அவளைத் தேடி வந்த சுகந்தி “ஏன் என்னமோ போல இருக்கீங்க?” என்று வசந்தாவிடம் கேட்டாள்.
“இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்” என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் “கலியாணம்னு கேள்விப்
பட்டேன். கங்கிராட்ஸ்” என்றாள்.
சுகந்தி “அதுக்குத்தான் வந்தேன்” என்றபடி கைப்பையைத் திறந்து மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கவரை எடுத்து “மேரேஜுக்கு அவசியம் நீங்க வரணும்” என்று சொல்லிக் கொடுத்தாள்.
“நிச்சயமா” என்று அவளுடன் கைகுலுக்கி விட்டு “என்னிக்கு?” என்றபடி பத்திரிக்கையைப் பிரித்தாள்
“அடுத்த மாசம் ஆறாந் தேதி. மறந்துராதீங்க” என்று அடுத்த மேஜைக்காரியைப் பார்க்க நகர்ந்தவள் நின்று”சரளா மேடம் என்னிக்கி வராங்க?” என்று கேட்டாள்.
“இன்னிக்கிதான். அவ ரெயில் லேட்டா வருதுன்னு ஈரோடு கிட்ட வரப்போ எனக்கு மெஸ்ஸேஜ் வந்திச்சு. இப்போ மணி பத்து ஆகுதில்லே. இன்னும் அரை மணி ஒரு மணியிலே ஆபீசிலே
பாக்கலாம்னு நினைக்கிறேன்” என்றாள் வசந்தா.
சுகந்தி சென்ற பின் அவள் தன் முகத்தைப் பார்த்து விட்டுக் கேட்ட கேள்வி வசந்தாவின் நினைவுக்கு வந்தது. நஞ்சப்பா அவள் முகத்தில் அவனது நிராகரிப்பை, அதனால் அவளுக்கு ஏற்பட்ட வருத்தத்தை வரைந்து ஒட்டி விட்டுப் போய் விட்டானா? நஞ்சப்பாவுடன் எழுந்த மனஸ்தாபமும் அதன் விளைவாக ஏற்பட்ட விரோதமும் இரண்டு நாள்கள் கழிந்தும் தன் முகத்தில் தெரிகிறது என்றால்? சண்டை நடந்த அன்றிரவு அவள் மனம் கொண்ட துக்கம் தலையணையை ஈரமாக்கிற்று. அவ்வப்போது நஞ்சப்பா இந்தக் கண்ணீருக்கு லாயக்கானவன் இல்லை என்று அவள் மனது அவளை மேலே தூக்கி விட முயன்றாலும் அவள் கீழேதான் விழுந்து கிடந்தாள். சரளா கூட இருந்திருந்தால் அவ்வளவு கண்ணீருக்கு வாய்ப்பு இருந்திருக்காது என்று வசந்தாவுக்கு அப்போது தோன்றியது. அவளது அப்பாவுக்கு இருதய ஆபரேஷன் என்று ஒரு வார லீவில் சரளா கோயம்புத்தூர் சென்றிருந்தாள்…
மேஜையின் மீது கிடந்த பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தாள்.
மணமகனின் பெயர் ரகுவரன் என்று இருந்தது. போன மாதம் வரை அவர்கள் ஆபீசில் சேல்ஸ் ஆபீஸராக இருந்த ரகுநாதனுடன் சுற்றிக் கொண்டிருந்தாள் சுகந்தி. எப்போதும் ரகு ரகு என்ற ஜபம்தான்
அப்போதெல்லாம். இப்போது நல்ல புருஷன்தான் கிடைத்
திருக்கிறான். எப்போதாவது தூக்கக் கலக்கத்தில் பழைய ரகுவின் பெயரைச் சொன்னால் கூடப் புதிய ரகு அவள் தன் மீது கொண்டி
ருக்கும் காதலினால் சொல்லுகிறாள் என்று மகிழ்ச்சி அடைவான்.
“ஓ பத்திரிக்கை கொடுத்துட்டுப் போயிருச்சா?” என்று சரளாவின் குரல் கேட்டது.
“அட, நீ எப்போ வந்தே?” என்று ஆச்சரியத்துடன் அவளை நோக்கினாள் வசந்தா.
சரளா அவளை உற்றுப் பார்த்தாள். பிறகு “எர்ணாகுளத்துலே வண்டி ரெண்டு மணி நேரம் நின்னுடுச்சாம். இன்னொரு டிரெயின்லே
ஆக்சிடெண்ட்டுன்னு. ஈரோடு வரப்போ மூணு மணி நேரம் லேட்டு. ஆனா ரயில்வேக்கு ரொம்ப கெட்ட பேரு வந்திரக்கூடாதுன்னு டிரைவர் பெங்களூருக்கு வரப்போ ரெண்டு மணி நேரமா லேட்டுன்னு ஆக்கிட்டாரு. ஸ்டேசன்லேந்து வீட்டுக்கு வரதுக்குள்ளதான் அப்படி
ஒரு டிராபிக் ஜாம். ஏன் கேக்கிறே? ரூமுக்கு வந்து ஒரு காக்கா குளியல் போட்டுட்டு ஓடி வரேன்” என்றாள். அவள் முகத்தில் இரவு தூங்க விடாமல் அடித்த பயண அலுப்பு பரவியிருந்தது.
“அப்பா எப்படி இருக்காங்க?”
“ஆஞ்சியோ பிராப்ளம்னு அஞ்சாறு நாள் இருக்கணும்னுட்டாங்க. நேத்திக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். கொஞ்சம் கேர்புலா
இருக்கணும். மத்தபடி கவலைப்பட ஒண்ணும் இல்லேன்னு டாக்டர் சொன்னாரு.”
“அப்பாடா. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாச்சுன்னாலே அவருக்கும் வீட்டிலே இருக்கறவங்களுக்கும் எங்கிருந்தோ ஒரு நிம்மதி வந்திடும்” என்றாள் வசந்தா பின்பு சரளா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுவது போல சுகந்தியின் பத்திரிக்கையைக் காண்பித்து “ஆமா. அடுத்த மாச பட்ஜட்டுலே நூறு ரூபா துண்டு விழணுமே!” என்றாள்.
“இந்த மாதிரி யாரும் சபிக்கக் கூடாதுன்னுதான் நா கலியாணமே பண்ணிக்கலே” என்று புன்னகை செய்தாள் சரளா..
“ரெண்டு மாசமா இருநூறு மிச்சம் பிடிச்சு வச்சிருந்தேன். அடுத்த மாசம் இன்னும் ஒரு அம்பதோ நூறோ சேத்துப் போட்டு ஒரு செருப்பு வாங்கலாமின்னு பாத்தா இது இப்பிடி வந்து நிக்குது” என்றபடி கையில் வைத்திருந்த பத்திரிக்கையை மேஜை மீது போட்டாள்
“கலியாணத்தை விட செருப்புதான் நமக்கு முக்கியம்” என்று சரளா சிரித்தாள்.
“ஆமா. வேணாமின்னா கழட்டி எறிஞ்சிறலாம்லே.”
அலுவலகத்தில் மட்டுமில்லாமல் லேடீஸ் ஹாஸ்டலில் ஒரே அறையில் அவர்களிருவரும் மூன்று வருஷமாகத் தங்கியிருந்
தார்கள். அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் -உடை, உணவு, பேச்சு, பழக்க வழக்கம் என்று பெரும்பாலான விஷயங்களில் – நன்றாக அறிந்திருந்தனர்.
“ஊருக்குப் போகிற அன்னிக்கே உன்னோட செருப்பைப் பாத்தேன். கவுரவர் வீட்டுப் பிள்ளைங்க மாதிரி நூறு ஒட்டுப் போட்டு…
எப்பிடித்தான் அதை இன்னும் அறுந்து போகாம காப்பாத்திப்
போட்டுக்கிட்டு வரியோ?” என்றாள்.
“வாங்கி ஆறு மாசம் கூட ஆகலே. நீதான் அப்ப உங்க மாமன் மகளுக்குக் கலியாணம்ன்னு மதுரைக்குப் போயிருந்தியே. அந்தக் கடைக்காரன் ரெண்டு வருசம் நிச்சயம் வருமின்னான் .
ஆறு மாசம் கூட நிக்கலே.. கம்மினாட்டி ஏமாத்திட்டான்” என்றாள் வசந்தா.
“ஆனா நான் ஊர்லேந்து திரும்பி வந்த அன்னிக்கிப் புதுச் செருப்பைக்
காட்டி நீ என்ன சொன்னே?”
“என்ன சொன்னேன்? ரொம்ப அழகாயிருக்குன்னா?”
சரளா அவளைப் பார்த்துச் சிரித்தபடி “அந்தக் கடைக்காரன் உங்கிட்டே இந்த செருப்பு கலர் உங்க காலு கலருக்கு ரொம்ப மேச்சா இருக்கு
மேடம்ன்னு சொன்னான்னு நீதான் சொன்னே.”
“ஆமா.”
“நீ உச்சி குளுந்து வாங்கிட்டே!”
சரளாவுடன் சேர்ந்து வசந்தாவும் சிரித்தாள். சட்டென்று சிரிப்பதை நிறுத்தி விட்டு “என் மூஞ்சியிலே ஏமாளின்னு எளுதிஒட்டியிருக்கா?”
என்று சற்று எரிச்சலுடன் கேட்டாள்.
சரளா “நீயா? ஏமாளியா? உன்னோட நஞ்சப்பா உலகத்திலேயே கெட்டிக்காரி நீதான்னு சொல்லுவாரே. நீயும் அதுக்கு கொஞ்சமும்
குறையாம அவர்தான் உன் உயிர்னு சொல்லுவியே” என்று சிரித்தாள் சரளா.
வசந்தாவுக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்து சட்டென்று முகம் மாறி விட்டது. அதைப் பார்த்த சரளா பதறிப் போய் “ஏய்! என்னடி ஆச்சு?” என்று கேட்டாள்
“உயிருன்னு நினைச்சுகிட்டு இருந்ததைப் பிடுங்கித் தூக்கித் தெருவிலே எறிஞ்சிட்டுப் போயிட்டான்” என்றாள் வசந்தா உதட்டைக் கடித்தபடி.
சரளா திடுக்கிட்டு சிநேகிதியைப் பார்த்தாள்.
“ஆமா. நான் ஏமாளிதான். இல்லாட்டா எப்பிடி அந்த நரசப்பா திடீர்னு ஓடிப் போனான்?’
“என்னாலே நம்பவே முடியலையே வசந்தா” என்று இன்னும்அதிர்ச்சி
மாறாத குரலில் சொன்னாள் சரளா.
“சுகந்தி மேரி நானும் நரசப்பா போனா என்னான்னு ஒரு நரசையாவ
வளைக்கணும்.”
“ஆளைப் பாத்தியே! அப்பிடிக் கெட்டிக்காரியா இருந்தா கிளிஞ்ச செருப்பைக் கட்டிக்கிட்டு இவ்வளவு நா எதுக்கு அலைஞ்சிருப்பே?”
“அதுவும் சரிதான்.”
“சரி, நா போறேன் என் செக்சனுக்கு. இல்லேன்னா அந்த ஆபீசர் நாயி என்னைப் பாத்துக் குலைக்க ஆரமிச்சிரும். மத்ததெல்லாம் சாயந்திரம் ரூமிலே வச்சுப் பேசிக்கலாம்” என்று சரளா அங்கிருந்து சென்றாள்.
வசந்தா தன் இருக்கையில் சாய்ந்து கொண்டாள். வேலை பார்ப்பவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்க வேலை பார்க்காதவர்கள் மொபைலைக் குடைந்து கொண்டும் அந்த மாத நாவலில் ஆழ்ந்து கொண்டும், ஆபிசில் தூங்குவதில் சிறந்த பயிற்சிபெற்றவர்கள் கண்களை மூடிக்
கொண்டும் இருந்தனர். அவள் மனது கட்டுக்கடங்காமல் அவளுடன் போராடியது. யோக்கியன் போல எவ்வளவு அமைதியாகவும் அடக்கமானவனாகவும் அவளுடன் பழக ஆரம்பித்தான் அந்த
நரசப்பா. முதல் ஆறு மாதம் வரை அவன் அவளிடம் சுத்தமாக இரண்டு அடிகள் இடைவெளி வைத்துப் பழகினான். பிறகு அது ஒரு அடியாய், அரை அடியாய்க் குறைந்து, கையைப் பிடித்து பிறகு நாளாக ஆக உடலின் மற்ற பாகங்களை மெதுவாக ஸ்பரிசித்து…
அவள் கண்களை மூடிக் கொண்டாள். ஆனால் தனக்கும் அது வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை என்று அப்போது அவள் நினைத்தாள். அவள் பெற்றோர்கள் என்ன முயன்றாலும் அவளுக்கு ஒரு சம்பந்தமும் அமையவில்லை. எப்போதும் பணம் ஒரு பிரச்சினையாக இருந்தது. அவள் பேரழகியாக இருக்க வேண்டும் என்று அவளை விட ஏழெட்டு வயது மூத்தவன் ஒருவன் வந்து கேட்டான். இரண்டு பேர் இரண்டாம் தாரமாகக் கேட்டு வந்தார்கள். இந்த எரிச்சல்கள் தாளாமல்தான் அவள் நஞ்சப்பாவைக் கொழு
கொம்பாக நினைத்துப் பற்றிக் கொள்ள முயன்றாளோ? இரண்டு வருஷப் பழக்கம். ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு உடைந்து சிதறி விட்டது.
இரண்டு நாளைக்கு முன் பகலில் அவளுக்கு அவனிடமிருந்து போன் வந்தது. “ஆறு மணிக்குப் பாக்கலாமா?”
அவர்கள் வழக்கமாக சதாசிவ நகர் கிளப்பில் சந்திப்பார்கள். அது அவள் அலுவலகத்திலிருந்து பக்கம் என்று. நஞ்சப்பாவின் தந்தை நகை வியாபாரி. மல்லேஸ்வரத்தில் பிரபலமான பெரிய கடைக்குச் சொந்தக்காரர். கிளப்பில் அவர் மெம்பர் என்பதால் நஞ்சப்பா அங்கு வந்து போகும் உரிமை பெற்றிருந்தான்.
அவள் கிளப்பை அடைந்த போது அவன் வந்திருந்தான். ஷார்ட்ஸும் பனியனும் அணிந்திருந்ததால் டென்னிஸ் விளையாடி விட்டு வந்திருக்க வேண்டும். அவர்களைக் கடந்து சென்ற சில பெண்கள் அவனைத் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றனர். செல்வத்தின் செழிப்பைக் காண்பிக்கும் உடல், உடை கொண்டவர்கள்.
“இவங்கல்லாம் உன்னை சைட் அடிக்கணும்னுதானே நீ இந்த டிரெஸ்சிலே வரே?” என்று அவள் அவனைக் குறும்பாகப் பார்த்தாள்.
“எங்கப்பாவும் அதைத்தான் சொல்றாரு” என்றான் அவன்.
“புரியலே” என்றாள் அவள் குழப்பமடைந்து.
“கமர்சியல் ஸ்ட்ரீட்லே கடை வச்சிருக்கற இன்னொரு நகைவியாபாரி
பொண்ணு குடுக்கறேன்னு வந்திருக்காரு.”
அவளுக்குப் பயமும் கோபமும் ஒரு சேர ஏற்பட்டன.
“பணம் பணத்தோட சேரும்பாங்க. இங்க நகை நகையோட சேருது. நல்ல சம்பந்தந்தானே” என்றாள் அவள் வெடுக்கென்று.
அவன் கோபமடைந்து ” நீ என்னை இவ்வளவு மட்டமா
நினைப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே” என்றான்.
வசந்தா “அப்படின்னா நீ இந்த சம்பந்தம் வேண்டாம்னு உங்க அப்பா கிட்டே சொல்லிட்டியா?” என்று கேட்டாள்.
அவன் ஒரு நிமிடம் பதில் பேசாமல் அவளை உற்றுப் பார்த்தான். பிறகு “இவ்வளவு பெரிய முட்டாளோடயா இவ்வளவு நாள் பழகினோம்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றான்.
அவனிடமிருந்து அவள் எதிர்பார்த்த அவளுக்கு ஆதரவான பதில் வரவில்லை. அதனால் ‘முதலிலேயே எதிராளியைத் தாக்கி விடுவது
தான் சரியான தற்காப்பு’ என்று அவன் நினைப்பதாக வசந்தா நினைத்தாள். இது அவள் கோபத்தை இன்னும் அதிகமாக்கிற்று.
“நீ என்னை முட்டாள்னு இப்பக் கண்டு பிடிச்சிட்டே. அதனாலே உன்னை மாதிரி ஒரு பணக்காரன் எப்படி ஒரு முட்டாளைக் கலியாணம் செஞ்சுக்க முடியும்? யூ ஆர் பிரில்லியண்ட்” என்றாள்.
“உனக்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மை இருக்கும்னு நான் கனவிலே கூட நினைச்சதில்லே” என்றான் அவன்.
“ஓ! முதல்லே முட்டாள். அடுத்தாப்பிலே தாழ்வு மனப்பான்மைக்காரி, இன்னும் ஏதாவது இருக்கா என்னை நீ ரிஜெக்ட் பண்ண?” சொற்கள் தனது கட்டுப்பாட்டையும் மீறிச் செல்லுவது போல ஒரு கணம் நினைத்தாள். ஆனால் அவன் அவளை இவ்வளவு இளக்காரமாகப்
பேசும் போது அவள் மௌனம் சாதித்தாலோ, காலில் விழத்
தயாராவது போல இருந்தாலோ அவள் வாழ்க்கைக்கும் சுய மரியாதைக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?
அவன் கோபத்துடன் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்தான். அவன் உடம்பு நடுங்குவதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்து “குட் பை ” என்று சொல்லி விட்டு கிளப்பின் வாசலை நோக்கி நடந்தான். ஒரு முறை கூட அவன் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை அவள் கவனித்தாள்….
* * *
ஆபீஸ் முடியும் சமயத்தில் சரளா வசந்தாவைத் தேடி வந்தாள். இருவரும் கிளம்பி வெளியே வந்தார்கள். மே மாத சூரியன் பகலில் அள்ளித் தந்த வெக்கையைத் தணிக்கும் விதமாக மழை தூறிக் கொண்டிருந்தது.
“மொதல்லே உன் செருப்புக் கண்ணராவியை ஒழிச்சுக் கட்டிட்டு ரூமுக்குப் போவோம்” என்றாள் சரளா. “உங்கிட்டே இருநூறு இருக்கில்லே. மேலே நூறோ நூத்தம்பதோ நான் போடறேன். அப்புறமா நீ எனக்குத் தந்தா போதும்” என்று அவளை இழுத்துக் கொண்டு போனாள் சரளா.
எட்டாவது கிராஸில் சரளாவுக்குத் தெரிந்த கடை இருந்தது. வசந்தா தேர்ந்தெடுத்த செருப்பு விலை முன்னூறு என்றான் கடைச் சிப்பந்தி.
“ஆறு மாசமாச்சும் வருமா?” என்று சரளா அவனிடம் கேட்டாள்.
“என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க? கண்டிப்பா ஒரு வருசம் வரும். அதுக்கு நான் கேரண்டி. அது போக நீங்க ரெகுலர் கஸ்டமர் இல்லீங்களா? நாளப் பின்னுக்கு நீங்க கடைக்கு வர வேணாமா? என்று சற்றுப் புண்பட்ட குரலில் அவன் பேசினான்.
“எதுக்கு கேட்டேன்னா, ஆறு மாசம்தான் வரும்னு சொன்னா ஒரு வருசம் ரெண்டு வருசம்னு எதிர்பார்ப்பு எல்லாம் இருக்காதில்லையா? இப்ப தூக்கிப் போடப் போற செருப்பை அந்தக் கடைக்காரன் ரெண்டு வருசம் வரும்னு சொல்லி ஏமாத்திட்டான்” என்று சரளா அவனைச் சமாதானப்படுத்தினாள்.
அவர்கள் அறைக்கு வந்ததும் சரளா டீ போட்டாள். இருவரும் அறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் கிடந்த நாற்காலிகளில்
உட்கார்ந்தபடி தேநீரை அருந்தினர். வசந்தா சதாசிவ நகர் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள். பேசும் போது அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தான் ஏமாற்றப்பட்டதுதான் தன்னால் பொறுக்க முடியாத விஷயம் என்றாள்.
மௌனமாக எல்லாவற்றையும் கேட்ட சரளா “காலேல நீ சொன்னது
தான். நஞ்சப்பா கழட்டிப் போட வேண்டிய செருப்புதான்” என்றாள்.
“எனக்கும் வயசாகிக் கிட்டே போகுதில்லே. அதனாலேதான் ஏமாத்தினவனைக் கண்டு அப்பிடி நெஞ்சு கொதிக்குது. எனக்குத் துணைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன் எதிரின்னு, முதுகுலே குத்தறவன்னு தெரியறப்போதான் சகிக்க முடியலே” என்றாள்.
“சரி, எழுந்திரு” என்று சரளா தானும் எழுந்து அறைக்குள் சென்றாள். வசந்தாவும் பின் தொடர்ந்தாள். அங்கிருந்த படுக்கையில் சரளா சாய்ந்து கொண்டு “இனிமே அவனையே நினைச்சுகிட்டு இருக்கக்
கூடாது. காலேல சொன்னையே நஞ்சப்பா போனா ஒரு நரசப்பாவை சுகந்தி மாதிரி இழுத்துக்க வேண்டியதுதான்னு. ஆனா அது கூட எதுக்கு?” என்று வசந்தாவைப் பார்த்துக் கை நீட்டினாள்.
ஆதரவைத் தேடிப் பற்றிக் கொள்வது போல் வசந்தா கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த சரளாவின் அருகில் சென்று படுத்துக்
கொண்டாள்.
“ஆம்பிளைங்கதான் துணைன்னு யார் சொன்னாங்க? பைத்தியக்கார ஜனம்” என்று சரளா தன் சினேகிதியை அணைத்துக் கொண்டாள்.
====================================