நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

This entry is part 18 of 18 in the series 5 மார்ச் 2023

இரா முருகன்

“அவை தாமே வாசிக்கத் தொடங்கி இருந்தன”.

காடன் திரும்பத் திரும்பச் சொன்னான். குயிலியும் வானம்பாடியும் ஈரத் தலைமுடி நீர்த் திவலைகளைச் சிதறி நனைந்த மூங்கிலன்ன தோள்கள் பளிச்சிடச் சிரித்தார்கள்.  

“காடரே, நாங்கள் தொழிற்நுட்பம் சிறந்த 4700 வருடங்கள் உங்களுக்கு  அப்புறம் உயிர்த்திருந்திருக்கலாம் தான். ஆனால் தானே வாசிக்கும் புல்லாங்குழல் போன்ற சின்னச்சின்ன ஆச்சரியத்தை உண்டு பண்ணும் வெட்டியான கருவிகளை உருவாக்க நேரம் வீணாகச் செலவழித்திருக்க மாட்டோம்”.

அவர்கள் கொண்டு வந்த குழல்கள் வெளியின் ஊடாக, காலத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்ட டிரான்சீவர்கள் தான் என்பதை காடனிடம் சொல்லி சிரமப்படுத்துவதைவிட போகிற போக்கில் விட்டுவிட்டுப் போகலாம் என்று தீர்மானித்திருந்தார்கள்.

 குறிஞ்சியின் குடில் உள்ளே சாணகம் மெழுகிய மண் தரையில் அமர்ந்திருந்தார்கள் அந்த இரு பெண்களும். குறிஞ்சி அவர்களுக்கு மரப்பட்டையால் குழிவாகச் செய்த இரு பெரிய கிண்ணங்களில் சுட வைத்த மான் இறைச்சியும், தினை சேர்த்த கெட்டியான  குருதி பெய்து கிண்டிய களியும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

 வாசலை அடைத்துக் கொண்டு வெளியேயும் உள்ளேயுமாய் நின்று பேச்சு வளர்த்துக் கொண்டிருந்தான் காடன்.

“ குருதிக் களியும் தின்பாயோ குயிலி?”

“தீனியென்று வந்தால் குயிலி ஒரு ஞமலி” களி எடுத்து வாயில் இட்ட விரலையும் சுவைத்தபடி சொன்னாள் குயிலி.

”அடடா ஓ அடடா இப்படி அழகான பெண்ணை ஞமலி என்று சொன்னால் நாங்கள், நிஜ நாய்கள் எங்கே போக” என்றாள் குறிஞ்சி.

சிரித்தாள் மாடத்தி. காட்டு வாத்தின், போத்தின் கால்புறத்து மஜ்ஜையைக் கடித்து உறிஞ்சியபடி குயிலி   கேட்டாள் –

“காடா, நான் கூட பழைய மலைப் பகுதி உணவுப் பழக்க வழக்கம் என்றால் சதா சர்வகாலமும் ஒரு நாளுக்கு மூன்று முறை, தேனைத் தினையில் பிசைந்து உண்பதுதான் என்றுதான் நினைத்திருந்தேன்”.

”வேண்டுமானால் சொல் குயிலி உனக்கு நாலாயிரத்து எழுநூறு வருடம் முன்னே போகும்போது  அக்கையின் சீர்வரிசையாக தேனும் தினையும் கொடுத்து அனுப்புகிறேன்”. –

குறிஞ்சி சொல்லிக் கொண்டிருக்கும்போது வானம்பாடி குயிலியிடம் ”போகலாமா, இன்னொரு முறை வரும்போது மீதிப் பேச்சை வைத்துக் கொள்ளலாம்” என்று அவசரமாகச் சொன்னாள்.

ஒரு வாரம் இங்கே தங்கி இருக்கப் போவதாகச் சொன்னீர்களே ஒரு பகல் அதற்கு மேல் தாங்கவில்லையா என்று கேட்டான் காடன்.

வெளியே ஏதோ பெருஞ்சத்தமாகக் கேட்டது. சமவெளியில் இறங்கி, கரும்புத் தோட்டத்துக்குள் யானைகள் உண்டு மகிழ வராமல் அச்சுறுத்தி விரட்ட ஓவென்று கூட்டமாக ஆர்ப்பரித்து அல்லது சீனவெடி வெடித்து ஓட்டுவது வழக்கம் தான். காற்று நிலைத்த மாலை நேரங்களில் அந்தச் சத்தம் மலையேறி ஒலிப்பதுமுண்டு. எனில், பகல் நேரத்தில் யானை எங்கே வந்தது?

காடனும், தொடர்ந்து குறிஞ்சியும் சத்தம் கேட்ட கூட்டவெளிக்கு ஓடினார்கள்.

”குயிலி கதவை சார்த்தி வச்சுக்க, நான் வந்து திறக்கும்போது நீ வெளியே வந்தால் போதும்” என்று  சொல்லியபடி ஓடினாள் குறிஞ்சி.

 அந்தப் பெண்களும் அதைச் செய்ய மறுத்து  உணவு உண்ட ஈரக் கையோடு வெளியே விரைந்தார்கள்.

”இங்கே நிறைய நேரம் கடத்த வேண்டாம் பெருந்தேளர் அலுவலக அழைப்பு எனக்கும் வந்தது” என்று வானம்பாடியிடம் சொல்லியபடி குழலை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு குயிலி வெளியே ஜாக்கிரதையாக வந்தாள். பின்னால் வானம்பாடி,

மந்தில், என்றால் குன்று பெரும் மேடையில் மரத் தண்டில் அமர்ந்திருந்த சீனர் கீழே விழுந்து கிடந்தார். அவருடைய வாய் கோணிக் கோணி வலித்து இழுத்துக் கொண்டிருந்தது. கைகள் சுட்டி இழுக்கக் கால்கள் தரையை மிதித்து உயர்ந்து தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்தன. வாயில் நுரை தள்ளிக்கொண்டிருந்தது.

அவருக்கு வலிப்பு கண்டிருக்கு, எஃகம் எஃகம் என்று எல்லோரும் சொல்ல முதுகிழவோன் வெறியாட்டத்துக்காக மேடைப் பின்னணியாக மண் குவித்து நட்டு வைத்திருந்த  வேலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான்.

சீனருக்கு அதை எச்சிலாக்கக் கொடுத்து விடக்கூடாது என்பதால் தன் மேல்துணியை வேலைச் சுற்றிப் பொதிந்து  சீனர் வாயில் இட்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக சீனர் அமைதியானார்.  அவர் எழுந்து அமர்ந்து தயவு செய்து என் சிறு பேழையை எனக்குத் தரமுடியுமா, அதில் தான்  என் வலிப்புக்கான மருந்தும் நாக்கைக் கடித்துக் கொள்ளத் தடையாக பயனாகும் இரும்புச் சாவியும் இருக்கிறது என்று கேட்டவர், ஓ அதை மாநகரிலேயே மறந்து வைத்துவிட்டேனே என்று தலையைக் கையால் தாங்கியபடி நின்றார்.

”ஒன்றும் கவலை இல்லை, நாளை காடனோ மாடனோ சமவெளி போகும்போது போய் எடுத்து வரச்சொல்றேன். மாநகரில் களவு அரிதிலும் அரிது. பெட்டியை எங்கே வைத்தீர்கள் என்று நினைவு உண்டல்லவா” எனக் கேட்டான் முதுபெருங் கிழவன்.

”அது நினைவு இல்லையே, நேற்று எங்கெங்கோ சுற்றினேன் எங்கே பெட்டியை இறுதியாகக் கொண்டுபோனேன் என்று நினைவில்லையே” என்று கையைப் பிசைந்தார் சீனர்.

முதுகிழவோன் சிரித்தபடி சொன்னான்=

”நான் பரவாயில்லை போலிருக்கு. என் குடில் என்று அடுத்த குடிலுக்குள் போய் முண்டை அவிழ்த்துவிட்டு நிற்கும்போது அங்கே சிங்கச்சிக் கிழவி வந்து என்ன சத்தம் போட்டாள் தெரியுமோ. அவளைக் காமுற்று அவளது அந்தரங்கம் காண வந்தேன் என்று எண்ணம். நான் வீடு மறந்த மாதிரி குன்றேற மலைப் பாதையும் மறந்து விட்டது ஓரிரண்டு முறை”.

தன் வரலாற்றை சாவதானமாகச் சொல்ல ஆரம்பிக்க, கேள்மின் எனச் சொல்லவோ செவிமடுப்பீர் என ஆணையிடவோ யாருமில்லாததால் மலைமுது கிழவனின் சிங்கார நினைவுகள் காற்றோடு போயின.

கலகலவென்று சத்தம். குறிஞ்சியின் குடிலுக்கு வெளியே குயிலியும் வானம்பாடியும் அவரவர் கையில் எடுத்த புல்லாங்குழலோடு அந்தரத்தில் நின்றிருந்தார்கள்.  

குறிஞ்சி அவர்களை ’நீங்கள் இப்படி நிற்கும்போது பார்க்க யட்சி போல் இருக்கிறீர்கள். கீழே வந்தால் காடன் என்னை மறந்து விடுவான்’ என்று பகடி பேச அவர்கள் திரும்ப நகைத்தார்கள். என்னையும் தான் என்றாள் மாடத்தி. மறுபடி சிரிப்பு.

”நாங்கள் அவசரமாக எங்கள் காலத்துக்குத்  திரும்ப வேண்டியிருக்கிறது. போய் விரைவில் திரும்ப வருகிறோம்”. குயிலி சொன்னாள்.

 ”ஏ பொண்ணுங்களா, மருதையிலே வட்டுக் கருப்பட்டியும் கருவாடும் வரும்போது வாங்கிட்டு வாங்க. கையைப் பிடிச்சுக்கிட்டுப் பத்திரமாகப் பறந்து போங்க. மழை வந்துச்சுன்னா   மரத்தடியிலோ மரக் கிளையிலோ தங்கிக்குங்க” என்று சரம்சரமாகப் புத்திமதி வழங்கினாள் குறிஞ்சி.

”ஒண்ணும் கவலைப்படாதே குறிஞ்சி. எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாகத் திரும்பி வருகிறேன்
 என்றபடி குயிலியும் தொடர்ந்து வானம்பாடியும் விண்ணேறிச் சிறு பொட்டுகளாகத் தோன்றும் வரை பார்த்திருந்தபடி குடிலுக்குள் வந்தாள் குறிஞ்சி.

நண்பர்களே. போய் வாருங்கள். நீங்கள் வரும்போது புதுக் கூத்து உங்களுக்காக உருவாக்குகிறோம் என்றான் முதுகிழவோன் வானம் பார்த்து. அந்தப் பெண்கள் ஒரு வினாடியில் காணாமல் போனார்கள்.

வாசலில் பராக்கு பார்த்தப்டி நின்ற சீனர் பறப்பதாகப் போலி செய்து   கூவெனக் கூச்சலிட்டு குழந்தை போல் ஓடினார்.  அந்தச் சாவியும் மருந்தும் இல்லாமல் போனால் என்ன செய்வீர்கள் என்று சீனரிடம் முதுபெருங்கிழவன் வம்பு விசாரித்தான். உங்களிடையில் மருத்துவன் இல்லையா, மருந்து இல்லையா என்று அவர் பதிலுக்கு மொழிபெயர்ப்பாளன் வழி விசாரிக்க, ஓ உண்டே என்றான் காடன்.

”ஆமா, நம் மலை மருத்துவர் என்ன அருமையாக எல்லாத்துக்கும் மருந்து தரார். இருக்கற நோய், இல்லாதது, அடுத்த வருஷம் வரப்போகிறது, வரக்கூடிய சாத்தியமே இல்லாததுன்னு நோய்க்கான மருந்து என்று ஏதேதோ கலந்து காய்ச்சிக் கொடுத்து நோய் நிவாரணம் என்று பெயர் சொல்லி தினையும், மானும், காட்டுக்கோழியும் மருந்துக் கூலி வாங்கிவிடுவார்” என்று குறிஞ்சி சொல்ல சீனரைத் தவிர எல்லோரும் சிரித்தார்கள்.

சீனர் மந்தில் அமர்ந்து கொண்டார். காடன் குறிஞ்சியைப் பார்த்து முறைத்தான். அவள் பேசியது பீடன்று என்று அவன் பார்வை சொன்னது.

  ”இந்த சீனநாட்டு விருந்தாளி மேலும் ஒரு கண் இருக்கட்டும்” என்றான் முதுபெருங்கிழவோன் பேச்சுக்கு இடையே பாம்பு போல் இஸ்ஸென்று இரைந்து ரகசியக் குரலில்.

எல்லா வெளி மாநில, வேற்றுதேச பயணிகளும் மொழிபெயர்த்து அவரவர்களுக்குச் சொல்லக் கூட்டி வருகிறவர் கூடிய மட்டும் அவர்கள் ஊரிலிருந்தே அழைத்து வருகிறவர்களாக இருக்கும். மொழிபெயர்ப்பாளர் பயணியை விடப் புத்திசாலியாக இருப்பதும் வழக்கம். ஆனால் இவரோடு வந்தவரோ நடப்பதும் நிற்பதும் பேசுவதும் விநோதமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இருந்து வந்தவரோ என்னமோ அந்தப் பெண்கள் அவனை லட்சியமே செய்யவில்லை என்றாலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து பேசி வைத்து வந்திருக்கலாம்.

முதுபெரும்கிழவன் சொல்லி முடிக்கும்போது சீனர் மந்திலிருந்து கால் தாங்கித் தாங்கி வந்தார். குறிஞ்சி  குடிலுக்கு வந்து கொண்டிருந்த சீனரின் மொழிபெயர்ப்பாளன் நடந்தபடிக்கே பின் தலையைச் சற்றே திறந்து எதையோ அழுத்திக் கபாலத்தை மறுபடி மூடிக்கொண்டான். ஒரு வினாடி இந்த நிகழ்வைப் பார்த்தவள் ராக்கி முதுகிழவி. வயதானதால் மனமும் கண்ணும் குறக்களி காட்டுவதாக இருக்குமோ என்று நினைத்ததைச் சொல்லியபடி போனாள் அவள். 

கீழே மலை ஏறத் தொடங்கி இருக்கும் இரண்டு பேர் தலையில் சுமந்திருப்பது சீனப் பிரப்பம் பெட்டி என்று மேலிருந்தே தெரிந்தது. அது சீனப் பயணியினது ஆக இருக்கக் கூடும். சீனன் தங்கிய விடுதி, அவன் மதுவருந்திய கள்ளுக்கடை, உண்டுபோன யாத்திரிகர் சத்திரம் எங்கும் சீனரின் பெட்டி கிடைக்காமல் போனாலும், நடுவயதுத் தாசி நறும்வல்லி வீட்டுப் படுக்கை அறையில்   அவனது லங்கோடு கிட்டியது எனவும் தாசியின் உள்ளாடையை சீனன் அணிந்து போயிருக்கிறான் எனவும், அவளுடைய அந்தப் பட்டு உள்ளாடை ராசியானது என்பதால் சீனனின் இடுப்பிலிருந்து அதைக் களைந்து எடுத்து வந்து கொடுத்தால் நூறு பொற்காசு தாசி நறும்வல்லி பரிசு அளிப்பாள் என்பதை மலைமுது கிழவோனுக்கான செய்தியாகக் கொண்டு வந்தார்கள் வந்தவர்கள். பெரும் அலையாக நகைப்பு எழுந்தது உடனே.

சீனப் பயணி அதைக் கேட்டு ஒரு சுக்கும் புரியாமல் மொழிபெயர்ப்பாளனை உதவி கேட்பது போல் பார்க்க, அவன்  தனக்குத்தானே முணுமுணுப்பதாக        முடியாது போ என்று சொல்லி வாயை மூடிக்கொண்டான்.  

 சீனப் பயணிக்கு மொழிபெயர்ப்பாளன் வாய் அசைவு தெரிந்தது. என்றால் அவன் என்ன சொல்லியிருப்பான் என்று அறியாவிட்டால் அதனால் இடர் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டாகலாம். அவன் இந்த சீனனை சாக்கடைக்குள் அமிழ்த்துவோம் வாருங்கள் என்றோ அவனுடைய கையிடுக்கில் சந்தனம் பூசுவோம் வர விருப்பம் உள்ளவர்கள் வரிசையில் நின்று சந்தனம் எடுத்துக் கொள்ளலாம் என்றோ அறிவிக்கலாம்.

சீனருக்கு சந்தனமும் நரகலும் பார்க்கவும் முகரவும் ஒரே மாதிரித்தான் வாடை என்பதால் முன் சொன்ன இரண்டு விதமும் அவரை இம்சிக்க ஏற்படுத்தும் துன்பங்களாக இருக்க வேண்டும் என்று பட்டது.

சீனர் பின்னால் திரும்பிப் பார்த்துக் குனிந்து வணங்கி மொழிபெயர்ப்பாளனிடம் இதைச் சொல்ல அவன் கரகரவென்று வித்தியாசமான குரலில் இதை மொழிபெயர்க்க இயலாது மன்னிக்கவும் என்றான்.

சீன விருந்தாளி முகம் சுளித்து அசங்கிய வார்த்தைப் பிரவாகமாக என்று ஊகிக்கக் கூடிய விதத்தில் மொழிபெயர்ப்பாளன் காதில் ஏதோ சொல்லச் சிறியதாக வெடிச் சத்தம்.

மொழிபெயர்ப்பாளன் காதிலும் வாயிலிருந்தும் இளம் மஞ்சள் நிறத்தில் புகை வர அவன் உலோகத்தால் முடுக்கிக் கட்டி நிறுத்திய அமைப்பு சரிந்ததுபோல் கீழே சரிந்தான்.

”உலோகம் வைத்துச் செய்த யந்திரம் தான். மனுஷன் இல்லை”.

 கிழவோன் சொல்லப் பெண்கள் எல்லோரும் அவனைச் சுற்றி வந்து ஊ ஊ ஊ என்று சத்தமிட்டு   ஆடியபடி போனார்கள்.

இந்தக் கூறு கெட்ட யந்திரத்தை தலையைச் சுற்றி மூணு முறை     துப்பித் தூங்கி எரியுங்கள் என்று கட்டளையிட்டு மீசையை நீவிக் கொண்டான் முதுகிழவோன்.

“நில்லுங்கள். இது எதிர்கால அரசாங்கத்தின் சொத்தாக இருக்கும் அல்லவோ. அப்படி என்றால் தூக்கிப் போட முடியுமோ” என்று முதுகிழவனே சந்தேகத்தை எழுப்பினான்.

”நாம்  எதிர்காலம் என்பதில் நம்பிக்கை வைத்தால் தானே யார் எப்போதும் எது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி. நம்மைப் பொருத்தவரை அவர் விருந்தாடி வந்த சீனருக்கு மொழிபெயர்க்கக் கூட அனுப்பப்பட்டார். வேலை முடிந்ததாக தோன்றியதோ என்னமோ காலத்தை முடித்துக் கொண்டார். மலைச்சுனை ஓரத்தில் பெரும் பாறைக்கு மறைவாகக் கிழக்கு மேற்காகக் கிடத்தி விடலாம்” என்றாள் குறிஞ்சி.

அப்படியே அவனை, அந்தப் பழுதுபட்ட யந்திரத்தை நான்கு மல்லர்கள் சுமந்து மலைச்சுனைக்குக் கொண்டு போனார்கள். கை பொறுக்காத சூட்டில் மொழிபெயர்ப்பாளன் மஞ்சள் புகை சன்னமாக விட்டுப் போனது மல்லர்களுக்கும் கூடப் போனவர்களுக்கும் நுரையீரலைப் பாதிக்கும் விதத்தில் இருந்ததால் யந்திரத்தைச் சுனைக்குப் போகும்   பாதையில் இறக்கி வைத்து விட்டு கையைச் சூடு தணிய வாய்க்கால் நீரில் வைத்து எடுத்தார்கள். ஏதோ தோன்ற மட்டக் கழுதை வண்டியில் கிடத்தி எடுத்துப் போனார்கள்.

சுனைக்கு அருகே அருவி இரைச்சல் ஹோவென்று ஒலிக்க அந்த மொழிபெயர்ப்பு யந்திரம் எழுந்து மட்டக் கழுதை வண்டியில் இருந்து இறங்க முற்பட்டது.  புதைத்து விடலாமா என்று கிழவோன் யாரென்று இல்லாமல் ஆலோசனை கேட்டான். வேண்டாம் என்று யந்திரம் அவசரமாகச் சொன்னது.

மேகம் கருத்து வரும்போது மந்தில் சீனரைத் தவிர யாருமில்லை. அவர் கண்ணை இறுக மூடிக்கொண்டு சீனமொழியில் சொல்லிக் கொண்டிருந்தது புராதனமான சீன நகரங்களின் பெயர்கள் என்று மொழிபெயர்ப்பு யந்திரம் அரற்றிக் கொண்டிருந்தது.

”பீஜிங், ட்ஸியாங், நான்ஸிங், லுவொயங், ஹாங்க்‌ஷூ” என்று திரும்பத் திரும்பச் சொன்னது அடுத்த வலிப்பு வராமல் இருக்க உபாயம் என்று யந்திரம் எழுந்து உட்கார்ந்து சொல்ல, முதுகிழவோன் சீனர்களின் முன்கூட்டியே எதிர்பார்த்துத் திட்டமிடலை மெச்சி அதைப் பாராட்டி ஒரு கூத்து நடத்தலாம் என்று ஆர்வத்தோடு சொன்னான்.

சீன விருந்தாளி ஏதோ சொல்லத் தொடங்க, கொலுகொலுவென்று உடம்பைச் சுற்றி வழிந்த அவரது ஆடையின் உள் பக்கம் பாறையில் மோதியது. ஏதோ உலோகமும் கண்ணாடியும் பாறையில் மோதிய சத்தம் கேட்டு சீனர் அவசரமாகக் கையை குப்பாயத்துக்குள் நுழைத்துப் பார்த்தார். ஓவென்று சத்தமிட்டார். சாவி கிடைச்சது. மருந்துப் பேழையும். பச்சை கல் கிளாஸ் சீசாவையும் விரல் நீள இரும்பு சாவியையும் எல்லோரும் பார்க்க உயர்த்திப் பிடித்துக் காட்டினார். கள் சாராயமா என்று சீசாவைப் பார்த்து யாரோ கேட்க, மருந்து என்று களிகூர்ந்து ஒற்றைப் பின்னல் ஆட நடனமாடினார் சீனர்.

மொழிபெயர்ப்பு யந்திரமும் எழுந்து மறுபடி உட்கார்ந்து சாவி கிடைச்சுது மருந்து சீசாவும் கிடைச்சது இந்த ஆட்டம் எப்போது நிற்கும் என்று சத்தமிட்டு இன்னொரு முறை புகை தள்ளித் தரையில் விழுந்தது.

இதற்காக இன்னொரு கூத்து என்று முதுபெருங்கிழவன் தொடங்க, வேணாம் அந்தப் பெண்கள் திரும்பி வந்தால் நடத்தலாம் என்று யந்திரம் கடைசியாக ஒரு யோசனை சொன்னது. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தபடி மலைமுது கிழவன் தன்குடில் ஏகினான்.  

சீனன் அணிந்திருக்கும் தாசி நறும்வல்லியின் உள்ளாடையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.  

சஞ்சீவனி என்றான் மலைமுது கிழவன். சஞ்சீவனி என்றான் சுனையில் உள்ளாடை ஓட, நாறும்வல்லி-நறும்வல்லியின் உள்ளாடை ஓடி மறைய ஏக்கத்தோடு பார்த்தபடி, சீனன். சஞ்சீவனி என்றான் காடனும். புலவனும் சொன்னான் சஞ்சீவனி என்று.  சஞ்சீவனி? 

தொடரும்

Series Navigationதேடலின் முடிவு
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *