நெடுநல்வாடை
பத்துப் பாட்டு நூல்களில் ஏழாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது நெடுநல்வாடை ஆகும். இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எனும் புலவர் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலவனாக தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் திகழ்கிறார். இந்நூல் அகவற்பாவால் இயற்றப்பட்டதாகும். மொத்தம் 188 அடிகள்கொண்டு இது விளங்குகிறது.
இந்நூலை இயற்றியவரின் இயற்பெயர் கீரன் என்பதாகும். ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என வழங்கப்படுகிறது. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. இவர் தந்தையார் மதுரையில் ஆசிரியராக இருந்தவர்.
வாடைக் காற்று துன்பம் தருவதாகும். நல்ல என்பது அன்பைத் தெரிவிப்பதாகும். நெடு என்பது அழியாமையைக் குறிப்பதாகும். எனவே “அழியாது நீளும் நல்ல வாடை” என்று இந்நூலின் தலைப்பிற்குத் தமிழ்த் தென்றல் திரு.வி.க விளக்கம் தருவார். வேற்று நிலத்திற்குப் போய்ப் போரினை வென்ற மன்னனுக்கு இது நல்லதாகிய வாடை ஆயிற்று,
பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனும் சேரமன்னனையும், கிள்ளிவளவன் எனும் சோழமன்னனையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் எனும் வேளிர் ஐவரையும்,சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோல்வியுறச் செய்தான். இப்போர் பற்றின குறிப்புகளை நாம் புறநானூறு 19, 23, 25, 76, அகநானூறு 36, 175, 209, நற்றிணை 387, மற்றும் மதுரைக்காஞ்சி 55, 127, ஆகியவற்றில் காணலாம். பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியும் இவனுக்காக எழுதப்பட்டது.
வாடை எனும் கூதிர்ப்பருவத்தில் பாண்டிய மன்னன் போருக்குச் சென்றுள்ளான். துணைவன் இல்லாது வருந்தி அரசி அரண்மனையில் இருக்கின்றாள். பல செவிலியர் அவளைத் தேற்றியும் அவள் ஆறுதல் அடையவில்லை. நாட்டில் உள்ள இடையர்களும் பிற மக்களும் வாடையின் குளிரால் மிகவும் துன்பம் அடைகின்றனர். பறவைகளும் விலங்குகளும் கூடத் துன்புறுகின்றன. நெல்லும் மலரும் தூவி இறைவனை வணங்கும் பெண்கள், சுருக்கு விசிறி, அரண்மனை அமைத்த முறை, அந்தப்புரத்தின் அமைப்பு, அங்குள்ள செம்பினால் புனைந்த சுவர்கள், அரசியின் மிக அழகிய கட்டில், யவனர் இயற்றிய பாவை விளக்கு ஆகிய விவரங்களை நாம் இந்நூல் சிறப்பாகக் காட்டுகிறது. இறுதியில் தன்னுடைய போர் மறவர்களோடு கனிவுடன் இருக்கும் மன்னனை நாம் காண்கின்றோம்.
”வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென”
என்று வையகம் எனும் மங்கலச் சொல்லால் இந்நூல் தொடங்கிறது. “ உலகம் குளிரும்படி வலது புறமாக எழுந்து வளைந்துத் தவறாது பொழியும் முகில்கள் புது மழையைப் பொழிந்தன”. என்பது இதன் பொருளாகும்.
அடுத்து நக்கீரர் குளிர்காலத்தின் நிலைமை பற்றி எழுதுகிறார்.
“மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோள் ஒழியக் கடிய வீசி, இருந்தது நடு இரவு.”
“விலங்குகள் மேய்தலை மறந்தன. பெண் குரங்குகள் மிகுந்த குளிர்ச்சியை அடைந்தன. மரங்களில் தங்குவனவாகிய பறவைகள் மரங்களிலிருந்து விழுந்தன. பாலுண்ணலை விடும்படி சினத்தால் பசுக்கள் தங்கள் கன்றுகளை உதைத்துத் தவிர்த்தன. மலையைக் குளிர்விப்பதுப் போல் குளிர்ச்சியாக இருந்தது நடு இரவு” என்பது பாடல் அடிகளின் பொருளாகும்.
குளிர் காலத்தில் பொது மக்கள் எப்படி இருந்தனர் என்பதையும் நக்கீரனார் கூறுகிறார்.
”உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊர் அது. அங்கே ஆறு கிடப்பதைப் போல் அகன்ற நீண்ட தெரு இருக்கிறது, தழை கலந்த மாலையை அணிந்த பருமனான அழகான தோள்களையும் இறுக்கமான உடலையும் உடைய வலிமையான ஆண்கள் அத்தெருவில் உள்ளனர். அவர்கள் வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடிக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாய், நீர்த் துவலையின் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தவில்லை. பகல் கழிந்த பொழுதிலும், முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்த அவர்கள், தங்களுக்கு வேண்டிய இடத்தில் திரிகின்றனர்”
”மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,
படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர” என்பன பாடல் அடிகளாகும்.
“மனை உறை புறவின் செங்கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப,
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந்தொழுவர்
கொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக,
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப”
அங்குள்ள இல்லங்களில் புறாக்கள் வாழ்கின்றன. சிவப்புக் காலையுடைய ஆண் புறா தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன் ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னவில்லையாம். ஏனெனில் அப்புறா இரவு எது, பகல் எது என அறியாமல் மயங்கிச் செயலற்றுள்ளது. மேலும் அது வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகையில் கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்கிறது.
காவலுடைய பெரிய மனைகளில் சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள் நறுமணப் பொருள்களை அரைக்கிறார்கள். அவர்கள் அரைக்கும் கல்லின் நிறத்திற்கு நக்கீரனார் கொள்ளின் நிறத்தை உவமை கூறுகிறார். சந்தனம், கத்தூரி போன்ற நறுமணமான பொருட்களை அரைக்கிறார்கள், வடநாட்டினர் தந்த வெள்ளை நிறத்தையுடைய வட்டக் கல் தென்திசையின் சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்கிறது. ஏனெனில் அச்சந்தனத்தைப் பூசுவார் எவரும் இல்லை.
குளிர் காலமாதலால் விசிறி பயன்படாமல் கிடப்பதையும் சன்னல் கதவுகள் மூடப்பட்டுக் கிடப்பதும் காட்டப்படுகிறது.
“கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந் தறிச்
சிலம்பி வான் நூல் வலந்தன தூங்க,
வான் உற நிவந்த மேனிலை மருங்கின்
வேனில் பள்ளித் தென் வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது, திண்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப”
” கைத்தொழிலில் வல்லவன் அழகாக உருவாக்கிய சிவப்பு நிற ஆலவட்டம் (சுருக்கு விசிறி) சுருக்கப்பட்டு, வளைந்த மரத்தறியில் பயன்படுத்தப்படாமல் தொங்கியது. அதில் சிலந்தி வெள்ளை நூலால் கட்டிய வலை தொங்கியது என்பதால் அது நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படவில்லை என்று காட்டப்படுகிறது. மேலும் வானத்தைத் தீண்டும் உயர்ந்த மேலான இடத்தில் உள்ள வேனிற்காலத்துப் படுக்கை அறைக்குத் தென்றலைக் கொண்டு வரும் திண்மையான நிலையையுடைய நேரான சன்னலின் நன்கு பொருந்திய கதவுகள், காற்று நுழைய முடியாதபடி திறமையாக மூடப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தனவாம்.
மிகுந்த ஒலியுடன் மழைத் துளி தூவுகிறது. அதனால் அனைவரும் குவிந்த, சிறிய வாயையுடைய குடத்தின் தண்ணீரைக் குடிக்கவில்லை. அகன்ற வாயையுடைய நெருப்பு வைக்கும் கும்மட்டிச்சட்டியின் சிவந்த நெருப்பில் குளிர்காய்ந்து அனுபவித்தனர். ஆடும் பெண்களின் யாழானது குளிரினால் நிலைகுலைந்து விட்டது. அவர்கள் தங்களுடைய யாழானது பாட்டினைக் கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்காக, அதன் இனிய ஒலி எழுப்பும் நரம்புகளைத் திரண்டு எழும் தங்களுடைய வெப்பமான முலைகளில் தடவி, கரிய தண்டையுடைய சிறிய யாழில், பண்ணிற்கு ஏற்றாற்போல் சுருதி கூட்டினார்கள். தங்களுடைய காதலர்களிடமிருந்து பிரிந்தவர்கள் வருந்துமாறு மழை மிகுந்தது. குளிர்காலம் நிலைத்தது.
அரசனின் அரண்மனையை உருவாக்கிய முறையை நக்கீரனார் இவ்வாறு எழுதி உள்ளார்,
…
…………..மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
உச்சிப்பொழுதைக் காட்டும்பொழுது நிழல் கீழே விழாத பொழுது என்று கூறப்படுகிறது. திசைகளிலே விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரண்டு கோல்கள் நடும்பொழுது நிழல் எந்தப் பக்கமும் சாயாத, மேற்குத் திசையில் எழுகின்ற உச்சிப்பொழுதில், சித்திரைத் திங்களின் நடுப்பகல் நேரத்தில், நூலைக் கற்று அறிந்தவர்கள் நுணுக்கத்துடன் கயிற்றினை இட்டு, திசைகளை நோக்கி, கடவுளை வணங்கி, புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக அரண்மனையைக் கட்டி அறைகளைக் கூறுபடுத்தியுள்ளார்கள்,
அடுத்து அந்தப்புரம் பற்றி நக்கீரர் எழுதுகிறார். யவனர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை விளக்குகள் இருந்தன அங்கிருந்த அகல் நிறைய எண்ணெயை ஊற்றி, பருத்த திரியைக் கொளுத்தி, அதன் நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எண்ணெய் குறையும்பொழுதெல்லாம் எண்ணெயை ஊற்றித் திரியைத் தூண்டி, பல அறைகளிலும் உள்ள பரந்த இருளை நீக்கினார்கள். பெருமை பொருந்தியவனும் தலைமை உடையவனுமான பாண்டிய மன்னன் அன்றி வேறு ஆடவர் எவரும் நெருங்க முடியாத அரிய காவலுடைய எல்லையில் அந்தப்புரம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த தலைவியின் நிலையைக் கீழ்க்கண்ட பாடலடிகள் காட்டுகின்றன.
”ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்,
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப”
முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய அரசியின் மார்பின் மேல் இப்பொழுது ஒரு தாலி (சங்கிலி) மட்டுமே தொங்கியது.. கணவனிடமிருந்து பிரிந்ததால் அவளுடைய அழகிய நெற்றி ஒளியை இழந்தது. நெற்றியில் உலர்ந்த மென்மையான கூந்தல் படர்ந்திருந்தது. மிகுதியான ஒளியையுடைய நீண்ட காதணிகளை நீக்கித் தாளுருவி என்ற காதணிகளை அணிந்திருந்தாள், சிறிது தொங்கும் காதுகளில். பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில் வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள். வாளை மீனின் பகுத்த வாயைப் போலத் தோன்றும் வளைந்த சிவப்பு நிறமுடைய மோதிரத்தைச் செவ்விரலில் அணிந்திருந்தாள். மென்மையான ஆடையை முன்பு இடுப்பில் அணிந்த அவள் இப்பொழுது அழகிய மாசு உடைய ஒளியுடைய நூல் ஆடையுடன் புனையாத ஓவியத்தைப் போன்று இருந்தாள்.
தளிர்
ஒப்பனை இல்லாத போன்ற மேனியையும், பரந்த தேமலையும், அழகிய மூங்கிலைப் போன்ற திரண்ட மென்மையான தோளினையும், கச்சையினால் இறுக்கமாகக் கட்டிய தாமரை மொட்டினைப் போன்ற முலைகளையும், வளைந்த அசையும் இடையையுமுடைய மென்மையான பெண்கள், அரசியின் நல்ல அடியைத் தடவுகின்றனர். மேலும் , “விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர்” என மனதுக்கு இனியவற்றைக் கூறுகின்றனர் அதை நக்கீரர் இப்படிப் பாடுகிறார்.
‘இன்னே வருகுவர் இன் துணையோர்’ என
உகத்தவை மொழியவும்”
ஆனால் அரசி ஆறுதல் அடையவில்லை. மிகவும் அழுதாள். அங்கு அழகான ஓவியம் இருந்தது. அதைப் பார்த்துக் கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள். பெருமூச்சு விட்டாள். பெரிய (சிறந்த) இமைகள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தன. தன்னுடைய சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து கண்ணீர்த் துளிகளைத் தெறித்தாள்.
இப்பொழுது செவிலியர் கொற்றவையை வேண்டுகிறார்கள்
”…….. நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர, விறல் தந்து,
இன்னே முடிக தில் அம்ம”
”அன்பு மிக்க இளம் பெண்ணிற்குத் தீமையாக இருக்கின்ற பெரும் வேதனை தீர, மன்னன் வெற்றி அடைந்து உடனே வர வேண்டும். இது எங்கள் விருப்பம். எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருளுவாயாக கொற்றவையே” என வேண்டினர் செவிலியர்.
அடுத்து மன்னனைக் காட்டுகிறார் நக்கீரர். ”ஒளியுடைய முக அணிகலன்களுடன் பொலிந்த, போர்த்தொழிலைக் கற்ற யானைகள் இருக்கின்றன. அவை நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கைகள் நிலத்தின் மேல் விழும்படி ஆண் யானைகளைக் கொன்றன. பெரிய மறச்செயலை செய்த மறவர்களின் ஒளியுடைய வாளினால் ஏற்பட்ட புண்களைக் காணும் பொருட்டு, தன் பாசறை இருக்கையிலிருந்து வெளியே வந்தான் மன்னன். குளிர்ந்த வாடைக் காற்று வீசும்பொழுதெல்லாம் அசைந்து தெற்கில் உயர்ந்து சாய்ந்து பருத்த சுடருடன் எரியும் நல்ல பல அகல் விளக்குகள் எரிந்தன. வேப்ப இலைகளை மேலே கட்டிய வலிமையான காம்பையுடைய வேலொடு மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், புண்பட்ட மறவர்களை முறை முறையாக மன்னனிடம் காட்டினான்”
யானைப்படையின் போர்மறம் தெரிகிறது. அரசன் படைவீரர்களின் விழுப்புண்களைப் பார்ப்பது அவனுக்கும் மறவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும். பாண்டியனின் வேப்ப மாலை இங்கு சுட்டப்படுகிறது.
நூலின் இறுதி அடிகள்:
”மணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப,
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன் கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால் யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப,
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே”
”மணிகளைத் தம் முதுகில் இட்ட, பெரிய அடிப்பகுதியை உடைய கடிவாளத்துடன் சேணமும் களையப்படாத பாய்ந்து ஓடும் செருக்கான குதிரைகள் உள்ளன. அவை கரிய சேற்றினையுடைய தெருவில், தங்கள் மேல் விழும் நீர்த்துளிகளை உடலைச் சிலிர்த்துச் சிதறின. பாண்டிய மன்னன் தோளிலிருந்து வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடதுபுறமாகத் தழுவி, வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின் தோள் மேல் கையை வைத்திருந்தான் . தன்னுடைய மறவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு முகம் பொருந்தி இருந்தான் அவன். நூலால் தொடுத்த முத்துச் சரங்களையுடைய மன்னனின் குடை ஒலியுடன் அசைந்து மழைத் துளிகளை அவன் மேல் விழாதவாறு மறைத்தது. மிகுந்த இருட்டான நடு இரவிலும் அவன் தூங்கவில்லை. பலரோடு மாறுபட்டுப் போர்த்தொழில் செய்யும் பாண்டிய மன்னன் சில மறவர்களுடன் திரிகின்றான்,
நவீன இலக்கியம் போல முடிவை நெடுநல்வாடை வாசகருக்கே விட்டுவிடுகிறது. நெடுஞ்செழியன் அரண்மனை சென்று அரசியைச் சந்திப்பதை நூல் கூறவில்லை. நூலின் மையமே அழகான வாடையைப் பற்றிக் கூறுவதாகும்., அதைச் சிறப்பாக நக்கீரர் எழுதி வெற்றி பெற்றுள்ளார்.