கோவிந்த் பகவான்
இன்றோடு முப்பத்தெட்டு நாள்
முக்கால் பொழுது மூன்று மணி நேரம் கழிகிறது
இதற்குள் இப்படியெல்லாம் நான் மாறி இருந்திருக்கக்கூடாது
மாற்றியும் இருந்திருக்கக் கூடாது
கட்டுப்படாத வார்த்தைகளல்லாத வார்த்தைகளை
ஒரு பெருமழைப்போல் நள்ளிரவிலும்
உன்மேல் தூவி இருந்திருக்கக்கூடாது தான்
மாறாக
ஓர் அழுத்தும் பொத்தான் கைக்குடையை
உடன் அளித்திருக்கலாம்
ஐபிஎல் 2023-ன் இன்றைய கிரிக்கெட் போட்டியில்
யார் வென்றால் எனக்கென்ன?
உனக்கென்ன?
நமக்கென்ன?
பேச்சை வளர்க்க
சாரமில்லாத ஏதோவொன்றைப் பற்ற
அவசியம் என்ன வேண்டி இருக்கிறது?
உனக்கு தோணி பிடிக்கட்டும்
அல்லது கோலி பிடிக்கட்டும்
எனக்கு உன்னைப் பிடிக்கும் என்கிற வார்த்தைகளைப் பிரயோகிக்க
அவசியம்
எனக்கு என்ன வேண்டி இருக்கிறது?
குவளை நிரம்பிய சூடற்ற தேநீருடனோ
கொத்தடர்ந்த காகிதப்பூக்களுடனோ
குறட்டை விடும் குழந்தைப் படத்துடனோ
நானனுப்பி நீயடையும் காலை வணக்கங்கள்
இரவு வணக்கங்கள்
ஒருபோதும் உன் பின்கதவை தட்டவே தட்டாது
பனிவிலகும் காலை
பனிகவியும் இரவு என
வழமையாய்
இனி எப்படிவேண்டுமானாலும் நீ
இருந்துவிட்டுப்போ
எனக்கென்ன.
-கோவிந்த் பகவான்.