சன்மானம்

This entry is part 4 of 10 in the series 30 ஏப்ரல் 2023

அது ஒரு மழை  மாதம்.  பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில்  முதியவர் மரணம்’. அரசு சும்மா  இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி  அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன. 

நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த இரண்டு பெரிய மரங்கள் மஞ்சள் பூக்களால் சிரித்தன. 5 மாடி அளவு உயரம். பல பூக்கடைகளையும், காய்கறிக் கடைகளையும் மறைத்தபடி கம்பீரமாய் நின்றன. அரசின் கண்களுக்குத் தப்புமா?

அடுத்தநாள் காலை பஃபலோ சாலையின் ஒரு தடம் சிவப்புக்கூம்புகளால் தடுக்கப்பட்டன. நெகிழி நாடாக்களால்  மேலும் அடைக்கப்பட்டு மரங்களின் அடிப்பகுதியில் யாரும் நுழைந்துவிடாதபடி கண்காணிக்கப்பட்டது. 40   அடி   உயர ஏணியை சுருக்கிவைத்துக்கொண்டு ஒரு பெரிய வாகனம் வந்து நங்கூரமிட்டு நின்றது. கிளிப்பச்சைச் சட்டைக்காரர்கள் ஆட்களையும் வாகனங்களையும் கண்காணித்துக் கொண்டார்கள்.   செல், நில்  என்ற அட்டைகளை வைத்துக்கொண்டு இருவர் வாகனங்களை முறைப்படுத்தினார்கள். 40  அடி உயர ஏணி ‘ஜீபூம்பா’ மாதிரி கிடுகிடுவென்று உயர்ந்தது.உச்சந்தலையில் இருந்த பெட்டிக்குள் இயந்திர ரம்ப வாளுடன் ஒரு கிளிப்பச்சைத் தொழிலாளி மேலிருந்து சரசரவென்று கிளைகளைக் கழித்தார். கழிக்கப்பட்ட கிளைகள் தரையில் விழுந்து படர்ந்தன. விழுந்த கிளைகளை சிலர் ஒழுங்குபடுத்தினர். பூ, காய்கறி வாங்க வருபவர்கள் சுற்றிச் சென்றார்கள். கார்ப்பேட்டைக்கு செல்பவர்கள் கொஞ்சம் அதிகம் நடக்கவேண்டி யிருந்தது. சிறுவர்கள் பூங்காவுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டார்கள். ரம்பத்தோடு நின்றவன் சைகைக்கு இணங்க ஏணி நடனமாடியது. 

சற்றுப் பெரிய கிளை ஒன்று நேராக கீழ்நோக்கி வந்து காளிமுத்துவின் பிடரியைத் தாக்கியது. பிறகு  மண்ணில் விழுந்தது. காளிமுத்துவும்தான். சமீபத்தில்தான் காளிமுத்து அந்த நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். 

அறுப்பது நிறுத்தப்பட்டது. ஓர் அமைதி கொஞ்சம் கொஞ்சமாக இரைச்சலானது. வேலையைக் கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரிகள், சக தொழிலாளர்கள் இப்போது தரையில்  மூர்ச்சையாகிக் கிடந்த காளிமுத்தைவைச் சுற்றி. முதல் உதவி வாகனம் அழைக்கப்பட்டது. சில நிமிடங்களில் வாகனம் சங்கூதிக்கொண்டே வந்து நின்றது. நிலாவின் மீது இறங்கும் உடுப்புகளில் சிலர் இறங்கிவந்தார்கள். காளிமுத்துவை ஒரு படுக்கையில் சாய்த்து வண்டியில் ஏற்றினர். சரசரவென்று இசிஜி, ரத்த அழுத்தம் இன்னும் இன்னும் என்னென்னவோ சோதனைகள் அடுத்தடுத்து. வண்டி டன்டாக்சென் மருத்துவமனைக்கு விரைந்தது.

அதுவரை கலவரத்துடன் அங்கு நின்றிருந்த சரவணன் உடன்   அந்த  மருத்துவமனைக்கு விரைந்தார். நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் அந்த மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசினார். தகவல்கள் பரிமாறப்பட்டன. காளிமுத்து அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.  கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்குப்பின் மருத்துவமனை தகவல் சொன்னது

கழுத்து எலும்பு  முறிந்துவிட்டதாம். மிகவும் நுணுக்கமாக  அறுவை சிகிச்சை செய்யவேண்டுமாம். முக்கிய நரம்புகள் அறுபட வாய்ப்புள்ளதாம். அத்தனையும் மூளைக்குச் செல்லும் நரம்புகளாம்.  குத்துமதிப்பாக 80000 வெள்ளி ஆகுமாம். 

நிறுவனத்துடன் சரவணன் பேசினார்.  நிறுவனம் சொன்னது

‘காளிமுத்துவுக்கு எந்த காப்பீடும் இல்லை. அவர் சமீபத்தில்தான் நிறுவனத்தில்  சேர்ந்தார். தொகைக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.’

சரவணன் சக ஊழியர்களிடம் பேசினார். ‘அவ்வளவு பெரிய  தொகையை எங்களால் வசூலிக்கமுடியாதே’ என்றார்கள்

காளிமுத்துவுக்கு சொந்த ஊர் விழுப்புரத்துக்குப் பக்கத்தில் ஒரு கிராமமாம். அதே   கிராமத்திலிருந்து வந்த இன்னொரு ஊழியர் சரவணனிடம் தொடர்ந்தார். மேலும்  சில  தகவல்களையும் சொன்னார்.  

காளிமுத்துவின் அண்ணன் கல்யாணம் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராம். அவருடையை தொடர்பு எண் அவரிடம் இருக்கிறதாம். 

சரவணன் கல்யாணத்தை அழைத்தார். உடனே  கிடைத்தார். தகவலைச் சொன்னார். சில மணித்துளிகள் மௌனம். அவர் பதறுவது சரவணனுக்குப் புரிந்தது. தானாடாவிட்டாலும் தசை ஆடுமே. இப்போது என்ன செய்யலாம்? சரவணனே தொடர்ந்தார். 

‘காளிமுத்துவுக்கு என்ன சிகிச்சை தேவை என்ற விபரம் மருத்துவமனை தந்துவிட்டது. அதைப் புலனில் (வாட்ஸ்அப்) உங்களுக்கு அனுப்புகிறேன். அதே சிகிச்சையை அங்கு செய்யமுடியுமா என்று  மருத்துவமனையில் விசாரியுங்கள். காளிமுத்துவை ஊருக்கு அனுப்பிவைக்கும் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன்.’

நிறுவனம் சொன்னது.

‘காவல்துறை காளிமுத்துவை ஊருக்கு அனுப்பலாம் என்று சொல்லிவிட்டது. காளிமுத்துவுக்காக நீங்கள் பிணை தரவேண்டும். அவருக்கு எது நேர்ந்தாலும் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. நிறுவனம் பொறுப்பேற்காது.’

மருத்துவமனை  சொன்னது.

‘கழுத்து அசையாதபடி  உலோகப்பட்டைகளை வைத்து நாங்கள் முறைப்படி கட்டுப்போட்டுத்தான் அனுப்புவோம். அதோடு விமானத்தில் பயணிக்கலாம் என்ற எங்களின் ஒப்புதல் கடிதமும் தருவோம். அழைத்துச் செல்வது உங்கள் பொறுப்பு.’

சரவணன் சொன்னார்.

‘காளிமுத்துவின் அண்ணனைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். சில மணிநேரங்களில் அவர் தகவல் தருவார். அதுவரை காளிமுத்து  மருத்துவமனையில் தொடரட்டும். சிகிச்சை இங்கேயா ஊரிலா என்பதை  அந்தத் தகவலின் அடிப்படையில்  முடிவு செய்வோம்.’

கல்யாணத்திடமிருந்து தகவல்  வந்த்து.

‘இங்குள்ள எலும்பு சிகிச்சை நிபுணரிடம் பேசிவிட்டேன். இங்கேயே அந்த அறுவை சிகிச்சையை செய்யமுடியுமாம். 3 லட்சம்  ஆகுமாம். நீங்கள் என் தம்பியை உடன் அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்.’

சிங்கப்பூர் விமானச்சேவை விமானத்தில்  சக்கரநாற்காலியில் காளிமுத்து ஏற்றப்பட்டார். சென்னையில் தரையிறங்கும் நேரம் கல்யாணத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. 

சென்னை விமானநிலையம். 6 இருக்கை வாகனமொன்றில் 4 இருக்கைகளை அகற்றிவிட்டு சக்கரநாற்காலியோடு காளிமுத்துவை ஏற்றிக்கொள்ள தயாராக நின்றது. அழமட்டுமே தெரிந்த மற்ற உறவுகள் முகத்திலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். கல்யாணம் ஒரு கல் மாதிரி நின்றார். விமானம் தரையிறங்க சில  மணித்துளிகள் இருந்தன. சரவணன் அழைத்தார்

‘செலவைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். உங்களின் வங்கிக்கணக்கை அனுப்பிவையுங்கள் உடனே 3 லட்சம் அனுப்பிவிடுகிறேன். அடுத்து  வருவதை அடுத்துப் பார்ப்போம். எதற்கும் கவலைப்படவேண்டாம்.’

விமானம் தரையிறங்கியது. ஒரு சிறப்பு அனுமதியுடன் விமானத்தின் வாயில்வரை கல்யாணம் செல்லமுடிந்தது. சக்கரநாற்காலியுடன் காளிமுத்து இறக்கப்பட்டார். காளிமுத்துவும் கல்யாணமும் கண்ணீரால்  சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். வண்டியுடன் கல்யாணம் விமான நிலையத்திலிந்து வெளிப்பட்டபோது ஓவென்று கதறிய உறவுகள், கல்யாணத்தின் ஒரு பார்வையில் நிசப்தமாயின.  வாகனம் விழுப்புரத்துக்கு விரைந்தது.

எலும்பு சிகிச்சையின் சிறப்புப் பிரிவில் காளிமுத்து அனுமதிக்கப்பட்டார். எலும்பு சிகிச்சை நிபுணர் இன்னும் ஒரு சில  மணிநேரங்களில் சிகிச்சையைத் தொடங்கப் போகிறார்.  சிங்கப்பூரில் சரவணன் கல்யாணத்தின் தகவலை எதிர்பார்த்தபடி  உடைந்துகொண்டிருந்தார். இமைக்க மறந்துபோனார். திறந்தே இருந்த விழிகளிலிருந்து நல்லவேளை கண்ணீர் சிவப்பாக வழியவில்லை.  இதோ சரவணின் அலைபேசி ஒளிகூட்டுகிறது. ஒலிக்கிறது. ஆம். அது கல்யாணத்தின் அழைப்புதான். கல்யாணம் சொன்னார்.

‘அறுவை சிகிச்சை ஆரம்பமாகிவிட்டது. சிகிச்சையின் வெற்றிக்கு மருத்துவர் உத்திரவாதம் தருகிறார். இதைவிட வேறு என்ன வேண்டும். ஐயா, தயவுசெய்து காணொளியில் வருகிறீர்களா? நான் கடவுளைப் பார்க்கவேண்டும்.’

சிரித்துக்கொண்டே தன் காணொளியைத் திறந்தார் சரவணன். முதன்முறையாக இருவரும் முகத்துக்கு முகம் சந்திக்கிறார்கள். அழுதே பழக்கமில்லாத கல்யாணம், சரவணனைப் பார்த்ததும் பொங்கிப்பொங்கி அழுதார். சுற்றி நின்றோத் திகைத்தனர். சரவணன் சமாதானப்படுத்தினார். பின் சொன்னார். 

‘காளிமுத்தைவை பழைய நிலைக்குக் கொண்டுவாருங்கள். காளிமுத்துவை  மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்துத் கொள்வதும், அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிடுவதும் என் பொறுப்பு. நீங்கள் எதற்குமே கவலைப்படவேண்டாம். அவரை சிங்கப்பூருக்கு அனுப்ப உங்கள் குடும்பம் கொடுத்திருக்கும் விலைகள் எனக்குப் புரியும்.’

பிப்ரவரி 20 என்று காட்டிய நாட்காட்டி இப்போது ஏப்ரல் 20  என்று காட்டுகிறது. இரண்டே மாதத்தில் என்னென்ன நடந்துவிட்டது. காளிமுத்து பழைய நிலைக்கு வந்துவிட்டார். அவரை அழைத்துக் கொள்ளும் வேலைகளை சரவணன் முடுக்கிவிட்டார். இன்னும் சில நாட்களில் காளிமுத்து சிங்கை வரலாம். தன் பழைய வேலையைத் தொடரலாம்.

காளிமுத்துவின் பிடரியில் அந்த மரக்கிளை விழுவதற்கு சற்றுமுன் என்ன நடந்தது? 

சரவணன்  தடுப்புக்கு வைத்திருந்த கடைசி சிவப்புக்கூம்பை தள்ளிக்கொண்டு உள்ளே வேகமாக நடந்தார். தன் வாகனத்தை நிறுத்த தடம் கிடைக்காததால் சிவப்ப க்கோட்டின் மீது வாகனத்தை நிறுத்திவிட்டு வந்திருந்தார். அபராதம் விதிக்கப்படாமல் இருக்க வெகுவேகமாக நடந்தார். அடுத்த வினாடி அந்த மரக்கிளை சரவணனின் தோள்பட்டைக்கு அருகில் வந்துவிட்டது. சரவணனின் தோள்களில் கைவைத்து அவரை முன்னே உந்தித் தள்ளிவிட்டு, மரக்கிளையை தன் பிடரியில் வாங்கிக்கொண்டார் காளிமுத்து. தள்ளியதும் விழுந்ததும் காளிமுத்துவுக்கும் சரவணனுக்கும் மட்டுமே தெரியும்.

எத்தனை  சன்மானம் கொடுத்தாலும் சரவணன் செய்த உதவிக்கு ஈடாகாது என்று கல்யாணம் நினைக்கிறார்.  எத்தனை சன்மானம் கொடுத்தாலும் காளிமுத்து செய்த காரியத்துக்கு ஈடாகாது என்று சரவணன் நினைக்கிறார்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஆண்டி, ராணி, அவஎனது வையகத் தமிழ்வலைப் பூங்கா பார்வைகள் [ நெஞ்சின் அலைகள்]
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *