ஆர் வத்ஸலா
நேற்று என் தோழி இறந்து போனாள்
படுக்கவில்லை
தூக்கத்தில் போய்விட்டாள்
அழுது ஓய்ந்து விட்டேன்
சமாதானப் படுத்திக் கொண்டேன்
படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி
இல்லாவிட்டால்
கஷ்டப்பட்டிருப்பாள்
புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும் நடுவில்
அவளுக்கு ஏகமாக
புடவை நகை வாங்குவான்
தன்னிஷ்டத்திற்கு
அவள் ஆசைப் பட்டதை வாங்க மாட்டான்
அவளுக்கு உடல் நலம் கெட்டால்
புகழ் பெற்ற மருத்துவர் வைத்தியம்
ஆனால் அவள் தான் சமைக்க வேண்டும்
அவனுக்கு பிடித்த மாதிரி
அவள் நொண்டி நடந்து சமைத்தாலும்
கவனிக்க மாட்டான்
அவள் விட்டுக் கொடுக்காத
தர்ம பத்தினி
“அவருக்கு எம் மேலெ கொள்ளெ ஆசெடீ”என்பாள்
நேற்று அவள்
இறந்து போனாள்
அவன் அழவில்லை
இன்று அவன்
இறந்து போனான்