சசிகலா விஸ்வநாதன்
பூத்துச் சொரியும் பவளமல்லி;
மெல்லனே, மெல்லனே, முயங்கி மாரி பொழி கார் மேகம்;
தடதடக்கும் இடியும்,
மின் மினுக்கும் மின்னலும்,
நிகர்த்ததே மணவாழ்வு…
மலர் படுக்கையல்ல…
தெரிந்தோ,தெரியாமலோ;
அறிந்தோ, அறியாமலோ;
உன் வாழ்க்கை நான் புகுந்தேன்.
உன்னை வேண்டுவது ஒன்றே;
என்னில் புகு; என் குறை களைய.
என் தலை பாரம் சுமக்கும், சும்மாடாகி;
நெடு வாழ்வின் நுகத்தடி சோடியாய்;
நீ இரு!
ஒரு கோடி வரப்போக இருப்பினும்;
கண்ணன் கோயில் துலாமுள்ளாய்;
ஏதும் எதிர்பாரா
கோபிகையாய் இரு
மமதைக் கால் அகட்டி நிற்கும்,
வீமனாய், பார்த்தனாய்
நான் இருக்க;
அங்குச திரௌபதியாய் அடக்கி நிற்பாய்.
ஒருநாளும், உன் அகன்ற விழி உருட்டிக் காட்டாது,
அன்பு விழி மட்டும் நான் காண..
கூர்ந்த சொல் அம்பால் அடியாமல் அரவணை…
உனக்கு ஒரு உறுதி நான் அளிப்பேன்.
அல்லு அசல் அறியாது,உன் ஆணை நான் ஏற்பேன்.
குயவன் கை களிமண்ணாய் குழைந்திருப்பேன்.
வில் விடு வாளி போல்
விரைந்து உன் பணி முடிப்பேன்.
உன் மனம் சுருங்காமல்,
உன் கண் சிவக்காமல்;
அன்புடன் சேர்ந்திருப்பேன்.
மருமகனாக மட்டும் நில்லாமல்;
என் மாமனுக்கு, உற்ற மகனாக நான் இருப்பேன்.
அச்சமின்றி வா!
மன்றல் வாழ்விற்கு;
குற்றால சாரல் போல்;
பொதிகை மலை தென்றல் போல்;
மணம் நிறைக்கும் மகிழம்பூ போல்;
பொலியும், புது வாழ்க்கை.
சசிகலா விஸ்வநாதன்