புத்தகக் கொள்ளையும்,  பாலஸ்தீனக்குழந்தைகளும்

This entry is part 10 of 14 in the series 28 மே 2023

சுப்ரபாரதிமணியன்

பாலஸ்தீனத்து பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் நடமாட்டம்…..

 அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளையும் பார்வையையும் கண்டு பயந்து மக்கள் ஒளிந்து கொள்கிறார்கள். வீட்டுக்  கோழிகள் கூட அங்கிருக்கும் ஆலிவ்  மரங்களில் ஏறி கை தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றன. ஆலீவ்மரத்து கிளை துணுக்கு  ஒன்றை ஒரு சிறுவன் ஒரு  இஸ்ரேல் ராணுவ வீரனுக்கு பரிசு போல் தருகிறான். தூரமிருந்து பயத்துடன் வேடிக்கை பார்க்கும் அவன் அம்மாவின் கையில் வெங்காயம் இருக்கிறது. ஏதாவது கண்ணீர் புகை வீச்சு இருந்தால் உடனடியாக காப்பாற்றிக் கொள்ள அவளுக்கு வெங்காயம் தேவைப்படுகிறது. அந்த சிறுவன் தந்த ஆலிவ் மர கிளை பகுதியை இஸ்ரேல் வீரன் அலட்சியத்தோடு பார்க்கிறான். இது  “ 5 கேமராக்கள் “ என்ற ஒரு குறும்படத்தில் வருகிற ஒரு காட்சி. அந்த படத்தை எடுத்த பாலஸ்தீனத்துக்காரர் இதுவரை 5 கேமராக்களை இழந்திருக்கிறார். இஸ்ரேல் ராணுவ வீரர்களின் கெடுபிடியில்   அவர் படம் எடுத்துக் கொண்டிருப்பதை ஆட்சேபித்தும் அந்த ஐந்து கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருக்கின்றன.

 இன்னொரு குறும்படம் : காசாபகுதிக்குள் இருக்கும் சோதனை சாவடிக்கு ஒரு பெண் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருகிறாள். நகரம் முழுக்க சோதனை சாவடிகள். எதனையும் சுலபமாக கடந்து போய்விட முடியாது. சோதனை சாவடியை கடப்பதற்கு அனுமதி சீட்டைக் காட்டுகிறாள்.

 இது நகல்தான், அசல் கொண்டு வா அப்போதுதான் அனுமதிப்போம்.

 அசல் தொலைந்து விட்டது நகலை போதும் என்று சொன்னார்களே

 பாதுகாப்பு அலுவலகத்துக்கு போய் புதிய அனுமதி சீட்டை வாங்கி வா.

 அந்த அலுவலகமே சோதனை சாவடிக்கு அந்த பக்கம் தான் இருக்கிறது

 சரி.  பாதுகாப்பு அலுவலகத்துக்கு போய் புதிய அனுமதி சீட்டு வாங்க அனுமதிக்கிறோம். நீங்கள் மட்டும் போகலாம் உங்களுடைய குழந்தைகள் உங்களோடு வர முடியாது.

 அந்தப் பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் திரும்பிப் போக சொல்லிவிட்டு சோதனை சாவடியை கடந்து புதிய அனுமதி சீட்டு வாங்க போகிறார்.

 குழந்தைகளுக்கு ஐந்து வயதும் மூன்று வயதும் இரண்டு வயதும். கடைசி குழந்தை அம்மாவைப் பிரிந்து வர மறுத்து  முரண்டு பிடித்து அழுகிறது. அம்மாவை நோக்கி ஓடி வருகிறது.

நீங்க வீட்டுக்கு போங்க. நான் சோதனைச் சாவடிக்கு போயி அனுமதி சீட்டு வாங்கிட்டு வரேன். நாளைக்கு தான் வருவேன் அழாம பத்திரமா வீட்டுக்கு போங்க.

 இப்படி சொல்லிவிட்டு சோதனை சாவடி கடந்த அவள் அனுமதி சீட்டுக்காக போகிறாள். அவளின் குழந்தைகளின் கைகளில் புத்தகங்கள் இருக்கின்றன.

0

 இந்த ஆண்டில் என் பயண திட்டத்தில் இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய நாடுகள் இருந்தன, அந்த நாடுகளில் பயணித்த போது பின்னும் பல பாலஸ்த்தீனப் படங்களையும் குறும்படங்களையும் பார்த்தேன்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கு சுற்றிக்கொண்டு இருந்தபோது மோதல் செய்திகளும், அங்கு   இருந்த சோதனை சாவடிகளும் குறுக்கு சுவர்களும் எல்லைகளை மறுக்கிற வேலிகளும் பயமளித்தன.

 கடைசியாக சொன்ன குறும்படத்தில் குழந்தைகள் புத்தகங்களுடன் இருப்பது  உறுத்திக் கொண்டே இருந்தது. காலம் காலமாக பாலஸ்தீனத்தில் வாழும் அந்த மக்களின் துயரம் என்பது அவர்களுடைய துயரம் மட்டுமல்ல. ஒட்டுமொத்தமான உலக மக்களின் துயரமாகவும் உலக அமைதிக்கு எதிரான அநியாயமாகவும் தொடர்ந்து  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனத்தில் வாழும் பூர்வ குடிகளை அடித்து விரட்டி விட்டு அங்கே ஒரு யூதர்களுக்கு என்று தனி தேசம் அமைக்க வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட ஒரு இனவெறி தத்துவம்  சியோனிசம். அந்த தத்துவம் குறித்தச் செயல்பாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களும் வன்முறையும் சொல்லி மாறாது. அந்த துயரக் காட்சிகளை அங்கங்கே பயணத்தின் போது நான் பார்த்தேன்.

 ஜெருசலத்தில் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்கு சுவர் பல மதங்களுக்கு பொதுவாக அமைந்திருக்கிறது .இஸ்லாமியர்களின் மசூதியின் ஒரு அங்கமாக அந்த சுவரை கருதுகிறார்கள் இறை தூதர் முகமது காலத்தில் அவரின் குதிரைகளை அந்த சுவற்றில் கட்டி வைத்ததாக அவர்களுக்கு நம்பிக்கை. அந்த சுவற்றுக்கு யூதர்களும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் யூதர்களின் கோவில் ஒன்று இருந்ததாகவும் அக்கோவிலின் சுவர் தான் தற்போதுள்ள மேற்கு சுவர் என்பதையும்  கூறி உரிமை கோருகிறார்கள். அதனால் தனி சியோனிச தேசம் அமைப்பதன் நோக்கம் குரூரமானது . நகரத்தின்  சில பகுதிகளில் ஒன்றாக அந்த முக்கியமான  சுவர் இருக்கிறது. அந்த சுவரை ஒட்டி சமர்ப்பிக்கப்படுகிற பிரார்த்தனைகளும் அழுகைகளும் ஓயாமல் இருக்கின்றன. அதுவும் வெவ்வேறு உலகம்.. பைபிள் நூலை மற்றும் குர்ஆன் நூலை கையில் வைத்துக் கொண்டு பிரார்த்திக்கிற பலபேரை சுலபமாக பார்க்க முடியும்.

குறும்படத்தில் காணப்பட்ட குழந்தைகளின் கைகள் இருக்கிற புத்தகங்கள் மற்றும் மேற்கு சுவரில் அருகே பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிற வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களின் வேத நூல்கள் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருக்கின்றன.

 புத்தகங்களும் கூட கொள்ளையடிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன.  பாலஸ்தீனத்தின் பகுதியில் இஸ்ரேல் என்ற நாடு அமைக்கப்பட்ட போது பாலஸ்தீனத்தினரின்  வீடுகளில் புகுந்து இஸ்ரேல் ராணுவம் சொத்துக்களையெல்லாம் சூறையாடினர். சுமார் ஒரு லட்சம் நூல்களை அவர்கள் திருடினார்கள்.    

                          ” கைவிடப்பட்ட நூல்கள்” என்ற தலைப்பில் இஸ்ரேலின் தேசிய நூலகத்தில் நூல்கள் இருப்பதை காண முடியும். வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, நாற்காலி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போனவர்கள், . இலக்கிய நூல்களையும் பழங்கால நூல்களையும் கையெழுத்து பிரதிகளையும் எடுத்துச் சென்றார்கள் அல்லது சூறையாடிச் சென்றார்கள் .பாலஸ்தீனியர்களை உயிரோடு விட்டாலும் விடலாம். ஆனால் அவர்களது  சொத்துக்கள், உடமைகள், கலை கலாச்சாரம் சார்ந்த நூல்களை சூறையாடுவதில் அக்கறையாக இருந்து நிறைவேற்றியது இஸ்ரேல் அரசாங்கம் , இஸ்ரேலுக்குள்ளேயே பல லட்சம் மக்கள் பாலஸ்தீனியர் வாழ்கிறார்கள். அவர்கள் பிரிவினைவாதம் பேசுவதாக மட்டும் கருத்துரை பரப்பப்படுவதுண்டு. அவர்களுக்கு என்று பண்பாடு,  கலாச்சாரமோ எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் சொல்வதுண்டு. ஆனால் பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடி கொண்டு போன புத்தகங்களையும் பண்பாட்டு பொக்கிஷங்களையும் அவர்கள் அழிப்பதில் கவனம் கொண்டிருந்தார்கள்.

பாலஸ்தீனக்  கவிஞர் கலிலால் சகத்கினி ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார்:

”  என்னை பிரிந்ததும் என்னவானாய்

திருடப்பட்டாயா

நெருப்புக்கு இரையானாயா.

 புதியதோர் நூலகத்தில் பாதுகாப்பாய் இருக்கிறாயா?

பக்கங்கள் கிழிக்கப்பட்டு பொட்டலங்களை மடிக்கப்படுகிறாயா என்னை பிரிந்ததும்

நீ என்னவானாய் என் நூல்களே “

Series Navigationயாக்கை  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *