நாவல்  தினை              அத்தியாயம் பனிரெண்டு

This entry is part 10 of 10 in the series 30 ஏப்ரல் 2023

  அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக  வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் நாக.சோனை என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும். 

குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம் வா என அவசரப்படுத்தினாள். அந்த நிமிடம் வாசல் கதவு திறந்து வெளியே வந்தவள் கையசைத்தாள் – வாருங்கள் பெண்களே, உங்களுக்கு மேகலையின் வரவேற்பு. தேறல் மாந்திப் போங்கள் என்னோடிருந்து. உடல் நலம் பேணுதல் முக்கியம். சஞ்சீவனி சும்மா கிடைக்குமா?

சற்றுமுன் சந்தித்துப் போன மேகலை இப்படிச் சொன்னபடி அந்தப் பரிச்சயத்தின் சுவடே இன்றி வரவேற்றாள்.

குயிலி இன்னொரு நாள் வருகிறேன் அக்கை என்று வானம்பாடியை இழுத்துக்கொண்டு முன்னால் ஓடினாள். இருவரும் தொப்பல் தொப்பலாக வியர்த்து நனைந்திருந்தனர். குளிர்கால வியர்வை அது.

குயிலி, இங்கே பார். வீடு நமக்கு முன்னால் நடக்கிறது.

வானம்பாடி காட்ட சற்று முன் மேகலா கதவு திறந்து வருக என குயிலியையும் வானம்பாடியையும் வரவேற்ற அதே வீடு காட்சிப்பட்டது.

அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் பதினொன்று இருக்க பிரம்மாண்டமான பளிங்குக் கட்டிடமாக இன்னொரு அரண்மனையாக வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் மரி லில்லி என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும். 

குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம் வா என அவசரப்படுத்தினாள். அந்த நிமிடம் வாசல் கதவு திறந்து, பெண் குரல் -வாருங்கள் பெண்களே, உங்களுக்கு மேகலையின் வரவேற்பு. தேறல் மாந்திப் போங்கள் என்னோடிருந்து. உடல் நலம் முக்கியம். சஞ்சீவனி சகலருக்கும் கிட்டுமா என்ன?

இப்படிச் சொன்னபடி சற்றுமுன் இரண்டாம் முறையாக இதே வீட்டுக் கதவு திறந்து வந்து சந்தித்துப் போன மேகலை அந்தப் பரிச்சயத்தின் சுவடே இன்றி வரவேற்றாள்.  நீல அங்கி தரித்தவள் இவள்.

இன்னொரு நாள் வருகிறேன் அக்கை என்று வானம்பாடியை இழுத்துக்கொண்டு முன்னால் ஓடினாள்.  

அதே வீடு. அதே கதவு. கிழவியம்மாள் சிரமப்பட்டுப் படியேறித் தட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்களிருவரும். கதவு திறக்க, இன்னொரு மேகலா வெளியே வந்தாள்.

கிழவியம்மாள் அவித்து எடுத்து வந்த புட்டையும் சேமச் செப்பில் தேங்காய்ப் பாலையும்  மேகலா என்று அவள் அன்போடு அழைத்த பெண்ணிடம் கொடுத்தாள். 

கையை இடுப்பில் வைத்துக் தரைநோக்கி ஆட்டி, எங்கே எனக் கையைக் குவித்து உதறினாள். குழந்தை எங்கே என்று கேட்கிறாள் என்று குயிலிக்கு அர்த்தமாகியது. உள்ளே உறங்குவதாக அபிநயம் பிடித்தாள் இந்த மேகலை. 

குயிலி கிழவியம்மாள் காதில் ஏதோ சொன்னாள். அவள் உடனே மேகலையிடம் ரகசியம் பேசும் குரலில் சொல்ல மேகலை எனப்பட்டவள் தலைகுலுக்கி குயிலியைத் தோளில் அணைத்து உள்ளே இட்டுப் போனாள். 

வானம்பாடியிடம் என்ன செய்ய என்பது போல் முகபாவம் காட்டி நின்றாள் கிழவி. அதற்குள் மேகலையோடு குயிலி வெளியே வந்தாள். வானம்பாடியைப் பார்த்து, கோவிலுக்கு அப்புறம் போகலாம் என்றாள். 

ஒரு குழப்பமும் இல்லை அப்படியே செய்யலாம் என்று ஆமோதித்தாள் வானம்பாடி.  

சரி அக்கை, நாங்கள் அங்காடி வீதிக்குப் போகிறோம் பின்னே ஒருநாள் வருகிறோம் என்று இந்த மேகலையிடம் சொல்லியபடி பின்னால் திரும்பிப் பார்க்க கிழவியம்மாள் தள்ளாடி நடந்து போய்க்கொண்டிருந்தாள். 

நீங்கள் இருவரும் உள்ளே வந்து ஒரு கோப்பை பசுவின் பால் பருகிப் போனால் மகிழ்வேன் என்றாள் மேகலை. குயிலி வானம்பாடியைப் பார்த்தாள். அவள் போகலாம் எனத் தலையசைத்தாள். தயக்கத்தோடு இந்த மேகலையைப் பார்த்துக் குயிலி மறுமுறையும் கண்ணால் தயக்கம் தெரிவித்தாள்.  

விலக்கு நாட்களில் தள்ளி வைக்கிற குடும்பம் இல்லை நான் பிறந்தது என்றபடி முன்வாசலில் தடுக்குகள் இட்டு அமரச் சொன்னாள் வந்த இருவரையும். 

வானம்பாடி பொதுவாகப் பார்த்து சிரித்தபடியே சொன்னாள் – இன்று   ஒரு விசேடம் நடக்கிறது. இந்தக் கட்டிட வாசலில் நாங்கள் ஐந்து நாழிகையில் சந்தித்த நால்வரும் பெண்கள். இளையோர். நால்வருக்கும் ஒரே பெயர் – மேகலை.  

 அதற்குக் காரணம் இதுவரை நான்கு பிரபஞ்சங்களில் இருந்து வந்த மேகலைகளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். நான் நான்காமவள். 

கலகலவென்று சிரித்து நட்புக் கரம் நீட்டினாள்  மேகலை. நினைத்தேன் என்றாள் குயிலி உடல் சற்றே நலமின்மை காட்ட. 

உங்களுக்குத் தெரியுமோ என்னமோ உங்கள் இந்தப் பயணம் பல பிரபஞ்சங்களில் ஆர்வத்தோடு நோக்கப்  படுகிறது. வேறே தீநோக்கமோ அறம் சாராத ஆர்வமோ இதில் இல்லை. மற்றவர்கள் எப்படியோ, எங்கள் பிரபஞ்சத்தில் இப்போதைக்காவது. உங்கள் பணியில் உதவி செய்ய முடியாவிட்டாலும் தடைக்கல்லாக  இடர் வருத்தாமல் இருக்க எங்கள் மேலிட உத்தரவு, மேகலை அன்போடு கூறினாள். 

சரி எங்களுக்கு நேரமாகி விட்டது. போய் வரட்டுமா? குயிலி வானம்பாடியின் தோளில் கைவைத்து அழுத்தியபடி எழுந்தாள். உள்ளே குழந்தை அழும் சத்தம். 

அது ஏன் போன மேகலை வரை அச்சு அசலாக ஒரே சாயல். இந்த மேகலை பெயரில் மட்டும்தான் மேகலை உருவம் மாறிப் போனதேன்? 

வானம்பாடி குயிலியின் மனதுக்குள் கேட்டாள்.

செயற்கைக் கருத்தரிப்பு அவ்வளவு துல்லியமாகப் பிரதியாக்குவதில்லை. குயிலி முணுமுணுத்தாள். 

வானம்பாடி தெரு முனையில் கழை நட்டுக் கயிறு கொண்டு பிணைத்து வித்தை காட்டத் தொடங்கிய கழைக் கூத்தாடியைப் பார்த்து ஒரு வினாடி நின்றாள். தரையில் அமர்ந்து மேளம் முழக்கிக் கொண்டு அவனது மனைவி. 

கழை பிடித்துக் கயிற்றில் நடக்கும் மகனோ மகளோ கவனமாக தெருவுக்கு வெளியே ஒரு  முனையிலிருந்து நேர் முன்னால் ஐந்தடி தூரத்தில் இருந்த மற்ற கழிக்கு நடக்கத் தொடங்கியிருந்தது. 

இவர்களும் நமக்காகக் கட்டமைத்த வேற்று பிரபஞ்சவாசிகளா?

 வானம்பாடி குயிலி யிடம் கேட்க அவளது கையை இறுக்கியபடி குயிலி   வேகமாக நடந்தாள்.

 அங்காடித் தெரு கால்போன போக்கில் போகவே கல்பாளம் பாவி விரிந்தது. கோவில் வாசல் கடந்து மருத்துவர் தெரு போக வேண்டியிருப்பதாக நியூரல் வழிகாட்டி சொன்னதால் அந்த வழியைப் புறக்கணித்து பொற்கொல்லர் வீதி கடந்து குதிரை லாடம் போல் முன்னால் போய்த் திரும்பி  சொக்கநாதன் வீதிக்குப் போகலாம் என்றது வழிகாட்டி. 

அங்கே தான் மருத்துவர் நீலர் இருப்பதாக வழிப்போன ஊரார் சொல்ல நடந்து அங்கே போய்த் தெருத் திரும்பினர். மருத்துவர் வீட்டில் மாதவிலக்கான மங்கையருக்கு அனுமதி உண்டோ என வினவினாள் வானம்பாடி. 

யாருக்கு மாதவிலக்கு குயிலி கேட்டாள் உனக்குத்தான் என்றாள் வானம்பாடி. நான் மேகலா வீட்டை உள்ளே போய்ப் பார்த்துவரப் பொய் சொன்னேன் என்றாள் குயிலி. 

அடடா கோவிலுக்குப் போக முடியாமல் போனதே எனக் குற்றம் சாட்டும் குரலில் சொன்னாள் வானி என்ற வானம்பாடி. 

பணி முக்கியம் மற்றவை அடுத்து என்று பிரசாரத் தேளர் தார்க்குச்சி உரையாற்றும் தொனியைப் போலி செய்தாள் குயிலி. 

கூள வாணிகர் கடை முகப்பில் நீலத் துணி கட்டி ஏற்படுத்திய நிழலில் யாருக்கோ மரக்காலில் அரிசி அளந்து கொண்டிருந்தார் வணிகர். குயிலியையோ வானியையோ இரண்டு பேரையுமோ செல்வம் மிகுந்த யுவதிகள் என்று கற்பனை செய்து படிப்படியாக கடையில் விற்பனைக்கு வைத்த தானியங்களில் பாதியளவு கொள்முதல் செய்து எடுத்துப் போவார்கள் என்று எண்ணியது தவறாக மருத்துவர் நீலர் அகத்துக்கு வழி கேட்டார்கள் இப்பெண்கள்.

 மருத்துவர் இருப்பது எங்கே? அவர் யோசித்தார்.  இரண்டு தெரு தள்ளி சமணப் பள்ளிக்கு அடுத்து இருக்கப் பட்டவர் அல்லவா? அவர் என்ன சாதி என்று யோசிக்க முடியவில்லை.ஆக அகமோ மனையோ வீடோ யாரறிவார்? 

வழிமட்டும் காட்டி விட்டு உற்சாகமாகக் கூவினார் – நல்ல பாசிப் பருப்பு வந்திருக்குது வாங்கிப் போங்கள். சுவையான சுண்டல், தேய்த்துக் குளிக்கத் தூய்மையோ தூய்மை. வாங்கிப் போங்கள் 

சுண்டலாகக் கிடைத்தால் வாங்கி உண்ணத் தடையேதுமில்லை என்றாள் வானம்பாடி. அதுவும் உண்டு என் அடுத்த கடையில் என்று மேற்கே கை சுட்டினார் கூல வணிகர்.

 வரும்போது வாங்கித் திங்கறோம் என்று சொல்லி நடக்க, திங்கறோம் என்ற வழுச்சொல்லின் பொருளை யோசித்தபடி இருந்தார் கூலவாணிகர். தின்னுகிறோம்? அவர் மனநிறைவோடு சொன்னார். 

மருத்துவர் நீலர் வீட்டில் வாசலில் கட்டி வைத்திருந்த நாயொன்று விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. இவர்களைப் பார்த்தவுடன் அமைதியாகித் திரும்பிப் படுத்துக் கொண்டது. 

ஒரு பணியாளர் ஏதோ மூலிகைச் செடியை மலையோடு அகழ்ந்து எடுத்து அனுமன் சஞ்சீவினி கொண்டு வந்த அவசரத்தில் ஓடி வந்துகொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் அவசரமென்றால் பறந்தே இருக்கக் கூடும்.  

ஐயா நூற்றுக் குறிஞ்சி நீங்க சொன்னபடி தேடிக் கொண்டு வந்துட்டேன். ஊர் முழுக்கத் தின்னக் கொடுத்தாலும் இன்னும் மிச்சம் இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டு நின்றார். 

வைத்தியர் உள்ளே இருந்து வந்தார். ஆறடி உயரம், குச்சி போன்ற தேகம். நாற்பது வயது இருக்கலாம். முப்பத்தைந்தும் இருக்கக் கூடும். சந்தன முத்திரையும் கீழே குங்குமமுமாகக்  கோவிலில் பூசை வைக்கிற சாயல் அவருக்கு. அவர் அசைவில் அவசரம் அகப்பட்டது. 

ஐயா என்று குயிலியும் வானம்பாடியும் அழைத்தபோது அவர்களுக்கே யாசகத் தன்மை குரலில் ஏறியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. 

யாரம்மா என்ன வேணும்? நடந்து கொண்டே கேட்டார். 

நாங்க வடக்கில் இருந்து வரோம் மூலிகை வைத்தியம் பார்க்கிற குடும்பம். நான் குயிலி. இவள் என் தங்கை வானம்பாடி. 

பொறுமை இழந்து உதவியாளனைக் கூப்பிட்டார். இந்தப் பெண்களை ஏன் உள்ளே விட்டீர்? கோதுமை ஆட்பட்டு நின்றோர். இவர்களை நம் குழுவினில் புகுதலொட்டோம். வெளியே அனுப்புக. அயர்ந்து மறந்தால் மூலிகையைக் களவாடிப் போயிடுவார்கள் என்றார். 

பெரியவர் அப்படிப் பேசுவது பீடன்று உமக்கு. குயிலி சொன்னாள்.

 சும்மா சுத்திப் பார்க்கற பொண்கள் என்னத்துக்கு உபயோகம்? 

அவர் சொல்ல, குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் பசிப்பிணியும் சாவும் தவிர வேறு எல்லாப் பிணியும் தீர்க்கும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

நீங்கள் போகலாம். 

வாசலுக்குக் கொண்டு வந்து விட்டான் வைத்தியரின் மாணவன் ஒருவன்.

ஒன்றும் பேசாமல் திரும்பினார்கள் குயிலியும் வானம்பாடியும்.

அடுத்த மூன்று நாளும்-

குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும்  ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

நீங்கள் போகலாம். 

வாசலுக்குக் கொண்டு வந்து விட்டார் வைத்தியரின் மாணவன் ஒருவர்.

ஒன்றும் பேசாமல் திரும்பினார்கள் குயிலியும் வானம்பாடியும்.

நான்காம் நாள் குயிலி சொன்னது – நாங்கள் ரெண்டு பேரும் பாடலியில் ஆயுள் நீட்டிக்கச் செய்யும் ஆயுர்வேதத்தில் சிறப்புத் தேர்வானவர்கள்.

 கேட்டுக்கொண்டிருந்த மருத்துவருக்கு முகத்தில் மலர்ச்சி. இந்த மாதிரி மாணவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார். 

ஆயுசு நீட்டிக்கும் மருந்து உருவாக்க, சோதிக்க விஷயம் தெரிந்த உப வைத்தியர்கள் வேண்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் எந்த மூலிகை எவ்வளவு, எப்படி என்று தெளிவாகத் தெரியும். சோதனை எலிகளைப் பிடிக்க இந்த மாதிரி எழிலான பெண்கள் அவசியம் தேவை.

 பார்க்கலாம். ஊதியம் கூரையைத் தொடும் அளவு கேட்டால் கெஞ்சிக் கூத்தாடிக் குறைக்க வைக்கலாம். எல்லா மகிழ்ச்சியும் மேலெழும்ப அவர்களைப் பார்த்துக் கையசைத்து ஆசியருளினார். 

பாடலிபுத்திரம் பல்கலைக் கழகத்தில் தன்வந்திரி மருத்துவம் தேர்வானதற்கான சிறப்பு ஓலை இது. என் தங்கச்சியிடமும் ஒன்று உண்டு என்றபடி வடமொழி எழுத்துகளை உருட்டித் தொங்க விட்டு எழுதியிருந்த  அந்த ஓலையை மருத்துவரிடம் கொடுத்தாள் குயிலி. 

குழந்தைகளே, நீங்கள் விரும்பினால் எனக்கு உதவியாளர்களாகப் பணி புரியலாம். 

அதற்குத்தான் வந்திருக்கிறோம். உங்கள் ஆயுள் நீட்டிக்கும் மருந்து சஞ்சீவனி குறித்து யாரும் பெரியதாக நம்புவதில்லை என்று தெரிந்தது. அவர்கள் கடந்த ஆயிரம் வருஷத்தில்  நாலைந்து முறை அதைச் சோதித்து ஆயுள் நீட்டிக்கப்படவில்லை; விநோதமான விளைவுகள்தான் ஏற்பட்டன என்று எங்கள் இந்திரப் பிரஸ்தம் வரை தெரிந்திருக்கிறது. 

அது ஒட்டுமொத்தமாகக் கழித்துக் கட்டி விடுவதாகும் மருந்து உருவாக்குவதில் அங்கே இங்கே தவறு நிகழ்ந்து அதனால் தான் விளைவு சற்று மாறி இருக்கலாம் என்று ஆதூரமான குரலில் கூறினார். 

எங்கள் கண்ணால் எதை எதை எப்படி எவ்வளவு சேர்த்து என்ன செய்வது என்று பார்த்து மனதில் இறுத்திப் போய் நாங்களும் உங்களைப் போல் காசு வாங்காமல் பத்து பேருக்காவது நீட்டித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்குவோம் என்றாள் குயிலி. 

அவர்களை உள்ளே அழைத்துப் போனார் மருத்துவர். 

நானதிகப் பெயரும் வருமானமும் இல்லாத மருத்துவன்.  அரண்மனையில் வெண்பா பாட அல்லது பாடாமல் இருக்க, மருத்துவம் செய்ய அல்லது செய்யாமலிருக்க, ஆண்டுக்கு இது ஓராயிரம் அது ஓராயிரம் கிழி தருவார்கள். அதற்குள் தான் ஆயுள் மருந்து நீட்டிப்பு இத்தியாதி. 

அண்ணாரே கவலை ஒழியும். நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு வராகன் மட்டும் வாங்கிக்கொண்டு உத்தியோகத்தில் அமரத் தயார் என்றாள் குயிலி. உணவு கூட நீங்கள் தர வேண்டாம் என்றாள் வானி.

 மகிழ்ந்து போனார் மருத்துவர். 

எல்லாம் சரிதான், நேற்று ஒரு குசும்பன் கடைத்தெருவில் கேட்டான்-

 ஓய் மருந்து பருகினால் ஆயுள் நீடிக்கும் என்றீரே எத்தனை வருஷம் கூடும்? 130இல் இருந்து 150 வரை நீடிக்கப்படும். எப்படி யார் சோதிப்பது? அந்த நேரத்தில் யார் விஷயம் தெரிந்தவராக இருக்கிறார்களோ அவர்கள். அவர்களும் அதேபோல் அந்த வயதில் இருக்க வேண்டுமல்லவோ. இருந்தால் சரியான தேர்வு. அவனும் மருந்து சாப்பிடாத பட்சம் எப்படி அவன் 150 வயது வரை இருப்பான்? 

கெக்கே என்று அத்தனை தெம்மாடிகளும் சிரித்து பகடி பண்ண நான் நடந்தேன்.  கட்டையில் போவான். இவன் 150 வயது இருக்க மாட்டான் என்றால் வேறே யாருமே இருக்க மாட்டான்களா? அதிலே ஒருத்தன் சாட்சிக்கு வரமாட்டானா?

நாங்கள் இருந்திருந்தால் இப்படித் தெருப் பட்டிகள் உம்மைப் போன்ற பெருமருத்துவரை இப்படிப் பகடி செய்ய விட்டிருக்க மாட்டோம். பாதகமில்லை எங்கே ஆரம்பிக்கலாம்? 

வானி வினவ அவர் கனிவாக அழைத்தார் – இப்போது இந்த மூலிகைகளைச் சுத்தம் செய்யலாம். வருக.

அடுத்த அரைமணி நேரம் இலை இலையாகக் கொப்புக் கொப்பாக அந்த மூலிகை குளிர்ந்த நீரில் கழுவப்பட்டன.  முடிந்ததும், இது இன்னொரு மூலிகை என்று மற்றொரு கட்டு  தழையைக் காட்டினார்.

இது காதுமடலான். பெயருக்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை. இது. வைத்தியர் இஞ்சி போல் ஒரு மூலிகைக் கிழங்கை எடுத்தார். இஞ்சியே தான் என்றார் வேறேதும் பெயர் சொல்லும் முன்பு. 

சமையலா சஞ்சீவினியா? வானம்பாடி குயிலியின் மனதுக்குள் கேட்டாள். இஞ்சியா அது என்று அவள் விபரீதமாகக் கதைக்கத் தொடங்கும் முன் மன இணைப்பைத் துண்டித்தாள் குயிலி.

(தொடரும்) 

Series Navigationபிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன ?
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *