This entry is part 8 of 14 in the series 19 மார்ச் 2023

லாவண்யா சத்யநாதன்

தாய் மகள் உறவிலும்
தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.
வடிவும் வனப்பும்கூட
தந்தை மகள் உறவில் திரைகளுண்டு
செழிப்புகூடி சேலையுடுத்த
சகோதர உறவில் திரைகளுண்டு.
ரத்த உறவுகளென்றாலும் அவை
மனதளவிலான உறவுகளாய் மாறும்.
நம் உறவு உடலும் உள்ளமும் இணைந்த உறவு.
உயிருள்ளவரை மாறா உறவு.
திரைகளில்லா உறவு.
எச்சிலும் வேர்வையும் இன்னபிறவும் கலந்த உறவு.
உன் ஒவ்வொரு மயிர்க்காலின் நினைப்பும்
என்னாலறியமுடியும் உறவு.
எவளைப் பார்க்கினும் ரம்பையாய் தெரியும்
கிளியைவிட்டுக் குரங்கைத் தேடும்
நடுவயதுக் கிறுக்கு உன்னைப் பிடித்திருப்பதை
நானறியும் உறவு.
மோரில் நனைத்த கரண்டியை
பாலில் கலக்கமுடியாதென்று
உன் காதைத் திருகி
உன்னைக் கட்டிப்போடும் உறவு.
—-லாவண்யா சத்யநாதன்

Series Navigationகுவிகம் ஒலிச்சித்திரம் கப்சா கதிர்வேல் x ஊர்தின்னி மாசிலாமணி