குரு அரவிந்தன்.
47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.
கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நூல்களைப் பார்வையிட்டும், வாங்கியும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டு வாசகர்களைச் சென்றடைய இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. அரங்கு எண் 604, 605 இன் முதல் விற்பனையாகிய ‘தங்கையின் அழகிய சினேகிதி,’ ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ ஆகிய நூல்களைப் பிரபல கவிஞர் இந்திரன் அவர்கள் கவிஞர் மு. முருகேஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்கள் தொகுத்து வெளியிட்ட ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூல் பற்றி தமிழ்நாடு, கரைக்குடி முனைவர் கரு. முத்தய்யா அவர்கள் எழுதிய ‘திறனாய்வுக்கோர் திறனாய்வு’ என்ற கட்டுரையின் சுருக்கத்தை இங்கே தருகின்றேன்.
“மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்” ஒரு சிறந்த திறனாய்வு நூல் என்பதில் ஐயமில்லை. இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் படைப்புகளைத் தேர்ந்த திறனாய்வாளர்கள் அலசி ஆராய்ந்து எழுதிய இருபத்தொரு திறனாய்வுக் கட்டுரைகளைக் கொண்டது இந்நூல்.
ஒரே எழுத்தாளரின் சிறுகதை, குறுநாவல், நாவல் இன்னும் பிற படைப்புகளைத் தரம் பிரித்துக்காட்டும் தனிச் சிறப்புடைய திறனாய்வுக் கட்டுரைகள். குரு அரவிந்தனின் சிறுகதை தொகுப்புகள், குறு நாவல்கள், நாவல்கள் என்று முழுமையாகத் திறனாய்வு செயப்பெற்றுள்ளன. இதைவிட வேறு சில படைப்புக்களும் (கட்டுரைகள், குழந்தைகளுக்கான பாடல்கள் போன்றவை) அறிமுகப் படுத்தப்பெற்று ஆராயப்பட்டுள்ளன.
“எங்கே அந்த வெண்ணிலா” என்ற குறுநாவல் காதலை மையமாகக் கொண்டு, பாரதியின், காதல் காதல் காதல் என்ற பாடலின் கருத்தைச் சித்திரமாக வரைந்து இருக்கிறது என்று கூறுகிறார் தேனி சீருடையான்.
“உறங்குமோ காதல் நெஞ்சம்” என்ற குறுநாவல் இலங்கையில் இராணுவ முகாம்களில் நடைபெறும் வெறியாட்டங்களை விரிவாக விளக்கும் ஓர் படைப்பு என்று விளக்குகிறார் முனைவர் இரா. மஞ்சுளா.
குரு அரவிந்தனின் சிறுகதைகளைத் திறனாய்வு செய்யும் கட்டுரைகள் பல செய்திகளை வெளிப்படுத்துகின்றன. ‘இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி’ என்பது நாம் அறிந்த ஒன்று. அந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் உலகம் எப்படி இயங்கியது (இயங்காமல் நின்றதோ?) – அப்போது சில மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த சிக்கல்களும், அவற்றின் விளைவுகளும் ஆவணமாக்கப்பெற்ற சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு “யாதுமாகி நின்றவள்” எனும் தொகுப்பு என்று விளக்குகிறார் முனைவர் ஆதிரா முல்லை.
“நின்னையே நிழல் என்று” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் இலங்கையின் இனப் போர்க்கால நிகழ்வுகளை மையப்படுத்தி எழுத்தப்பெற்ற கதைகளையே பெரும்பாலும் கொண்டிருக்கும் ஒரு தொகுப்பு என்பதை விரிவாக உணர்த்துகிறார் பொன் குமார்.
“நீர்மூழ்கி.. நீரில் மூழ்கி” எனும் சிறுகதைத் தொகுதியில் அறிவியல் சார்ந்த கதை இடம் பெற்றிருப்பதையும், அவ்வாறான அறிவியல் சார்ந்த கதையை அழுத்தமாகக் குரு அரவிந்தன் எழுதியிருக்கும் திறத்தையும் விளக்கிக் கூறுகிறார் கோ லீலா.
குரு அரவிந்தனின் வெளிநாட்டுக் கதைகள் தொகுப்பில் இடம்பெறும் சிறுகதைகள் எவ்வாறு கதை இடம் பெரும் அந்தந்த நாட்டின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் மையமாகக் கொண்டு கண்ணாடி போல் வெளிப்படுத்துகின்றன என்பதைப் புள்ளி விவரங்களோடு தெளிவாக்கியிருக்கிறார் முகம்மது நூர்தீன் பாத்திமா நிசாதா.
சிறந்த திறனாய்வின் இலக்கணம் என்ன? குறிப்பிட்ட திறனாய்வு எந்த இலக்கியத்தைத் திறனாய்வு செய்கிறதோ, அந்த இலக்கியத்தை எழுத்தாளரின் மூலப்படைப்பாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் அத்திறனாய்வைப் படிக்கும் வாசகரின் மனத்தில் தூண்டப்பபட வேண்டும் என்பதே ஆகும்.
அந்த வகையில் இந்த 21 திறனாய்வுக் கட்டுரைகளில் பெரும்பாலானவை குரு அரவிந்தனின் படைப்புகளிப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தை, தாகத்தை என்னுள் தூண்டிவிட்டுள்ளன என்பது நிதர்சனமான உண்மை.
“தி. ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பித”ழாக வெளிவந்த “இலக்கிய வெளி” இதழில் குரு அரவிந்தனின் “ஆறாம் நிலத்திணைக் காதலர்” என்ற சிறுகதையைப் படித்தேன்.
மு. முருகேசின் தொகுப்பு நூலாகிய திறனாய்வு நூலைப் படித்தவுடன், நானும் திறனாய்வு எழுதவேண்டும் என எனக்குத் தோன்றியது.
இச்சிறுகதையில் என் மனத்தைத் தொட்டவை 3 செய்திகள்:
1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் தமிழ் இலக்கணம் கூறும் ஐந்திணைகளோடு “பனிப்புலம்” எனும் ஆறாம் திணை சேர்க்கப்படவேண்டும் என்ற செய்தி
2. “மலரினும் மெல்லிது காமம்” என்ற வள்ளுவரின் கூற்றுக்கு இணங்க மிக மிக மென்மையாக கூறப் பெற்றிருக்கும் ராதையின் காதலின் தோற்றமும் வளர்ச்சியும்
3. கதையின் இறுதிப் பகுதியில் பின்புலமாகக் காட்டப்பெறும் இலங்கையின் போருக்குப் பிந்திய நிலை
போர் ஓய்ந்தாலும் சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படும் அவலம் நம் உள்ளத்தை உருக்குகிறது.
கபிலரின் “ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகினோடு” கனடாவின் சீஹல் பறவையை ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தும் குரு அரவிந்தனின் இலக்கியப் பதிவு பாராட்டத்தக்கது.
காதலன் திரும்பி வருவானா? என்ற கேள்விக்கு “நம்பிக்கைதானே வாழ்க்கை” என்னும் பதிலைத் தரும் குரு அரவிந்தன் ஒரு நம்பிக்கையாளராகத் திகழ்கிறார்.
சிறந்த திறனாய்வுக் கட்டுரைகள் வாயிலாகக் குரு அரவிந்தன் என்ற எழுத்தாளரின் சிறந்த ஆளுமையைப் படிப்போர் மனத்தில் பதியவைத்த திறனாய்வாளர்கட்கும், அத்திறனாய்வுகளைத் திரட்டித் தொகுத்த மு. முருகேசிற்கும், எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கும் இலக்கிய உலகில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பது உறுதி, பாராட்டுக்கள்.
- சென்னை புத்தகக் கண்காட்சி – 2024
- புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022
- புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 – யுகபாரதி உரை, கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
- புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 – இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், இரா.காமராசு
- அசதா, காளிங்கன் உரை | புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022
- இந்திய விண்ணுளவி ஆதித்தியான் -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத்
துவங்கியது