படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 4 of 14 in the series 19 மார்ச் 2023

முருகபூபதி

மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால், இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.
இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும் வீரகேசரி சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம் துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக வழங்கியது.


வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும், படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.
எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு வந்திருக்கும் வீரகேசரி , இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பதிப்புத்துறையிலும் தீவிர கவனம் செலுத்தியது. 1971 ஆம் ஆண்டு முதல் 1983 வரையிலும் நாடெங்குமிருந்த வீரகேசரி விற்பனை நிலையங்களில் காணப்பட்ட வீரகேசரி பிரசுரங்களை மூத்த தலைமுறை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
வாசகர்கள் மலிவு விலையில் வாங்கிப் படிக்கத்தக்கவாறு, கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணத்தில் முகப்பு ஓவியங்களுடன் வெளியான வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய விரிவான ஆவணப்பதிவை வரவாக்கியிருக்கிறார் இங்கிலாந்தில் வதியும் நூலகர் என். செல்வராஜா.
எமது மத்தியில் நூலியல், நூலகவியல் துறைகளில் இவர் அயர்ச்சியின்றி தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் பணிகளின் மூலம் தமிழ் உலகம் அறுபதிற்கும் மேற்பட்ட ஆவணங்களை இவர் மூலம் பெற்றிருக்கிறது.
நூல்தேட்டம், நூலகவியல் ஆகியவற்றின் ஆசிரியராகவும் விளங்கும் செல்வராஜா, எங்கட புத்தகங்கள், அச்சாண்டி ஆகியன உள்ளிட்ட பல ஈழத்து இதழ்களின் ஆலோசகராகவும் இயங்கிவருபவர்.
நூலகர் செல்வராஜாவின் தீவிர தேடலும் உழைப்பும், இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம் நூலிலும் வெளிப்பட்டுள்ளது.
வீரகேசரி பிரசுரங்கள் மூலம் தங்கள் நாவல்களை கண்ட பல படைப்பாளிகள் தற்போது எம்மத்தியில் இல்லை. எனினும் அவர்களின் எழுத்துக்கள் இன்றளவும் தலைமுறை தாண்டியும் பேசப்படுகின்றன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பல பரிமாணங்களைப் பெற்று வளர்ந்து, இறுதியில் போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என நீட்சிகொண்டது.
வீரகேசரி பிரசுரங்கள், போர்க்காலம் கருக்கொள்ளத் தொடங்கிய 1983 காலப்பகுதியில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது.
1970 களில் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து வளர்ப்பதற்கும், அதே சமயம் தென்னிந்திய வணிக இதழ்களை கட்டுப்படுத்தவும், திரைப்படக் கூட்டுத்தாபனத்தை உருவாக்கி அதன் மூலம் மானியம் வழங்கி, உள்நாட்டு தமிழ்த்திரைப்பட தயாரிப்புக்கு வாய்ப்பு வசதிகளையும் வழங்கியது.
அத்தருணம், வீரகேசரி பிரசுரங்கள் வாசகர் மத்தியில் எழுச்சி கொண்டன. செங்கைஆழியானின் வாடைக்காற்று நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியாகி, சுமார் ஏழாயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை புரிந்தது. அத்துடன் இக்கதையை திரைப்படமாகவும் வெளியிட்டனர். இலங்கையில் வெளியான குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்படமாகவும் ரசிகர்களினால் கொண்டாடப்பட்டது.
அதில் இடம்பெற்ற வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே… என்ற ஜோசப் ராஜேந்திரனின் பாடல் இலங்கையில் பரவலாக ஒலித்தது.
ஏழு ஆண்டுகளில், அதாவது 1977 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தினால், திறந்த பொருளாதாரக்கொள்கை நடைமுறைக்கு வந்து, நிலைமை தலைகீழாகவும் மாறியது. 1977 , 1981, 1983 இலங்கை இனக்கலவரங்களையும் சந்தித்தது.
1981 இல் மிகவும் பெறுமதியான யாழ். பொது நூலகமும் எரியூட்டப்பட்டது.
நூலகர் செல்வராஜாவின் தீவிர தேடலில் வெளியாகியிருக்கும் வீரகேசரியின் படைப்புலகம் ( எழுபதுகளில் ஈழத்தின் தமிழ் நூல் வெளியீட்டின் எழுச்சி ) மேற்குறித்த நினைவுகளை மீட்டுகின்றது.

வீரகேசரி பிரசுரம் என்ற முத்திரையுடன் வெளியான நாவல்களின் பட்டியலை மாத்திரம் பதிவேற்றாமல், அவற்றிலிருந்த பிரதேச மண்வாசனை , சொல்லப்பட்ட செய்தி, இடம்பெற்ற கதாமாந்தரின் இயல்புகள் பற்றியெல்லாம் விவரிக்கின்றது.
வடபுலத்தின் ஆத்மாவை பிரதிபலித்த கதைகள், கிழக்கிலங்கை மக்களின் வாழ்வைப்பேசிய கதைகள், மலையக மக்களின் கண்ணீரைச்சொன்ன கதைகளை, மட்டுமன்றி, தென்னிலங்கையில் 1971 ஏப்பிரிலில் நிகழ்ந்த சிங்கள இளைஞர்களின் எழுச்சிப்போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளையும் வாசகருக்கு வீரகேசரி பிரசுரங்கள் வழங்கியது என்பதையும் நூலகர் செல்வராஜா இந்த நூலில் சுட்டிக்காண்பித்துள்ளார்.
அத்துடன் தனது ஆதங்கத்தையும் தமது என்னுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:
“ நமக்கென்றொரு ஆவணக்காப்பகமோ சுவடிச்சாலைகளோ இல்லாத நிலையில் நமது முன்னோர் எம்மிடம் ஒப்படைத்துச்சென்ற பெறுமதிமிக்க வரலாற்று ஆவணங்களை படிப்படியாக இழந்து வருகின்றோம். அது எம்மில் பலருக்குப் புரிவதேயில்லை. சிலருக்கு புரிந்துகொள்ள விருப்பமும் இல்லை. அது தேசிய அரசாங்கத்தின் வேலை என்று பந்தை எதிர்க்கரைக்குத் தள்ளிவிடுகிறோம். எமது புலமைசார் சொத்துக்களை அழித்து எரித்தவனிடமே, அதனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் வழங்கிவிட்டு “ நிம்மதியாக “ இருக்கின்றோம். புலம்பெயர் தமிழர்களின் கூட்டு முயற்சியிலாவது ஆங்காங்கே கிடைக்கும் ஆவணங்களைச் சேர்க்கத் தொடங்கினாலாவது சிறிய எண்ணிக்கையில் அவற்றைக் காப்பாற்றிவிடலாம். “
இந்நூலில் நூலகர் செல்வராஜா அறிமுகம் என்ற தலைப்பில் 15 பக்கங்களில் விரிவாக எழுதியிருக்கும் குறிப்புகள், அந்தக் காலத்தில் வீரகேசரியில் இரண்டு தலைப்புகளில் வெளிவந்த தொடர்கதைகளைப்பற்றிய தகவல்களையும் முழுமையாகப் பேசியிருக்கிறது. வாசிக்க சுவாரசியமாக இருந்தது.


வீரகேசரி பிரசுர பதிப்புலகத்தின் தந்தையாக விளங்கிய முன்னாள் முகாமையாளர் ( அமரர் ) எஸ். பாலச்சந்திரன், அவருக்கு அனுசரணையாக விளங்கிய விளம்பர – விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம்,

ஆசிரியராகவும் தொடர்கதை ஆசிரியராகவும் இயங்கிய ( அமரர் ) ரஜனி – கே. வி. எஸ். வாஸ், ஏற்கனவே வீரகேசரி பற்றிய நூல்களை எழுதியிருக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் ( அமரர் ) எஸ். எம். கார்மேகம், திருமதி அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரையும் நூலகர் செல்வராஜா மறக்காமல் நினைவுபடுத்தியிருக்கிறார்.
நூலின் பிற்சேர்க்கையாக, நாடெங்குமிருந்த வீரகேசரி பிரசுரங்களின் விற்பனைப் பிரதிநிதிகளின் முகவரிகளையும் தவறாமல் பதிவேற்றி, அவர்களையும் நினைவூட்டுகிறார்.
சமகாலத்தில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஊடக கற்கை நெறி உருவாகியிருக்கிறது. பல பல்கலைக்கழக மாணவர்கள், தமது B. A – MPhil பட்ட ஆய்விற்காக இலக்கிய நூல்களை ( சிறுகதை, நாவல், புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் ) தேடி எடுத்துப்படிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அவர்களுக்கு, நூலகர் செல்வராஜா தொடர்ந்து வெளியிட்டுவரும் ஆவணத்தொகுப்புகள் உசாத்துணையாக விளங்கும்.
அந்த வரிசையில் தற்போது அவரின் மற்றும் ஒரு நூல்: வீரகேசரியின் பதிப்புலகம்.
இங்கிலாந்து அயோத்தி நூலக சேவைகள் அமைப்பும், கொழும்பு குமரன் புத்தக இல்லமும் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளன.
—0—
letchumananm@gmail.com

Series Navigationஇது இவன் அனுபவம்எரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *