நதியின் இறுதி நாள்

இதோ நெருக்கத்தில் கடல்

அன்று மாட்டுக்கு  விலை

இன்று தோலுக்கு   விலை

விழுந்த தேங்காய்

தென்னையைப் பார்த்து அழுகிறது

இனி எல்லா நாளுமே 

ஞாயிறுதான்

மான்களை  விரட்டிய புலி

இன்று  ஈக்களை விரட்டுகிறது

குலை தள்ளியது சேய்வாழை

சாயத் தயாராய் தாய்வாழை

தீர்ப்பு எழுதப்படுகிறது

இனி வாதாடி என்ன பயன்

இறுதி அத்தியாயத்தின் இறுதி வரி 

காத்திருக்கிறது முற்றுப்புள்ளி

கொம்புகள் சாய்ந்தன

தள்ளாடுகிறது கொடி

கனரகக் கப்பல்

காகிதக் கப்பலானது

வந்துவந்துபோன மூச்சு

வந்தனம் சொல்கிறது

எண்ணை தீர்ந்தது

இதோ திரியின் கடைசி ஒளி

ஆயுத எழுத்தின் 

புள்ளிகள் உதிர்கின்றன

அமீதாம்மாள்