நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

This entry is part 4 of 4 in the series 15 அக்டோபர் 2023

  நாவல்  தினை         அத்தியாயம் முப்பத்தைந்து   பொ.யு 5000

அதிகாரபூர்வமாக   ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடைக் காரர் நீலன் மூலிகை மருந்து உருவாக்கி  வெற்றி பெற்றது பெருந்தேளரசால் அறிவிக்கப்பட்டது. அது இப்படி இருந்தது –

ஒரு வாரம் முன் துயிலரங்கத்தில் விழித்து எழுந்த வினாடி முதல் நீலன் மும்முரமாக ஆயுள் நீடிக்கும் மருந்து சஞ்சீவினி உருவாக்குவதில் இருக்கிறார். (மேலும்)

பிரபஞ்சப் பேரரசர் பெருந்தேளர் அனைத்து உதவிகளும் அவருக்கு ஈந்து தன் சொந்த சகோதரனாக மருத்துவர் நலனை அன்போடு பாதுகாத்து வருவது தெரிந்ததே.  (மேலும்)

பெருந்தேளரசரின் எல்லா உயிரும் நீண்டு வாழ வேண்டும் என்ற கோரிக்கைப்படி இப்போது முதல் வடிவமாக மனித இனத்துக்கு மேற்படி ஆயுள் அதிகரிக்கும் சஞ்சீவனி இருக்க, மற்ற உயிரினங்களுக்கும் அந்த மருத்துவப் பயன்கள் போய்ச்சேர சகல இன சஞ்சீவினி என்ற சஞ்சீவனி அடிப்படை மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார்.  (மேலும்)

சஞ்சீவனி மானுடருக்கும் சகல இன சஞ்சீவனி மற்ற இனங்களுக்கும் என்று இப்போதைக்கு வைத்துக்கொண்டு பலன்களை அனுபவிக்கத் தர இருக்கிறது தேளரசு.  (மேலும்)

விரைவில் சஞ்சீவனியும் நம் சுயதேவை பூர்த்தியானதும் சகல இன சஞ்சீவினியும் இதர பிரபஞ்ச நட்சத்திர மண்டலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். (மேலும்)

மிக விரைவில் சகல இன சஞ்சீவனி சோதனை செய்யப்பட்டுப் பார்க்கப்படும். (மேலும்)

பதினைந்து வயது முதல் எழுபது வயதுவரையான சமூக சேவகர்கள் அலையலையாகப் பங்குபெற அழைக்கப்படுகிறார்கள். (மேலும்)

இந்த அரசு அறிக்கையைக் கிழித்தெறியவோ, உடல் துடைக்கவோ, கூம்பு வடிவாக மடித்து பட்டாணி நிரப்பித் தின்னவோ செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். (மேலும்)

வாங்கி குப்பைக்கூடையில் போட்டால் என்ன செய்ய என்று கேட்டால் கடுந்தண்டனை அப்படிச் சொல்வதற்கே என்று தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. (அறிக்கை நிறைவு)

வழக்கம்போல் சனிக்கிழமை சாயந்திரம் நாலு பேராவது படிக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் சர்வ இன சஞ்சீவனியும், அரசு அறிக்கையும் களமிறங்கின. 

இந்த அறிக்கை வந்த அடுத்த மணி நேரத்தில் சகல இன சஞ்சீவனி விலையின்றி   அடுத்த வாரம் சகல இனத்தவருக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

டிங்சர் அயோடின் என்ற சங்க காலத்துக்கு சற்றே முற்பட்ட மருந்து வாடையோடு வந்து சேர்ந்தது சகல இன சஞ்சீவனி. தெருவில் ஒரு ஈ கூட இல்லை என்று  தெருக்கோடி மருந்து இலவச வினியோக மேடையைச் சுற்றி வெட்டு விருதாவாக நின்ற கரப்பர்களும் அவர்களின் மானுட வடிவமான வெட்டி விருதாப் பயல்களும் வேடிக்கை பார்த்திருக்க, அடுத்த அரசு அறிவிப்பு வந்தது. 

மருந்து பருகும் ஒவ்வொருவருக்கும் மனிதர் என்றால் நாலு பைனரி நாணயங்கள் ஊக்கத்தொகையாக வழங்கப்படும், மற்ற இனங்களுக்கான உணவு அவர்கள் இனத்துக்கான உணவு மையத்தில் இதுவும் விலையின்றி வழங்கப்படும் என்று அறிவிப்பு வந்தது. 

ஆமா இவன்கள் இலவசமுன்னு தொடங்கி பல விதத்திலும் காசு தேர்த்த ஆரம்பிச்சுடுவாங்க என்று அவரவர்  ஒதுங்கிப் போக விநியோக மையங்கள் காற்றாட ஆரம்பித்தன. அவசரமாக, மருந்து பருக அன்பளிப்பு நான்கு பைனரி நாணயங்கள் என்பது ஆறு நாணயங்களாக உயர்த்தப்பட்டது. 

அப்போதுதான் விருதா கரப்புகளும் தேள்களும், ஒன்றிரண்டு குதிரைகளும் மருந்து குடிக்க முன்வந்தன. வெட்டி மனிதர்களும் கூட.

பருகினால் என்ன ஆகும்? 

ரதவீதித் தெருமுனை விலையில்லாத சகல இன சஞ்சீவனி ஈயப்படும் மேடையில் போட்டு வைத்திருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்த வெட்டிகளில் ஒருத்தன் மருந்து விநியோகித்த தேளனிடம் வினவினானாம். தெரிந்திருந்தால் நானே வாங்கி ஊத்திக்கொண்டிருக்க மாட்டேனா என்று சொல்லித் தேள்மொழியில் கக் கக் கக் கக் என்று நகைத்து அடுத்து வரும் விருதாவுக்குக் காத்திருந்ததாம். 

 அரைமணி நேரத்துக்கு முன் சகல இன சஞ்சீவனி பருகிய ஒரு மானுடன் அந்தத் தெருமுனை மேடையில் கண்மூடி சிரம பரிகாரம் செய்துகொண்டிருந்தானாம். சட்டென்று எழுந்து வீட்டுக்குப் போய்ட்டு வரேன் என்று சொல்லி ஓடினானாம். 

அதே நேரம் மருந்து புகட்டப்பட்ட குதிரை ஒன்று (தெருவில் இருக்கும் குதிரை லாயத்துக் குதிரை அது) லாயத்தில் அவசரமாகப் புகுந்து குதிரைகளில் அழகியான வெண்புரவி ஒன்றை உக்ரமாக இணைசேர்ந்திருந்ததாம். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் தேசம் முழுக்கப் பரவிய செய்தி இது – அரசு கொடுக்கும் இலவச மருந்து இன விருத்திக்கு வழி செய்கிறது. 

எல்லா சகல இன சஞ்சீவினி மையங்களிலும் நீண்ட வரிசைகளில் மருந்து வாங்க இனவாரியாக பெருங்கூட்டம் கூடி இருந்தது. நீண்ட நேரத்துக்கு தீவிரமான இன்பம் துய்த்தவர்கள் நடை தளர்ந்து வந்தாலும் மனதில் எழுந்த வேட்கை அணையாமல் இன்னும் கொஞ்சம் மருந்து என யாசித்து நின்றார்கள். 

மற்ற இனங்களுக்கு அவரவர்க்கான உணவு தர ஏற்பாடு செய்ததுபோல் மானுடருக்கும் நீண்ட உறவுக்கு அப்புறம் ஆனைத்தீயாக வயிற்றில் எழும் பசிக்கு உணவு தர வேண்டும் என்று பலமாக ஒரு கோரிக்கை எழுந்தது. அது தேளரசால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

உணவு சமைத்து உண்ணக் கொடுத்து நிர்வாகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைக் கருதி, உணவுக்குப் பதிலாக ஒவ்வொரு வேளைக்கும் அரை பைனரி நாணயம் உணவு அலவன்ஸ் கிடைக்கும் என்று பெருத்த வரவேற்புக்கிடையே மாற்றப்பட்டது. 

நம் காஸ்மோஸ் பிரபஞ்ச நீலன் வைத்தியனாகத் தவறாக இனம் காணப்பட்ட ஆல்ட் க்யூ பிரபஞ்ச கசாப்புக்கடை பிரதி நீலன், அடிப்படை சௌகரியங்களைக் கருதி இன்னும் தங்கியிருக்கும் ஏமப் பெருந்துயில் மண்டபமான துயிலரங்கைச் சுற்றி,  பெருங்கூட்டம் சகல இன சஞ்சீவனிக்காக,  நாக்கு நீண்டு எச்சிலூற நின்று கொண்டிருந்தது. 

எதிர்பாராத இந்த நிகழ்வை குழலன் தன் இடத்தில் அரூபனாக நின்று அவதானித்துக் கொண்டிருக்க குயிலி நாற்பரிமாணக் கூறுகள் திருத்தி அவனோடு உருவம் தெரியாமல் நின்றிருந்தாள். வானம்பாடியும் தான்.

பெருந்தேளரசரோ அரண்மனை உப்பரிகையில் இருந்து கூட்டம் கூடுவதையும் சில மானுடர்களும் கரப்புகளும், கழுதைகளும் அரண்மனையை நோக்கிக் கல்லெறியச் சொல்லி அந்தக் கூட்டத்தைத் தூண்டுவதையும் கண்டு சஞ்சலமெய்தினார்.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிறப்பான ஆலோசனை தரும் கர்ப்பூரம் ஜூரம் பிடித்து ஓய்வில் இருக்கிறாராம். போய் அவரை அவர் இருக்குமிடத்தில் பார்க்கலாம் என்றால் தொற்றுநோய் வகையான பழைய கிருமித் தாக்குதலான   நோயாம் அது. 

யார் மூலமாவது சகல இன சஞ்சீவினியை அவருக்குக் கொடுத்து விட்டால் என்ன? 

பெருந்தேள்பெண்டு தான் போய்ப் பார்த்து விட்டு வருகிறேன் என்று முன்னுக்கு வந்தாள். அவசரமாக அது வேண்டாமென்று மறுத்து விட்டார் பெருந்தேளரசர். 

ஒருவாறு தனியாக ஆலோசனை செய்து கர்ப்பூரம் வசிக்குமிடத்திற்குத் தனியாகப் போய் ஐந்தே ஐந்து நிமிடம் அங்கே வாசலிலேயே நிற்கணும். 

கோயில்  புரோகிதர் போல் தீர்த்தமும் கிண்டியுமாகப் போய் நின்று ஒரு மடக்கு உத்தரிணியால் சகல இன சஞ்சீவனி கர்ப்பூரத்தின் கையில் வார்த்து குடிக்கும் வரை காத்திருந்து அவசரமாக நடப்பை எல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்டு அவனுக்கு முதுகு காட்டாமல் நிற்காமல் திரும்பி வரணும். 

இத்தனை நாட்பட்ட ஜீவிதத்தில் பெருந்தேளருக்கு பெரிய நோய்த் தொற்று எதுவும் வந்ததில்லை என்பதோடு ஒரு தலைவர் செய்ய வேண்டிய கடமையை எப்பாடுபட்டும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்றிருப்பதும் நினைவு வந்தது. அவர் புறப்பட்டுப் போனார்.

 கர்ப்பூரம் கருப்பு தாடி விட்டுக்கொண்டு அரண்மனை இளவயது ஆஸ்தான ராஜகுரு போல் காட்சியளித்தான். இந்த மனுஷ ஜீவன்கள் அதுவும் மனுஷ ஆண்கள் கத்தி கொண்டு ஏன் உடலிலிருந்து ரோமம் களைய வேண்டும் என்று பெருந்தேளருக்குப் புரியவில்லை. 

உமக்கு இந்த தாடி பொருந்தி வருதே வழக்கமாக வைத்துக்கொள்ளுமே.

வாய் வரை வந்த கேள்வியை நிறுத்தினார் அவர். 

ஓ ராஜன் ஸ்வாகதம் என்று கர்ப்பூரம் சொல்லிக் கை கூப்ப இவனிடம் மயிர் விஷயமாகப் பேச்சை ஆரம்பித்திருந்தால் சரிப்பட்டிருக்குமா என்று சம்சயம். மயிரோ மற்றதோ மனுஷர்கள் சதா அவர்களைப் பற்றி  நல்லபடியாக நாலு வார்த்தை கேட்டால் சந்தோஷம் தான் அடைவார்கள். 

உம் ஆரோக்கியம் என்ன நிலையில் இருக்கிறது என்று விசாரித்து கொண்டு வந்த ஆரஞ்சுப் பழங்களை எடுத்து வைத்தார். இதெதுவும் அரண்மனை சரக்கில்லை என்றும் உத்தரவாதம் சொன்னார். கர்ப்பூரம்  எடுத்து வைத்துக்கொண்ட போதே அதை பெருந்தேளர் திரும்பிப் போன பிறகு  குப்பையில் போடும் உத்தேசத்தோடு இருந்தான். 

எங்கே பேச்சை அடுத்து எடுத்துப் போகலாம் என்ற நிச்சயமின்றி பெருந்தேளர் சங்கடத்தோடு அமர்ந்திருக்க கர்ப்பூரம் தேனொழுக விசாரித்தான் –சகல இன சஞ்சீவினி ஒரே ராத்திரியில் அதுகூட ராத்திரி எட்டு முதல் நடுநிசிக்குள் ப்ரஜைகளின் வலுவான படுக்கையறைச் சாதனம் ஆகிவிட்டது போலிருக்கே. நீலன் வைத்தியர் உண்ணி பிடித்துப் பிடித்து கஷாயம் காய்ச்ச, ஊரெல்லாம்  ஈத்தொல்லை இன்றி இருக்கிறதாமே. 

பின்னே இல்லையா. வைத்தியர் என்ன செய்தாரோ, எதைப் படித்தாரோ தெரியாது; 

மன்னிக்க வேண்டும் எதைப் படித்தாரோ, என்ன செய்தாரோ என்பது சரியான வரிசையாக இருக்கக் கூடும். (மேலும்) 

அவர் காய்ச்சிய மருந்து அவரையும் கடந்து எங்கேயோ போயிருக்கிறது (மேலும்) 

சஞ்சீவனி எப்போது கிடைக்கும் அதற்காகக் கட்டிவைத்த பணம் என்ன ஆச்சு என்பதுபோல் இருக்கும் கேள்வி எதுவும் இனி எழப் போவதில்லை.  (மேலும்)

தினம் ஒரு அறிக்கை தாங்கள் பெரிய உருவமாகவும் நீலன் வைத்தியர் சிறு உருவமாகவும் மருந்து பருகி மகிழ்ந்தவர்கள் நேற்று, போன வாரம் என்று எண்களை மறக்காமல் வெளியிட வேண்டும்.  (மேலும்)

இதெல்லாம் நான் அளிக்கக் கூடிய சாதாரண யோசனைகள் தாம். பெட்டிக்கு வெளியே இருந்து யோசனைகள் எழுமா என்று நோக்கினால், உண்டு ராஜன். உண்டு. (மேலும்)

முதலில் இலவச மருந்தை நிறுத்திக் கட்டணம் இட்டு வசூலிக்க வேண்டும். இது முடிவே இல்லாமல் போகக் கூடியது. ஒரு நாள் என்றால் ஒரு ராத்திரி நான்கு முறை மருந்து இலவசம் அதனால் கூடுதல் போகம். (மேலும்)

வெறும் வயிற்றோடு சுகம் கொண்டாட முடியாது என்பதால் இடைவேளைகளில் சாப்பிட உணவு வேண்டும். (மேலும்)

மனுஷர்களுக்கு ஒரு நாள் அதாவது ராத்திரிக்கு ஆறு பைனரி காசு தருவதாக அறிவித்திருக்கிறீர்கள். எத்தனை தடவை ஒரு ராத்திரிக்கு எவ்வளவு நாள் நான் காசு தருவதைச் சொல்கிறேன். எப்படி அதிக ஊக்க ஊதியம் வாங்கிப் போவதைத் தடுக்க முடியும்? (மேலும்) 

மற்ற ஜீவராசிகள் உண்ண உணவு இலவசம். எங்கிருந்து உணவு வரும்? இது நாயர் பிடித்த புலிவால் தான் சந்தேகமே இல்லை. நீங்கள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான் உள்ளது. (மேலும்)

கர்ப்பூரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அரண்மனையிலிருந்து இரண்டாம் மெய்க்காவலன் வந்து வாசலில் நின்றான். அடிப்படை அறிவும் இல்லாத கரப்பன் அவன். 

என்னடா என்று கொஞ்சம் ஆத்திரம், கொஞ்சம் அவசரம், கொஞ்சம் ஆர்வம் என்று கலந்த குரலில் கேட்டார் அவர். மெய்க்காப்பாளன் பெருந்தேளரின் கொடுக்கு மேலே படாமல் ஜாக்கிரதையாக நின்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தது இந்தப்படிக்கு இருந்தது- 

மகாராணி பெருந்தேள்பெண்டு வாகனம் கேட்கிறார். குலகுருவை நலம் விசாரித்தல் நாகரிகத்தின் பால் பட்டது என்பதால் அவரும் உங்களோடு இங்கே வர விரும்புகிறார். அவ்வளவுதான்ங்க. நீங்க இந்தாளோட இன்னும் அரட்டை போட்டிட்டிருந்தீங்க்ன்னா போறும். ராஜவாகனத்தை எடுத்துப்போய் அந்தம்மாவை இங்கே கூட்டிவந்துடுவேன். அப்புறம் அரை மணி ஒரு மணி இங்கே பேசிட்டிருந்துட்டு போகலாம்னு சொல்லச் சொன்னாங்க. 

சரி வாகனத்தை பத்திரமா ஓட்டிப்போ. போன வாரம் இன்னொரு பொய்க்காப்பாளன் ஹேண்ட் பிரேக் போட்டே முழுசா ஓட்டிட்டுபோய் வண்டியை பட்டறையிலே விடவேண்டிப் போச்சு. நீ வாகனம் ஓட்டியிருக்கியா? 

இல்லாமலா மகாராஜா என்னை அனுப்பினாங்க? 

ஐந்து நிமிடம் இதில் சிந்தை திரும்பி இருக்க, கர்ப்பூரம் மெய்க்காப்பாளன் போனதும் ஆலோசனையைத் தொடர்ந்தான். 

ஆகவே ராஜன், நீங்க தயவு தாட்சண்யம் பார்க்காமல் இலவச கொக்கோகம் எல்லாம் கடாசிடுங்க. உங்களையும் என்னையும், மகாராணி மற்றும் ஜனங்கள் எல்லோரையும் வேலை வேலைன்னு மும்முரமாக வைக்க ஒரே வழி – சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி. 

அடுத்த பத்து நிமிடத்தில் பெருந்தேளரசர்  கர்ப்பூரத்தின் காலை நாலைந்து தடவை தொட்டு வணங்கி மெய்சிலிர்த்து அமர்ந்திருந்தார். 

தொடரும்

Series Navigationகனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *