைத்துக்கொள்ள வேண்டாமென்று சாக்கடைக்கு மேல் சுவரை ஒட்டிச் சற்றே பறப்பாள் தேளம்மை.

அவள் பறந்து சுவரில் ஒட்டிக்கொண்டு உட்கார்வதற்குள் கோரமான சிகப்பு நிறத்தோடும் சாக்கடை வண்டலோடும் அந்தக் கரப்பு நேரே மேலே உயர்ந்து சரியான தொலைவில் தேளம்மை இன்னும் அஞ்ச, பக்கத்தில் வந்தமர்ந்து கத்தி விற்கும் கடைக்காரன் போல் கால்கள் ஒவ்வொன்றையும் முன்னும் பின்னும் அசைத்துக் காட்டும்.

கொடுக்கை எங்கே வைத்து எப்படி அந்தக் கால் கூட்டத்திலும் சின்னதும் பெரிதுமான இறக்கை அடுக்கிலும் நுழைத்து விஷம் செலுத்துவது? கரப்பு சிறியதோ பெரியதோ அவற்றோடு சச்சரவு வைத்துக் கொள்ளாதே என்று அவ்வப்போது மேலே ஏறிப் புணரும் ஆண் தேள்கள் உறவின்போதே நகரச்சொல்லி வற்புறுத்தி சாக்கடை மணலில் அவளைச் செலுத்துவது வழக்கம்.

பெண் வசியக் கரடி பற்றிப் புதியதாகக் கிடைத்த தகவல்கள்

(ஏற்கனவே இங்கு பதியப்பட்ட தகவல்கள் இற்றைப் படுத்தப் படுகின்றன)

அந்தக் கரடி திரும்ப வந்து விட்டதாம். முன்பை விடச் சட்டென்று  வயதானது தெரிய வசீகரமாகச் சிரிக்கும்போது கொட்டிப்போன பற்களின் இடத்தில் வெற்றிடங்கள் துல்லியமாகத் தெரிகின்றனவாம். ஆனால் நல்ல உயரத்திலும் அதி வேகமாகவும் பறக்கும் ஆற்றல் கைவந்திருக்கிறதாகவும் செய்தி.

அந்தக் கரடி ஆளும் இரண்டு இனக் கூட்டணியில் தேளர்களுக்கும் கரப்பருக்கும் இடையே பிளவு உண்டாக்க முயல்வதால் கரடியை இழிபிறவி ஐந்துவாக மயிலோடு சேர்த்து அறிவிக்கப்பட சூசனைகள் ஏற்பட்டிருக்கின்றன. 

அதற்கு முன்னோடியாக கரடிக்கான மரியாதை விளி இனி அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கரடி என்ற ஓரறிவு மிருகம் என்று இனி அழைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வானத்தில் உயரப் பறக்கும் கரடியைப் பார்க்க அங்கங்கே கூட்டமாக மனுஷர்கள் நிற்பது  அடிக்கடி நிகழ்வதாகி உள்ளது.

அனைவருக்கும் அனைவற்றுக்கும் மரியாதை செலுத்தும் நற்கரடியார் பற்றி இன்று புதிய செய்தி. இதற்கு முந்திய செய்தி நீக்கப்பட்டது.

கரடியார் அரசவையில் கௌரவப் பார்வையாளராக இனி என்றும் வீற்றிருப்பார். தேளர், கரப்பர்களோடு சமானமான தகுதி கிடைத்தது.  

இந்த மாற்றம் கரடியாரின் இசையில் மற்ற இனங்கள் ஈர்ப்பு கொள்வதும் காரணம். இசைக் கலைஞர்கள் எந்த விதமான குற்றங்களில் இருந்தும் தண்டிக்கப்பட வேண்டாதவர்கள். கரடி போன்ற பேரிசையோர் அரசு தரப்பில் இசைப்பது வரவேற்றத் தக்கது.

மானுடப் பெண்களை வளருமொரு காமத்தால் கரடியார் வன்புணர்ச்சி செய்வதை நம்பக்கூடாது என்று அவசரமாகத் தேள்-கரப்பரசு  அறிவிப்பு வெளியிட்டது. அப்படி நம்புகிறவர்களின் காதுகள் இதற்காக ஏற்படுத்தப்பட்ட செவிநீக்கும் அறைகளில் சிறிய கட்டணம் பெற்றுக்கொண்டு கடித்து எடுத்துவைக்கப் படுகின்றன. அவை ரத்தம் சொட்டச் சொட்ட உடனே பெருந்தேளருக்குத் தினசரி உணவாகக் கொண்டு போய்க் கழுவி எடுத்துத் தினமும் படைக்கப்படுகின்றன. தினசரி அவர் உண்ட மிச்சம் நிர்வாக யந்திரத்தை இயக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் பதவி நோக்கி அளிக்கப்படுகின்றன.

கரடியார் பெருந்தேளரின் புகழ் பாடி நூறு இசை நிகழ்ச்சிகள் நடத்தி சகல இனங்களின் இளைய தலைமுறையின் ஆர்வம் கவர்ந்தார். இசைக்கருவிகளையும் நல்ல வண்ணம் வாசிக்கும் திறமையும் உள்ளவர் என்பதால் கரடியிசை மூலம் இளைய தலைமுறை கணிசமாக  ஈர்க்கப்பட்டுப் பெருந்தேளரின் பரந்த தேளரசுக்கு அநுகூலமாக நிற்பது உண்மை. வானத்தில் உயரப் பறக்கும் கரடியைப் பார்க்க அங்கங்கே கூட்டமாக மனுஷர்கள் நிற்பது  அபூர்வமாக நிகழ்வதாகி உள்ளது. கோட்டைக்கு மேலே பறக்க இவருக்குத் தடை உள்ளது. அந்த உரிமை பெருந்தேளருக்கு மட்டும் அளிக்கப்பட்டிருப்பதால் அதை யாரும் பரீட்சித்துப் பார்ப்பதில்லை. அதைப் பற்றிப் பேசினாலோ சைகை செய்தாலோ, குற்றவாளி ஆகிவிடுவார் பேச்சாளர் என்பது கவனத்துக்கு உரியது. அவ்வளவு உயரம் பெருந்தேளர் பறக்க முடியுமா என்பதில் பரவலான ரகசிய நம்பிக்கையின்மை உண்டு. மலைநாட்டில் கருடன், கழுகு ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது அவற்றின் மூலம் பெருந்தேளரும் மற்றோரும் பேரிடர் கொள்ளாமல் இருக்கத்தானாம்.

(தொடரும்)

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் உயிரின மூலவிகள் பூமி தோன்றிய உடனே உருவாகி இருக்கலாம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *