‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி முகவரியும் அழகாக இருக்கலாம்.
மாப்பிள்ளை குரு என்கிற குருராஜ், கணினி மென்பொருள் பொறியாளர். இரண்டு ஆண்டுகளாக அவன் இருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில். தனி வீடு. தனியாகவே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன். இப்போது மீராவோடு வாழப்போகிறான்.
திருமணம் முடிந்து குருவும் மீராவும் ஹூஸ்டன் வந்துவிட்டார்கள்.
தினசரி நாட்காட்டியில், மாதத்துக்கு ஒரு தேதியைக் கிழிப்பதுபோல் இருக்கிறது. வினாடிமுள் கூட மெதுவாகவே நகர்கிறது. இதுதான் அமெரிக்காவா? தாக்குப்பிடிப்பாளா மீரா? 2 டிகிரி குளிர் வெளியே. 24 டிகிரி செயற்கைவெப்பம் உள்ளே. வீடே ஒரு வெப்பப் பதனப்பெட்டி. ‘சாளரங்கள் திறக்கட்டும். சந்தனக் காற்று வீசட்டும்’ என்ற கதையெல்லாம் இங்கு நடக்காது. அது என்ன வீட்டுச் சாளரங்களா? விமானத்தின் சாளரங்களா? வெளிக்காற்றும், உள்காற்றும் கைகுலுக்கவே முடியாது. கைகுலுக்கினால், உள்ளே குடியிருக்க முடியாது. நினைத்த மாத்திரத்தில் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அடுத்த தெரு ஷீலாவையோ, மாலாவையோ சந்திக்கும் கதையெல்லாம் நடக்காது. வெளியே செல்வதென்றால் கிட்டத்தட்ட ஆம்ஸ்ட்ராங் மாதிரிதான் செல்லவேண்டி யிருக்கிறது. பெரிய அடர்ந்த ஜாக்கெட், அதேமாதிரி தொப்பி, கையுரை, காலுரை இல்லாமல் வெளியே தலைகாட்ட முடியாது.
குரு இரண்டு ஆண்டுகள் தனியாகவே வாழ்ந்தவன். 7 மணிக்கு எழுவான். ரொட்டுத்துண்டுகளை வாட்டுவான். பழக்கூழையும் வெண்ணையையும் தடவி, இரண்டை சாப்பிட்டுவிட்டு இரண்டை மீராவுக்கு வைத்துவிடுவான். காப்பி போட்டுக் கொள்வான். மீரா அப்போதுதான் விழித்து கூடத்துக்கு வருவாள்.
‘ஹை மீரா இன்னிக்கு 7 மணிக்குத்தான் வருவேன். முக்கியச் சேதி இருந்தா பேசு. தொலைபேசியில் எப்போதும் இருப்பேன். ஏதும் சாமான்கள் வேணும்னா வாடஸ்அப் செய்.’
வாசலில் நிற்கும் ஹோண்டா காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான். ஒரு வீட்டுக்கு குறைந்தது ஒரு கார். இருந்தே ஆகவேண்டும். அமெரிக்காவில் கால் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம். கார் இல்லாமல் வாழவே முடியாது. பேருந்து, ரயில் வசதியெல்லாம் நம் நேரத்துக்கு நாம் இருக்கும் இடத்தில், எதிர்ப்பார்க்கவே முடியாது. 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளிவழிகள். தமிழ் ஒளிவழி உட்பட. எதையும் முழுசாய்ப் பார்க்கும் பொறுமை இல்லை. எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்துவிட்டு, அந்த சோபாவிலேயே சாய்ந்துவிடுவாள் மீரா. பிறகு ஓரிரு மணிநேரம் சமையல். மீண்டும் என்னசெய்வதென்றே தெரியாத பூச்சி பறக்கும் அமைதி. எப்போது குரு வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு, தொலைபேசி அழைக்காதா என்று ஏங்கிக்கொண்டு,
சே! இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே. இனி ஒரு நாளும் இருக்கமுடியாது. இன்று குருவிடம் எப்படியும் சொல்லிவிடவேண்டும். ‘என்னால் இனிமேலும் இருக்கமுடியாது. என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள்’ என்று. அலைமோதினாள் மீரா.
பத்தாவது தடவையாக அவள் இப்படி முடிவு செய்தாலும், அந்த வார்த்தைகள் நாவின் நுனிக்கு வரவே மறுக்கிறது. மீரா கட்டடத்துறையில் பொறியியல் பட்டதாரி. பல பேரின் வாழ்க்கைப் போராட்டங்களை சொல்லக் கேட்டிருக்கிறாள். என்ன செய்யவேண்டும் என்று யாரும் அவளுக்குச் சொல்லத் தேவையில்லை. குருவிடம் சொல்லிவிடவேண்டும் என்று அவள் நினைத்தபோதெல்லாம், அடுத்துத் தோன்றும் பிரமாண்டமான கேள்வி ‘பிறகு?’
மீரா ஊரிலேயே இருப்பதா, குரு அமெரிக்காவிலேயே இருப்பதா? அது என்ன வாழ்க்கையா? ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அந்தச் செடிக்கு ஒளியாக அவனும் நீராக அவளும் இருந்தே ஆகவேண்டுமே! இல்லாவிட்டால் அது வெம்பிவிடுமே.
ஓயாத மனப்போராட்டங்கள். அவளின் அறிவு, ஆறுதல் சொல்கிறது. கொவிட் கூட ஒரு முடிவை எழுதிக்கொண்டுதானே வந்தது. ‘நமக்கும் ஒரு நல்ல முடிவு வரலாம். அது தானாக வரட்டுமே.’
அன்று மாலை குரு ஏகப்பட்ட மகிழ்ச்சியோடு வந்தான்.
‘மீரா, இன்று சத்யாவும், குந்தவையும் வருகிறார்களாம். நாளை மாலை அவர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள். குந்தவை வந்துவிட்டால், உன் தனிமை உன்னை வதைக்காது. ‘
தான் இப்படி உடைந்து உடைந்து ஒட்டிக்கொள்வதை குருவும் அறிந்துதான் இருக்கிறான் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.
அடுத்த நாள் மாலை 7 மணி. சத்யாவும் குந்தவையும் வீட்டுக்கு வந்தார்கள். இந்த சத்யாவைப் பற்றி குரு அடிக்கடி சொல்லியிருக்கிறான். அவன் இல்லாவிட்டால் தான் அமெரிக்காவில் காலூன்றவே முடிந்திருக்காதாம். இருவரும் ஒரே அலுவலகத்தில் ஒரே பிரிவில்தான் வேலை செய்கிறார்கள். ‘டே மச்சான் ஊரு என்ன சொல்லுது?’ என்று இருவரும் சாப்பாட்டு மேசைப் பக்கம் ஒதுங்கிக் கொண்டார்கள். குந்தவையும், மீராவும் கைகளைப் பற்றியபடி, தொலைக்காட்சிக்கு எதிரே அந்த சோபாவிலேயே அமர்ந்தார்கள். அப்பாடா! ஓர் உண்மையான முகம் எதிரில் இருப்பது எவ்வளவு ஆறுதல். குந்தவைதான் பேச்சை ஆரம்பித்தாள்.
‘என்ன மீரா, அடிக்கடி வாட்ஸ்அப்ல உங்க முகத்தெ பாத்திருக்கேன். எப்படி இருக்கீங்க. ஒரு நாள் போறது ஒரு வருசம் போறதுமாரி இருக்குமே. சரியாக வந்து மாட்டிக்கொண்டோமோ, ஊருக்குப் போய்விடவேண்டியதுதான் என்று தோணுமே’
மீராவுக்கு தலைசுற்றும் ஆச்சரியம். இது என்ன… நான் சொல்லவேண்டியதையெல்லாம் அவரே சொல்கிறார். குந்தவையே தொடர்ந்தாள்.
‘கடைக்கெல்லாம் போறோமே, எத்தனை தமிழ்க் குடும்பங்களெப் பாக்கிறோம். எல்லாருமே இப்படி ஒரு பெரிய போராட்டத்தெ தாண்டித்தான் வந்திருக்காங்க மீரா. வீட்டவிட்டு நீங்க வெளிய வந்தா இடதுகைப் பக்கம் கடைசியிலெ சிவப்பா கொத்துக்கொத்தாப் பூ தலைகீழாத் தொங்கும் ஒரு பெரிய மரம் இருக்கும். அதுதான் எங்க வீடு. சாயந்த்தரமா நாலு மணிக்கு வந்துருங்க. நிறைய பேசுவோம். கிட்டத்தட்ட நீங்க அந்தப் போராட்டத்தெ தாண்டிட்டீங்க. ஹ..ஹ…’
அடுத்த நாள் 4 மணி. அந்த சிவப்புப்பூ மரத்தை அடைந்துவிட்டாள். அழைப்பு மணியைத் தொட்ட மறு விநாடியே கதவு திறக்கப்பட்டது. இருவரும் உள்ளே சேர்ந்து நடந்தார்கள். டிலி ஓடிவந்து மீராவைச் சுற்றிச்சுற்றி மோப்பம் பிடித்தான். மீரா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, முகத்தை இருகைகளாலும் அழுத்தமாக மூடிக்கொண்டாள். இருதயம் வேகமாகத் துடித்தது. டிலி என்பது குந்தவை வளர்க்கும் நாயின் பெயர். ஒரு நாயை இவ்வளவு கிட்ட மீரா பார்த்ததே யில்லை. நாயென்றால் ஒரு பயம் அவளுக்கு எப்போதும். குந்தவை அவள் கைகளைப் பற்றி மெதுவாக இழுத்தாள். டிலி எப்போதும்போல், குந்தவை உட்காரும் இடத்தருகே படுத்துக்கொண்டது.
‘இந்த டிலி இல்லேன்னா பொழுது போவது ரொம்ப சிரமம் மீரா. உங்கள மோப்பம் பிடிச்சா, உங்களால எனக்கு எந்த ஆபத்தும் இல்ல. நீங்க என் தோழிதான் என்பதெல்லாம் அவனுக்கு புரிஞ்சிரும். இனிமே பாருங்க அவனும் உஙுகளுக்கு நண்பனா ஆயிடுவான். பக்கத்தில் ஒரு பூங்கா இருக்கு. வாங்க அங்கெ போவோம்.’
இருவரும் புறப்பட்டார்கள். குந்தவையோடு டிலியும் வந்தான். பத்தடி சுற்றளவில் அவனால் மேயமுடியும். கழுத்து வார்ப்பட்டையோடு சேர்ந்த அந்தக் கயிறு குந்தவையின் பிடியில்.
புல்தரைகளில் முதுகை நிமிர்த்தி, உயரத்தைக் குறைத்து அந்த டிலி உச்சா போனான். செடிகளின் வேர்களில் காலைத் தூக்கி உச்சா போனான். அந்தப் பூங்காவை நெருங்கிவிட்டார்கள். ஓர் இலக்கை சுற்றிச்சுற்றி வந்து டிலி முதுகை வளைத்து பின்னங்கால்களை மடக்கி, ‘கக்கா’ போனான். அதற்காகவே கொண்டுவந்த ஒரு நெகிழிப்பைக்குள் கையை நுழைத்து, அதை கூலாங்கல்லைப் பொறுக்குவதுபோல் பையோடு பொறுக்கி, உள்ளே இழுத்து, பையைத் திருப்பி முடிச்சுப்போட்டு அதற்காகவே இருக்கும் ஒரு தொட்டியில் போட்டாள் குந்தவை.
‘என்ன யோசிக்கிறிங்க மீரா. அவன் பல இடங்களில் உச்சா போவது ஏன தெரியுமா. இந்தப் பேட்டை அவனுக்குச் சொந்தமாம். சக நாய்களுக்கு அதை அறிவிக்கும் கையெழுத்துதான் அந்த உச்சா. ஹ..ஹ.. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதையும் அந்த மோப்பம் அறிவிக்குமாம். அதோ அங்கே ஒரு வெள்ளை நாயுடன் போகிறாரே, அவர் யார் தெரியுமா.. அவர் ஒரு நீதிபதி. அவரும் கக்காவைப் பொறுக்கத்தான் வேண்டும். அப்படி ஒரு ஈடுபாடு வளர்க்கும் நாயின்மீது ஏற்பட்டுவிடும் மீரா. அப்பா, அம்மா, சகோதரங்கள், நட்புகள் எல்லாமே ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்தான் மீரா.இந்த நாய் அப்படியல்ல. உங்களிடம் வந்துவிட்டால், அதற்கு நீங்கள்மட்டும்தான் உலகம். உங்களைச் சுற்றியே வரும். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டால் மனஉளைச்சலுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். எல்லாரும் இங்கு நாய் வளர்க்கிறார்கள். நாயோடு காலையும் மாலையும் நடப்பது அலுவலகம் போவதுபோன்ற இன்னொரு முக்கியமான வேலை ஹ..ஹ’
அந்தப் பூங்காவைத் தாண்டி ஓர் ஏரி உண்டு. அந்த ஏரிப்பகுதிக்கு வந்துவிட்டார்கள். ஏரியின் மத்தியில் தீவாக ஒரு பகுதி, வண்ணவண்ண பூச்செடிகளுடன். அங்கே சில வாத்துகள் எப்போது ஏரியில் இறங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தன.
டிலியைப் பார்த்ததும் சில வாத்துகள் அவசர அவசரமாக ஏரிக்குள் இறங்கி, டிலி இருக்கும் கரைக்கு வந்தன. கிட்டே வந்து மேலும் கீழும் தலையை ஆட்டியது. டிலியும் அதேபோல் செய்தான். பிறகு அவைகள் இறக்கைகளை விரித்து படபடவென்று அடித்துவிட்டு ஒரு சின்ன வட்டம் போட்டுவிட்டு அங்கேயே மிதந்துகொண்டிருந்தன. ஏதோ பேசிக்கொள்கிறார்கள். யாருக்குத் தெரியும்? எத்தனையோ பேர் வருகிறார்கள். டிலியிடம் மட்டும்தான் இந்த வாத்துகள் இப்படி தன் தோழமையைக் காட்டுகின்றன.
இரண்டு மாதங்கள் இந்த நட்பு இப்படியே தொடர்ந்தது. மீரா கர்ப்பமாகிவிட்டது ஒரு புதிய செய்தி. ஒரு நாள் குந்தவை சொன்னாள்.
‘நீங்கள் இப்போது கர்ப்பமாக இருப்பதால், இப்போது வேலை எதிலும் சேரவேண்டாம். நீங்களாவது பொறியியல் பட்டதாரி, நான் வெறும் இளங்கலை வேதியியல். எனக்கே வேலை கிடைத்திருக்கிறது. என்ன வேலை தெரியுமா? மூன்று வயதே ஆன மூன்று குழந்தைகளை காலை 9 லிருந்து மாலை 3 வரை பராமரிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு 1600 டாலர். நம்பமுடிகிறதா? நாளெக்கே கூட உங்களுக்கு வேலெ வாங்கமுடியும். ஆனா இப்ப வேணாம். குழந்தெ பிறந்ததும் வேலைல சேர்ந்துடுங்க. வேலை, கார், அலுவலகம், நட்புன்னு ஆயிட்டா, நீங்க அமெரிக்கப் பெண்ணாவே ஆயிருவீங்க. இப்போதக்கி நீங்களும் ஒரு நாய் வாங்கிக்கங்க. இங்கெ ஏக்கர் ஏக்கரா நிலங்களெ வாங்கிப்போட்டு மாட்டுப்பண்ணெ வச்சிருக்காங்க. அவுங்க ஜாதி நாய்களெ வாங்கி வளத்து அந்த குட்டிகளெ விக்கிறாங்க. டிலி ஒரு ஆஸ்திரேலியன் ஷெஃபர்ட் ஜாதி. இதேமாதிரி ஒரு குட்டியெ வாங்கிக்கங்க’
அன்று குரு வீட்டுக்கு வந்ததும், மீரா நாய்க்குட்டி வாங்கும் யோசனையைச் சொன்னாள். குரு பலமாகச் சிரித்தான்.
‘இது என் ரொம்ப நாள் ஆசை மீரா. நீ பயப்படுவாயோன்னுதான் நா சொல்லல. இப்ப உன் வாயிலேருந்தே வந்துருச்சு.ஹ..ஹ. நாளெக்கே வாங்கீருவோம்.’
குருவின் மீதுள்ள மதிப்பு மீராவுக்கு மேலும் கூடியது. ‘அவன் எனக்காகவே யோசிக்கிறான்’
அடுத்த நாள் சனிக்கிழமை. விடுமுறை. குரு, மீரா, சத்தியா, குந்தவை எல்லாரும் அந்தப் பண்ணைக்குப் புறப்பட்டார்கள். அதேமாதிரியான ஒரு ஆஸ்திரேலியன் ஷெஃபர்ட் இருந்தது. டிலி கருப்பு. வாய்ப்பகுதியும் காதும் வெள்ளை. இது வெள்ளை வாயும் காதும் கருப்பு. மீராவுக்கு பிடித்திருந்தது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.
எந்த நாய்க்கு பயந்தாளோ, இப்போது அவளுக்கே சொந்தமாக ஒரு நாய். சில பயங்கள் இப்படித்தான் திருப்பிப் போடப்படுகின்றன. மீராவுக்கு அமெரிக்க பயமும் அப்படித்தானோ?
தன் காலடியில் அந்த நாய்க்குட்டி படுத்திருப்பது தனக்கு புதிதாக ஒரு பாதுகாப்பு கிடைத்துவிட்டதுபோல் இருக்கிறது. அவளுக்கு ஒரு தம்பி பிறந்து ஒரு வயதைத் தாண்டும்போதே இறந்துவிட்டானாம். அவன் ரொம்ப அழகாக இருப்பானாம். அவனுக்கு ‘ஜான்’ என்று பெயர் வைத்தார்களாம். அவன் நினைவாக இந்த நாய்க்குட்டிக்கு ‘ஜானி’ என்று பெயர் வைத்தாள் மீரா
வீட்டுக்குள் எங்கே போனாலும் பின்னாலேயே போகிறான். தினமும் 4 மணிக்கு குந்தவை வீட்டுக்குப் போகும்போது, ஜானியோடுதான் போகிறாள். அந்த ‘கக்கா’ வேலையை குந்தவையைவிட அலட்சியமாகச் செய்கிறாள் மீரா. அந்த ஏரி வாத்துகளுக்கு இப்போது இன்னொரு நண்பன். ஜானியுடனும் அந்த வாத்துகள் வந்து பேசிவிட்டுப் போகின்றன. டிலியும், ஜானியும் சேர்ந்து போவது அழகாக இருக்கிறது.
பகல்வேலை முடிந்து படுக்கைக்குப் போனால், ஜானி வந்து அவள் படுக்கும் பக்கம் வந்து தரையில் படுத்துக்கொள்கிறான். இப்போது மீராவுக்கு ஏழு மாதம். அடிக்கடி இரவில் கழிப்பறை செல்லவேண்டி யிருக்கிறது. அவள் எழுந்தால், ஜானியும் எழுந்துவிடுகிறான். பின்னாலேயே வந்து கதவுக்கு வெளியே நின்றுவிடுவான். பிறகு மீராவோடு வந்து பழைய இடத்தில் படுத்துக் கொள்கிறான்.
‘நான் இப்போது கர்ப்பம் என்பதெல்லாம் ஜானிக்குத் தெரியுமா? எனக்கு இப்படி ஒரு அன்பு தேவை என்பது அவனுக்குப் புரியுமா? டிலி கூட குந்தவையிடம் இந்த அளவுக்கா அன்பைக் காட்டுகிறது?’ பல கேள்விகள் அவளுக்கு
ஒரு திங்கட்கிழமை காலை அறையிலிருந்து, கையில் ஒரு வெள்ளைச் சட்டையுடன் வந்தான் குரு.
‘என்ன மீரா, எத்தனெ தடவை சொல்லீருக்கேன். என் வெள்ளச் சட்டையோட உன் கலர் சுடிதாரெல்லாம் போடாதேன்னு. பார். காலரில் சிவப்புக்கறை. இன்னிக்கு நான் வெள்ளச்சட்டதான் போடணும். ‘
‘ரொம்ப சாரீங்க. ஒரு நிமிசத்துல குளோரக்ஸ் போட்டு கழுவித் தந்துர்றேன்.’
சொல்லிக்கொண்டே அவள் சட்டையை இழுக்க, ‘வேண்டாம். நா ஜாக்கெட் போட்டு மறச்சுக்கிறேன்’ என்று அவன் இழுக்க, ஜானி குருவை நோக்கி பாய்ந்தது. முன்னங்கால்களை அவன் தொடைமீது நிறுத்தி, வாயைப்பிளந்துகொண்டு, குருவின் முகத்தைப் பார்த்து ‘லொள்’ என்று உறுமிவிட்டு, அவனை அசையவிடாமல் அப்படியே நிற்கவைத்துவிட்டது. நாக்கு முழுசாக வெளியே தொங்கிக்கொண்டிருக்கிறது. குரு அசைந்தால், கடித்துவிடுவானோ? சட்டையை விட்டுவிட்டு, மீரா தன் கையை குருவின் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு,
‘டேய் ஜானி நாங்க ஃபரண்ட்ஸ்தாண்டா. சண்டையெல்லாம் இல்ல. போடா’
என்றதும், தலையை அப்படியே தாழ்த்திக்கொண்டு, ஏதோ குற்றம் செய்துவிட்டதைப்போல் நகர்ந்து, வழக்கமாகப் படுக்கும் இடத்தில் படுத்துக்கொண்டான்.
‘இனிமே இந்த ஜானி இருக்கும்போது உன்கிட்டயே வரமுடியாது போலிருக்கே. நல்லா பழக்கியிருக்கே மீரா’
என்று சொல்லி குரு சிரித்தான். குளோரக்ஸில் அந்தக் கறை பறந்துவிட்டது.
நவம்பர் 29 என்று மீராவுக்கு மருத்துவர் தேதி குறிப்பிட்டிருந்தார். 21ஆம் தேதியே சில பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார்.
21ஆம் தேதி. குருவும் மீராவும் மருத்துவமனை சென்றார்கள். முதல்தடவை ஜானியை விட்டு மீரா பிரிகிறாள். அவர்களோடு காரில் ஏற முயன்ற ஜானியை விரட்டி வீட்டுக்குள் விட்டு, கதவைச் சாத்திவிட்டு மருத்துவமனை விரைந்தார்கள்.
மீராவுக்கு சர்க்கரை கூடியிருப்பதைக்கண்டு மருத்துவர் புருவம் உயர்த்தினார். இன்சுலின் போட்டுக் குறைக்கும் அளவுக்குக் கூடியிருந்தது. அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை. சிலருக்கு, கர்ப்பகாலத்தில் இப்படி ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் அதிகமாக இருக்கிறது. இப்போது மீராவை வீட்டுக்கு அனுப்புவது சரியல்ல என்றும் அவள் எங்கள் கண்காணிப்பிலே இருக்கட்டும் என்றும் சொல்லி, அவளை படுக்கையில் சேர்க்கச் சொன்னார் மருத்துவர். தாதிகள் அந்த வேலைகளை மளமளவென்று பார்த்தார்கள். குரு மட்டுமே வீட்டுக்கு வந்தான்.
முகப்புக் கதவுக்கும், கொல்லைப் பகுதிக்கும், படுக்கை அறைக்குமாக ஜானி அலைபாய்ந்தான். அதற்கான சாப்பாட்டை குரு போட்டான். தண்ணீர்க் கோப்பையில் தண்ணீர் ஊற்றிவைத்தான். இதெல்லாம் குரு செய்ததே யில்லை. குரு படுக்கைக்குப் போனபின் வாசல் கதவுவரை வந்துவிட்டு மீண்டும் படுக்கையை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் வாசற்கதவின் அருகில் படுத்துக்கொண்டான்.
அடுத்த நாள் மருத்துவமனை சென்றபோது, சர்க்கரை குறைந்திருப்பதாகவும், ஆனாலும் எந்த நேரமும் அந்த அளவைக் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், பிரசவம் வரை இங்கேயே இருக்கட்டும் என்றும் சொல்லிவிட்டார். அவன் மருத்துவமனையிலிருந்து போகும்போது
‘ஜானி நல்லாயிருக்கானா?’ என்றாள் மீரா.
அவன் வீட்டுக்குள்ளே அலைகிறான், உன்னைத் தேடுகிறான் என்றெல்லாம் எப்படிச் சொல்வான் குரு. ‘அவன் எப்போதும்போல் இருக்கிறான்.’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.
நவம்பர் 29. இன்றோடு எட்டுநாட்கள் முடிந்துவிட்டன. சிசேரியன்தான். குழந்தைக்கு லேசாக மஞ்சக்காமாலை அறிகுறி இருந்ததால் அன்றும் வீட்டுக்குப் போக முடியவில்லை. அன்று குரு மட்டும்தான் வீட்டுக்கு வந்தான். ஜானி வாயை மூடிக்கொண்டே ஒரு மாதிரியாக ஊளையிட்டான். அதற்கு அர்த்தம் என்ன? அப்படி அவன் செய்ததே இல்லை. குரு தூங்கிவிட்டான். அன்றும் முகப்புக் கதவின் பக்கம் வந்து படுத்துக் கொண்டான். சாலையில் கார் சப்தம் கேட்கும் போதெல்லாம், இங்கும் அங்குமாக ஓடினான். அதேமாதிரி மெலிதாக ஊளையிட்டான்.
அடுத்தநாள் மருத்துவர் சொன்னார்.
‘ஒரு நல்ல செய்தி. தாய் சேய் நலம். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்.’
வீட்டுக்கு வந்தார்கள். குரு குழந்தையைத் தூக்கிக்கொண்டான். மீரா மெதுவாக பின்னால் குருவைப் பிடித்தபடி நடந்துவந்தாள். கதவு திறக்கப்பட்டபோது அங்கே ஜானி இல்லை. படுக்கை அறைக்கு நடந்தார்கள். குரு குழந்தையுடன் முன்னே சென்றான். மீரா தொடர்ந்தாள். படுக்கைக்குப் பக்கத்தில் நான்கு கால்களையும் நீட்டியபடி ஜானி படுத்திருந்தான். மீராவின் வாசம் அவனுக்கு தெரிந்திருக்குமே. ‘ஜானி’ என்றாள் மீரா. அவன் அசையவில்லை. அதற்குப் பிறகும் அவன் அசையவே இல்லை.
கைகளில் குழந்தையைத் தாங்கியபடி குரு நின்றான். அவன் கன்னங்களைப் பொத்தியபடி அவன் முகத்தோடு முகம் வைத்து மீரா தேம்புகிறாள். குழந்தை அழுதது.
யூசுப் ராவுத்தர் ரஜித்