தமிழா! தமிழா!!

This entry is part 10 of 17 in the series 12 பெப்ருவரி 2023

சொற்கீரன் 

என்ன அழைப்பு இது?

யாருடைய குரல் இது?

உன் குரல் 

உனக்குத் தெரியவில்லை.

உன் இனம்

உனக்கு உணர்வு இல்லை.

அயல் இனத்தானின்

வாளும் கத்தியும்

உன் இனத்தானின் 

நெஞ்சில் செருகுவதற்கும்

உன் கைகள் தான்

உதவிக்கு வருகின்றன‌

என்னும் 

ஓர்மையும் உனக்கு இல்லை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌

நீ

இறந்து போன படுக்கையில் தான்

இருந்து கொண்டு

அட்டைக்கத்தியை

சுழற்றிக்கொண்டிருக்கிறாய்.

உன் முன்னோன்

வில் கொடி ஏற்றினான்

என்று

ஒலி பரப்பிக்கொண்டு

இந்த இமயத்தை 

நீ கொச்சைப்படுத்திக்கொண்டு

இருக்கிறாய்.

சினிமாவின் ஜிகினாவுக்குள் 

எந்த சூரியனை 

நீ கருதரிக்கப்போகிறாய்?

ஊள்ளூர் பரங்கிமலைச்சிங்கம்

என்று

அரித்தாரத்து அவதாரத்தை யெல்லாம்

பொதி சுமந்து கொண்டிருக்கிறாய்.

உன்னைத் திசை மாற்றும் 

தில்லாலங்கடிகளுக்குள் 

சட்டென்று ஒட்டிக்கொள்ளும் 

ஈசல் பூசசிகளாய் 

இறைந்து கிடக்கிறாய்.

அது வெறும் மையை 

கொப்புளித்த பேனாவா?

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

என்று 

கலங்கரை வெளிச்சமாய் 

நின்று கொண்டிருக்கும் 

கணியன் பூங்குன்றன் 

விதைத்த தமிழ்ச் சுவட்டை  அல்லவா 

நிமிர்த்திவைத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு ஆரிய சூழ்சசி அதை 

அடித்து நொறுக்க 

அலப்பறை செய்கிறது.

தமிழ்ப்பகையின் 

பொய் மீசைகள் 

முருக்கேற்றிக்கொண்டு 

மூர்க்கம் வளர்க்கின்றன.

கவனம் கொள் தமிழா!

தமிழ் மண்ணே தான் 

இந்தியா என்ன இந்தியா

உலகமெல்லாம் 

தூவிக்கிடக்கிறது

என்ற 

உண்மை என்றைக்கு

உன்னுள் ஒளி பாய்ச்சப்போகிறது?

உன் ஓலைச்சுவடியை 

முகர்ந்து பார்.

அதில் தெரியும் 

உன் உலகத்தின் வாசனை.

உன் உலகத்தின் 

உள்துடிப்பும் உள் உண‌ர்வும்.

தமிழா!தமிழா!!

மீண்டும் உற்றுக்கேள்.

எங்கோ “பெரு”விலிருந்தும்

அமெரிக்கச் சிவப்பு இந்தியக்குரலிலிருந்தும்

ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய‌

பழங்குடிகளின் 

வேர்வை மணத்திலிருந்தும்

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு

வசன ஒலிகளிலிருந்தும்

பாரசீக அவெஸ்தா 

வரலாற்றுப்பாட்டுகளிலிருந்தும்

எகிப்து சுமேரிய‌

மற்றும்

எல்லா எழுத்துப்பூச்சிகளின்

ஊர்தல் வரிச்சுவடுகளிலிருந்தும்

உய்த்து உணர்.

தமிழா! தமிழா!!

தமிழ்க்குரல் கேட்கிறதா?

Series Navigationநானே நானல்லஅகழ்நானூறு 14
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *