பசித்த போது 

This entry is part 2 of 13 in the series 2 ஜூலை 2023

ஸிந்துஜா 

ஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில்  வெவ்வேறு   செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக இருவரின் பெற்றோரும் சேர்ந்து ஒரே ஆட்டோவை அமர்த்தியிருந்

தார்கள். ஸ்கூல் விடுவதற்கு ஐந்து நிமிஷம் முன் அல்லது பின் ஆட்டோக்காரர் சையது வந்து விடுவார். இன்று ஸ்கூல் விட்டுக் கால்மணிக்கும் மேல் ஆகப் போகிறது. இன்னும் அவர் வரவில்லை.

மஞ்சுவுக்குப் பசியில் உயிர் போவது போலிருந்தது. இன்று மத்தி

யானத்துக்கு சப்பாத்தி சப்ஜி பண்ணி டிபன் பாக்சில் அவன் அம்மா வைத்துக் கொடுத்திருந்தாள். வரக் வரக்கென்று சப்பாத்தி இருந்ததால் 

கொண்டு வந்திருந்த மூன்று சப்பாத்தியில் ஒன்றரையைச் சாப்பிட்டு விட்டு மீதியைத் தூக்கி எறிந்து விட்டான். சாப்பிடும் பொருள் எதையாவது அவன் பிடிக்கவில்லை என்று தூக்கி எறிய முற்பட்டால் “அப்படிப் பண்ணாதே. அப்புறம் லக்ஷ்மி கடல்லே போய் அழுவா!” என்பாள் அவன் அம்மா. ஆனால் இப்போது அவனுக்குத்தான் அழுகை வரும் போலிருந்தது.

அவன் முகத்தைப் பார்த்து விட்டு “என்னடா என்னமோ போல இருக்கே?” என்று ரகோ கேட்டான்.

“ரொம்பப் பசிக்குதுடா” என்றான் மஞ்சு.

“ஏன், மதியம் சாப்பிட்டேல்ல?

“இல்ல. இன்னிக்கி எங்கம்மா சப்பாத்தி கொடுத்திருந்தாங்க. அது காலேலே செஞ்சது. மத்தியானம் வரட்டி மாதிரி ஆயிருச்சு. பாதிய சாப்பிட்டு 

முடிக்கிறதுக்கே பெரிய பாடாயிருச்சி” என்றான் கடுப்புடன்.. 

அவர்கள் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் ஒரு கடை இருந்தது. பென்சில் பேனா பேப்பர் கிளிப் இத்தியாதிகளோடு பிஸ்கட் கேக் கோக் வகையறா

வையெல்லாம் வைத்து அங்கே விற்றுக் கொண்டிருப்பார்கள். இன்று பார்த்து அந்தக் கடைக்காரரும் கடையைத் திறந்திருக்கவில்லை.

“சரி, இரு” என்று சொல்லி விட்டு ரகோ தோளில் இருந்த ஸ்கூல் பையை இறக்கி மஞ்சுவின் அருகில் வைத்தான். பிறகு சற்றுத் தூரம் நடந்து சென்று ஓரிடத்தில் நின்றான். இடது பக்கக் கால்சட்டைப் பையில் இடது கையை விட்டான். சில நிமிஷங்கள் சென்றன. ஆட்டோ வருகிறதா என்று மஞ்சு சாலையைப் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன்  ரகோவைப் பார்த்த போது அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். அவனருகில் வந்தவன் கால்

சட்டைப் பைக்குள் கையை விட்டு “இந்தா  சாப்பிடு” என்று எடுத்துக் கொடுத்தான். இரண்டு ஃபிங்கர் சிப்ஸ். கீழே உருண்டையாகவும் மேலே போகப் போக இளைத்து லேசான கூர்மையுடனும் பொன்னிறத்தில் 

காணப்பட்டன. அதை வாங்கிக் கொண்ட மஞ்சு இரண்டில் ஒன்றை எடுத்து வேகமாக வாயில் போட்டுக் கொண்டு சுவைத்தான். மொறு மொறுவென்று மிகவும் சுவையாக இருந்தது. ஆவலுடன் இரண்டாவதையும் எடுத்துக் கடித்துச் சாப்பிட்டான். தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரை வாயில் விட்டுக் கொண்டான். வயிறு நிரம்பிய மகிழ்ச்சியில் ரகோவைப் பார்த்து”தாங்ஸ்டா, 

செம டேஸ்டு. தாங்ஸ்டா!”  என்று சொல்லிச் சிரித்தான்.

“வீட்டிலே செஞ்சதா? தினமும் கொண்டு வருவியா?” என்று மஞ்சு நண்பனிடம் கேட்டான்.

அவர்கள் மேலே பேசுவதற்குள் சையது வந்து விட்டார். இருவரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டார்கள்.   

றுநாள் பள்ளியில் மதியச் சாப்பாட்டு இடைவேளையில் சாப்பிட்டு முடித்த பின் இருவரும் வழக்கம் போலப் பள்ளி  மைதானத்தில் நடந்து சென்றார்கள். அவர்கள் அருகில் நடமாட்டம் எதுவும் இல்லாத போது மஞ்சு நண்பனிடம் “நேத்தி நீ கொடுத்த ஃபிங்கர் சிப்ஸ் செம டேஸ்டு 

இல்லே? இன்னிக்கும் உங்க வீட்டிலேந்து கொண்டு வந்திருக்கியா?” என்று கேட்டான்.

ரகோ ஒன்றும் பேசாமல் நடப்பதை நிறுத்தி விட்டு நண்பனைப் பார்த்தான்.

“ஏண்டா நின்னுட்டே?” என்று மஞ்சு ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான்.

ரகோ அவனிடம் “வீட்டிலேருந்து எல்லாம் இல்லே. ஆனா நான் சொல்றதை நீ இங்க யாருக்கும் சொல்லக் கூடாது, சரியா?” என்றான்.

மஞ்சு தலையை அசைத்தான். ரகோ அவனிடம் தன்னுடைய இடது உள்ளங் கையைக் காண்பித்தான். அதில் இரண்டு விரல்கள் காணப்

படவில்லை. மஞ்சு அதிர்ச்சியுடன் ரகோவைப் பார்த்தான். அவன் 

ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்தான். மனுவுக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. வாயிலெடுக்க வேண்டும் போல இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

மஞ்சு ரகோவிடம் “உங்க வீட்டிலே இது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டான்.

“எங்கப்பாதான் எனக்கு இதைப் பழக்கினாரு. பசிக்கிறப்போ எதுவும் கிடைக்கலேன்னா…” என்றான்.

இரண்டு நாள் கழித்து மஞ்சு ரகோவைப் பார்த்த போது ரகோ அவனிடம் தனது இடது உள்ளங்கையைக் காட்டினான். முன்பு காணாமல் போயிருந்த விரல்கள் இருந்த இடத்தில் சிவப்பும் மஞ்சளும் கலந்த சதை லேசாகக் கிளம்பியிருந்தது. ரகோ அவனிடம் “இன்னும் ரெண்டு வாரத்தில 

வளர்ந்திரும்” என்றான். மஞ்சுவுக்கு அதைக் கேட்டு உடம்பில் ஒருவித 

சிலிர்ப்பு ஓடிற்று.

மஞ்சு ரகோவின் வலது கையைப் பார்த்தான். அந்த உள்ளங்கையில் இருந்த ஐந்து விரல்களும் இளஇளவென்று பிஞ்சு  வெண்டைக்காய்கள் போலப் பளபளத்தன. தன் வாயில் எச்சில் ஊறியதை மஞ்சு அடக்கிக் கொள்ள முயன்றான்.    

Series Navigationபூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து திசைமாறுவது எப்போது ?நிழற் கூத்து 

1 Comment

  1. Horror story! can’t you think something positive. New theme does not mean idiotic thinking and that too to the core.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *