நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தைந்து

This entry is part 4 of 6 in the series 30 ஜூலை 2023

  

நீலன் வைத்தியரின் உடல் காலப் படகில் நாற்பத்தேழு நூற்றாண்டுகள் கடந்து போவதை மிகுந்த சிரமத்தின் பேரில் ஏற்று ஐம்பதாம் நூற்றாண்டு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.  

நுன்துகள் <-> முழுத்திரள் இயந்திரம் மூலம் ஆப்பிள் பழங்களின் நுண்துகள்கள்  பிரபஞ்சத்தில் எங்கோ இருந்து வரவழைக்கப்பட்டு, அவை முழுப் பெருந் திரளாக்கப்பட, ஆப்பிள்களாயின. சுவை இல்லாத அந்த ஆப்பிள்களை பேனாக்கத்தி கொண்டு கர்ப்பூரமய்யன் பவ்யத்தோடு நறுக்கி குயிலி கொடுத்த ஒளிரும் வெள்ளித் தட்டில் நிரப்பி நீலன் வைத்தியர் முன் வைத்தான்.

அவர் கண் விழித்துப் பார்த்து ’உடலே துகள் துகளாகப் பொடியாகிறதென்று தோன்றுகிறது’ என வைத்தியர்கள் உடல் ஆரோக்கியம் அல்லது உடல்கேடு தொடர்பான புது நிகழ்வுகள் ஏற்படும் போது காட்டும் கரிசனம் குழைத்த குரலில் சொன்னார். 

 காலப் படகில் திடீரென்று கர்ப்பூரமய்யன் நுழைந்தபோது நீலன் வைத்தியர் அவனைத் தரைக்குத் தள்ளி,   மாட்டியிருந்த தோள்பையிலிருந்து ஒரு குடுவையை வெளியே எடுத்தார். அதில் இருந்து ஒரு சிறு கரண்டியில் வார்த்த விளக்கெண்ணெய் போல் எதையோ புகட்டியதை குயிலியும் வானம்பாடியும் கண்ணுற்றார்கள். 

ஓ வைத்தியா நரகலைத் தின்னக் கொடுத்தீரே குடல் வாய்வழி வந்துவிடும் போல் இருக்கே என்றும் இன்னும் பலவாறாகவும் பிதற்றினான் கர்ப்பூரமய்யன். அரை மணி நேரத்தில் அவன் ரயிலில் போகிறதுபோல் அதுவும் ஆடியாடி, நீட்டி நிமிர்ந்து படுத்துப் போவதுபோல் ஆழ்ந்த நித்திரை போய்விட்டான். 

பெண்டாட்டியையும் தொடுப்பையும் ஒரே நேரத்தில் இழந்துபட்டும் அது குறித்துத் துக்கம் காட்டாமல் காலப்படகில் தப்பித்து வந்தது அறிவீனம் என்றார்கள் இரு பெண்களும்- குயிலியும் வானம்பாடியும். 

அவனது நடத்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு மாதிரி விளக்கம் தர அவனுக்குத் தெரிகிறது. இன்று இப்படி –

அவனுக்கு இந்தப் பெண்களின் பேச்சு ஒன்றும் அர்த்தமாகவில்லை. நடந்தது திருவல்லிக்கேணியில் ட்ராம் ஏறி புரசைவாக்கத்தில் இறங்குகிற மாதிரி நான்கணா விஷயம் என்று நினைத்திருந்தான் அவன் இன்று.

 அண்ணாரே இந்த அய்யன் கிட்டத்தட்ட ஏமப் பெருந்துயில் கொண்டது கண்டால் நீர் இவனுக்கு அந்த மருந்து புகட்டியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, அப்படித்தானா எனக் கேட்டாள் குயிலி. 

சபாஷ் எங்கள் காலத்தில் முக்கியமான மருந்துகளைப் பெயர் சொன்னால் அவற்றின் வீர்யம் ஆகக் குறைந்து போய்விடும் என்பதால் அந்த மருந்து, இந்த மருந்து, கருப்பு மருந்து என்று பெயர் சொல்வோம். நீ அதே பழைய பாங்குதனைக் கடைப்பிடிக்கிறாயே வாழ்க என அவளைப்  பாராட்டினார் நீலன் வைத்தியர். 

அந்த மருந்தே தானாம். ஆக காலப் படகில் இரண்டு பேர் நீண்ட ஆயுளோடு இருப்பார்கள் என்றாள் வானம்பாடி, குயிலியின் மனதுக்குப் பேசி. அண்ணார் மருந்தைத் தனக்காக எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லையே என்றாள் குயிலி. 

அப்போதுதான் இருவர் மனதிலும் அசாதாரணமாக இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் நினைத்துக் கொண்டார்கள் – 

யார் யாருக்கோ துரத்திப் போய், சஞ்சீவினி மருந்து, அதுதான் பெயர் சொல்லக் கூடாத, புனைபெயர் கொண்ட மருந்தைத் தருகிறது இருக்கட்டும். குயிலிக்கும் வானம்பாடிக்கும் முதலில் அதைக் குடிக்கக் கொடுத்திருக்கலாமே. 

அபின் போல் சமாசாரமா சஞ்சீவினி மருந்து? மனதை இருண்ட பாதாளத்தில் இருட்குகைக்குள் அடைத்து உறங்க வைக்கும் போதை மருந்தா அது? 

வானம்பாடி மனதில் கேட்க, குயிலி அதொண்ணும் இருக்காது, இருந்தால் அண்ணார் இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பாரா என்ன என வினவினாள். 

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வைத்தியர் உடல் அதிரத் தொடங்கி, தலையுச்சியிலிருந்து சின்னஞ்சிறு துகள்களாக உதிரத் தொடங்கியது. நுண் துகள்களாக, புகைபோல் அத்துகள்கள் பறந்தன.

கபாலம் உலர்ந்ததால் வரும் பொடுகு போல இருக்கே என்றாள் குயிலி தன் கைகளை நீலன் வைத்தியர் நெற்றிப் பொட்டில் வைத்தபடி. பத்து வினாடியில் அவர் ஏமப் பெருந்துயிலில் ஆழ்ந்தார். கூடவே கர்ப்பூரமய்யனும் அங்ஙனமே துயில் கொள்ளச் செய்யப்பட்டான்.  

இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? 

குயிலி காலப்படகின் சுவரை நோக்கிக் கேட்டாள். மூன்று மணி நேரம் பழுது திருத்தச் செலவிட்டதால் மொத்தப் பயண நேரம் ஐந்து மணி என்பது ஐந்து மணி இருபத்தேழு நிமிடங்களானது. நீங்கள் இன்னும் பத்தொன்பது நிமிடமும் ஒரு மணி நேரமும் பயணத்திலிருக்க வேணும். 

இந்தக் கணக்கெல்லாம் யாருக்கோ அல்லது தேவையில்லை எனினும் நமக்கோ ஆசுவாசம் தரத்தானே என்று குயிலியிடம் மனதில் கேட்டாள் வானம்பாடி. 

குயிலி பதில் அளிப்பதற்குள் காலப்படகு பதினாறாம் நூற்றாண்டில் ஹொன்னாவர் சிறுநகரத்தில் ஷராவதி நதிக்கரையில் நின்றிருந்தது. 

மறுபடியும் பழுதா? குயிலி அலுத்துக் கொள்வதற்குள் ’வணக்கம் குயிலி’ என்று கம்பீரமான ஆண்குரல். புன்சிரிப்போடு ஒரு மனிதத் தலை. இளைஞனுடையதாக இருக்கலாம். 

காலப்படகின் உள்ளே நுண் துகள்களாகக் கடந்து வந்து அவை இழைந்து சேர்ந்துப் முழுத் திரளாக உருவான தலை அது. 

குயிலி ஓடிப்போய் நுண் துகள் <–> முழுத் திரள் பயன்பாட்டுப் பொறியை செயலிழக்க வைத்தாள். என்றாலும் தலை இல்லாத மனித உடல் நுண் துகள்கள் <-> முழுத் திரளாக உருவமும் இயக்கமும் பெற்றது. 

குயிலி, நினைவிருக்குமே நான் குழலன். பெயர் ஒலியில் ஒற்றுமை எனக்குப் பிடித்திருக்கிறது என்றது தலை. உடல் காலப்படகின் சுவரில் சாய்ந்திருக்க, தலை சுதந்திரமாகச் சுற்றி வந்து பேசிக்கொண்டிருந்தது ஒரு உடலியல் புதுமை என்றாள் வானம்பாடி குயிலியின் மனதில். 

இவனுக்கு நாம் மனதில் பேசிக் கொள்வது அர்த்தமாகும் என்று தோன்றுகிறது. குயிலி சிரித்தபடி வானம்பாடியை நோக்கித் தலையாட்டினாள். 

மன்னிக்கவும். நீங்கள் மனதில் உரையாடிக் கொள்வது ஒரு வார்த்தை விடாமல் புரிகிறது தான் ஆனால் நான் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். குழலன் சொன்னான். தலை காலப் படகின் உள்ளே மிதந்து சென்று பார்த்து வெளியே வந்ததும் கூறியது – 

நீலன் வைத்தியரும் பயணத்திலா? கூடவே இருக்கும் இளைஞன் யார்? 

ஆர்வத்தோடு கேட்டான் அவன். 

எங்கள் இயந்திரத்தில் அனுமதி இன்றி உள்ளே வந்தது மட்டுமில்லாமல் உடலை உடுப்பில்லாமல் சுவரில் சாத்திவைத்து விட்டு தலை மட்டுமாகச் சுற்றி வருவது நயத்தக்க நாகரிகமற்ற செயலன்றோ. 

வானம்பாடி சொல்லி முடிப்பதற்குள் நுண் துகள் <–> முழுத் திரள் பொறியை அவன் நோக்க, அது உயிர்பெற்று இரண்டு வேட்டிகளை உருவாக்கி உடலின் அருகே இட்டது. 

தலை சொன்னது – மன்னிக்க வேண்டுகிறேன். உடல் தனியாக இயங்குவதால் அதைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் போகிறது. உடுத்தவில்லை உடல் என்பது நினைவு வருவதில்லை. ஆனால் பாருங்கள், முகச் சவரம் செய்து கொள்ளவில்லை, பல் விளக்கவில்லை என்பது அசௌகரியமாக உணரப்படுகிறது. 

குயிலி அந்தத் தலையையே பார்த்தபடி இருந்தாள். இருந்தாலும் அதற்கான உடலை ஏன் போகுமிடத்தில் எல்லாம் மிதக்க வைத்துவிட்டுப் போக வேண்டும்? தலையோடு இணைக்க முடியாதா?

நீங்கள் நீலன் வைத்தியரின் காலத்தவர் தானே, கேட்டால் மருந்து   தரமாட்டாரா? குயிலி கேட்டாள். 

குழலனின் தலை பெரிய நகைச்சுவையைக் கேட்டதுபோல் உரக்க நகைத்தது. 

இந்த வேடிக்கையைப் பாருங்கள் பெண்டிர் நீங்கள் இருவரும் தேளரசு காலம் – ஐம்பதாம் நூற்றாண்டு. நான் உங்களுக்கு அடுத்து வந்தவன் – ஐம்பத்திரெண்டாம் நூற்றாண்டு. இந்த அந்தணன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நீலன் வைத்தியரோ மூன்றாம் நூற்றாண்டில் உயிர்த்திருந்தவர். இந்தக் குறுகிய வெளியில் நாம் ஐந்து பேரும் ஒரே காலமாக இயங்க விதிக்கப்பட்டது ஏன்?

அதற்கென்ன இப்போது? வானம்பாடி சுவாரசியமின்றிப் பார்த்தபடி கேட்டாள். அதுவுமொரு ரசமன்றோ! தலை கூறியது.

இந்தத் தலையை நீலன் அண்ணார் மூலிகைச்சாலைக்குப் போய்க்கொண்டிருந்ததாக சந்தித்த பிறகு வேறு  எங்கேயோ தரிசித்தோம் இல்லையோ? குயிலி கேட்டாள். வானம்பாடி நினைவில்லை என்றாள். ஏமப் பெருந்துயிலில் ஆழ்ந்த யாரோ பெயர் தெரியாதவன் தலை இப்படித்தான் இருந்தது. அரசாங்க விரோதி என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. முகத்தைத் துணி முகமூடி போட்டு மூடியிருந்தது தானே? குயிலி குழலனை ஊடுருவிப் பார்த்துச் சொன்னாள். 

நான் தான் அது, என் முப்பாட்டிக்கு பதினைந்து தலைமுறை மூத்தவளே என வணங்கி நிமிர்ந்தது குழலனின் தலை. 

ஆக நீங்கள் அரசாங்க விரோதி என்றானது. அப்படித்தானே? வானம்பாடி கேட்டாள். 

”நானில்லை அரசுக்கு விரோதி. இந்த அரசு தான் எங்கள் மெய்யரசுக்கு விரோதமானது. எங்கள் வம்சத்தை கொடுக்கு இல்லாத ஆகச் சிறிய தேள்களாக்கி அதே நேரம் இப்போது ஆளும் தேளரசு வம்சம் உருவிலும் அறிவிலும் விஷத்திலும் சிறந்திருக்க வைத்தது விதியில்லை திட்டமிட்டு எங்களைப் பலமற்றவர்களாக்கிய சூழ்ச்சி. கேட்டால், எங்கள் வம்சத்தை ஆயுதம் எடுக்காதவர்களாக அன்பு வழியில் செலுத்தவே புனிதராக்கியதாக விளக்கம் வேறே”.

குழலன் என்றவரே, நீங்கள் யார்? தேளரசுக்கும் உங்களுக்கும் என்ன பகைமை? 

இந்தக் கேள்வி சுவர் ஓரமாக இருந்து வந்தது. கர்ப்பூரமய்யன் எழுந்து உட்கார்ந்து கேட்டான். 

இதெல்லாம் தெரிந்தால் உனக்கு என்ன ஆகப் போறது என்று லேசர் பிரம்பை அவன் முன் நீட்ட அய்யன் இயக்கம் உறைந்தான். 

அவன் யாரோ தெரியாது எனினும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது நியாயம் என்றாள் குயிலி. 

குழலன் அளித்த நீண்டதோர் விளக்கம் இது –

தேளரசன் ஐந்தடிக்கு மேல் உயரமும் அதற்கேற்ப வாய்த்த  எடையுமாக இருக்க, நாற்பத்தெட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐம்பது வரை எங்கள் அறிஞர் வம்சத்தை வைத்தியர்களைக் கொண்டு நோயற்ற பெருவாழ்வு என்ற சாக்கில் உருவம் குறைப்பதில் பெரும் வெற்றி பெற்றார்கள். 

அது காலத்தில் முன்னால் பயணப்பட்டு ஐம்பத்திரெண்டாம் நூற்றாண்டுக்குப் போய் என் போன்ற குறளர் தேள்களைப் பிடித்து வந்து சிகிச்சை மூலம் மனித வர்க்கமாக்க முயற்சி நடந்தது. 

தோற்றுப்போன அந்தச் சோதனையில் முதல் பரிதாபமான பின்விளைவு நான். ஆண் தேளை மனித ஆணாக்குவது நடக்காது என்று தெரிவித்தார்கள்.  . அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 

என் தலையும் உடலும் சாதாரண மனித உடலும் தலையுமாக ஆனது. 

இந்த மாற்றம் மீண்டும் தேளுரு ஆகாமல் மனித உருவம் நிலைப்பது. ஆனால் உடலிலிருந்து தலை தனித்து இயங்கும். 

நானாக அனுபவத்தில் கண்டது, நாற்பது வயதும் அதற்கு மேலும்பட்ட ஐம்பது வரையிலுமான மானிடப் பெண்களோடு உறவு வைத்துக் கொண்டால் ஒரு மாதம் தலையும் உடலும் இணைந்த மானுடனாவேன், நாற்பது ஐம்பது என்று மூத்தபெண்களைத் தேடிப் போகத் துவங்கியது அப்போதுதான். 

ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் என்னை ஆழ்துயிலில் உறங்க வைத்திருந்தபோது உங்களில் யாராவது பார்த்திருக்கலாம் தான். 

பெருந்துயில் எனக்கு சிறுதுயிலானதும் நல்லூழ் கொண்டுதான். 

பெருந்துயில் மண்டபத்தில் உறக்கம் திடீரென்று விழித்து, கண்ணாடிப் பெட்டி மூடியைத் தூக்கி  வெளியே   வந்தேன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன் உடனே. ஒரு வருடத்தில் என்னைப் பிடித்து மறுபடி ஏமப் பெருந்துயிலில் ஆழ்த்தினார்கள். மறுபடி பிடித்து வழுக்குப் பாறை குகைகளுக்குள் விட்டார்கள். தலை தனியாக, உடல் தனியாக இருப்பதால் எளிதாகத் தப்பித்து வந்தேன். தலை வெளியே வந்து ஒரு வாரமானது உடல் வந்து சேர. இது ஒரு சடங்காகிக் கொண்டிருக்கிறது. 

நான் இப்படி ஏதாவது செய்தாலும் தேளரசை உடனடியாக அசைக்க முடியாது என்று எனக்கும் தெரியும் எனக்குத் தெரிந்தது இது என்று அவர்களுக்கும் தெரிந்ததுதான்,

சுவரில் சாய்ந்து உட்கார்ந்து பேசிய தலை உடலிலிருந்து மறுபடி விலக, தலை தன் பார்வை தீட்சண்யம் கொண்டு நுண் துகள் <-> முழுத் திரள் இயந்திரத்தை உயிர்பெறச் செய்து துகள்களானது. உடல் அடுத்துத் துகள்களாகிக் காணாமல் போனது.

(தொடரும்)

Series Navigationரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு பூர்வ உத்தராங்கம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *