கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்

This entry is part 2 of 4 in the series 17 மார்ச் 2024

கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்.

குரு அரவிந்தன்.

கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் – சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவில் தனது பவழவிழாவைக் கொண்டாடியிருந்தார். திருமண பந்தத்தின் காரணமாக குரும்பசிட்டியைப் புகுந்த வீடாக்கிக் கொண்டார். இலங்கையில் ஆசிரியராகவும், அருனோதயாகல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியவர். உயர் கல்வியை தமிழ்நாட்டில் பெற்ற இவர், இலங்கையில் நாடக கல்வி சார்ந்த டிப்புளோமா பட்டமும் பெற்றிருந்தார்.  1988 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வரும் இவர் நாடகம், கவிதை, சிறுகதை, சமயம் நிகழ்ச்சிகள் என்று எமது இனத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்பணித்தவர்.  

இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருட்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர் போன்ற பல பட்டங்களைச் சமூக நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன. இன்று பல நிகழ்ச்சிகளில் தமிழில் இசைக்கப்படும் கனேடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர் இணையத் தலைவராக அவர் இருந்த போது, நான் செயலாளராக பணியாற்றினேன். சுமார் ஆறு வருடங்கள் அவர் தலைவராகப் பணியாற்றினார். எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ‘அரும்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் அப்போது தொகுத்து வெளியிட்டிருந்தார். அதன் பின் திரு சின்னையா சிவநேசன் தலைவராக இருந்த போது, செயலாளராக இருந்த நான் முதன் முதலாக மரபுக்கவிதை பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். கவிஞர் கந்தவனம் அவர்களும், பண்டிதர் அலெக்ஸாந்தர் அவர்களும் மரபு கவிதையைக் கற்பித்தார்கள். அதில் 12 பேர் பங்கு பற்றினார்கள். மறைந்த செல்லலையா மஸ்டரும் அந்த வகுப்புகளில் பங்குபற்றியிருந்தார். தற்போது மரபுக் கவிஞர்களாக இருக்கும் நண்பர் சண்முகராஜா, இராஜலிங்கம், த.சிவபாலு, சகோதரி பவாணி தர்மகுலசிங்கம், அனலை இராசேந்திரம், பகீரதன் சகாதேவன் ஆகியோர் எங்களுடன் அப்போது மரபுக்கவிதை கற்றார்கள்.

ஆசிரியரின் நூல்களாக 110 ரூபாய் (1954), இலக்கிய உலகம் (1964), ஏன் இந்தப் பெருமூச்சு (1965), கூனியின் சாதனை (1966), கீரிமலையினிலே (1969), நுணாவிலூர் (1971), நல்லூர் நாற்பது (1971), பாடுமனமே (1972), உய்யும் வழி (1972), பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (1972) கவியரங்கில் கந்தவனம் (1972), இலங்கையில் ஆசிரியத்தொழில் (1977), விநாயகப்பா (1993), ஒன்றுபட்டால் (1994), மணிக்கவிகள் (1994), இயற்கைத்தமிழ் (1995), எழுத்தாளன் (1995), முத்தான தொண்டன் (1995), புதிய சைவ விநாவிடை (1997), தங்கம்மா நான்மணி மாலை (1997). பத்துப்பாட்டு (1998). ஆறுமுகம் (1998), ) சிவபுராணத் தத்துவம் (1998), கனடாவில் சைவசமயம் (2000), அது வேறுவிதமான காதல் (2001), சிவ வழிபாடு (2001), புதிய சைவ வினாவிடை- 2 (2001), கந்தன் கதை (2002), ஓ கனடா (2002), வரிக்கவிகள் (2002), குருவழிபாடு (2002), விநாயகப் பெருமானும் அகத்தியரும் (2003), முருகப்பெருமானும் அவ்வையாரும் (2003), விநாயக வெண்பா (2004) விநாயக விருத்தம் (2004), பொங்கு தமிழ் (2005), கவிதை மரபு (2005), தென்னகத்தில் என்னகத்தார் (2007), பாவாரம் (2007) எனத் தொடர்ந்தது. கூடவே பல தொகுப்பு நூல்களின் வெளியீட்டிலும் இவர் அக்கறை காட்டி வந்தார்.

இவரது ஒரு நூலுக்கு நான் அணிந்துரையும் எழுதியிருக்கின்றேன். எழுத்தாளர் இணையத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிறைவின்போது சர்வதேச சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி நூலாக வெளியிட்டிருந்தோம். அதில் கவிஞர் கந்தவனம் அவர்களின் வாழ்த்துரையை, அவரைக் கௌரவிக்கும் வகையில் அவரது படத்துடன் பின் பக்க அட்டையில் பதிவு செய்திருந்தேன்.

கவிஞர் கந்தவனம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, அவரது குடும்பத்தினருடன் இணைந்து நாங்களும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!

Series Navigationகண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைநூல்களின் சங்கமம் – புத்தகக் கண்காட்சி
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *