This entry is part 3 of 18 in the series 5 மார்ச் 2023

கு. அழகர்சாமி

அசதியாயிருக்கும் அந்திவானில்

சுறுசுறுப்பாய்த்  திரியும்

தட்டான் பூச்சிகள் கண்டு

சிறு வயதில் நான்

குறும்பாய் வாலில்

நூலை முடிச்சிட்டு

வேடிக்கை பார்த்த

ஒரு தட்டான் பூச்சியின்

நினைவு உயிர்த்தது.

உயிர்த்த என் நினைவில் உயிர்த்துப்

படபடத்த தட்டான் பூச்சி

பறக்கும் மற்ற

தட்டான் பூச்சிகளோடு சேர்ந்து

என் நினைவின் பிடியிலிருந்து

தப்பித்துப் பறந்து போக

ஆசைப்பட்டது. ஆசையாய்

அது பறந்து போக,

என் நினைவுள் நான் நுழைந்து

நான் முடிச்சிட்ட நூலை

நானே அவிழ்த்து விட்டும்

பறந்து போகவில்லை அது.

எப்படி அதன் நினைவுள்

நான் நுழைந்து

நான் முடிச்சிட்ட நூலின்

அதன் நினைவின் முடிச்சை

நான் அவிழ்ப்பது,

அதன் நினைவுள்

அது நுழைந்து

அதன் நினைவின் முடிச்சை

அதுவே அவிழ்த்தாலொழிய

அது பறக்க?

கு. அழகர்சாமி

Series Navigationஅகழ்நானூறு 17விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்