நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் சொன்னார்.
கர்ப்பூரம் ஒவ்வொரு சொல்லாக உச்சரித்து ஒரு வினாடி அதிக மௌனத்தில் இருந்து அடுத்து உரக்க ஒரு தடவை கூறினான் – நீயும் படைக்கலாம். கடவுள் தேளரசரிடம் உரைத்தார். அடுத்து வேகம் கூட்டி ஒரு முறை சொன்னார் அதையே. அவை நிறைந்திருந்தது.
நீலன் வைத்தியர் கிட்டத்தட்ட 4700 ஆண்டுகள் அவர் காலத்தைக் கடந்து நம் காலம் பொது யுகம் 5000க்கு வந்திருக்கிறார். பெருந்தேளார் விருப்பப்படி சகல நோயும் போக்கி அனைத்து இனத்தாருக்கும் நல்ல உடல்நலம் அளிக்கும் சஞ்சீவினிக்கு அடுத்த சகல இன சஞ்சீவினி உருவாக்கக் கேட்டுக் கொண்டோம்.
ஈ எறும்பு தொல்லையும் இல்லாமல் இருக்கவும் வேண்டினோம் என்று யாரோ சொல்ல அவர் பறக்கும் செந்தேளர் ஜுனியர் அதிகாரி என்று உடனே கண்டுபிடித்து வெளியே அனுப்பப் பட்டார். கர்ப்பூரம் தன் உரையைத் தொடர்ந்தார்.
வேறே யாரும் வெளியே போக விரும்புகிறார்களா என்று பெருந்தேளர் கேட்க கர்ப்பூரம் கடைசி வரிசை ஆசனங்களில் நான்கு கரப்பர் அதிகாரிகள் ஒத்துசேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அவர்கள் உறங்கட்டும். அப்போதுதான் ஆலோசனைக் கூட்டம் களைகட்டும் என்று பெருந்தேளரிடம் பார்வையில் சொன்னான் கர்ப்பூரம்.
வாயைத் திறக்காமல் மனுஷர்களைப்போல் புன்சிரிக்க முற்பட்டு தோற்றார் பெருந்தேளர். வழக்கம்போல் வாசலில் கதவுக்கு அந்தப் பக்கம் இரண்டு பழைய மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. குயிலியும் வானம்பாடியும் அவற்றில் மிகக் கவனமாக கர்ப்பூரத்தின் பேச்சைக் கேட்பதாகப் பாவனை செய்து மனதில் அங்கே இருந்த எல்லோரையும் கிண்டல் செய்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
கர்ப்பூரன் சொல்லிக்கொண்டே போனார் –
போன வாரம் இதே புதன் கிழமை. இதே காலை நேரத்தில் நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெருந்தேளரின் பெருந்துணையோடு துயிலரங்கத்தில் நீலன் வைத்தியர் துயில்நீங்கி விழித்தார்.
அட மடையா அவன் கசாப்புக்கடை நீலன் டா என்றாள் குயிலி.
போன வாரம் புதன்கிழமை விழித்தெழுந்து வியாழன் ஓய்வெடுத்துவிட்டு, வெள்ளியன்று சகல இன சஞ்சீவனி உருவாக்கி வெற்றி கண்டார் நம் பெருமதிப்புக்கு உரிய நீலன். மருந்தை சனிக்கிழமை தேர்ந்தெடுத்த மையங்களில் மாலை ஆறு மணிக்கு விநியோகிக்க ஆரம்பித்தோம்.
விநியோகம். எங்கே இருந்துதான் இப்படி க்ளீஷே கெல்லி எடுத்து பேச்சு நெடுக்கத் தூவி செர்வ் பண்றானோ இடியட் என்றாள் வானம்பாடி.
நாம் எதிர்பார்த்ததற்கு மேலே பெரும்வெற்றி.
எழுந்து நின்று கைநீட்டி எங்கும் ஆரவாரம்.
கையா நீண்டுது?குயிலி மனதில் சொல்ல இரண்டு தோழியரும் மனதில் சிரித்து ஓய்ந்தார்கள். சனி, ஞாயிறு, திங்கள் நாட்டில் வேறேதும் நடக்கவில்லை.
பெரிய நகைப்பு மண்டபத்தில் எழுந்தது. பின்வரிசை கரப்பின அதிகாரிகள் சட்டென்று எழுப்பி விடப்பட்ட அதிர்வோடு கூட்டத்தைக் கவனிக்க எல்லோரும் நகைப்பது கண்டு அவர்கள் சிரிக்க, கர்ப்பூரன் அப்போது பெருந்தேளரசரின் அறிவும் தொழில் நுட்ப அறிவும் வாழ்த்தப்பட வேண்டியது என்று அடுத்த உரைக் கண்ணிக்குக் கடந்திருந்தான்.
கரப்பு அதிகாரிகளை எரித்துவிடுவதுபோல் முந்திய வரிசையில் அமர்ந்து திரும்பிப் பார்த்த செந்தேளர் அமைதியை நிலைநாட்டிய வெற்றியோடு முன்னே பார்த்தார்.
அந்த மூன்று நாளும் நல்ல வேளையாக பாலியல் குற்றங்கள் அதிகரிக்காமல் பெருந்தேளரசு காவல்படையினர் கண்காணித்தார்கள். அவர்கள் பணியைப் பாராட்டி ஊக்கத்தொகை தருவதோடு இந்த வாரம் இரண்டு நாள் சிறப்பு விடுமுறையும் கொடுக்கக் கோருகிறேன்.
கூட்டத்தினர் எழுந்து நின்று கரம்தட்டி உற்சாகமாக ஒலித்தனர். பிரச்சனை நேற்று செவ்வாயன்று தான் உக்கிரமடைந்தது என்பதைப்பதிவு செய்ய முற்படுகிறேன். உடல்பசி எழுந்து தீர்ந்து மறுபடி எத்தனையோ முறை எழுந்து தீர்ந்து வயிற்றுப்பசி மற்றும் உடல் சோர்வு மிகுந்து அவரவர் வசிப்பிடத்திலும் வந்து சேர்ந்து உறங்கிய இடத்திலும் கிடந்துறங்கினதாகத் தெரிகிறது. எழுந்ததும் எல்லா இனங்களுக்கும் என்றென்றும் விலையில்லா உணவு கோரிக்கை கவனமில்லாமல் கையாளப்பட்டதாகத் தெரிகிறது.
அடபாவி அந்தப் பெருந்தேள் கடங்காரன் இலவச உணவு அறிவிப்பை இந்தக் கடங்காரன் சொல்லித்தானே செய்தான் என்று வானம்பாடி அகலமாகக் கண்விரித்து ஆச்சரியப்பட குயிலி அவளுக்கு மனமுத்தமொன்று அனுப்பினாள்.
கர்ப்பூரம் தொடர்ந்தான்.
ஆக இன்று புதன்கிழமை தொடங்கி நாம் ஒரு பிரச்சனைக்குரிய காலவெளியில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம்மிடம் உணவு இல்லை. இருந்தாலும் வாங்கக் காசு இல்லை. வருமானம் வர வேலை இல்லை. இருந்தாலும் சோர்வின்றி மனம் ஒப்பி பணிசெய்ய இயலவில்லை. எல்லாம் அலுத்து திரும்பப் படுக்கைக்குத் திரும்பினால் குழந்தைகள் விழித்துக் கொண்டு பார்க்கின்றன. ஆ,ண் பெண் இரு தரப்பினருக்குமான பிரச்சனை இது.
இணை இல்லாதவர்களின் பிரச்சனை அளவை நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தேவையின்றி தேளரசு மேல் சினம் கொண்டுள்ளார்கள். என்ன எதிர்பார்க்கிறார்கள்?
பெருந்தேளரச மாமா வணக்கம் என்று வானம்பாடி ஒரு ஈர முத்ததோடு குயிலிக்கு அனுப்புகிறாள்.
விழுந்து கிடக்கும் குடிமக்களை, விழுந்து கிடக்கும் பொருளாதாரத்தை, விழுந்த உணவுத் தன்னிறைவை மீட்டெடுக்க ஒரே வழி சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி. மீண்டும் சொல்கிறேன். சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி.
ஏலக்கடை பார்த்திருக்கியா வானி?
ஏலக்காய் விற்பாங்களா?
மூஞ்சி விற்பாங்க.
வாங்க ஆள் இருந்தா நரகலைக்கூட விற்பாங்க. அதுதானே சிறப்பு உணவுக்கூடத்திலே செய்யறது. பதப்படுத்தப்பட்ட மலம்.
குயிலியின் முகம் எரிச்சலை ஒரு வினாடி பிரதிபலித்து வழக்கமான அணிகலனான செயற்கைப் புன்னகையை அணிந்து கொண்டது.
கூட்டம் நிறைவடைந்தது என்று அறிவிக்கும் சிகப்பு விளக்கு மங்கலாக எரிந்தது,
இந்தத் திட்டம் உடனே செயலுக்குக் கொண்டுவர வேண்டியது என்று தொடர்ந்த கர்ப்பூரம் இன்னும் ஐந்து நிமிடம் மட்டும் பேசுகிறேன் என்று சைகை காட்ட, பெருந்தேளரசர் அப்படியே ஆகட்டும் என்று உரக்கக் கூறினார்.
ஆக அடுத்த வாரத்தில் இருந்து இந்த விதமாக, சொல்ல இருக்கும் விதமாக சமூக வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் ஒரு மாதத்துக்கு மாறுதலடையும்.
சகல இன சஞ்சீவினி உருவாக்கி ஏற்றுமதிக்கான மையத்துக்கு அனுப்புவதே தலையாய தேசியக் கடமை ஆகும். முதல் நடவடிக்கையாக அத்தியாவசியமான போக்குவரத்து, உணவு உருவாக்கம், நீர் விநியோகம் போன்றவை தவிர வேறு தொழில்கள், உருவாக்கங்கள் விஷயமாக யாரும் மெனக்கெட வேண்டாம்.
அதற்குப் பதிலாக வீடுகளில் ஏழு வயதுச் சிறார் முதல் எழுபத்தைந்து வயசர்கள் வரை முழுமூச்சோடு சகல இன சஞ்சீவனி உருவாக்க வேண்டும். காலை ஆறு மணி முதல் இரவு பதினொன்று வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குக் குறைவேதுமின்றி உருவாக்கம் நிகழும்.
சகல இன சஞ்சீவனி மருந்தை இயந்திரம் மூலம் உருவாக்க முடியும் தான். எனில் அதி வீர்யம் என்ற குணம் யந்திர உருவாக்கத்தில் கணிசமாகக் குறைந்து போகும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் குடிசைத் தொழில், ஓட்டு வீட்டுத் தொழில், பங்களா, மாட மாளிகைகள். அரச அரண்மனைகளின் ஒரே தொழிலாக இன்னும் ஒரு மாதம் நாடே இந்த மருந்தை ஏற்றுமதிக்கான தரத்தோடு உருவாக்க வேண்டும்.
வீடுகளில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக இருந்து மருந்து உருவாக்க வேண்டும். பெண்கள் அந்த திரவத்தை எப்படிக் காய்ச்சுவது என்ற பயிற்சியும் ஆண்கள் அந்த மருத்துவப் பொருளை வீணாகமல் தர நிர்ணயம் செய்து சீசாக்களில் அடைத்து அனுப்பப் பயிற்சியும் அளிக்கப்படுவார்கள்.
அருகருகே இருந்தால் அதுவும் இப்படியான அதி வீர்யச் சூழலில் இருக்க நேர்ந்தால் மருந்து உற்பத்தி பாதிக்கப் படலாம் என்பதால் வீடுகளில் பெண்கள் இருந்து மருந்து உருவாக்க, ஆண்கள் பள்ளிகளிலிருந்து அவற்றைப் பெற்று தரக்கட்டுப்பாடு செய்து பாலிவினைல் அல்லது உடைந்து போகாத சீசாக்களில் பொதிந்து ஏற்றுமதி மையத்துக்கு அனுப்பலாம்.
ஆண் குழந்தைகள் வீட்டு ஆண்களுடன் மருந்து தரக்கட்டுப்பாடு, பொதிந்து ஏற்றுமதிக்கு அனுப்புதல் ஆகிய காரியங்களில் ஈடுபடலாம். சிறுமியர் மருந்து உருவாக்க வீட்டுப் பெண்களுக்கு உதவி செய்யலாம். பனிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வளர்ந்தவர்களாகக் கணக்காக்கப்பட்டு மருந்து தொடர்பான இலக்குகள் அளிக்கப்படும்.
வயதுக்கு வந்த அனைத்து ஆண் பெண்களுக்கும் பால்வினை நோய்களுக்கான தடுப்பாக மாதம் ஒரு முறை ஒரு சிறு கரண்டி சகல இன சஞ்சீவனி பருகுதல் கட்டாயமானது. அவ்வளவுதான்.
பெருந்தேளர் மணி ஒலிக்க குயிலியும் வானம்பாடியும் உள்ளே வந்தனர். எவ்வளவு உற்பத்தி ஒவ்வொரு வீட்டிலும் செய்ய வேண்டும், மூலப் பொருட்கள் எப்படி கிடைக்கச் செய்வது, அடுப்பெரிக்க எரிபொருள் விநியோகம் போன்ற முக்கியமான விஷயங்களை வழக்கத்தை விட உற்சாகமாக விவாதித்து கர்ப்பூரம் இதிலெல்லாம் நிபுணன் என்று அவனை நொடிக்கொரு தடவை பாராட்டினார்கள்.
பெருந்தேளரசரும் கர்ப்பூரமும் எந்த வைத்தியர் நீலர் என்று தெரியாமலேயே பாராட்டு மழை பொழிந்தனர். அவர்கள் பங்குக்கு குயிலியும் வானம்பாடியும் ஓகோவென்று முதுபெருந்தேளர் வரை பாராட்டினார்கள்.
வெளியே வந்ததும், எல்லாம் குழலன் திட்டப்படிதான் நடக்கிறது, மாலையில் சந்திக்கலாம் என்ற செய்தியை மனதால் தொடர்பு கொண்டு அவனுக்கு அனுப்பி வைத்தாள் குயிலி.
மத்திய உத்தராங்கம்.
மத்திய உத்தராங்கம் 1
குழலன் சிரித்துக் கொண்டிருந்தான்.
இதேது, நம்ம கசாப்பு நீலன் எதையோ எங்கேயோ படித்து ஏதோ உருவாக்க, அது நிமிட நேரத்தில் பெரும்பெயர் வாங்கி இன்னும் இன்னும் வேண்டுமென்று தேவை அதிகரித்தபடி இருக்கிறது என்றாள் குயிலி.
பரவாயில்லை, சகல இன சஞ்சீவனி வெறும் ஓடைத் தண்ணீரும் அதில் மிதக்கும் ஈக்களும் என்று மெல்ல வதந்தியாகப் பரப்பி விட்டுவிடலாம் என்றாள் வானம்பாடி.
இவ்வளவு க்யாதி எடுத்த அப்புறமா என்று அவளைத் தீர்க்கமாகப் பார்த்தபடி குழலன் கேட்டான். நீலன் கால பொது யுகம் 300 தமிழ் கூடப் புரிகிறது இந்த க்யாதி என்பது என்ன என்றாள் குயிலி.
புகழ் என்றான் குழலன். பொ யு 2000 சொல். என்ன சொல்லிவந்தேன்? நான்கைந்து பேர் எதிர்மறையாக வார்த்தை சொன்னால் போதும். இப்போதைக்கு அதைத் தொட வேண்டாம். ஏற்றுமதி அடுத்து வருகிறது. வேறென்ன கோமாளித்தனங்கள் தட்டுப்படுமோ.
குயிலி புறப்பட்டாள். வானம்பாடி குழலனின் நூல் நிலையத்தைப் பார்க்க விருப்பப்பட்டிருந்தாள்.
பார்த்து விட்டுவா. நீ பார்க்க விருப்பப்படவில்லையா என குயிலியை விசாரித்தான் குழலன். அசல் நீலனுக்கு உணவு தர வேண்டிய நேரம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் அவள். மேலும் –
மத்திய உத்தராங்கம் 2.
அந்தி மயங்கும் நேரத்தில் அரூபனாக வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார் நீலன் வைத்தியர். அசல் நீலன் வைத்தியர் புலவர். காலம் கடந்த ஒரு வெளியில் அவரைப் பிடித்துக் காலில் கற்பனை தாம்புக்கயிறு கொண்டு தரையில் முளையடித்துக் கட்டியிருப்பது யாரெல்லாம்?
கயிற்றின் நீளத்தை ஆரமாகக் கொண்டு வரையக்கூடிய வட்டத்துக்குள் அவர் எங்கே வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அதற்கு அப்பால்?
ஓ குயிலி நான் வீட்டுக்குப் போகவேண்டும். அவசரமாக போக வேண்டிய நேரம். போய் இரண்டு நாள் வீட்டுக்காரி கையால் உண்டி பெற்று உண்டு உற்சாகமாக வருவேன்.
என்னென்னமோ சொல்லிப் பார்த்தார். அவர் வெளியே வந்தது பெருந்துயில் பேழையில் உறங்கியபடியே பெருந்தேளரசரோடு நகர்வலம் வந்தபோது தான்.
அப்போது சட்டென்று அவருடைய நாற்பரிமாணக் கூறுகளைச் சற்றே மாற்றி அரூபனாக்கி அவரை பேழையிலிருந்து இறக்கினான் குழலன். பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்சத்து நீலனைக் கண்ணிமைக்கும் முன் பேழையில் இட்டதும் அவன் தான்.
பாவம் அந்தப் பிரதி நீலன். இவர் போல இருப்பதால் இங்கே அழைத்து வரப்பட்டு உயிரும் நீத்தார் அந்த அப்பாவி மனிதர். இப்போது சுகவாசம் அனுபவிக்கும் பிரதி நீலன் ஆல்ட் க்யூ நீலன் கசாப்புக்கடை நீலன் சஞ்சீவனிக்கு இளைய மருந்து என்று ஈ எறும்பைஎல்லாம் இட்டு ஏதோ கலவையைக் காய்ச்சித் தருகிறானாம். குயிலி தான் சொன்னாள். அது காமத்தை அபாரமாகத் தூண்டும் வீரியம் கூட்டும் மருந்து என்று பிரபஞ்சமே கொண்டாடுகிறதாம்.
குயிலியும் வானம்பாடியும் தான் அசல் நீலனுக்கு இரண்டு கண்களாகச் செயல்படுகிறார்கள். வந்து விட்டாள் குயிலி. அவளிடம் சொல்ல நிறைய உண்டு –
சஞ்சீவனி 500 மூலிகை பூக்கத் தொடங்கி விட்டது. தினம் கோகர்மலை அடிவாரத்தில் மலைச் சாரலில் அதிகாலையும் பின்மாலைப் பொழுதிலும் நடை பயின்று வரப் போவது காலாற நடக்க மட்டுமில்லை, மூலிகைச் செடிகள் பூத்தனவா என்று பார்த்து அறியவும் தான்.
அண்ணார் வாசலிலேயே அமர்ந்த காரணம் என்ன? சாற்றுவீர் சற்றே.
குயிலி செம்மொழிப் பேச்சில் ஈடுபட்டிருந்தால் என்றால், மகிழ்ச்சியான மனத்தோடு இருக்கிறாள் என்பதாகும். அசல் நீலன் படிக்கட்டில் இருந்து எழுந்து குயிலியோடு கை குலுக்கினார். ஐயாயிரம் வருடம் கிட்டத்தட்ட உயிர்த்ததின் பலன் அவரெங்கே உயிர்த்தார். காலக்கோட்டை மாற்றி வரைந்து அவரை பொ யு 300இல் இருந்து பொ யு 5000க்கு அவள் தானே கூட்டி வந்தாள்.
அந்த ஊர் சுற்றி எங்கே? கண்களில் குறும்பு மின்ன குயிலியைக் கேட்டாள்.
அந்தக் குட்டியா, ஏதோ அபூர்வமான நூல் வேணுமாம். குழலனின் நூல் நிலையத்தில் தேடிவிட்டு வருகிறாளாம்.
என்ன புத்தகம் அது? புத்தகத்தைச் சுட்டுப் போடு என்று என் குரு புலிப்பாணியார் எழுதிப் போந்தது நினைவு வருகிறது. சொல்லியபடி கதவு திறந்து உள்ளே போகும் குயிலிக்குப் பின் அரூபனாக உள்ளே போனார் அவர்.
மத்திய உத்தராங்கம் 3
மலையடிவாரத்தில் இரவு இறங்கி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. குளிர் கவிந்ததாலோ என்னமோ மலைப் பளிங்கரோ மற்றவரோ இறங்கி வரவில்லை. ஏறிப் போகவுமில்லை.
குயிலியும் அசல் நீலனும் அரூபர்களாகக் கூறுகள் சற்று மாற்றி மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்கள். சட்டென்று ஏதோ வாடை மூக்கைக் குத்துகிறது. ஒரு வினாடி மல்லிகை மணக்கிறது. அடுத்து சகிக்க முடியாமல் துர்கந்தமாக நரகலும் நல்ல மணமுமாக மாறிமாறி வருகின்றன.
யாரோ அசுத்தம் செய்து வைத்திருக்கிறார்கக் அண்ணரே. திரும்பிப் போகலாம். மிதித்து விட்டால் குளித்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
குயிலி சொல்லிக் கொண்டிருந்தபோதே அசல் நீலன் குனிந்து மண் தரையில் அமர்கிறார்.
அண்ணாரே வேணாம் கை எல்லாம் நாற்றமடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து குரல் –
கை எல்லாம் என்றால் எத்தனை கை தேளர் மாதிரி காலும் கொடுக்கும் வேறே வேண்டுமே.
வானம்பாடி இருட்டில் சிரித்தபோது யட்சி மாதிரித் தெரிந்தாள். வாழ்த்துகள் அண்ணாரே என்றபடி குயிலி கையைப் பற்றினாள்.
அண்ணார் எதுக்கு அம்மா வாழ்த்தெல்லாம் என்று கேட்டார். சஞ்சீவனி 500 மூலிகை அரும்ப ஆரம்பித்து விட்டது போலிருகே என்றபடி மூக்கை உறிஞ்சினாள்.
சரியாகச் சொன்னே என்றபடி எழுந்த நீலன் ஒரு மெல்லிய ஈரிலைத் தாவரத்தை அகழ்ந்தெடுத்து குயிலியிடம் கொடுத்தார். சஞ்சீவனிக்கு உயிரிது, அவர் சொன்னபோது அந்தச் செடி சகிக்க முடியாமல் கெட்டவாடை வீசியது.
குயிலி சட்டென்று தூர எறிய வானம்பாடி ஓடிப்போய் எடுத்து வந்தாள். செண்பகப்பூ வாடை இரவுக்கு அணிகலன் போட்டிருந்தது.
அண்ணாரே சற்று உரையாடி விட்டு உறங்கலாமா? குயிலி கேட்டாள்
சஞ்சீவனி உருவாக்கத்தை எப்போது தொடங்கலாம் யாருக்கெல்லாம் சொல்லி அனுப்ப வேண்டும் யார் ஆதரவெல்லாம் வேண்டியிருக்கும். முக்கியமாக மருந்து சோதனை செய்வது எப்படி திட்டமிட வேண்டும். இதெல்லாம் பற்றி ஆராய்ந்து வைத்திருக்கிறேன். எல்லாம் என் புத்தியிலும் கொஞ்சம் என் மனதிலும் உண்டு. சொல்லட்டுமா? தேள் அரசருக்கு முதலில் அறிவிக்கலாமா?
அவர் கேட்க குயிலி சிரித்தாள்.
அண்ணரே அவருக்கு நீங்கள் இருப்பதே தெரியாதே. மாற்றுப் பிரபஞ்சத்திலிருந்து வந்த ஆல்ட் க்யூ பிரதி நீலன் என்ற கசாப்புக்கடைக்காரர் தான் அவருக்கு நீலன். அதை எப்படிச் சொல்வீர்கள்?
கொஞ்சம் யோசித்தார் நீலன். அசல் நீலனுக்கே உரிய அனுபவச் செறிவு பிரதிபலிக்கச் சொன்னது இது – அரசர்கள் இந்த நல்ல செயலில் பங்கெடுத்து அவர்களுக்கும் பிறருக்கும் தேவையற்ற குழப்பங்களைத்தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அது என் கால அரசராக இருந்தாலும் இப்போது இருக்கும் தேளரசரோ. பாதுகாப்பாக ஒரு சூழலையும் ரொம்ப வேண்டாம் கொஞ்சம் போல் நிதி உதவியும் செய்யக்கூடிய நிர்வாகிகள் யாராவது ஒருவர் இருந்தால் கூடப் போதும்.
குயிலி அசல் நீலனையே பார்த்தபடி இருந்தாள். வானம்பாடியும்.
இந்த சஞ்சீவனி செலவை எல்லாம் நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம். இரண்டு பெண்களும் சொன்னார்கள்.
மருந்தை ஒரு வாரம் அல்லது பத்து நாள் தினசரி பருக வேண்டும். நாங்கள் இருவரும் செய்வோம் அதை.
சோதனை? குயிலி என்ற நான் வானம்பாடியை சோதனை செய்வேன். வானம்பாடி என்ற நான் குயிலியைச் சோதனை செய்வேன்.
என்ன எல்லாம் பிரச்சனைகள் எழக்கூடும்? இரண்டு பேரும் மருந்து குடித்து ஒரு மணி நேரம் கழித்தோ மற்ற எப்படியோ பெரிய பூச்சியாகக் கூடும். மாற்று மருந்தாக இதே மூலிகைகளை வெவ்வேறு அளவிலும் குணத்திலும் மாற்றம் செய்து உருவாக்கித் தருகிறேன்.
நீங்கள் சஞ்சீவினி பருகி ஏதாவது உருமாற்றம் ஏற்பட்டால் மாற்று மருந்து குடித்து சரியாக்கி விடலாம் என்றார் நீலன்.
சஞ்சீவினி பருகி நடு ராத்திரியில் அல்லது பகலில் பறக்க ஆரம்பித்தால்?
மருந்து பருகும்போது இருவரும் மற்றவர் மேல் கண்காணிப்போடு இருந்தால் சஞ்சீவனி காரியங்களை நாற்பரிமாணக் கூறுகளை மாற்றியே செய்வோம். தேளரசுக்கும் கர்ப்பூரத்துக்கும் அவை கவனிப்பில் எட்டாது; பறக்கத் தொடங்கும் முன் இறக்கிக் கொண்டு வந்து விடலாம்.
மூன்று மலர்ந்த முகங்கள்.நீலன் கேட்டார், நான் என் காலத்துக்குப் போகவும் ஏற்பாடு செய்க சிறுமீர்.
(தொடரும்)
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 305ஆம் இதழ்
- நாவல் தினை அத்தியாயம் முப்பத்தாறு பொ.யு 5000