மீனாட்சி சுந்தரமூர்த்தி.
சுவர்க்கடிகாரம் ஆறு முறை அடித்து ஓய்ந்தது ஒரு வழியாக லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தவன் , கண்களில் கைநிறைய நீரை அடித்து முகம் கழுவிக் கொண்டு வந்தான். அம்மா தந்த காபிக் கோப்பையை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து காலை எதிரிலிருந்த டீபாயின் மீது நீட்டினான்.
அன்று வெள்ளிக் கிழமை ஆனதால் காலையிலேயே அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் பலவற்றிலிருந்து ஊதுபத்தி வாசனையோடு கிணுகிணுவென மணியின் ஒலியும் எழுந்தது.தெருவில் பூ , கீரை , காய்கறிகள் விற்கும் கலவையான ஒலி.
அம்மா நான் தூங்கப் போறேன்.
சரிடா ஒன்பது மணிக்கு எழுப்பறேன் . டிபன் சாப்பிட’
காலிக் கோப்பையை டீபாயில் வைத்து விட்டு, பக்கவாட்டிலிருந்த பட்டனை அழுத்தியதில் நீண்ட சோபாவில் சாய்ந்து படுத்தான். தூக்கம் கண்களைத் தழுவியது.
‘ரேணு இவ்வளவு குளிர் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?
திருவள்ளூர் தாண்டி வந்திருக்கேன்னா அது காஞ்சிபுரம், வேலூர் தான்.
நான் ரெண்டாவது முறை குலுமனாலி பாக்கறேன் ரேணு.
‘ஓஹோ’
‘என்ன ஓஹோ ஆறாவது படிக்கும்போது அம்மா அப்பாகூட வந்தது.’
பனிச் சறுக்குகள், காட்டெருமையில் பழங்குடிப் பெண்களின் உடையில் சவாரி எல்லாம் நான் நெனச்சது கூட இல்லைஹரி’
, இந்தா வாங்கிக்கோ ஹஸ்கிரீம்.
முகத்தில் பட்டுத் தெறித்த பனிக்கட்டியைத் துடைத்தபடி,
சரி வா நேரமாச்சு ஹோட்டலுக்குப் போவோம். மகிழ்ச்சியில் விரித்தாள் அகன்ற விழிகளை.
‘ஹரி ஹரி எழுந்திரு. டா ?
தூக்கம் கலைந்தது,
எட்டு மணிதானே ஆகுது.என்னமா தூங்கவே விடமாட்டேங்கற நீ
நானென்னடா செய்யட்டும்?
‘அப்பா அவசரமா சாப்பிடாமலே கிளம்பிட்டார்’
சரி அதுக்கென்ன இப்ப, கேன்டீன்ல நல்லாவே கிடைக்கும்.
அவருக்கு ஒத்துக்காதுடா, பைக்கில் பத்து நிமிடம் தான் ஆகும்.
சரி சரி எடுத்து வை, வரேன்.
அப்படியே நீயும் ரெண்டு இட்டிலி சாப்பிட்டு போ. உனக்குப் பிடிச்ச தேங்காய் சட்டினி அரைச்சிருக்கேன்.
நல்ல கனவைக் கலைத்து சூரியனையும் எவராவது எழுப்பிவிட்டார்களோ, அந்த கோபத்தைக் காட்டுவதுபோல் எட்டரை மணிக்கே தகித்தது வெயில். குளிர் கண்ணாடியுடன், ஹெல்மெட் கவிழ்த்துக் கொண்டு வண்டியை எடுத்தான்.போக்குவரத்து நெரிசலில் புகுந்து, வளைந்து நெளிந்து சீறிப் பாய்ந்து முன்னேறியது வண்டி. நகரின் பரபரப்பான இடத்திலிருந்த அந்த மருத்துவ மனையில் அன்றாடப் பணிகளை ஒழுங்கு செய்யும் மேலாளரான தந்தையிடம் டிபன் கேரியரைத் தந்துவிட்டுத் திரும்பும்போது,
‘ஹரி ஒரு வாரம் லீவு போட்டுடு.’
எதுக்கு பா?’
‘ அம்மா சொல்லுவா,எனக்கு நேரமில்ல, புறப்படு, மெதுவா போ’
என்னவாயிருக்கும்? ரேணு பற்றித் தெரிந்துவிட்டிருக்குமோ? சந்துரு மாட்டிவிட்டிருப்பானோ?
தம்பிதானேன்னு சொன்னது தப்போ இவன் நினைப்பை விட வேகமாய் வீட்டிற்கு வந்துவிட்டது வண்டி.
பாட்டி வீட்டில் அகன்ற , நீளமான கூடத்தில் கம்பீரமாக பித்தளைச் சங்கிலி பளபளக்க ஆடும் ஊஞ்சல் வீட்டின் முழுக் கதை சொல்லும், சோகத்திற்குத் தோள் கொடுக்கும், சந்தோஷத்திற்குக் கூட வரும். அம்மா ஒரே பெண் என்பதால் மாமா விட்டுக் கொடுத்து விட்டார். கிராமத்திலிருந்து வேளச்சேரிக்குப் புலம் பெயர்ந்திருந்தது அது. வேலைகளை முடித்துவிட்டு ஹாலில் ஊஞ்சலில் படுத்து ,’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ சந்திரபாபு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் அம்மா. இவனைக் கண்டதும்,
‘ அப்பா ஏதாவது சொன்னாரா ஹரி.
‘ஒரு வாரம் லீவு போடச் சொல்றார், ஏன் என்ன அப்படி முக்கியமான வேலை சொல்லு.’
‘பொங்கலுக்கு வந்தப்போ உங்க பாட்டி சொன்னாங்களே, வைகாசியில வச்சுக்கலாம்னு மறந்துட்டியா
‘நான்தான் அப்பவே எனக்கு வேண்டானு சொன்னேனே’
‘நீ சொன்னா நாங்க விட்டிடணுமா?’
‘என் நெலமைய யோசிச்சீங்களா,இப்பதான் வேலைக்குப் போயிருக்கேன்’
‘அதனால் என்ன? பெத்தவங்க நல்லதுதான் செய்வோம்.’
‘சரி அப்பா வரட்டும் பேசிக்கறேன்.’
உடனே குரலைத் தாழ்த்தி ‘சரிடா எதுக்கு டென்ஷன் ஆகற, சாயந்திரம் பேசிக்கலாம்,
கொஞ்ச நேரம் தூங்கு என்று மகனின் முகத்தைத் துடைத்தாள் அம்மா’ அறைக் கதவைப் படாரென்று மூடிக் கொண்டு கட்டிலில் விழுந்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாமே தப்புதப்பா நடக்குது.தம்பி எப்போதுமே அதிர்ஷடக்காரன். அஞ்சு வயசுல மொட்டை அடிச்சுக் காது குத்தினாங்க, அவன் விருப்பப்பட்ட பள்ளி, கல்லூரி எல்லாமே கெடச்சுது.எனக்கு எதுவுமே நான் நெனச்ச மாதிரி கெடைக்கறதில்ல, மதியம் சாப்பாடு வேண்டாமென்று பிடிவாதமாக மறுத்துவிட்டான். அம்மாவும் உணவைத் தவிர்த்து விட்டாள். மகனை வருத்தப்படுத்திச் செய்வது சரிதானா வேண்டாமென்று விட்டுவிடலாம் என்று நினைத்தாள்., ஆனால் மாமியாரும், கணவரும் ஒன்றை நினைத்தால் அதை எப்படியும் முடித்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.
இரவு ஏழுமணி ஆகிவிட்டது சரவணன் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சேர.’ஹரி என்ன சொன்னான்?
‘ என்ன சொல்லுவான் வளர்ந்த பிள்ளை, வேலைக்கும் போயிட்டான், வேண்டாம்னு நினைக்கிறான்,’
‘ நீதான் அவனுக்குப் புரிய வைக்கணும்.
எப்படி புரிய வைக்கறது, மதியம் சாப்பிடவே இல்ல’
‘சரி சாப்பாடு எடுத்து வை , அவனையும் அழைச்சிகிட்டு வரேன்.
இரவு ஒன்பது மணி. மொட்டை மாடியில் பிள்ளைகள் இருவருடனும் மனைவியுடனும் பாயை விரித்து அமர்ந்திருந்தார் சரவணன். வானத்தில் வெள்ளி முழுநிலா மேகத்தில் மறைவதும் வெளிப்படுவதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
‘ ஹரி உனக்கு என்னதான் பிரச்சனை சொல்லு’
‘ அப்பா இந்த வயசுல யாராவது காதுகுத்தி மொட்டை அடிச்சுக்குவாங்களா?’
‘ இப்போதான் பேஷனாச்சேடா, தலையில முடி வளர்த்துக்கறதும், காதில கம்மல் போட்டுக்கறதும்’
‘ அப்பா வெளையாடாதீங்க, யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் செய்யறாங்க’
‘சரிபா வேற வழி இல்லையே’
‘அடுத்த வாரத்தில இருந்து அலுவலகத்துக்கு வரச் சொல்லிட்டாங்க ,
எப்படியாவது சமாளிச்சுக்கோ,’
‘சின்ன வயசிலதானபா செய்வாங்க’
ஆமாம்பா, தம்பிக்கு அப்படிதான் செஞ்சோம்.
உனக்கு ரெண்டு தடவ ஏற்பாடு பண்ணோம் ,
முதல் தடவ டைபாயிடு வந்திடுச்சி, ரெண்டாவது தடவ நாய் கடிச்சிடுச்சி.
அப்பறம் அப்படியே விட்டாச்சு,’
சரி இப்ப எதுக்கு ஆரம்பிக்கறீங்க
‘குலதெய்வத்துக்கு செய்யற இந்த காணிக்கையை கிடாவெட்டி செய்யாட்டி நல்லதில்லையாம்’
ஜோசியர் சொன்னாருபா.
எப்படியாவது இத மட்டும் செஞ்சிக்கடா ‘கெஞ்சினாள் அம்மா.
சரி நீங்க ஊர கூட்டக்கூடாது, என்றான் வேறு வழியில்லாமல்.
அன்று ஞாயிற்றுக் கிழமை பச்சை வயல்களுக்கு நடுவில் தாமரைப்பூக்கள் நிறைந்திருந்த குளக்கரையில் பச்சையம்மன் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. உற்றார் உறவினர் என்று நூறு பேருக்கு மேல் குடும்ப சகிதமாக வந்திருந்தனர். கொழுத்த ஆடு ஒன்று மாலை சந்தனம் குங்குமப் பொட்டு அலங்காரத்தோடு திருதிருவென விழித்துக் கொண்டிருந்தது. ஹரி நண்பர்கள் வட்டத்தில் கூட மூச்சே விடவில்லை இதைப்பற்றி,எப்படியாவது சமாளிப்போம் என்றிருந்தான்.
பெண்கள் ஒரு புறம் பொங்கல் வைத்தனர். இவனுக்கு மொட்டை அடித்தபின் குளித்துவிட்டு வந்தான். புதுத் துணி அணிந்து கொண்டான்.
கன்னிப் பெண்கள் பார்த்தார்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள், கலகலவெனச் சிரித்து வைத்தார்கள். சித்தப்பா தலையில் சந்தனம் தடவி விட்டார்.செம கடுப்பானான். பங்காளிகள் , அத்தை, மாமன் என உறவுப் பட்டாளம் சீர் வரிசை வைத்தனர்.
ஆசாரி காது குத்த வந்திருந்தார்.’தாய்மாமன் மடியில உக்காரணும் தம்பி’,
சொன்னவரை எரித்து விடுவதுபோல் பார்த்தான். மாமா பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.
காது குத்தினார் ஆசாரி. கடுக்கனை மாட்டிவிட்டார்.வலித்தது, கத்தவில்லை.
சார் கொஞ்சம் வெலகுங்க,
எப்படி தெரிந்ததோ உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று கேமராவோடு வந்துவிட்டது .
கொஞ்சம் சிரிங்க சார்.
ஆட்டுக் கிடாய் போலவே திருதிருவென விழித்தான் இவன்.