நாவல்  தினை              அத்தியாயம் பதினொன்று        CE 300

This entry is part 6 of 6 in the series 23 ஏப்ரல் 2023

  

மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின.

ஆற்றங்கரை  இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த துணி தவிரக் கொண்டு வந்த விழுப்பைத் துவைத்து அலசவும், ஆற்று வண்டல் எடுத்து, அழுக்கும், படிந்திருந்த உடல்வாடையும் போயொழியக் கையிடுக்கிலும், அரைக்கட்டிலும், காலிடுக்கிலும் வெகுவாகப் பூசி, குளிர்ந்த நதி நீரில் மனக் கசடும், எண்ணக் கசடும், உடல் கசடுமெல்லாம் உதிர்ந்து, தூய்மை மீட்டு வரவுமாக எல்லா வயதினரும், ஆண்கள் தனியாகவும், எதிர்ப் படித்துறையில் பெண்களும் நீராடிக் கொண்டிருந்தார்கள். 

புராதன நாடகங்களில் தேவதைகளும் கடவுளரும் புஷ்பக விமானமேறித் தரை பார்த்தபடி பறக்க, ஆற்றங்கரையில் அழகிய மங்கையரைக் கண்டு விமானவிசை தாழ்த்தி நிலம் தொட்டிறங்கி, பாலியல் ஈர்ப்பினால் அம்மகளிரைக் கவர்ந்து போவதுண்டல்லவா?

 அஃதே போல் ஆற்றங்கரையில் யாரும் கவனித்துப் பொருட்படுத்தாமல், கடந்து போன நொடிக்கில்லை, இப்போதுண்டு எனப் பிரத்யட்சமான இருவர் ஆணில்லை. தேளரசு யுகத்தவரான இரு கன்யகைகள், குயிலியும் வானம்பாடியும்.

தோளில் துணி சஞ்சியும், நீண்ட அங்கியுமாக, தோல் செருப்புகள் கால்விரல்களுக்குக் கீழேயிருந்து சற்று மேலே வளைந்து அதிகாரம் சொல்லவுமாக நெடுநெடுவென்றுயர்ந்த இளம்பெண்கள். குயிலி முன்னால் நடந்தாள்.

காந்தமிகு கண்கள் நகைத்திருக்க, விடர்ந்த நாசி வேடிக்கை வினோதம் கண்டதுபோல் இதழ்களைச் சிரிக்கச் சொல்லி வலியுறுத்தியது. சற்றே பிரிந்த இதழ்கள்   வெண்பற்களை சிறிய இரு மின்னல் கீற்றாக வெளிப்படுத்தித் தந்தப் பேழையை இறுக்க மூடியதுபோல் நாவும் அன்னமும் முத்துப் பல் வரிசையும் மறைத்துத் துடித்து நின்றன.  இது குயிலி.

அவளுக்குச் சற்றும் வனப்புக் குறையாமல் வானம்பாடி அவளுக்குச் சற்றே ஒரு காலடி பின்னேகினாள்.  

நேரம் என்னவோ?

குயிலி வண்டியொன்றை இழுத்து வழிகடந்து போன ஒரு வணிகனைக் கேட்டாள். மாகாளிக் கிழங்கும், வள்ளிக்கிழங்கும் புத்தம்புதியதாகக் கெல்லிய மண் வாடையும் அந்தந்தக் கிழங்கின் பிரத்தியேக நெடியுமாக வண்டியேறிக் கிடந்தன.

ஓ பெரியோய், நேரமென்ன கூறுவீர் என்று இனிய குரலில் மறுபடி கேட்டாள் அவள்.   

என்ன ஐயம் பெண்ணே? மேகமூட்டமாக இருந்தால் நேரம் மாறித் தெரியுமோ? காலை சுப முகூர்த்தமான விடிந்து நான்கு நாழிகை. வெளியூர்க்காரிகளோ? பெரிய சஞ்சிகளில் என்ன எடுத்து வந்து விற்கப் போகிறீர்கள்?

அவன் கூடுதல் தகவலைக் கோரினான். உண்ணவும் உடுக்கவுமாக விற்க வரவில்லை ஓய் பெரியோய் என்றாள் வானம்பாடி.

இருவரும் பெரும் கிழங்கு விலைபேச வந்தீரோ? குறும்பு கொப்பளிக்க அவன் கேட்கத் தோள் சஞ்சியால் மார்பு சற்றே மறைத்து பொய்க் கோபமும் சிறு சிரிப்பும் சமனாகக் கலந்து காட்டி நடந்தாள் வானம்பாடி.

அவன்  உன் இருநூற்றைம்பது தலைமுறை முந்தைய முன்னோன். அவன் கண்டால் என்ன நாணம் எனச் சிரித்தாள் குயிலி.  

 சாடைக்கு உன்னைப் போல் இருக்கிறான். அவன் விற்கும் கிழங்கோ.

இருவரும் கொல்லென்று சிரித்து சற்றே அகன்று நடந்து சட்டென்று நெருங்கிக் கரம் பற்றி இணை அன்னங்களென நடைபோட்டு வந்தார்கள்.

குழந்தை ஒன்றை நடத்திக் கூட்டி வந்தபடி அதன் அம்மா மெல்ல அசைந்து வந்தாள். சாலையை ஒட்டி ஓங்கி நின்ற மாளிகைச் சுவர்களில்   ஒட்டியிருக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளை மருதாணிக் கோலம் வரைந்த கைவிரல் கொண்டு மெல்லத் தொட அவை உடன் மேலெழும்பி சிவப்புத் துகளாகப் பறந்து மறைவது கண்டு குழந்தை கை கொட்டிச் சிரித்தபடி வந்தது.

அந்தப் பெண் குயிலியையும் வானம்பாடியையும் கண்ட மாத்திரத்தில் முகம் மலர்ந்து சிரித்தாள். இந்த நாள் இனிய நாள் என்றாள் குயிலி அவளிடம்.

வெளியூர் அரிவையரோ? அவள் குழந்தையைப் பிடித்த கைவிடாமல் கைமாற்றிக் கொண்டு விசாரித்தாள்.

”நாங்கள் மலைநாட்டிலிருந்து வருகிறோம். மகளிர் ஒரு பொழுது தங்கி, நீராடி, சிற்றுண்டி கழித்துப் போக மகளிர் மட்டுமே பேணப்படும் இல்லமெதுவும் இங்கே உண்டோ அக்கச்சி? அதற்கான காசு கொடுப்பதில் எந்த இடரும் இல்லையக்கை” என்றாள் வானம்பாடி குழந்தையின் தலையை அன்போடு அளைந்துக் கொண்டு.

”இவ்வூர்ப் பெண்டிர் தனித்துத் தெருவிறங்கிப் பயணம் போவது அரிது அங்கச்சி. அது கொண்டு, அப்படி ஒரு தங்குமிடத்துக்குத் தேவையில்லையே” .

குழந்தை இன்னொரு பூச்சியைச் சுவரில் தொட அது சீற்றத்தோடு தாய் முகத்தை ஒட்டிப் பறந்தது. தலை குலுக்கி அதை விரட்டியபடி குழந்தையின் அன்னை சொன்னாள் –

“ஓ தங்கச்சியரே, என் கணவர் கடாரம் சேர்ந்து. வலம்புரிச் சங்கும் முத்துமன்ன கடல்படு பொருளும், நிலம்படு குங்குமப் பூவும் வாங்கி விற்று வணிகம் செய்து பொருளீட்டப் போயிருக்கிறார். என் இல்லத்தில் நீங்கள் ஒரு பொழுது என்ன, சில பொழுதுகள் தங்கி, என் விருந்தாக இருந்து போகலாம்” என்றாள்.

வானம்பாடி ஒரு வினாடி தாமதித்து நின்று குயிலியை நோக்க, அவள் முகத்தில் மாறாத சிரிப்போடு நகர்ந்தாள். எதிர்ப்பட்ட இளம்பெண்ணும் முகமே தாமரையாக மலரச் சிரித்தாள்.

“நான் மேகலை. பெருவணிகர் குடும்பத்தினள்” என்று சொல்லி நிறுத்திக் குழந்தையைச் சற்றே தெருவோரம் ஓடி விளையாட விட்டு, இருகை கூப்பி நாட்டியத்தில் தாமரை மலர்வது போல் அபிநயித்து, என் கணவர் பெயர் அதுவென்றாள்.

நாலைந்து சிவப்புத் துகள்கள் மதிலில் இருந்து மேலேறிப் பறந்தன.

“அக்கச்சி, அவர் பெயர் இந்திரகோபனா?” என வானம்பாடி கேட்க, சங்கோஜத்தோடும் சிரிப்போடும் காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமவர் என்றாள் மேகலை.

“யார் கால்?” என வானம்பாடி கேட்க, ஆண்டுகள் கணக்காக நல்ல நட்பில் இருக்கும் தோழிகள் போல் மூவரும் சிரித்துத் தழுவிக் குழந்தையைக் கூட நடப்பித்துப் போனார்கள்.

“சற்றுத் தொலைவுதான். இன்னும் நூறு அடி நடந்தால் போதும்”

மேகலை எனப்பட்டவள் சொன்னாள்.

“மிக்க நன்றி எனினும் அது பீடன்று”.  குயிலி அடக்கமாக அது சரியில்லை என்று மறுத்தாள்.

“புதியவராக யார் வந்தாலும், நாங்களாக இருந்தால் கூட முழுக்க நம்பவேண்டாம். பழகியபின் அது சரியாக இருக்கலாம்” என்றாள் வானம்பாடி.

“இப்போது தான் நாம் பழகிவிட்டோமே” என்றாள் மேகலை.

”அடுத்த முறை மலைநாட்டில் இருந்து வரும்போது உங்கள் இல்லத்தில் விருந்தாடுகிறோம் இப்போது வேண்டாம்”.

“அடுத்த மாதம் என் கணவர் கடாரத்தில் இருந்து எல்லாம் ஏறக்கட்டி எடுத்துக்கொண்டு இனிப் பயணம் இல்லை எனத் திரும்பி வந்து விடுவார். இனி இங்கே தான் கூள வணிகமும், வடக்கு நில உணவு உட்கொள்வாருக்காக கோதுமை திரித்த பொடி விற்பனையும்”. மேகலா அன்பு மாறாமல் வானம்பாடியின் கரம் பிடித்து வருடியபடி சொன்னாள்.

”நீங்கள் அப்போது தனித்திருக்கும் இணையராக இருப்பீரன்றோ. அந்தரங்கம் பயிலும்போது காட்டுக்கரடி போல் உள்ளே ஓடி வருவோமோ?” வானம்பாடி சிரித்தாள்.

 ”சரி வருக,  துர்க்கையம்மாள் கிழவி, கோவில் தரிசனத்துக்காக வருகிறவர்களுக்கு தங்குமிடமும் உணவும் கொடுத்து ஒரு சிறு கட்டணமும் வாங்கும் விடுதி இங்கே உண்டு. என் வீட்டுக்கு அருகில்தான்” என்றாள் மேகலா.

அந்த ஏற்பாடு அவர்கள் இருவருக்கும் பிடித்தது. குயிலி வழியில் நின்று வாழை நார் கொண்டு அடர்த்தியாகத் தொடுத்த பூச்சரமும், நாட்டு வாழைப்பழங்களும், கிச்சிலிப் பழங்களும், சீனி மிட்டாயும் பொதிகளாக வாங்கிப் பையில் இட்டு நடந்தாள்.

“இதுதான் என் குடிசை. விருப்பமும் நேரமும் கிட்டும்போது  எழுந்தருள்க” என்று போலிப் பணிவோடு வணங்கினாள் மேகலை;

அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஒன்பது இருக்க பிரம்மாண்டமான கல் கட்டிடமாக இன்னொரு அரண்மனையாக வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் அழ. பெரி. பழ என்று கொத்தி வைத்தது கண்டார்கள்.

குழந்தை ஓட்டமாக ஓடி தெருக்கோடியில் திரும்பி மறைந்தது, மேகலா வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்

சரி,நாங்கள் வருகிறோம் என்று சொல்லி உடனே வேகமாக நடந்தாள் குயிலி. ஏதோ ஆபத்து என்று உணர்ந்த வானம்பாடியும் கூடவே ஓடினாள்.

”குயிலி வான்பாடி வாருங்கள் என் வீட்டுக்கு வந்தாலும் அம்மாள் சத்திரத்திலே படி ஏறினாலும் நல்லது தான்” என்றாள் மேகலை.

”உங்கள் பிரபஞ்சத்தில் மேகலா குயிலியை அடக்கி இருக்கிறாளா, அடங்கி இருக்கிறாளா? எங்கள் பிரபஞ்சம் காஸ்மாஸ் Cosmos என்ற பால்வீதி விண்மீன் மண்டலம். உங்களது என்ன பெயர் கொண்டது?” குயிலி கேட்டாள்.

மேகலா அதிர்ந்து போய் நின்றாள். குழந்தை காலில் மாட்டிய சக்கரத்தோடு இவர்கள் மூவரையும் நோக்கி வந்தது. அவசரமாக விலக, இந்திரகோபப் பூச்சிகள் பூத்த மதில் சுவரில் மோதி வெடித்துச் சிதறியது.

மேகலா குயிலி கையைப் பிடித்தபடி கண்ணில் நீர் திரைபோட நின்றாள். நம்மவரா என இருவரும் ஒருவருக்கு ஒருவர் எண்ண, நினைவு, டி என் ஏ தொடர்பான தகவல் துணுக்குகளைப் பரிமாறிக் கொண்டதோடு அடையாள மின் அட்டைகளையும் பரிமாறிக் கொண்ட பிறகு மேகலா சொன்னாள் –

“குயிலி, வான்பாடி நீவிர் எந்தப் பிரபஞ்சத்திலிருந்து வந்தாலும் சரி, நான் பூவுலகு சுற்றிச் சுழலும் பால்வீதி பிரபஞ்சத்தில் பெருந்தேளர் ஆட்சிக்காலத்தில் இருக்கப்பட்டவள். அவருக்கு விரோதமான மற்றொரு நிலப் பகுதியில்   பிறந்த காரணத்தால் பல விதத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவள். பின்னர் கருணை மனு ஏற்று அற்ப ஊதியத்துக்காகப் பணியெடுத்தவள். ரகசியக் குழுமமான எதிரணி கருந்தேளவையில் பங்காற்றுகிறேனோ என்று ஐயம் தீராமல் பணி தீர்த்து விரட்டப்பட்டவள். ஆறு மாதமாக நான் என் இருப்பு தொடர்பான அலகுகளின் கூறுகளைச் சற்றே மாற்றியமைத்துத் தலைமறைவாக இருக்கிறேன். அடையாள, பணியிடப் புகுதலுக்கான அனுமதி அட்டைகள் இன்னும் என்னிடம் உண்டு. நானும் தினம் காலையில் கருந்தேள் மானிடப்பெண்ணாக உருமாறி மாலை ஆறு மணிக்கு மறுபடி கருந்தேளாகும்படி படைக்கப்பட்டவள். அதற்குள் எம் கருந்தேள் பேரவைக்குச் செய்ய வேண்டிய காரியம் ஒருபாடு உண்டு. அசலோ நகலோ என்ன பணிக்கு மூன்றாம் நூற்றாண்டில் வந்து சேர்ந்திருக்கிறீர்களோ அதை நிறைவேற்ற முடியாமல் உங்களை காலத்தில் இருந்து நீக்க வேண்டும்; கூட ராட்சச ரோபோட் யந்திரச் சேவகனையும் குழந்தையாக்கி உருவம் புனைந்து எம் ரகசியக் கருந்தேளர் குழுவினர் அனுப்பி வைத்தார்கள். மதில் சுவரில் ஒட்டிய ஒவ்வொரு இந்திரகோபத் துகளும் நான் இயக்கும்வரை நானோ-மைக்ரோஃபோனாகச் செயல்படும். இத்தனையும் நான் என் உயிரைத் துடைத்து நீக்க. இல்லாவிட்டால் நான் ஆழ்ந்த உறக்கத்தில் பாதி தேளாகவும், மீதி மனுஷியாகவும் நிலைத்திருக்கும் விதி எனக்குண்டு’.

 மேகலா அழுதாள். அப்புறம் மறைந்து போனாள். என்ன காரணமோ அவள் மேல் இருவருக்கும் பரிவு தோன்றியிருந்தது. யாதும் மொழியாது இரு அரம்பையரும் நடந்தார்கள்.

முதுபெண்ணம்மை பெண் பயணியர் விடுதி, என்ற ஸ்த்ரீ யாத்ரி நிவாஸ் போம்வழி ஏதென்று குயிலி எதிரில் வந்த ஒரு கிழவரிடம் கேட்டாள். இந்நகரில்  தாட்டியான பெண்டிருண்டு எனினும் மூ-தாட்டி யாரும் இல்லை என்று   சொன்னார் அவர்.

அவரிடம் வம்பு வளர்த்தால் மேகலா போல் இன்னுமொரு  பரிதாபக் கதையோ மற்று ஏதோ பங்கு வைத்துக் கொள்வது நடக்கும் என்று தோன்ற நன்றி சொல்லி மேலே நடந்தார்கள்.

 அவர் சிரித்தபடி, முன்னே போகலாம் பின்னும் பார்க்கலாம் என்று குழந்தைகளுக்கு விடுகதை சொல்லி நேரம் போக்குவதற்கான செல்லம் கொஞ்சும் குரலில் பெரியவர்கள் பேசுவது போல் விரல் சுண்டிக் கூறினார்.

இந்தப் பெண்கள் திரும்பிப் பார்க்க, கன்னத்தைத் தொடுவது போல் காது கீறி வளர்த்து வாளிகள் என்னும் பொன்நகை அணிந்த முதுபெண் ஒருத்தி வாசல் துப்புரவாக்கிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

அவள் பின்னால் பெரியதும் இல்லாத, ஆகச் சிறியதும் இல்லாத, செம்மண் வண்ணமும் வெள்ளைச் சுண்ணாம்பும் மாற்றி மாற்றிப் பட்டையாகப் பூசிக் கோவில் சுவர் போன்ற கம்பீரம் கொண்டதுமாக அவள் இல்லம் நின்றது.

அவள் துடைப்பத்தைக் கீழே போட்டு கடைகாலில் இருந்து செம்பில் நீரெடுத்துக் கையிரண்டையும் அலம்பியபடி சிரித்தாள். நீயும் உன் தோழியும் வருவீர்கள் என்று சொன்னவர் என் கணவர் தான் என்றாள்.

அவருக்கு எப்படித் தெரியும் அவர் எங்கே என்று பரபரப்பாகக் கேட்டாள் குயிலி.

அவள் வந்ததை ஊரே அறியும்போல. இது மூன்றாம் நூற்றாண்டு ஊர்தானா அல்லது மெய்நகலி அமைப்பா? இவர்கள் மானுடரா அல்லது அதிக அறிவெண் கொண்ட சிறப்பு உயிர்களா?

“எம்மைத் தேடும் சிறு பெண்ணே இங்குநீ வருவதை வரவேற்பேன்” என வானம்பாடியை நோக்கிக் கூர்மையாகப் பார்த்தபடி கூறினார் முதலில் பார்த்த கிழவர்;

“நான் தான் கிழவிகளின் கணவன் என்று அடுத்துச் சொல்ல, எத்தனை கிழவிகளோடு பந்தம் புலர்த்துவீர் கிழாரே?” என்று கிழவி அவர் கால் கை கழுவச் செம்பில் நீர் வார்த்தபடி சொன்னாள்.

”எனக்கு மன வசியமும் எண்ணம் வாசித்தலும் தெரியாது. எதையும் தத்துவார்த்தமாகவும், ஆதார பூர்வமாக அலசி ஆய்ந்தும் தேவையான அளவு சரியான முடிபு தேற்றிக் கொள முடியும். இங்கே இல்லை, தலைநகர அரசவையில் சொன்ன மாத்திரத்தில் நூறு நேரிசை வெண்பாவும் நிலைமண்டில ஆசிரியப்பாவும் பாடுவது எம்தொழிலாக நீண்ட காலம் இருந்தது. முக்கியமாக முன்முடுகு சிலேடை வெண்பா – குதிரைக்கும் கழுதைக்கும் சிலேடை, முக்காலிக்கும் எட்டுக்கால் பூச்சிக்கும் சிலேடை என்று நச்சரிப்பார்கள் அனைத்துப் பேரவையினரும். இப்போது ஓய்வு பெற்று நிம்மதியாக அதெல்லாம் பாடாமல் இருக்கிறேன்” என்றார்.

“ஆமாம். அந்தக் காலத்தில் அரசவை போகும்போதே அரைகுறைக் கவிதையாக யாத்து மனதிலிருத்து அதை அவையில் சந்தர்ப்பம் பார்த்து முழுமைப்படுத்திச் சொன்னதால் ஆசுகவியாக அவை கவர்ந்தார் கிழவர்” என்றாள் கிழவி.

குயிலி கவனித்தாள் –

‘இந்த ஊரில் சந்தித்த ஐந்து நிமிடத்தில் பகடி சொல்லிப் பழக எப்படி இத்தனை பேர் முற்படுகின்றார்கள் தெரியவில்லை. அல்லது கோகர் மலைபோல் முழுக்கக் கட்டிச் சமைத்த உயிரும் உடலும் ஊடாடும் புனைவு வெளியோ.” குயிலி வானம்பாடியைப் பார்த்தாள்.

“வெள்ளை உள்ளம் எல்லோருக்கும் பொதுச் சொத்தாக இருக்கும்” என்று அவள் மனதிலிருந்து குயிலியின் மனத்தோடு பேசிச் சொன்னாள் வானம்பாடி,

“யார் வேண்டும் சிறுமியரே உமக்கு”

 கிழவியம்மாள் கேட்க, நீங்கள் தான் என்றாள்  குயிலி.
“ஆமாம், பசி வயிற்றைக் கிள்ளிப் பாடாகப் படுத்துகிறது” என்று எதுவும் செயற்கை இல்லாமல் பேசி அவள் தோழி ஆமோதித்தாள்.

”மாம்பழச் சாறும், இஞ்சியும் சீனியும் பெய்த நீரில் தேன் கலக்கிய களைப்பு மாற்றும் பானமும் பருகுவீர் முதலில்” என்று அன்போடு அழைத்தாள் முதுபெண். காலலம்பி வீடு புக்கார் இரு கன்னியரும்.

சுடுமண் வெண்குவளை இரண்டில் பழச்சாறும் இன்னுமிரு சிறு கோப்பைகளில் இஞ்சிச் சாறுமாகக் கொடுத்து உபசரித்தாள் கிழவி.

“புட்டு வெந்து கொண்டிருக்கிறது சிறுமியரே பின்கட்டில் கிணற்று நீராடி வந்து பசியாறுங்கள்” என்றாள் அவள்.

அங்ஙனமே பெண்ணிருவரும் நீராடக் கிணற்றடி போக, குளியலறை உண்டா என வானம்பாடி கிழவியம்மாளை வினவினாள்.

“இல்லாமல் என்ன, கிணற்றங்கறையிலிருந்து நீரேற்றும் மண்குழாய் மூலம், குளியலறைக்கு நீர் செலுத்தப்படுகிறது. கொஞ்சம் அதிகம் குளிர்ந்த நீர் என்பதால் கிணற்று நீரின் வெதுவெதுப்பு கருதிச் சொன்னேன் என்றாள் கிழவி.

கிணற்றைச் சுற்றி அண்டை அயலில் ஓங்கி உயர்ந்த மாடங்களில்  இருந்து பார்த்தால் இங்கே நீராடும் அழகு எல்லாம் தெரியக் காட்டவேண்டி வரும் எனக் குயிலி நினைத்தது தான் குளியலறை தேடிய அவசியம்.

“நான் முதலில் நீராடி வருகிறேன் நீ கொல்லையில் தோட்டம் கண்டு வா” என்று வானம்பாடியை அனுப்பிக் குளியலறைக் கதவைச் சாத்தி உடை களைந்தாள் குயிலி.

நக்னையாக ரதிதேவி போல் வனப்பான உடல் பூரித்து நிமிர்ந்திருக்க தண்ணீரைக் கடைகாலில் சேந்தியபோது ஓஒ என்று அலறினாள் அவள். வானம்பாடி உடனே ஓடிக் கதவைத் தட்டித் தள்ள அந்தரங்கம் மறைத்தபடி குயிலி மேல் மறைக்க முடியாமல் நின்று கூரையை நோக்கி மறுபடி அலறினாள்.

தரையில் விழுந்தது ஒரு சிறு தேளாகும். குயிலி வானம்பாடியைப் பயத்தோடு இறுக்கித் தழுவிட, இருவரும் ஒரு நிமிடம் வேறேதோ வெளியில் இருந்தார்கள்.

வானம்பாடி நிலை தெரிந்து மற்றவளிடம் ”தேள் இது கொட்டும் நம் நூற்றாண்டியவர் இல்லை அற்பத் தேள் மூன்றாம் நூற்றாண்டினது” என்றபடி செருப்பணிந்த காலால் அத்தேளை அரைத்துக் கூழாக்கினாள். அப்போது அவள் முகத்தில் அலாதியான நிறைவு நிலவியதைக் குயிலியும் கிழவியம்மாளும் காணத் தவறவில்லை.

அடுத்து இரு பெண்களும் கிணற்றடிக்குப் போக, கிழவியம்மாள் நீரிறைத்து ஊற்ற இருவரும் நீராடிப் புத்தோராயினர். கொண்டு வந்த நல்லுடுப்பு அணிந்து தேவதைகள் போல் அமர்ந்து புட்டு உண்டனர் அவர்கள். கூடவே இட்டவியும் உண்டார்கள்.

இது புதிது, வழிப்போக்கர் யாரோ இட்டவி உண்டாக்கி உண்ண வழி சொன்னார். பெயரை மட்டும் இட்ட எலி என்று எலி, பெருச்சாளி வாடை குமட்டுவதாகச் சொன்னதை இட்டு அவி என மாற்றிக் கொண்டோம் என்று விளக்கிய கிழவியம்மாளின் நாற்பத்தேழு நூற்றாண்டுப் பழமை சட்டென்று உணர்வானது.

புதியதாகக் காலப் பயணம் செய்து வந்துபோன யாரோ இட்டலி அறிமுகப்படுத்திப் போயிருக்கிறார்கள். மகாத் தவறு. மூன்றாம் நூற்றாண்டில் பதினாறாம் நூற்றாண்டு உணவை, உடையை அறிமுகப் படுத்தி காலக்கோட்டில் அங்கங்கே சிதைவு உண்டாக்குவது நயத்தகு நாகரிகமற்ற செயல். குயிலி வானம்பாடியோடு மனதில் பேசினாள்.

“நாம் வந்திருக்கிறது நாகரிகமிக்க செயலா”?

சட்டென்று வானம்பாடியை அருகிலிருந்து பார்த்தாள் குயிலி.  அவள் புன்சிரிப்போடு தலையசைத்து உணவு கொள்வதைத் தொடர்ந்தாள்.  

தரையில் சிறு பூவேலைப்பாடு செய்த கிடுகுத் தட்டுகள் இட்டு மேலே சம்மணம் கொட்டி இருந்து உண்பது, உணவு சுவையாக இருந்தாலும் கால் மடித்து உட்காரக் கடினமாக இருந்தது.

வானம்பாடி எப்படி சமாளிக்கிறாள்? அவள் குயிலியை விட ஐந்து வயது சிறியவள் என்பதால் ஆற்றல் கூடுதலாக இருக்கலாம்.

“இன்னொரு இட்டவி உண். இன்னுமொரு அகப்பை புட்டுத் தின்னு. மாம்பழச் சாறு மாந்து” என்று விருந்தோம்பலின் அடையாளமாகப் பிடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக் கொண்டு மூதாட்டி விருந்தோம்பினாள்.

”மேகலை உங்கள் தோழிதானே. நீங்கள் வெளியே போகும்போது அவளுக்கும் அவள் கணவன் நம்பிக்கும் அவர்களது இரண்டு வயது மகள் நிலாவுக்கும், புட்டு அவித்ததில் கொஞ்சம் பொதிந்து தருகிறேன். ஒரு நொடி படியேறி மேகலை இல்லத்தில் பொதிகள் கொடுத்துப் போக முடியுமா? நம்பிக்கு நான் அவித்த புட்டு உயிர். அண்மையில் தான் கடாரம் போய்த் திரும்பி வந்திருக்கிறான்”.

கிழவியம்மாள் சொல்லிப் போக குயிலிக்கும் வானம்பாடிக்கும் குழப்பம் அதிகமானது, கணவன் நம்பி மூன்றாம் நூற்றாண்டு யுவன் என்றால் எப்படி ஐம்பதாம் நூற்றாண்டுக்காரி என்று தன்னைச் சொல்லிக் கொண்ட மேகலை அவனோடு மண உறவு கொள்ள முடியும்? அவள் யார்? குறுக்கே வந்த யட்சியாக ஏன் வழி மறித்துப் பேச வேண்டும்? அவளுடைய அடையாள அட்டை சரியானதாக இருக்கிறது வேலையும் வயதும் எல்லாம் சரிதான். கடாரம் போன கணவனை எப்படி கிழவியம்மாள் அண்மையில் சந்தித்திருக்க முடியும்? உணவுப் பொதியை எடுத்துப் போகலாம்தான். அறிமுகமற்றவர்களிடமிருந்து தேவையில்லாத பொருட்களை வாங்குவதோ அவர்களுக்குத் தருவதோ தவறு அல்லவா? ஆனால் மேகலை ஒரே பிரபஞ்சம், ஒரே கோள், வேறு நாடு. அவளோடு அறிமுகம் தேவையா? அவளைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்தால் நமக்குப் பாதுகாப்பு இல்லையா?

கிழவியம்மாள் இவர்கள் பார்வையில் சங்கடம் உணர்ந்தாள்.

“பரவாயில்லை முடியாதென்றால் வேண்டாம். நான் ஆற அமரக் கோவிலுக்குப் போகும்போது கொடுத்துப் போகிறேன்”, கிழவி கூறினாள்.

வந்த காரியத்தைப் பார்க்க ஆரம்பிக்கலாமா? வானம்பாடி குயிலியின் மனதில் கேட்டாள்.

குயிலிக்கு மனதில் தோன்றிய எண்ணம் நீலன் மருத்துவன் என்ற கவிஞரான மருத்துவர் இரண்டு துறையிலும் மும்முரமாக இயங்குகிறாரே. இறைநம்பிக்கை அதிகமான வயதாகாத, உச்சிக் குடுமி அள்ளி முடித்த சிகையோடு கோவிலில் பூசை செய்கிறவராக இருக்கக் கூடும் அவரைப் பழக்கம் செய்தல் கோவிலில் தொடங்கட்டுமடி வானம்பாடி. அவள் புன்சிரித்துத் தலையாட்டினாள்.

”அம்மா நாங்களும் கோவில் வந்து வழிபட்டு மேலே போகிறோம் இந்தச் சுவையான உணவுக்கு நாங்கள் உங்களுக்கு என்ன எதிர் உபசரிப்பு அளிக்க முடியும்” என்று மருகினர்.

”ஒரு காசும் தரவேண்டாம். என் பெயர்த்தியர் நீங்கள்” என்றாள் கிழவியம்மாள்.அவள் சொல்லாமலேயே வானம்பாடி துணிச் சஞ்சியில் எடுத்து வந்த சேமச்செப்பில் சுடச்சுட தேங்காய்ப் பாலையும், இலைப் பொதியில் முழுசாகத் தேங்காய்ப் புட்டையும் அரிசி வெல்லப் புட்டையும் எடுத்துப் போனார்கள். படி ஏறிப் போகும்போது சுவரில் சிறு பூச்சி ஒன்றுகூடக் காணோம்.

 மேகலை மேகலை – கிழவியம்மாள் கூப்பிடச் சாத்தியிருந்த கதவுகள் திறக்க, ரோஜாப்பூ போல் ஒரு பெண்,   மலர்ந்த முகமும் புன்சிரிப்புமாக வெளியே வந்தாள்.     குயிலியும் வானம்பாடியும் சில மணி நேரம் முன்பு இங்கே சந்தித்தவளில்லை,

குயிலிக்கு விளங்கியது போல இருந்தது. வானம்பாடியின் மனதைத் தொடர்பு கொண்டு எண்ணம் பகிர்ந்தாள் –

மற்றப் பிரபஞ்சங்களில், நம் பிரபஞ்சத்திலேயே மாற்றுக் காலவெளியில், நம் காலப் பயணத்தையும் விளைவையும் கூர்ந்து கவனித்து வருகிறார்களடி பெண்ணே. நீ நீயா, நான் நானா என்று குழம்பாமல் இருந்தால் போதும். மற்றதெல்லாம் தானே தெளியுமடி.

தெருக்கோடி வீட்டு மாடத்துக்குக் கீழே தூண் மறைவில் அவர்கள்  இதழ் கலந்து நின்று புன்சிரிப்போடு தொடர்ந்து நடந்தனர்.

(தொடரும்)

Series Navigationஅரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைத் திறனாய்வுப் போட்டி
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *