ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 4

This entry is part 3 of 3 in the series 19 நவம்பர் 2023

பஸ்ஸில் அமர்ந்த கையோடு பையில் வைத்திருந்த சிறு நோட்புக்கை எடுத்து அன்று அலுவலகம் சென்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசித்து எழுத ஆரம்பித்தான். 

தனது இருப்பின் தன்மையில்தான் அதன் பொறுப்புணர்ச்சியில்தான் அலுவலகத்தின் சீரான இயக்கமே உள்ளதாய்த் தோன்றியது. 

சற்றே நெகிழ விட்டால் ஒரேயடியாய் நெகிழ்ந்து தளர்ந்து முடமாகி ஸ்தம்பித்து விடுகிறது.

தான் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையில்தான் அலுவலர் நிம்மதியாய் முகாம் செல்கிறார். திட்டப்பணிகளைக் கவனமாய்க் கண்காணிக்க முடிகிறது. அந்த வகையில் தனது பங்கு மிக அதிகம். 

“நீங்க இந்த ஆபீஸ்ல இருக்கீங்க என்கிற நம்பிக்கையிலேதான் நானே இங்கே வந்தேன். nஉறட் குவார்ட்டர்ஸ்லயே உங்களைப்பற்றி நிறையச் சொன்னாங்க…நீங்க கவலையே பட வேண்டாம்னாங்க. அந்த திருப்திதான் எனக்கும்…”

– இது வெறும் மெப்பனைக்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல என்பதை அதிகாரியின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவர் தன் கைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தில் நம்பிக்கை ஒளி படர உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய போது புரிந்து கொண்டான். 

– ஆபீஸைப் பற்றி நீங்க கவலையே பட வேண்டாம். அதனுடைய முழுப் பொறுப்பு என்னுடையது. ஆனால் திட்டம் சம்பந்தப்பட்ட அறிக்கைகள், புள்ளி விபரங்கள், அனுப்புறபோது என்னோடு செக்ஷன் ஆபீசர்ஸ் ஒத்துழைக்கணும். அப்பத்தான் அதையும் என்னால் சரியா வச்சுக்க முடியும். நான் எது கேட்டாலும் கேட்கிற டயத்துக்கு  எனக்குக் கொடுத்து உதவணும். அப்பத்தான் கன்சாலிடேட் பண்ணி தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப முடியும். சுருக்கமாச் சொன்னா அலுவலகத்தையும் அலுவலக நடைமுறைகளையும் மதிக்கத் தெரியணும். இதே அலுவலகத்துக்கு நாளைக்குப் பதவி உயர்விலே அவங்கள்ல யாராவது அதிகாரியா வந்து உட்காரலாம். அது வேறே. ஆனா இன்றைக்கு  அவுங்க செக்ஷன் அலுவலர்கள்தான்ங்கிறதாலே ஆபீஸ் நடைமுறைக்கு ஒத்துழைக்கிறதுதான் முறை. நான் இப்படிச் சொல்றது உங்களுக்குக் கூடக் கொஞ்சம் சங்கடமா இருக்கலாம். ஆனா நீங்க என் மேலே வச்சிருக்கிற நம்பிக்கையை நான் காப்பாத்தியாகணுமில்லையா? அதுக்காகச் சொல்றேன். தயவுசெய்து தவறா நினைச்சுக்காதீங்க…

தன்னுடைய பேச்சில் அவருக்கே கொஞ்சம் பயம் வந்திருக்கிறதோ என்பதுபோல் இருந்தது அவரது முகபாவனை. 

அவர் பயப்பட வேண்டும் என்பது இவனது விருப்பமல்ல. அது தன் மீது ஏற்பட்ட பயமுமல்ல. தனது சின்சியாரிட்டியின் மீது தனது ஒழுக்கத்தின் மீது ஒரு அலுவலகத்தை கௌரவமாக நடத்திச் செல்ல, தான் கொண்டிருக்கும் அனுபவ பலத்தின் மீது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பயம் என்றே தோன்றியது. 

“ஓ.கே. மிஸ்டர் கணேசன்…உங்களுடைய பேச்சு எனக்கு முழு நம்பிக்கையைத் தருது…ப்ரொஸீட்…”- சொல்லியவாறே கைகளைக் குலக்கிய அலுவலகத் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய்த்தான் இன்றுவரை இருந்து வருகிறான் கணேசன்.  

“சார்…ஜங்ஷன் ஸ்டாப்…இறங்கலியா….?”

-கண்டக்டரின் உசுப்பலில் சட்டென்று நினைவுக்கு வர வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். 

இருபறமும் நிதானித்துப் பார்த்துவிட்டு சாலையைக் குறுக்கே கடந்தான். அன்றொருநாள் இந்த நிதானமின்றி ஏதோ நினைப்பில் கடக்க முயன்று அடிஎடுத்து வைக்க முனைந்தபோது ஒரு ஆட்டோ சட்டென்று அடித்துக் கீழே தள்ளும் வகையில் நெருங்கி, உரசிச் சென்றதை நினைத்தான். அன்று அடிபட்டிருந்தால் நிச்சயம் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதி ஊனப்பட்டிருக்கும். நினைத்தபோது மனசு நடுங்கியது. 

இயற்கையான மரணம் என்பதோடு, இன்று விபத்துக்கள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமான நிகழ்வாகவே மாறிப்போய்விட்டது என்று தோன்றியது. 

சாலையைக் கடந்து ஜங்ஷன் வெளி ப்ளாட்பார்ம் பகுதிக்கு வந்தபோது வாசலில் இருக்கும் விநாயகர் கோயில் கண்ணுக்குப்பட்டது. விடிகாலையில் அங்கு ஒலி பரப்பப்படும் ஜேசுதாஸின் கர்நாடக இசைப் பாடல்கள் இவன் கவனத்தைப் பெரிதும் கவரும். ஒரு நிமிஷம் நின்று கேட்டு விட்டுப் போவான். மனதை இதமாக்கும் குரல் வளம். 

“Nஉறமநாதபாகவதரின் இசையின் மகத்துவம் அறியாமல் பேசுகிறாய்…” என்ற திருவிளையாடல் வசனம்தான் இவனுக்கு நினைவுக்கு வரும். அந்த மகத்துவம் என்ற வார்த்தையின் மகத்துவம் இவனை ரொம்பவும் ஆச்சரியப்படுத்தும். 

ஆற, அமர இருந்து ரசிப்பதற்கு உலகில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று படிப்பது. அதற்கென்று அதிகமான நேரம் ஒதுக்கப்படுவது – தான் பதவி உயர்வு மாறுதலில் வெளியூருக்கு இம்மாதிரிப் பயணம் மேற் கொள்ளும் இந்தக் கால கட்டம்தான். ரயிலில் நிறையப்படிக்க நேரம் கிடைக்கிறது. 

எண்ணியவாறே ஜங்ஷனுக்குள் நுழைந்தவன் ஏழாவது ப்ளாட்பாரம் செல்வதற்காய் மாடிப்படி ஏறினான். ஐம்பது வயதைத் தாண்டிய பொழுதில் தான் அவ்வாறு முச்சிரைக்காமல் படியேறுவது இவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. 

“ஆள் அன்றைக்குப் பார்த்த மாதிரியே ஒல்லியா, அதே சைசுல, அப்படியே இருக்கீங்களே?” – வெகுநாள் கழித்து ரயிலில் சந்தித்த நண்பர் பிரகாசம் இப்படி ஆச்சரியப்பட்டார். அதுநாள்வரை தினசரி வாக்கிங் போன பழக்கமும், சிறிய சிறிய உடற்பயிற்சிகளும் அவனை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இய ங்க வைத்திருப்பதை நினைத்தபோது பெருமையாயிருந்தது. 

வாழ்க்கையில் ஆரோக்கியம்தான் முக்கியம். உடல் ஆரோக்கியமாய் இருந்தால் மனசும் ஆரோக்கியமாய் இருக்கும். உடல் தெம்போடு திடமாய் இருந்தால்தான் மனசும் திடமாய் இருக்கும். நண்பர்களோடு பேசிக் கொண்டே பயணிக்கையில் இப்பேச்சு அடிக்கடி இடம் பெறுவதை நினைத்துக் கொண்டான். 

ஏழாவது ப்ளாட்பாரம் மாடிப்படிகளில் இறங்கி வழக்கம் போல் இரண்டாவது காரேஜில் போய் துண்டை விரித்து புத்தகங்களைப் போட்டு நண்பர்களுக்கு இடம் பிடித்து வைத்தான். 

“இந்த ரயிலில் புதுப் புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினது நீங்கதான் சார்…வெறுமே அரட்டை அடிச்சிட்டு வர்றவங்க மத்தியிலே படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தின பெருமையும் உங்களுக்குத்தான்…இப்படிப்பட்ட பெயர்ல எல்லாம் புத்தகங்கள், பத்திரிகைகள் இருக்குங்கிறது நீங்க வந்த பின்னாடிதான் எங்களுக்கே தெரியும்.  – சொல்லி விட்டு ஆர்வமாகப் படித்தனர் பலர். சிலர் வாங்கிக்கொண்டு அவரவர் இருக்கைக்குச் சென்றனர். மாலையில் திரும்புகையில் கொடுத்தனர். எல்லோரிடமும் படிக்கும் பழக்கம் அடியொட்டிக் கிடப்பதுவும், அதைக் கிளறி விடுவதுதான் முக்கியம் என்றும் இவனுக்குத் தோன்றியது. 

“வணக்கம் ஸார்…” – குரல் கேட்டு ஜன்னலுக்கு வெளியே நின்றவரைப் பார்த்து பதிலுக்கு வணங்கினான் கணேசன். 

“நான் உறபிபுல்லாவோட பையன்…” – இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் மதிக்கத்தக்க அந்த இளைஞன் இவனைப் பார்த்து இப்படிக் கூறியதும், ஒரு மெல்லிய அதிர்வு பரவுவதை உணர்ந்தான். சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற உறபிபுல்லா என்ற பியூன் தனது தந்தை என்றும் அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டதாகவும், அந்த இளைஞன் கூறியபோது அடுத்தாற்போல் கவனமாக ஒரு பிரச்னையைத் தான் எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை அக்கணமே உணர்ந்தான் கணேசன். 

Series Navigationபிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *