நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

This entry is part 2 of 14 in the series 28 மே 2023

image.png

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

Posted on August 4, 2019

image.png

நிலாக் குடியிருப்புக் கூடம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++++++++

நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
கால் வைத்து
நாற்பது ஆண்டுகள் கடந்து
நாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்
விண்ணிலவுப் பயணத் திட்டம் !
குடியேற்றக் காலனி ! 
பனிக்கட்டி நீர் உள்ளது ! 
உயிர் வாயு, எரிவாயு உண்டாக்கலாம் !
பயிர் விளைவிக் கலாம்.
கூடிய வெப்பம், துருவப் பகுதியில் 
நீடித்த சூரிய ஒளி !
நீர், மின்சக்தி சேமிக்க வேண்டும். 
தளத்தின் கீழே வெப்பம்.
தரைக்கீழ் இல்லம், வாழ்வு !  
மண்ணுளவு செய்யக் கருவிகள்  !
வெண்ணிலவில் குடியேற
முந்திமிடும் நாசா,  ரஷ்யா, சைனா  !
முதலில் ஓய்வெடுக்க நிலவைச்
சுற்றும் நுழைவு விண்வெளி நிலையம்   !
செவ்வாய்க் கோள்
செல்லும் விமானி கட்கு நிலவில்
தங்கக் குடில்  அமைத்து 
மீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு  ஏக
நீண்ட காலத் திட்டம் !

++++++++++++

எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து.  ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக்  கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம்  செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது.  நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.

கிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]

+++++++++++++++++ 

  1. https://youtu.be/O7JtOokh4PU
  2. https://youtu.be/Uiy67s8zqHU
  3. https://youtu.be/Xp_ZODcQcx8
  4. https://youtu.be/5f6fMI5DiOA
  5. “Building a Moon Base” is based on research by Haym Benaroya and Leonhard Bernold (“Engineering of lunar bases“)

நிலாக் குடியிருப்புக் கூடங்கள் அமைக்க உலக நாடுகளின் கூட்டுழைப்பு

மனிதர் கால்வைத்து 50 ஆண்டுகள் கடந்து மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்ய அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, இந்தியா , இஸ்ரேல் ஆகிய நாடுகள் முனைவதில் எதிர்காலத் திட்டங்கள் உள்ளன.  1975 இல்  அபொல்லோ இறுதித் திட்டம் முடிந்த மூன்று ஆண்டுகட்குப் பிறகு 1999 ஆண்டில் முதன்முதலாக பிரிட்டீஷ் டெலிவிஷனில் 300 பேருக்கு மேல் வசிக்கக் கூடிய ஓர் அகில நாட்டு நிலாக் குடியிருப்பு [An International Lunar Colony]  பற்றி ஓர் நிகழ்ச்சி வெளிவந்தது.  அச்செய்தி பரபரப்பாகி எலான் மஸ்க் தொழிற்துறை நிபுணரைக் கவர்ந்து, 2017 ஆகஸ்டில் ஸ்பேஸ் எக்ஸ் [SpaceX] நிலாக் குடியிருப்புத் திட்டங்களை, அவர் நிறை வேற்றப் பாதை காட்டியது.

https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc

+++++++++++++++++++++

நாசா 2018 ஆகஸ்டில் முதன்முதலாக தான் அமைக்கப் போகும் நிரந்தர நிலவுக் குடியிருப்புக் கூடத்தைப் பற்றி அறிவித்தது.  ஆனால் ஈரோப்பிய ஈசா [ESA] அதற்கும் முந்தி, 2016 இல் தான் நிறுவப் போகும் நிலவு அரங்கைப் பற்றி வெளியிட்டது.

அமெரிக்க, இந்திய விண்ணுளவிகள் நீர்ப்பனி இருப்பதை அறிவித்த பிறகு , அடுத்து சைனா 2019 ஜனவரி 2 இல்  செங்கி-4 [Chang’e-4] விண்சிமிழை ஏவி, அதன் தளவுளவி முதன்முதலாக, யாருமே முயலாத நிலவின் பின்புறத்தே இறங்கி, தளவூர்தி ஆய்வுகள் செய்ய நடமாடி வருகிறது.  முக்கியமாக பின்னே அனுப்பப்படும் செங்கி-7 தளவூர்தி நிலவில் நீர்ப்பனி இருப்பதை  உறுதிப்படுத்த தென் துருவப் பகுதியில் தவழ்ந்து செல்லும்.

Lunar Orbital Platform Gateway

[Click to Enlarge]

https://smd-prod.s3.amazonaws.com/science-red/s3fs-public/atoms/files/7_Spann_Gateway_20180406.pdf

அதற்குள் நாசா 2030 ஆண்டுக்குள் நிலவுக்கு தனது விண்வெளி விமானிகளை அனுப்புவதற்கு முன், நிலவைச் சுற்றிவரும் பீடம் எனப்படும் “நுழைவாசல்” [Lunar Orbiting Platform] [Gateway]  புதிய நிலையத்தைக் கனடாவுடன் சேர்ந்து, அமைத்து இயக்கப் போகிறது.

Lunar Orbital Platform Gateway

[Click to Enlarge]

http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village

******************

நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம்.

நாசா அடுத்துச் செவ்வாய்க் கோளில் குடியேற முதற்படித் திட்டங்களை நிலவிலே அமைக்க திட்டமிடுகிறது.  நிலவில் விண் வெளிப் பயணிகள் ஓய்வெடுக்கவோ, தங்கவோ, எரிவாயுக்கள் நிரப்பிக் கொள்ளவோ, விண்கப்பல்களைப் செப்பணிடவோ, முதலில் நிலவுக் குடியிருப்புக் கூடங்கள் அமைப்பு.  அப்பணிகள் நிறைவேற நிலவில் விண்வெளி வினைகள் நிகழும் போது,  நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம் [Lunar Orbital Platform – Gateway] [நிலையம்] ஒன்றைக் கட்டி முடிக்கத் திட்டம் இடுகிறது.  பூமியைச் சுற்றிவரும் அகில் நாட்டு விண்வெளி நிலையம் போன்று, நிலவைச் சுற்றும் நாசா விண்வெளி நுழைவு நிலையமும் தணிந்த சுற்றுப் பாதையில் தான் இயங்கி வரும். நாசாவுக்கு  இந்த கருத்தோட்டம்  2017 ஆண்டு முதலே உருவாகி, அமெரிக்க அரசாங்கமோடு பன்முறை நாசா உரையாடி உள்ளது.

2018 ஆண்டு மைய மாதங்களில் நிலவுக்குப் பயணம் செய்ய ஏவுகணைகள் தயாரிப்புக்கும், நான்கு பேர் தங்கும் விண்சிமிழ் தயாரிப்புக்கும்  டிசைன் ஏற்பாடுகள் நடந்து வந்தன.  பூமியைச் சுற்றும் அகில நாட்டு விண்வெளி நிலையம் போல், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தில் எப்போதும் விமானிகள் இருக்க மாட்டார்.  அது புறக்கட்டுப்பாட்டு முறையில் சுய இயக்கம் உள்ளதாக நிலவைச் சுற்றிவரும்.  2018 ஆகஸ்டில் அமெரிக்கத் துணை அதிபதி மைக் பென்ஸ் 2024 ஆண்டுக்குள், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார்.  அதற்கு ஆகும் செலவு 1960 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்ற அப்பொல்லோ [Apollo Missions] செலவு திட்டத்தில் 0.5% பங்கே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

நிலவில் குடியிருப்புக் கூடம் அமைப்பில் எதிர்ப்படும் சவால்கள் 

  1.   நிலவின் ஒரு நாள்  என்பது புவியில் 14 நாட்கள்.  அதாவது பகல் 14 பூமி நாட்கள், இரவு 14 பூமி நாட்கள்.  மனித உடம்பும், மூளையும் இந்த வெப்ப நிலை வேறுபாட்டில் எப்படித் தாங்கி வாழும் என்பது தெரியாது.
  2. நிலவின் உஷ்ணம் 127 C – 173 C  [260 F – 343 F] வரை இறங்கி ஏறுவது.  அதற்கு ஏற்ற உடைகள் மனிதருக்குத் தேவை.
  3. சூழ்வெளி வாயுக்கள் பாதுகாப்பாக இல்லாமல் சூரியக் கதிர்வீச்சுத் தாக்குதல்.
  4. நிலவில் தணிவான ஈர்ப்பு நிலை, பூமி  ஈர்ப்பில் ஆறில் ஒன்று [Low Gravity] .
  5. நிலவில் உயிர்வாயு இல்லை.  மனிதர் உயிர்வாயுக் கலனைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
  6. நிலவில் நீர்ப்பனி இருப்பினும், குடிநீர் இல்லை.  தென் துருவப் பகுதியில் ஒளிந்து கொண்டுள்ள பனிக்கட்டியை உருக்கி, நீர் சேமிக்கும் முறைகள் தயாரிக்கப்பட வேண்டும்.
  7. நிலவில் அப்படிக் கிடைக்கும் நீரை மனிதர் குடிக்க முடியுமா வென்று சோதிக்க வேண்டும்.
  8. பயிர்கள் விளைவிக்க நிலா கண்ணாடி மாளிகை [Lunar Greenhouse] விருத்தி செய்ய வேண்டும்.
  9. நிலா குடியிருப்புக் கூடங்கள் கட்ட நிலவின் எரிமலைக் கரிய சாம்பலைப் பயன்படுத்திச் செங்கல்கள் தயாரிக்க வேண்டும்.
  10. நீரை மின்சார முறையில் பிரித்து, உயிர்வாயு, நீர்வாயு [Oxygen & Hydrogen] சேமிக்கப்பட வேண்டும்.
  11. இத்தனைச் சாதனங்களை இயக்கத் தேவையான மின்சக்தி இரவு, பகல் மாதம் முழுவதும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.

நிலவு ஆய்வுக்கூடச் சாதனங்கள்

2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.

கடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார்.  முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட  மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும்  சேர்ந்து, இன்னும் அடுத்த  ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக்  குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே.  2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம்  நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது.  நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது.  நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.

http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village

++++++++++++++++

esa-moon-village-4

நமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம்.  சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன.  ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும்  உதவி செய்யும்.

ஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே.  வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய  மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யான் வொர்னர் [Jan Worner, Director, European Space Agency (ESA)]

esa-moon-village-5

நிலவிலே பயண  நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ?  ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது.  அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது.  அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது.  நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.

நாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில்  மன ஊக்கம் அடைய வேண்டும்.  நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான்.  ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும்.  மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது.  பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.

இயான் கிராஃபோர்டு [Professor, Planetary Science, University of London]

esa-moon-village-3

செவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம்.  1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில  நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை;  பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.

காத்ரீன் ஜாய் [Lunar Scientist, Manchester University]

அடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்

ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு,  அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.

esa-moon-village-6

‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.

ஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண  வசதிகளை ஏற்படுத்தலாம்.

Moon Russian Colony

2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது.  நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும்.  மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும்,  நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப்  பயண முயற்சி செய்யவும்,  நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

டெமிட்ரி  ரோகோஸின்,  ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர்.  [ஏப்ரல் 11, 2014]

அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony].   ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது.  ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது.  நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.

ஐவன்  மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]

Moon Colony Extension

Moon Research Colony

நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார்  கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது.   அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள்  தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.

ஆன்ரே  லொலின் [Russian Academy of Cosmonautics Member]  

நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள் 

1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து  அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன.  1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ்  என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை”   [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார்.  ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.

Moon Camp ground

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி,  1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார்.  1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது.   அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன.   பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார்.  ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார்.  1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.

Moon Colony Model -1
Moon Control centre

நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன.  1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன.  2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார்.   அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது.   ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன.  ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது.  நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”

டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

தகவல்

  1. how to build a moon base
  2. https://en.wikipedia.org/wiki/Lunar_outpost_(NASA)
  3. https://www.universetoday.com/12726/building-a-base-on-the-moon-challenges-and-hazards/
  4. https://www.nationalgeographic.com/science/2019/01/china-change-4-historic-landing-moon-far-side-explained/

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  [August 4, 2019] [ R-4]

https://jayabarathan.wordpress.com/

SHARE THIS:

Attachments area

Preview YouTube video How Close Are We to Building a Moon Base?

How Close Are We to Building a Moon Base?Preview YouTube video Lunar Orbital Platform GatewayLunar Orbital Platform GatewayPreview YouTube video Sierra Nevada Corporation’s Lunar Orbital PlatformSierra Nevada Corporation’s Lunar Orbital PlatformPreview YouTube video Lunar Orbital Platform-Gateway Debate – 21st Annual International Mars Society ConventionLunar Orbital Platform-Gateway Debate – 21st Annual International Mars Society Convention

ReplyForward
Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்பாவண்ணனின்  நயனக்கொள்ளை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *