ஊருக்குப் போகவேண்டும்

This entry is part 4 of 5 in the series 29 அக்டோபர் 2023

பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த  மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால்   மனிதன்?

பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் என்று இளமைக்கால நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லாரும் இறந்துவிட்டார்கள். சிலர் மருமகன், மருமகள் என்ற வட்டத்திற்குள் சிக்கி சுயத்தை இழந்துவிட்டார்கள். சிலர் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் சிங்கப்பூர் வந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊருக்குப் போனால் முறுவலிப்பவர்களைவிட முறைத்துப் பார்ப்பவர்களே அதிகம்.

என் அத்தா, அம்மா வஃபாத்தாகிவிட்டார்கள். நான் தூளியில் தூங்கியதும், மாடுகள் கோழிகளோடு வாழ்ந்து கழித்ததுமான என் பூர்வீக வீட்டில் இன்று வாடகைக்கு யாரோ இருக்கிறார்கள்.

எனக்கென்று ஒதுங்கிய சொத்துக்கள் பலவற்றை சிங்கப்பூரில் நான் வீடு வாங்கவென்றும் கடன்அட்டைகளுக்கு சோறுபோடவென்றும்  இழந்துவிட்டேன். ஆனாலும் கொஞ்சம்  இருக்கிறது.  அதைப் பிறகு சொல்கிறேன். 

ஊருக்குப் போனால் நான் யாரையும் தொந்தரவு  செய்வதில்லை. திருச்சியிலேயே ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு, ஒரு மகிழுந்தில் ஊர் சென்று பார்க்கவேண்டியவர்களைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். பிறகு என்ன செய்வது? நான் அ,ஆ படித்த பள்ளி இடிக்கப்பட்டு, அங்கே வட்டாட்சியர் அலுவலகம் வந்துவிட்டது. நான் பூப்பந்தாடிய பெரிய திடலில் வீடுகள் முளைத்து எல்லாம்  சாக்கடை சூழ்ந்து, நெருங்கவே அருவருப்பாக இருக்கிறது. சாக்கடைப் போக்கை யோசிக்காமலேயே வீடுகளைக் கட்டிவிடுகிறார்கள். திருவிழாக் காலங்களில் வீரமாகாளியம்மன் கோயில்  திருவிழாவில்  இரவு முழுக்க கரகாட்டம் ரசித்திருக்கிறேன்.இப்போதெல்லாம் அப்படி நடக்கிறதா என்றே தெரியவில்லை. வீரமாகாளியம்மன் குளத்தில் எதிர்க்கரையைத் தொடும் நீச்சல் போட்டியில் ஜெயித்திருக்கிறேன். கட்டியிருந்த கைலியை விரித்து கெண்டை பிடித்திருக்கிறேன். அந்தக் குளம் படர்தாமரை மண்டிக்கிடக்கிறது. நெருங்கினாலே அழுகல் நாற்றம் விரட்டியடிக்கிறது. என்ன செய்வது? நான் நடந்து திரிந்த இடங்களிலெல்லாம் மீண்டும் ஒரு முறை நடந்து பார்க்கிறேன்.  

ஒரு தடவை நான் பிறந்தவீட்டைப் பார்க்க ஆசைப்பட்டு அங்கு போனேன். அந்த வீட்டில்  ஒரு  குடும்பம் வாடகைக்குத் தங்கியிருக்கிறது. நான்தான் ஊரிலேயே முதல் முதுகலைப் பட்டதாரி. ரஜித் எம்.எஸ்ஸி என்று ஒரு பெயர்ப் பலகை செய்து அதை வெளித்திண்ணைக்கு  மேல் சுவரில் ஒட்டிவைத்திருந்தேன். அது நெகிழியால் செய்தது. ஒட்டமுடியும். அந்த பெயர்ப் பலகை இருக்காதென்று தெரியும். ஆனாலும்  ஒட்டிவைத்த இடத்தைப் பார்க்க ஒகு குழந்தையாய் ஆசைப்பட்டேன். கூடத்தின் மூலையில்தான் கோரைப்பாயில் படுப்பேன். தேர்வு சமயங்களில் 3 மணிக்கு எழுந்து உட்கார்ந்து படிப்பேன். அம்மா காப்பி போட்டுத்  தருவார்கள். ஒரு சூடு காக்கும் குடுவை நிறைய இருக்கும். நினைக்கும்போதே அழுகை அழுகையாய் வருகிறது. அந்த இடத்தில் வெறும் தரையில் கொஞ்ச நேரம் படுத்துவிட்டு வரலாம் என்றும் ஆசைப்பட்டேன், ஒரு குழந்தைபோல. அந்த வீட்டுக்குப் போனேன்

திண்ணையில் படுத்திருந்த ஒரு கிழவி ‘யாரது’ என்று கேட்டதில் என் ஈரக்கொலை அதிர்ந்தது. அதற்குள் அந்தக் கிழவியின் மகன் வந்துவிட்டார். அவருக்கு என்னைத் தெரியும். ஆசையைச் சொன்னேன். ‘சரிங்கண்ணே என்று உள்ளே போனார். அந்த இடத்தில் ஒரு ஆட்டுக்கல்லும் அம்மியும் இருந்தது. வெகு சிரமப்பட்டு நகர்த்தியிருக்க வேண்டும். அவர் பிள்ளைகள் உதவியிருக்க வேண்டும். பிடி, தள்ளு என்று சத்தம் கேட்டது. அவைகள் இருந்த இடம் பாசி பிடித்திருந்தது.

 ‘அண்ணே அழுக்கா இருக்குண்ணே. கொஞ்சம் பொறுங்கள். கழுவிவிடுகிறேன்’ 

‘வேண்டாந்தம்பி. அப்படியே இருக்கட்டும், தூசிதட்டி கொஞ்சநேரம் படுத்துவிட்டுப் போய்விடுகிறேன். உள்ளே வரலாமா?’ 

அந்த  அனுமதி கேட்டதற்குப் பதில்  யாரையாவது என்னை அரிவாளால் வெட்டச் சொல்லி  இருந்தாலும் தாங்கியிருப்பேன்.  வரச்சொன்னார். சென்றேன். அந்த இடத்தில் தூசி தட்டி ஒரு கையை தலைக்கு வைத்துக்கொண்டு பக்கவாட்டில் படுத்தேன். திரும்பிப் படுத்தேன். கண்ணீர்  என் கைகளை கழுவிவிட்டது. அழுகையை அடக்க முயற்சித்ததில் நெஞ்சு அடைத்தது. எழுந்து உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதேன். 

‘என்னண்ணே. என்ன ஆச்சு..’

‘ஒன்னுமில்ல. எனக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.’

அவருக்குப் புரியவில்லை. திரும்பக் கேட்டார். ‘ஒன்றுமில்லை’ என்று பேச்சை திசை திருப்பிவிட்டு அங்கிருந்து பிறப்பட்டேன். பிறகு அந்த வீட்டுக்குப் போகவே இல்லை. 

உண்மையில் என் உயிரை நீவிய என் ஊர்  இப்போது இல்லை.  ஆனாலும் அது கற்பனையில் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது நான் ஊருக்கு வந்தததற்கு சில முக்கியமான காரணங்கள் இருந்தன.

என் குப்பிமகன் (அத்தாவின் சகோதரி மகன்) இப்ராகிமைப் பார்க்கவேண்டும். என் குப்பிக்கு என் அத்தாதான் நிக்காஹ் முடித்துவைத்தார். அந்தக் கதை எனக்குத் தெரியும் பொன்னமராவதியில் செங்கல் சூளையிலிருந்து  செங்கல்லை தன் மொட்டை வண்டியில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் ஒருவர்,  என் தூரத்து உறவினர். அவருடைய சொத்தே  அந்த வண்டியும், கொம்பு  மட்டுமே கம்பீரமான இரண்டு  மாடுகளும்தான். அதிகப்படியான ஆடை ஒரு நாலுமுழ வேட்டி,  துண்டு. சட்டை அறிமுகமே இல்லை. நல்ல  உழைப்பாளி என்ற ஒரே காரணத்துக்காக அவரை ஊருக்கு அழைத்து வந்து கழுவிக் குளிப்பாட்டி மணவறையில் உட்காரவைத்து என் குப்பியை அவருக்கு என் அத்தா நிக்காஹ் முடித்து வைத்தார். தனக்குச் சொந்தமான ஒரு கடையையும் அவருக்குக் கொடுத்து, துணி வியாபாரம் செய்ய முதலீடும் கொடுத்தார். அவருடைய மகன் இப்ராகிம் இன்று ஊரிலேயே பிரம்மாண்டமான துணிக்கடையின் முதலாளி. அதோடு ஒரு பல்துறை தொழில் நுட்பக் கல்லூரியின் உரிமையாளர். அவனைப் பார்ப்பதுதான் என் முதல்  வேலையாக இருந்தது. 

ஒரு மாதத்திற்கு  முன்பேயே வரும் தேதியை சொல்லியிருந்தேன். 

‘உங்களப் பாக்க ஆசையாய் இருக்கேன் மச்சான். எந்த வேலை வந்தாலும் எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுட்டு உங்களுக்காக காத்திருப்பேன்’ 

என்று ஒரு குரல்பதிவை அனுப்பியிருந்தான். 

திருச்சியில் இறங்கினேன். ஏற்கனவே பதிவுசெய்த விடுதியில் என் கைப்பொருட்களை வைத்துவிட்டு ஒரு மகிழுந்தில் உடன் ஊருக்குப் புறப்பட்டேன். புலனத்தில் அவனுக்கு ஒரு செய்தியும் அனுப்பினேன். செய்தி அவனுக்குக் கிடைத்ததை என் தொலைபேசி தெளிவாகச் சொன்னது.  

அவன் கடைக்குச் சென்றேன். முன் வாசலில்  நின்றுகொண்டிருந்தார் கடை  நிர்வாகி. அவர் ஓர் இலக்கியவாதி. என் முதல் கவிதை நூலை முழுமையாக வாசித்து 20 பக்கத்தில் அவரின் உணர்வுகளை என்னிடம் ஏற்கனவே கொட்டியிருக்கிறார். 

‘அட ரஜித்தண்ணே! வாங்கண்ணே’ என்று ஓடோடி வந்தார். 

‘நீங்கள் வருவதாக இப்ராகிம் அண்ணெ சொல்லவே இல்லயே’ 

‘சொல்லிவிட்டுத்தான் வருகிறேன். மறந்திருப்பார்.’

‘இன்று புதிதாக ஒரு கிளை திறக்கிறோம். அமைச்சர் வந்திருக்கிறார். இதோ தாங்கள் வந்திருக்கும் சேதியைத் தெரியப்படுத்துகிறேன்.’

தெரியப்படுத்தினார். 10 நிமிடத்தில் வருவதாக அவர் சொன்னதாக இவர் சொன்னார். காத்திருந்தேன். ‘எல்லா வேலையையும் ஒதுக்கிவிட்டு உங்களுக்காகக் காத்திருப்பேன்’ என்று புலனத்தில் சொன்னது  முழுப்பொய். அவனுடைய குரல்பதிவை மீண்டும் கேட்டபோது குரட்டைஒலிபோல் இருந்தது. கிட்டத்தட்ட  ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. இனிமேலும் காத்திருப்பது மரியாதை அல்ல. அந்த நிர்வாகியிடம் ஒன்றுமே சொல்லாமல் அங்கிருந்து பிறப்பட்டேன்.  அவனைப் பார்க்க ஆசைப்பட்டதற்கு  ஒரு காரணம் இருந்தது. நான் புதிதாக எழுதிய ‘வேர்களைத் தழுவிய விழுதுகள்’ என்ற சுயசரிதை நூலை அவனுடைய கல்லூரியில் வெளியிட்டு, கிடைக்கும் நிதியை அந்தக் கல்லூரியிலேயே கட்டணம் கட்ட வசதியில்லாத குடும்பங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே அந்தக் காரணம். அதை அவனிடம் நேரில் சொல்லவே ஆசைப்பட்டேன். எப்போது நடத்தலாம் எப்படி நடத்தலாம் என்றெல்லாம் நான் யோசித்து வைத்திருந்தை சொல்ல நினைத்தேன். முகம் பார்த்துச் சொன்னால்தான் என் உண்மையான உணர்வைப் பகிரமுடியும்? 

இப்போது அதற்கு அவசியமே இல்லை. அடுத்து என் சச்சா மகன் (அத்தாவின் சகோதரர் மகன்) ஜாபரைச் சந்திக்கச் சென்றேன். என் சச்சாவுக்காக என் அத்தா  என்னென்ன செய்தார் என்றெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும் அவர் ஒரு மேடைப் பேச்சாளர். அவரை பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் அத்தா நிற்கவைத்து, கிராமம் கிராமமாகச் சுற்றித் திரிந்து அவரை வெற்றிபெறச்செய்தார். அவருக்கு சொந்தமான ஒரு சிறு அரிசி மில்லை மிகப்பெரிய ஆலையாக மாற்ற அத்தாதான் பெரிதும் பாடுபட்டார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் ஜாபர் இன்று அரசியல் செல்வாக்குள்ள தலைவராக வளர்ந்துவிட்டான். பெரிய பெரிய அரசியல் புள்ளிகளோடு எந்த நேரத்திலும் அவனால் பேசமுடியும். அவனுக்கும் ஒரு மாதத்திற்கு  முன்பே  நான் ஊர் வரும் சேதியைச் சொல்லியிருந்தேன். இப்ராகிம் சொன்னதுக்கும் ஒருபடி மேலே போய்

‘மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துவிடுங்கள். பிறகு மற்றதைப் பார்ப்போம்’ என்று குரல்பதிவை அனுப்பியிருந்தான். திருச்சியில் இறங்கியதுமே அவனுக்கு நான் வந்துவிட்ட செய்தியைத் தெரியப்படுத்தியிருந்தேன். இப்போது தொலைபேசியில்   அழைத்தேன். நல்லவேளை. எடுத்தான். தான் ஒரு திருமணத்தில் இருப்பதாகவும், நேராக வீட்டுக்குப் போங்கள். நீங்கள் வீடு போவதற்குள் நான் வந்துவிடுவேன் என்றும் சொன்னான். 

வீட்டில்  ஆள் இருக்கும் அரவமே இல்லை. இரும்புக் கதவுகள் இறுக்கமாக மூடியிருந்தன. தூரத்திலிருந்தே இயக்கும் கதவுகள். சாவி அவனிடம்தான் இருக்கவேண்டும்.  மகிழுந்தை வெளியிலேயே நிறுத்திவிட்டு கொஞ்சம் வசதியான பிச்சைக்காரன்போல் நின்றுகொண்டிருந்தேன். அவன் வரவில்லை. மீண்டும் அழைத்தேன். அவன் கைப்பேசி கூவியது. சாப்பிட வாருங்கள் என்றானே. அடப்பாவிகளா ஏண்டா இப்புடியெல்லாம் நடந்துக்கிறீங்க?

இவனைப் பார்க்கவந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. எனக்கு ஒதுங்கிய ஒரூ பெரிய மனைக்கட்டை பள்ளிவாசல் கட்ட, நிர்வாகம் கேட்டது. அதை பள்ளிவாசலுக்கு இனாம் சாசனம்செய்து கொடுத்துவிட்டேன். பெரிய மதிப்புள்ள அந்த இடத்தில் இப்போது பள்ளிவாசலோடு ஒரு அரபி மதரஸாவும்  நடந்துவருகிறது.

முத்து படத்தில் வரும் அப்பா ரஜினி மாதிரி, சொத்தையெல்லாம் எல்லாருக்குமாக செலவு செய்துவிட்டு என் அத்தா வஃபாத்தாகிவிட்டார். அவரால் உயர்ந்த எல்லாருமே   என் அத்தாவை மறந்துவிட்டது எனக்கு வலித்தது. ஊர் மண்ணாவது அவர்  பெயரை உச்சரிக்கட்டுமே என்று அந்தப் பள்ளிவாசலுக்கு என் அத்தா பெயரை வைக்க ஆசைப்பட்டேன். ஜாபர் பள்ளிவாசல் நிர்வாகியாகவும் இருக்கிறான். அவனிடம் என் ஆசையைச் சொன்னேன். பள்ளிவாசல் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டதாகவும், மினிட்டில் ஏற்றிவிட்டதாகவும், தீர்மான நகலை வக்பு போர்டு தலைவருக்கு அனுப்பிவிட்டதாகவும், தாங்கள் வருவதற்குள் அநேகமாக பெயரை மாற்றிவிடலாம் என்றும் சொன்னான். 

இனிமேலும் காத்திருக்க என் மனம் இடம் தரவில்லை. பள்ளிவாசலுக்கு சென்று செய்திருக்கும் ஏற்பாட்டை அறியலாமே. சென்றேன். அலுவலகத்தில் உபயதுல்லா இருந்தான். அவன் என் நெருங்கிய உறவினன். ‘மாமு’ என்று ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டான். அவன் சிறு குழந்தையாக இருக்கும்போது அவனைத் தூக்கிக்கொண்டு அவன் அம்மா வீட்டுக்கு வருவார். அவனுக்கு கிரைப் வாட்டர் பாட்டிலில் பால் ஊட்டும் வேலையை எனக்குக் கொடுத்துவிடுவார். குழந்தைக்கு பாலூட்டுவது ஒரு  கலை. பாட்டிலை செங்குத்தாகப் பிடித்தால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடும். லேசாகச் சாய்த்து, குழந்தை குடிக்கக்குடிக்க, காற்று பாட்டிலுக்குள் போவதுபோல் ஊட்டவேண்டும். அந்தக் கலை எனக்கு தெரிந்திருந்தது. அவனுக்கு நான் பாலூட்டியிருக்கிறேன் என்பது அவனுக்கும் தெரியும். அதனால் அன்பு  அதிகமாகவே இருந்தது. 

வந்த விஷயத்தைச் சொன்னேன். அவன் அதிர்ந்தான்.

‘நான்தான்  மாமு செயலாளர். அப்படி ஒரு  சேதி இருப்பதே  தெரியாது மாமு. மினிட்ல அப்புடி ஒரு தீர்மானமே இல்லெ. நீங்களே பாருங்க’

என்று மினிட் புத்தகத்தை என் முன் விரித்தான். இனி என்ன செய்ய? அரசியல்வாதி தெரியும். என்னிடமும் அரசியலா? அடப்பாவி! ஏண்டா இப்புடியெல்லாம் நடந்துக்கிறீங்க? முடிஞ்சா முடியும்னு சொல்லுங்க. இல்லாட்டி முடியாதுன்னு சொல்லுங்களேடா. நன்றிகெட்ட ……….

புலம்பெயர்ந்து எங்கு சென்றாலும் சொந்த ஊரில் ஒரு  முகவரி இருக்கவேண்டுமாம். பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அது நியாயமாகவே பட்டது.   என் முகவரி சொல்ல ஒரு வீடு இருக்கிறது. தரையெல்லாம் பெயர்ந்துபோய் வாடகைக்கு இருந்தவன் காலிசெய்து சென்றுவிட்டான். இப்போது அந்த வீட்டைப் பழுதுபார்த்துவிட்டேன். வீடு முன்பைவிட வசதியாகவே இருக்கிறது. அந்த  வீட்டை   வாடகைக்கு ஒருவர் கேட்கிறார். அவருக்கு வாடகைக்குவிட ஏற்பாடு  செய்ய வேண்டும்.

ஊரில் வரும் வாடகை வருமானம் சிங்கப்பூரில் நாங்கள் எல்லாருமாகச் சேர்ந்து, ஒரு வேளை, ஒரு உணவகத்தில் சாப்பிடக்கூடப் பத்தாது. ஆனாலும் வாடகைக்குவிட ஒரு காரணம் இருந்தது. என் அண்ணன்  மகன் ஒருவன் இருக்கிறான். பிறவி ஊமை. அவன் வாழவைப்பான் என்று கழுத்தை நீட்டி அவனோடு  வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவன் மனைவி. அவள் வாழ்வு பெற்றாலா, இழந்தாளா என்பது தெரியாது. அவர்களுக்கும் தோளுக்குயர்ந்த மூன்று பிள்ளைகள். இந்த வாடகை அந்த குடும்பத்திற்காகத்தான். அது  பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அது  தடைபடக்கூடாது என்றே உடன் புதுப்பித்தேன். 

வாடகை ஒப்பந்தம் முடிந்து வாடகை வாங்கி அவனிடம் கொடுத்துவிட்டு இதோ நான்  சிங்கப்பூருக்குப் பறந்துகொண்டிருக்கிறேன். 

ஓராண்டு முடிந்துவிட்டது. ஊருக்குப் போகவேண்டும்.அடிமேல் அடிபட்டுமா புத்திவரவில்லை என்று கேட்காதீர்கள். அடித்தே வளர்த்தாலும் அம்மா அம்மாதானே. வெறுக்கமுடியுமா? ஊர்  என்றதும் அம்மா ஞாபகம்தான்  வருகிறது. எனக்கு என்னமோ ஊர் வேறு அம்மா வேறாகத் தெரியவில்லை என்ன செய்ய?

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationதமிழக எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்புவெயிலில் வெளியே
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    R.jayanandan says:

    ஊருக்கு போக வேண்டும் , மனதின் ஆழமான ரணங்களின் வெளிபாடு. என்னதான் உயரப்பறந்தாலும், சொந்த, பிறந்த மண்ணின் புழுதியில் காலடி பதிக்க மனம் படும் பாட்டை, ரஜுத் பதிவு செய்த விதம், உண்மையான சோகத்தை கிளறி விடுகின்றது.

    ஜெயானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *