வரிதான் நாட்டின் வருமானம்

author
0 minutes, 38 seconds Read
This entry is part 3 of 11 in the series 19 பெப்ருவரி 2023

முனைவர் என்.பத்ரி

               ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை குறிக்கிறது. அதை கொண்டு தான் அரசு தன்னுடைய மக்களுக்கான நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.இந்நிலையில், ஒரு நாட்டின் வரி வருவாய் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உத்தேச வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது மிகவும் தெளிவாக குறிப்பிடப்படும். அதில் குறைவு ஏற்படின் மக்களுக்கான நலத்திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். பொதுவாக, பெரு நிறுவனங்கள் செலுத்தும் வரி, சாமானிய மக்கள் செலுத்தும் வருமான வரி, சொத்து வரி, சுங்க வரி, இறக்குமதி வரி, கலால் வரி என்று பல்வேறு வகையில் இருந்து அரசுக்கு வரி வருவாய் கிடைக்கிறது. பெரும்பாலான வரிகளை ஒன்றிணைத்து, பொருட்கள் மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டுள்ளதால், அரசுக்கு வரி வருவாய் என்ற விதத்தில் கிடைக்கக்கூடிய வருமான பொருட்கள் மற்றும் சேவை வரியில் இருந்து தான் கிடைக்கிறது.இவை போக வெளிநாடுகளில் இருந்து, கச்சா எண்ணெய், தங்கம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதி வரியை மத்திய அரசு விதிக்கிறது. இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்று பிரித்து விற்பனைக்கு கொண்டு வரும் போது, உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனைக்கு கொண்டு வரும் போது மாநில அரசுகளும் தனியாக அதன் மீது வரியை சுமத்துகின்றன.இவை போக, இவற்றை தயாரிக்கும் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை, அந்த நிறுவனம் கார்ப்பரேட் வரி என்ற பெயரில் செலுத்த வேண்டும்.                          

                பெருநிறுவனங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை, அனைத்து பிரிவினரிடமிரிந்தும் அரசாங்கம் வரியை பெறுகிறது. வரிகள் ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், வரிகள் மூலம் கிடைக்ககூடிய வருவாய் இல்லாமல் அரசாங்கங்கள் செயல்படுவது என்பது மிகவும் கடினம். வரியில்லாத நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு, நிதி எதுவும் கிடைக்காது. எனவே, வரிகள் ஒரு நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று.  ஆனால் கோடிக் கணக்கில் இலாபம் மட்டுமே பார்க்கும், நாட்டின் பல்வேறு பெருநிறுவனங்கள்  அரசுக்கு  செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்வது வாடிக்கையாகி விட்டது.இதை  கூர்ந்து கவனித்த சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிர்ச்சியை தெரிவித்ததோடு, அவ்வாறான  நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.காளான்களைப் போன்று அதிகரிக்கும் இவ்வாறான நிறுவனங்கள், மக்களுக்கு கொடுக்கும் தரமற்ற சேவைகளைப் பற்றியும் நீதிமன்றம்தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதை பொதுமக்கள் இவற்றை கவனத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

           நாடு முழுவதும் பல பெறுநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதை வருமான வரித்துறை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. வரி ஏய்ப்பு2017ஆம் ஆண்டிலிருந்து 2021 வரையிலான காலத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரிகளில் சுமார் 93,375 கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை மத்திய அரசு சார்பில் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் முறை  நுண்ணறிவு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த வரி ஏய்ப்புக்கு சுமார் 7,000 கடிதங்கள் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளன. பொருட்கள் மற்றும் சேவை வரிகள் முறை வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு, அதிகப்படியான வரி ஏய்ப்புச் செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில் நுண்ணறிவு இயக்குனரகம் டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சண்டிகர் என நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் அலுவலகங்களின் வாயிலாக அவ்வப்போது அதிரடி சோதனை செய்து வருகிறது.மத்திய நிதியமைச்சகம் வரி ஏய்ப்பை தடுக்கத் தற்போது பல விதமான கட்டுப்பாடுகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாகப் போலி பொருட்கள் மற்றும் சேவை வரிகள் முறை விற்பனை ரசீது தயாரிக்கும் பல மோசடி அமைப்புகளையும், நிறுவனங்களையும் சோதனையின் விளைவாக மூடியுள்ளது.

        தனியார் துறையிலும்,அரசுத் துறையிலும் பணிபுரிபவர்களும் ,ஓய்வூதியம் பெறுபவர்களும் வங்கிகள் மூலம் தம் மாதச் சம்பளத்தை    பெறுகிறார்கள்.இலட்சக்கணக்கில்மட்டுமே ஆண்டு வருமானத்தை பெறும்  இவர்கள், ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் தம்முடைய  நிதிஆண்டின் வருமானத்தை சார்ந்த கருவூலங்களில் தாக்கல் செய்தால் மட்டுமே, மார்ச் மாத சம்பளத்தை பெறமுடியும்.மேலும் மாநில அரசுகளால்   அவ்வப்போது உயர்த்த்ப்படும்  சொத்து வரி,குடிநீர் வரி,தொழில்வரி போன்றவற்றையும் சாமான்ய மக்கள் எவ்வித வரிஏய்ப்பும் செய்யாமல் குறித்த நேரத்தில் அரசுக்கான வரிகளை செலுத்தி வருவது பாராட்டுக்குரியது. இவர்கள் வாக்குகளையும்  செலுத்தி விட்டு உயர்ந்து வரும் வரியையும் கட்டுபவர்கள்.அதனால் சாமான்ய மக்களாகவே இருக்கிறார்கள்.

               பல்வேறு பண்டிகை மற்றும் புத்தாண்டு தினங்களில் தள்ளுபடி விற்பனைக்கு  விட்டில் பூச்சியாக மாறும் நகர்வோர்களின்  மனப்போக்கு இனியாவது மாற வேண்டும்.மற்ற நாட்களை விட இந்த நாட்களில் மட்டும் குறைந்த விலையில் பொருட்களை விற்பது இவர்களுக்கு எவ்வாறு சாத்தியமாகிறது என்று சிந்திக்க வேண்டும்.எனவே ,வரி ஏய்ப்பு செய்து நாட்டு வருமானத்தை குறைப்பது   சாமான்ய மக்கள் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால், நாட்டின் நலத்தை மனதில் கொண்டு பெருநிறுவனங்கள்  இனியும் வரிஏய்ப்பை தவிர்க்க வேண்டும்.வருமான வரித்துறையும்  தம் பணியில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

           தாயின் இழப்பைக்கூட மனதில் தாங்கிக் கொண்டு, தன்னுடைய சமூகப் பொறுப்பை தொய்வில்லாமல் தொடர்ந்த ஒரு மாமனிதரை நாம் பிரதமராக பெற்றுள்ளோம்.அவரை முன்மாதிரியாக கொண்டு நமது அரசியல்வாதிகளும்,    அரசு அதிகாரிகளும் பணியிணை  இனியேனும் நேர்வழியில் மட்டுமே தொடர வேண்டும்.தேர்தெடுத்த மக்களின் நலனில்  மட்டும் அக்கறை காட்டி பணியாற்றும் மனப்பக்குவத்தை பெறவேண்டும். தாம் மக்களின் சேவகர்கள் என்ற நினைப்பு என்றும் மனதில் இருக்கவேண்டும். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது என்பது உண்மைதான் போலிருக்கிறது.

தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில்தெரு,செங்குந்தர்பேட்டை, மதுராந்தகம்-603 306.கைப்பேசி 9443718043 nbadhri@gmail.com

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *