சாதனா எங்கே போகிறாள்

author
2 minutes, 19 seconds Read
This entry is part 6 of 6 in the series 2 ஜூன் 2024

வி. ஆர். ரவிக்குமார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

இரவு மணி ஏழு.  கார்த்திகை மாத காரிருள்,  சீக்கிரமே இருட்டிவிட்டது.    வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ்  இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு  புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் கவனத்திற்கு என்று ஒலி பெருக்கியில் மீண்டும்  மீண்டும் அறிவிப்பு முழங்கிக்கொண்டிருந்தது.

பல பெட்டிகளுடனும் லக்கேஜ்களுடனும் பயணிகள் வேக வேகமாக அவரவர் கம்பார்ட்மெண்டை நோக்கிச்  சென்று கொண்டிருந்தனர்.     

இருக்கை உறுதி ஆகாதவர்கள் ஆர்வமாக ரயில் பெட்டியின்  முன் ஓட்டப்பட்ட ரிசர்வேஷன்  சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ரயில் கம்பார்ட்மெண்ட்களை  சுத்தப்படுத்தும் ஊழியர்கள் அவரவர் வேலையில் மும்மரமாக  இருந்தனர்.

நடை மேடையில் வயதான பயணிகள் பேட்டரி கார்களில் அவ்வப்போது  வந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள்.  சிலர்  அலைபேசியில் இரைச்சலாக  பேசியபடி  உடமைகளுடன் பொறுமையாக நடந்து கொண்டிருந்தனர். 

சிறுவர்களும்,  குழந்தைகளும் இரயில் வருவதையும் போவதையும் கண் கொட்டாமல் உலக அதிசயம் போல் ஆர்வமாக  பார்த்துக்கொண்டிருந்தனர். 

பத்திரிக்கைகளும் புத்தகங்களும் தாங்கிய ஒரு தள்ளு வண்டி நடை மேடையில் நின்றிருந்தது.  படிப்பவர்கள் வெகுவாக  குறைந்து விட்டதால் வியாபாரம் மந்தம் என்பதை தள்ளு வண்டிக்காரனின் சோகமான முகத்தில் பார்க்க முடிந்தது.  

ஆனால் அருகில் இருந்த பெட்டிக்கடையில் வியாபாரம் மிகுந்திருந்தது.  இட்லிகளும் தயிர் சாதங்களும் பொட்டலங்களில் கட்டப்பட்டு  பயணிகளிடம் விரைவாக கைகள் மாறிக்கொண்டிருந்தன. 

ஹரிபாபுவும் அவனது மனைவி சந்தியாவும் வெகு தாமதமாகவே  ஸ்டேஷனுக்கு வந்தனர். மணி ஆகி விட்டிருந்தது.   A.1 போகியில் இரண்டாவது வகுப்பு குளிர் சாதன பெட்டியில் இருக்கை எண் 15 & 16ல் அமர்ந்தனர். 

நண்பர் ஒருவரின்  திருமணத்திற்காக சென்னை வந்துவிட்டு இப்போது ஹைதராபாத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.  இருவருக்கும் வயது அநேகமாக நாற்பதிற்குள்ளாக  இருக்கலாம்.  ஹரி பாபூவுக்கு கட்டான உடல்,  படிய வாரப்பட்ட தலை,  மீசை மட்டும் லேசாக நரைத்திருந்தது.  சந்தியா வெளிர் நிற நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள்,  நெற்றியில் தவழும் கூந்தல்,  ஏறக்குறைய பாப் கட்டிங்,  நகைகள் ஏதும் அணியாத எளிமை அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது.

அவர்களுடைய லக்கேஜ்களை சீட்டின் அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தனர்.   

அவர்களுடைய சீட்டுக்கு எதிரில் இருக்கை எண் 14ல் பயணிகள் யாரும் அமர்ந்திருக்கவில்லை. ஆனால் ஒரு பிளாஸ்டிக்கினால் ஆன கூடை மட்டும்  மூடப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.   யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை.   

இரயில் ஒரு குலுங்கலுடன் புறப்பட்டு சிறிது வேகம் எடுத்த வேளையில், அந்தக் கூடையில்  சிறு அசைவு தென்படவே,    ஹரிபாபு மெல்ல அந்த கூடையில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.   ஆச்சரியம்,  கூடையினுள் ஒரு பச்சிளம் குழந்தை சிறிய மெத்தையில் ரப்பர் ஷீட்டில்  படுக்க வைக்கப்பட்டு இருந்தது.  

குழந்தை கருப்பு என்று சொல்லமுடியாத, மாநிறம், இரண்டு  அல்லது மூன்று வாரத்திற்கு முன் பிறந்து இருக்கலாம்.  கூடையினுள்  எந்தவித சலனமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பால்  நிரப்பிய புட்டிகள் கூடைக்குள் வைக்கப்பட்டு இருந்தன.  குழந்தைக்கு மெலிதாக அலங்காரம் செய்து கன்னத்தில் மையிடப்பட்டிருந்தது.  தலையில் வுல்லன் வகை குல்லா   அணிவிக்கப்பட்டு,   குளிர் சாதனப் பெட்டியின் குளிர் தெரியாமல் இருக்க  கனமான ஒரு டவல் கொண்டு போர்த்தப்பட்டிருந்தது.  

“ என்ன எட்டிபார்க்கறீங்க “ சந்தியாவும் இப்போது எழுந்து நின்று ஆர்வமாக கூடையினுள் பார்த்தாள்.

“என்னங்க இது?  யாரோட குழந்தை இது?  துணியை விலக்கிப் பார்த்தாள் – பெண் குழந்தை

“ தெரியலை “

“ குழந்தையோட அம்மா அப்பா எங்காவது இருக்காங்களான்னு பாருங்க,  எப்படிங்க குழந்தையை தனியா  விடுவாங்க?   அதிர்ச்சியில்  உரக்கக்  கத்தினாள்.

“ அது தான் புரியல,  யோசிக்கிறேன் “

இரண்டடி எடுத்து வைப்பதற்குள் டிக்கெட் பரிசோதகர்  ராமப்ரசாத் அடுத்த கேபினில்   எதிர்ப்பட்டார்.

“சார் கொஞ்சம் அவசரமா இங்க வரமுடியுமா?  எங்க சீட்டுக்கு எதிர்ல இருக்கற சீட்ல கூடையில ஒரு பெண் குழந்தையை தனியா யாரோ வச்சுருக்காங்க”

“ அப்படியா ?  இரண்டு நிமிஷம்  இதோ வரேன் “   டிக்கெட் பரிசோதகர்  ராமப்ரசாத் வேகமாக அவர்கள் இருக்கைக்கு  ஓடி வந்தார்.

பார்த்தார்,   முகத்தில் அவருக்கு ஏகப்பட்ட கேள்விக்குறிகள்.  எப்படி யாரும் இல்லாம இந்த குழந்தை இங்க வந்தது? இங்க யாரும் வந்ததைப் பாரத்தீங்களா? யார் இந்த கூடையை இங்க வச்சாங்கன்னு யாராவது பாரத்தீங்களா?  உரக்கக் கேட்டார்

“இல்லை சார் நாங்களே டிரையின் புறப்படறதுக்கு இரண்டு நிமிஷம் முன்னாடி தான் வந்தோம், லக்கேஜ் எல்லாம் வச்சுட்டு இப்ப தான் உட்கார்ந்தோம் “  என்னடா தனியா கூடை இருக்கேன்னு எட்டிப்பார்த்தோம்,  பார்த்தா குழந்தை இருக்கு சார்”  ஹரிபாபு மூச்சு விடாமல் விளக்கினார்.

“ ஒரு நிமிஷம் இருங்க,  இந்த 14 ஆம் சீட் யார் பேர்ல புக் ஆகியிருக்குன்னு பார்க்கறேன் “      ராம்பிரசாத் தன் கையிலிருந்த ரிசர்வேஷன் சார்ட்டை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்.   தலையை ஆட்டினார். 

“இல்லையே,  இந்த சீட்டுக்கு ரிசர்வேஷன் நெல்லூரில்  இருந்து தான் புக் ஆகியிருக்கு “

“ அப்படின்னா சார் ?

“ தெளிவா யாரோ வேணும்னு தான் இந்த மாதிரி செஞ்சிருக்கணும் “  ராமப்ரசாத் தீர்மானமாக சொன்னார்.

“வேற சீட்ல மறந்து போய் யார்கிட்டயாவது  பேசிகிட்டு இருப்பாங்களோ? ஹரி பாபு சந்தேகத்தை கிளப்பினான்.

“ அப்படியா, சந்தேகம் வேணாம்,  இந்த கேபின்ல எல்லார் கிட்டயும் கேட்டு பார்க்கிறேன் “ என்று  ராம் பிரசாத் எழுந்தார்.

ஒரு நிமிடத்தில் எல்லோருக்கும் தகவல் எட்டியது.  ஆர்வத்தில் ஒவ்வொருவராக வந்து பார்க்க தொடங்கினர். எல்லோரும் ஆச்சரியம் மேலிட பரிதாபப்பட்டு “உச் உச்” கொட்டிக்கொண்டிருந்தனர்.  

தெலுங்கு தேசம்  நோக்கி செல்லும் ரயில் என்பதால் “ஏமி ரா இதி “  ஏம் ஆயிந்தி  ஐய்யோ தேவுடா “ போன்ற தெலுங்கு வார்த்தைகள்  சரளமாக காதில் விழுந்தன.   

“அவிட நோக்கு, கூடையில பெண் கூட்டியானு”  மலயாள பயணி ஒருவர் பரஞ்சார்.

 “ எப்படி ஒரு பொண்ணால பெத்த குழந்தையை இப்படி தூக்கிப் போட முடிந்தது?  பச்ச பூ சார் கொஞ்சம் கூட இறக்கம் வேணாம் ? இது தமிழ் பேசும் பயணி.

“ பொம்பளையா அவ,   ரொம்ப அநியாயம் பண்ணிருக்கா “

“எப்புடி சார் ஒரு பொம்பளைக்கு மனசு வருது?  ஏன் சார்,  இப்படி தான் பண்ணப் போறான்னா குழந்தையை  எதுக்கு பெத்துக்கணும், இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் சார் “ 

தீர்ப்புகள் உடனடியாக வழங்கப்பட்டன.

“கலி முத்தி போச்சு, இனிமே இப்படி தான் நடக்கும் “  தத்துவம் உதிர்த்தார்  ஒரு பெரியவர்.

இப்படி பலதரப்பட்ட குரல்கள்  ஓடும் ரயிலில் ஒலித்துக் கொண்டிருந்தன.   கொஞ்ச நேரத்தில் இருக்கை எண்கள்  14, 15, 16 அனைவரும்  வந்து பார்க்கும்  எக்சிபிஷன் ஆனது. 

டிக்கெட் பரிசோதகர்  ராமப்ரசாத்திற்கு பொறுப்புஇப்போது  தலைக்கு ஏறி இருந்தது.  குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது?   அடுத்த ஸ்டேஷனில் ரயில்வே போலீஸிடம்  ஒப்படைத்து விடலாமா ?  என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது ஏறும் பயணிகளையும் அவர்  கவனித்து டிக்கெட் பரிசோதனை செய்து இருக்கையை கொடுக்கும் பணியையும் செய்ய வேண்டியிருந்தது. அவர் முகத்தில் டென்ஷன் தெளிவாகத் தெரிந்தது.

ரயிலின் வேகம் அதிகமாக இருந்ததால் குழந்தை இருந்த கூடை வேகத்திற்க்கு ஏற்றாற்போல் குலுங்கிக் கொண்டிருந்தது.

ஆழந்த உறக்கத்தில் இருந்த குழந்தை இப்போது லேசாக அசைந்து கொடுத்தது.  மெலிதாக கண்திறந்து பார்த்து, விசும்பி அழத்தொடங்கியது.  

சந்தியாவை  பார்த்து, “ ஐய்யோ குழந்தை அழுவுதே, பசிக்கிதோ என்னவோ அந்த பால் புட்டியிலே இருக்கற பாலை குழந்தைக்கு குடுமா, பாவமா இருக்குது “  நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண் சொன்னாள். 

அழுகை அடங்கி பால் புட்டியில் இருந்த பாலை ரப்பர் நிப்பிள் மூலம் குழந்தை மெல்ல  உறிஞ்சத் தொடங்கியது.  சந்தியாவுக்கும் ஹரி பாபுவுக்கும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.  இருவருக்கும் எல்லாவற்றையும்  பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமலும் இருக்க முடியவில்லை. சிவராத்திரி  தான் போல இருக்கிறது என்று இருவரும் நினைத்தார்கள்.

“ என்ன செய்ய போறாங்க தெரியலியே,   யாரு பொறுப்பு எடுத்துக்குவா ? அந்த வயதான பெண்மணி கவலைப் பட்டாள்

“ இதெல்லாம் போலீஸ் கேஸ் ஆயிடும், இதில் எல்லாம் தலையை போடாதே “  அந்தப் பெண்ணின் புருஷன் அவளை விரட்டி சீட்டுக்கு அனுப்பி விட்டான்.  அந்த வயதான பெண்மணி  வேறு வழி இல்லாமல் கவலை மட்டும் பட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

இரவு மணி 9.30,  சிக்கன் பிரியாணி விற்றவர்களும், சப்பாத்தி  தயிர் சாதம் விற்றவர்களும் ஏறக்குறைய  வியாபாரம் செய்து  களைத்துப் போன நேரம்.   இரயில் கேபினில் நிறைய பேர் பிரியாணி பொட்டலங்களை காலி செய்வதில் மூழ்கி இருந்தனர்.   சிலர் கவலை எதுவும் இல்லாமல் பெர்த்தில் மெலிதான குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.  ஆமாம்,  பிரச்சனையும் பொறுப்பும்   டிக்கெட் பரிசோதகர்  ராமப்ரசாத்திற்குத் தானே.

இப்போது பால் புட்டியில் இருந்த பால் கால் வாசி குழந்தை குடித்து காலியாகி இருந்தது.  அதற்கு மேல் செல்லவில்லை.  சிறிய ஏப்பம் விட்டதால்  பசி  போய்விட்டது தெரிந்தது.   குழந்தை சிறிதாக  கையை காலை ஆட்டியது, எட்டிப் பார்த்த சந்தியாவை லேசாக பார்த்து சிரித்தது.  அவர்கள் இருவருக்குமே குழந்தையிடம் ஒரு ஈர்ப்பு வந்தது. சிறிதாக கை சொடுக்கு  பொட்டு சிரித்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர்.

பெர்த் எல்லாம் ஒதுக்கிவிட்டு டிக்கெட் பரிசோதகர்  ராமப்ரசாத் வந்து இருக்கையில் அமர்ந்தார். சோர்வாக இருந்தார்.   குழந்தையை உற்றுப் பார்த்தார்.

“ சார் குழந்தையை என்ன செய்யப் போறீங்க”  ஹரிபாபு கேட்டான்.

“ ஒண்ணும் புரியலை “

“நெல்லூர், காவாலி,  ஒங்கோல் ஸ்டேஷன்ல  எல்லாம் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி கேட்டுருக்கேன், வாங்கிப்பாங்களா தெரியலை, இந்த மாதிரி விஷயங்கள்ல ஃபார்மாலிட்டீஸ் நிறைய இருக்கு,  இரவு நேரம் வேற, பொதுவா இந்த மாதிரி நிலமையிலே யாரும் ரெஸ்பான்ஸிபிலிட்டி எடுத்துக்க மாட்டாங்க.

“ அப்படியே குழந்தையை வாங்கிக் கொண்டாலும் அது பிறகு  யார் கையிலே கிடைச்சு என்ன  கதி ஆகுமினு சொல்ல முடியாது,  பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு,  மோசமான உலகம் இது,  எப்படி வேணா ஆகும்,  ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை “

நீண்ட பெருமூச்சு  விட்டுவிட்டு   ராமப்ரசாத் தொடர்ந்தார்   “என்னோட இருபது வருஷ சர்வீஸ்ல எவ்வளவோ பிரச்சனைகளை ஒடுற ரயில்ல சந்திச்சிருக்கேன்,   ஆனா  இன்னைக்கி தான் இப்படி ஒரு வித்தியாசமான சிட்சுவேஷனை நான் ஃபேஸ் பண்றேன் “

“ பாக்கலாம், எனக்கு டியூட்டி செக்கந்தராபாத் வரை இருக்கு, அதுக்குள்ள ஏதாவது தகவல் வருதான்னு,  வேற ஒருத்தர் டூட்டில வந்து இந்த மாதிரி அசாத்தியமான  பொறுப்பையெல்லாம்  எடுத்துக்கமாட்டாங்க,  ஆயிரம் கேள்வி கேட்பாங்க,   கஷ்டம் தான் “  

அவர் பேச்சில் நம்பிக்கை குறைந்து இருந்தது.

“ சாருக்கு எந்த ஊர் “  ஹரிபாபு கேட்டான்

“ எனக்கு செக்கந்தராபாத்தில் தான் வீடு. 

“எத்தனை குழந்தைகள்  “

“இரண்டும்  பையன்கள் தான்”  ஒருத்தன்  ஃபோர்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறான், இன்னொருத்தன்  செகண்ட் ஸ்டாண்டர்ட்.  ரெண்டாவது பையனுக்கு தான் ஒரு சின்ன ப்ராப்ளம், ஹார்ட்ல துளை இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காரு.  சர்ஜரி பண்ணனும், இரண்டு லட்சம் ஆகும்.  இப்போதைக்கு அவ்வளவு பெரிய அமெளண்ட் என்கிட்ட இல்லை. அதனால தள்ளிப் போட்டுட்டுகிட்டே  வரோம், பணம் கிடைச்ச பிறகு தான் பண்ணனும்.

“ அது சரி  நீங்க எதுவரை போறீங்க “   ராமப்ரசாத்,  ஹரிபாபுவையும்  சந்தியாவையும் பார்த்துக் கேட்டார்.

“ நாங்க ஹைதராபாத்ல இருங்குவோம் சார், சொந்த ஊர் ஹைதராபாத் தான் “

“எங்க வேலை ?

“ரெண்டு பேரும் பிரைவேட் கம்பெனில வேலை செய்யறோம்  சார் “

“ எத்தனை குழந்தைகள் ?

ஹரிபாபுவும்   சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ எங்களுக்கு குழந்தை இல்லை “  ஹரிபாபு சொல்லியபோது  சந்தியாவின் முகத்தில் ஒரு வருத்தம் தெரிந்தது.

அங்கே  ஒரு ஐந்து நிமிடத்திற்கு நீண்ட மௌனம் நிலவியது.  கூடையில் குழந்தை மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

ராமப்ரசாத் ஜன்னல் வழியே  வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.  மை இருட்டை கிழித்துக் கொண்டு ரயில் சென்று கொண்டிருந்தது.  ஊருக்கு வெளியே அருவாளுடன் நிற்கும் ஐயனார் சிலைகள் வேகமாக ரயிலின் வேகத்தில் நொடிப் பொழுதில் காட்சியில் தோன்றிவிட்டு மறைந்தன.

தொண்டையை சரி செய்து கொண்டு “ சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, இந்தக் குழந்தையை நீங்களே எடுத்துட்டுப் போய்டுங்களேன், உங்களுக்கும் குழந்தை இல்லைனு சொல்றீங்க, இதை எடுத்து வளக்கலாமே,  புண்ணியமா போகும்.  எனக்கும் இந்த சூழ்நிலையிலிருந்து விடுபட முடியும்.

 மனுஷ உயிர் விலை மதிப்பில்லாதது.  யாரோ பொறுப்பு இல்லாம இப்படி பண்ணி இருக்காங்க.  சமூகம் ரொம்ப கேட்டு போச்சு, மனுஷ தன்மை இல்லாமல் போய்க்கிட்ருக்கு, எங்கு போய் முடியுமோ  “  விரக்தியில் பேசினார் 

மேலும் தொடர்ந்தார் “ இந்தக் குழந்தையை  முகம் தெரியாத யாருக்கோ   அல்லது அநாதை ஆஸ்ரமத்திலோ கொண்டு விடறதை விட குழந்தை இல்லாம இருக்கற உங்ககிட்ட குடுத்தா பெட்டரா இருக்கும்னு என் மனசில படுது,  ஆனா உங்க வசதி பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. நான் சொல்றது தப்பா இருந்தா அப்படியே விட்டுடுங்க,  நான் பார்த்துக்கறேன்.”

“ விடியற்காலை ஐந்தரை மணிக்கு ஹைதராபாத் போகும், அதுவரை உங்களுக்கு  நிறைய டைம் இருக்கு,  நல்லா யோசனை பண்ணுங்க “  சொல்லிவிட்டு  அப்பொழுது இரயில் ஏறிய சில பயணிகளுக்கு இருக்கைகளை ஒதுக்க கிளம்பினார்.

அவர்கள் இருவருக்கும் இடையே குழந்தையை எடுத்துக் கொள்வது பற்றிய பேச்சு வார்த்தை  தீவிரமாக நடந்தது.  ஆனால் முடிவு எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. 

குழந்தைக்கு ஒரு முறை சந்தியா இரவு  படுக்கப் போகும் முன் பால் புட்டியினுள் இருந்த பாலை புகட்டினாள்.  இரவு மணி பதினொன்றுக்கு  மேல் ஆகி விட்டதால் இருவரும் தூங்கிப் போனார்கள். 

நடு இரவில் குழந்தை அழுத போது கூட  யாரும் எழுந்து கவனிக்கவில்லை. 

அடுத்த நாள் விடியற்காலை ஐந்து மணி,    இரயில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.  வெளியில் இருட்டாக இருந்தது.  அடுத்த பத்து நிமிடங்களில் செக்கந்தராபாத் வந்திருந்தது.  நிறைய பயணிகள்  லக்கேஜ்களுடன் இறங்கிக் கொண்டிருந்தனர்.   

ராமப்ரசாத் டியூட்டி முடிந்து, யூனிஃபார்ம் மாற்றி பாண்ட் ஷர்ட் அணிந்திருந்தார்.  ரிசர்வேஷன் சார்ட் அட்டை மற்றும் கையில் சிறிய பேக் வைத்துகொண்டு இறங்குவதற்கு ரெடியாக இருந்தார்.   குழந்தை இருந்த இடத்துக்கு வந்தார்.  ஸ்விட்சைப் போட்டார்.  ஹரிபாபுவும்   சந்தியாவும்  தனியாக பெர்த்தில்  சற்று தூக்கக் கலக்கத்தில் இருந்தனர், ஆனால் விழித்து இருந்தனர்.

“ என் டியூட்டி இப்போ முடியுது,  நான் சொன்ன விஷயத்தை யோசனை பண்ணிப் பார்த்தீங்களா என்ன முடிவு பண்ணிங்க?  ஆர்வமாகக்  கேட்டார்.

ஹரி பாபு  தயங்கியபடி,  “ இல்லை சார், யோசித்து பார்த்தோம்,  எங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்.  நீங்க எப்படி நினைக்கிறீங்களோ, அப்படியே பண்ணிடுங்க சார் “ 

அவன் சொல்லியபோது சந்தியாவின் கண்களில் ஒரு கலக்கம் தெரிந்தது. பார்க்க விருப்பம் இல்லாமல் கம்பளியை முகம் வரை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

ராமப்ரசாத்திற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.

“ ஓகே,  நோ ப்ராப்ளம், அப்ப நான் குழந்தையை எடுத்துட்டு போறேன்,  பார்க்கிறேன் இங்க ஸ்டேஷன்ல ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட ஒப்படைக்க முடியுமான்னு  “   ராமப்ரசாத் குழந்தையின் துணிகளை அட்ஜஸ்ட் செய்து,  யூரின் போய் இருந்த துணிகளை அப்புறப்படுத்தி வேறு சிறிய அளவிலான இரயில்வே வெள்ளை துணி ஒன்றை மாற்றினார்.   குளிராமல் இருக்க குல்லாவை சரியாக அட்ஜஸ்ட் பண்ணினார்.  

கூடையுடன் குழந்தையை அலுங்காமல்  எடுத்துக்கொண்டு மெல்ல நடை மேடையில்  இறங்கினார்.  வாசல் படிக்கட்டு வரை ஹரிபாபுவும் சந்தியாவும் வந்து வழியனுப்பினர்.  அவர்கள் மனம் கனத்தது.

இறங்கி நடைமேடையில் நடந்தார்.  இருட்டு இன்னும்  விலகாத விடியற்காலை வைகறைப் பொழுது.  ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் ஒருவரும் இல்லை.

 “ஐய்யா இப்போதான் டியூட்டி முடிஞ்சு தூங்கப் போனாரு ” பதிலளித்தான் வேலையில் இருந்த கொடி அசைக்கும் பணியாளி.  அவன் கையில் பச்சை கொடி ரெடியாக  இருந்தது.  வரும் இரயிலை எதிர்பார்த்து கொடியசைக்கக்  காத்திருந்தான்.

அங்கு இருந்த சூழ்நிலை  முற்றிலும் குழந்தையை ஒப்படைக்கும் அளவுக்கு ஏற்றதாக இல்லை.  ஒரு நிமிடம் யோசித்தார்.  யோசித்த வேளையில் குழந்தை அழ ஆரம்பித்தது.  தாமதிக்காமல்  சரேல் என்று ஸ்டேஷன் பின்புறம் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அமர்ந்தார். 

பத்து நிமிடத்தில் அவர் தன் வீட்டை அடைந்தார். குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. காலிங் மணியை அழுத்தினார், சிறிது நேரத்தில் கதவு திறந்து அவரது மனைவி பத்மாவதி  தோன்றினாள். குழந்தையுடன் நின்றிருந்த கணவனைப் பார்த்து ஆச்சர்யத்தில் பதறினாள் 

“என்னங்க யாரோட குழந்தை இது? ஏங்க நம்ம வீட்டுக்கு கொண்டுவந்திருக்கீங்க ? அவரை உலுக்கினாள்.   ஆரம்பம் முதல் ஒரே மூச்சில் அத்தனையும் சொன்னார்.  அவருக்கு தலை வலித்தது.  

“மொதல்ல குழந்தையை வெளியே எடுத்துப் பெட் மேல படுக்க வை, ரொம்ப அவசரம், பால் கொண்டு வா, புட்டியில் இருக்கும் பால்  அனேகமா கெட்டு போய் இருக்கும் “  

குழந்தை விடாமல் அழுதது.

பால் கொடுத்துக் கொண்டே பத்மாவதி குழந்தையின் தலையைக் கோதியதில் மெல்ல  அழுகை நின்று அமைதியானது. இரண்டு குழந்தைகளை வளர்த்த அனுபவம் அவளுக்கு கை கொடுத்தது.  

“ குழந்தையை யார் கிட்ட குடுக்கப் போறீங்க, நாம இப்போ என்ன செய்யணும்” பத்மாவதி  கேட்டாள்.

“ எனக்கே ஒண்ணும் புரியலை, தலை சுத்துது,  கேள்வி மேல கேள்வி கேட்காதே,  இப்போதைக்கு நம்ம வீட்ல இருக்கட்டும், பாக்கலாம் யாராவது குழந்தையை தேடி ஃபோன் பண்றாங்களாண்ணு   “

“ ஃபோன் ஏதும் வரலைன்னா ?

“பாக்கலாம்மா, ராத்திரி முழுசும் நான் இந்த குழந்தையால தூங்கல, இப்போ என்ன கொஞ்சம் தூங்க விடேன்  “  ராமப்ரசாத் கெஞ்சிவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.

பத்மாவதியின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.  எப்படி ஒரு தாயினால் இப்படி சொந்த குழந்தையை வேண்டாம்னு தூக்கிப் போட மனசு வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? உணர்வுப் பூர்வமாக ஒரு பெண்ணால் முடியக்கூடிய காரியமே இல்லை என்று அவளுக்கு மனதில் பட்டது.  குடிகார கணவன் ஒருவேளை இப்படி செய்திருப்பானோ ? அப்படி இருந்தால் அந்த பெற்ற தாய் மனது என்ன பாடுபடும்? எண்ண அலைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. 

குழந்தை பால் குடித்த பின் மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. 

காலை மணி எட்டு ஆகியிருந்தது  பத்மாவின் இரு பையன்களும் எழுந்து புதிய வரவான அந்த பெண் குழந்தையை  ஆச்சரியத்துடன் மெல்ல தொட்டுப்பார்த்துக்கொண்டு இருந்தனர்.   பத்மாவதி  பரபரத்தாள்.  பத்து மணி ஆவதற்கு காத்திருந்தாள்.  

பத்து மணி ஆன போது குழந்தை டாக்டரிடம்  குழந்தையுடன் காத்திருந்தாள், மெடிக்கல் செக் அப் செய்து என்ன ஆகாரம் கொடுப்பது என்றும், சளி பிடிக்காமல் இருக்க மருந்துகளை எழுதி வாங்கி கொண்டாள்.  அடுத்து ரெடிமேட் துணிக் கடைக்கு சென்று சின்ன கவுன், மஃப்ளர் ரப்பர் ஷீட், செரி உணவு டப்பாக்களை வாங்கிக்கொண்டாள்.   

இரண்டு மணி நேரத்திற்குள் அந்த குழந்தைக்கு அசல் அம்மாவாகவே  உருவெடுத்திருந்தாள்.  குழந்தைக்கு சாதனா என்று பெயரிட்டிருந்தாள்.   அவளுடைய உற்சாகமும் அளவு கடந்த ஈடுபாடும்   ராமப்ரசாத்திற்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது.  

அடுத்த பதினைந்து நாட்களில் குழந்தை சாதனா அவர்கள் குடும்பத்துடன் நூறு சதம் ஐகக்கியமானாள். பத்மாவதியின் கை வண்ணத்தில்,  தோற்றத்தில்  புதுப் பொலிவுடன் நன்கு மெருகு எறியேறிந்தாள்.   பெண் குழந்தை இல்லாததால் எல்லோருக்கும்  குழந்தை சாதனாவை பிடித்து விட அனைவரும் அவ்வளவு கொண்டாடினார்கள். அக்கம்பக்கத்தினரும் சாதனாவைக் காண  தினசரி வருவதும் போவதுமாக இருந்தனர்.  

பதினாராவது நாள் காலை ராம்ப்ரசாத்தின் கைபேசி அலறியது.

“ஹலோ சார் ,  நான் ஹரிபிரசாத் பேசறேன், என்னை நினைவிருக்கிறதா?  நானும் என் வொய்ஃப் சந்தியாவும் ரெண்டு வாரத்துக்கு முன்ன டிரைன்ல வந்தோமே, ஒரு குழந்தை கூட யார்துன்னு தெரியாம இருந்ததே,  நீங்க கூட எங்களை எடுத்து வளர்த்துகிறீங்களானு கூட  கேட்டீங்க “

“ஆமாம் சொல்லுங்க, என்ன விஷயம்?

“சார் அந்த குழந்தை இப்போ எங்க இருக்கு? நீங்க சொன்ன மாதிரி ஆஸ்ரமத்திலே ஏதும் சேர்த்துட்டீங்களா “  மிகவும் ஆர்வமாகக் கேட்டான்.

“ இல்லை குழந்தை என் வீட்டிலே தான் இருக்கு,   ஏன் கேக்குறீங்க ? “

“ சார் அன்னைக்கு இரயில இருக்கறபோது,  நீங்க எடுத்துட்டு போய் வளர்க்கறீங்களான்னு கேட்டீங்க,  எங்கலாள அப்போ  எந்த முடிவும் எடுக்க முடியலை,  ஆனா என் வொய்ஃப் சந்தியா அப்போவே தைரியம் சொன்னா, எனக்கு தான் தைரியம் வரலை சார்.   மேலயும் , என்  வொய்ஃப்க்கு குழந்தை பிறக்கிற பாக்யம் இல்லைனு டாக்டர் தெளிவா சொல்லிட்டாரு சார் .

இப்போ எல்லாத்தையும் யோசனை பண்ணிப் பார்த்தோம், நாங்க அன்னைக்கு வேணாம்னு சொன்னது முட்டாள்தனமா தெரியுது, நாங்க இப்போ ரொம்ப இண்டரெஸ்ட்டடா    இருக்கோம்,  குழந்தை ஒருவேளை உங்ககிட்ட இருந்தா குடுக்க முடியுமானு  கேட்க தான் ஃபோன் பண்ணினேன் சார்,  உங்க ஃபோன் நம்பர்  கூட ஸ்டேஷன்ல கஷ்டப்பட்டு தான் வாங்கி இப்போ ஃபோன் பண்றேன் சார் “  ஹரிபாபு மூச்சு விடாமல் பேசினான்.

ராமப்ரசாத் யோசித்தார்   “அப்படியா ? இந்த பதினைந்து நாள்ல குழந்தை இப்போ எங்க ஃபேமிலில ஒன்னா ஐக்கியம் ஆயிடுச்சு, பேர் எல்லாம் கூட வச்சுட்டோம்,  இவ்வளவு நாள் கழித்து கேட்கறீங்களே? சரி எனக்கு ஒண்ணும் இல்ல,  எதுக்கும் என் வீட்டுக்கு வாங்க, என் வொய்ஃப் கிட்ட  பேசலாம், ஏன்னா அவதான் குழந்தைய பார்த்துக்கறா,  அவளுக்கு சம்மதம்னா நீங்க குழந்தையை  எடுத்துக்கலாம் “   ராமப்ரசாத் பேசி முடித்து அட்ரஸ் அனுப்பினார்.

அடுத்த நாள் காலை பத்து மணி.  ஹரிபாபுவும் சந்தியாவும் வந்திருந்தனர்.  தொட்டிலில் இருந்த குழந்தையை கொஞ்சினர்.  

ஏதோதோ பேசினர், பத்மாவதிக்கு அவர்களை கொஞ்சமும் பிடிக்கவில்லை, அவர்கள் சொன்னது எதுவும் அவள்  காதில் ஏறவில்லை,  குழந்தை சாதனாவை அவர்களிடம் கொடுப்பதில் அவளுக்கு இம்மியளவு கூட இஷ்டம் இல்லை. 

தனியே கணவர் ராம்ப்ரசாத்திடம் பேசினாள்,  சாதனாவை குடுக்க வேண்டாம் என்று மன்றாடினாள்.

“ அப்போ வேணாம்னு சொன்னவங்களுக்கு இப்போ ஏன் பட்டு கம்பளம் விரிச்சு கூப்பிட்டு அனுப்பி குழந்தையை கொடுக்கப் பார்க்கறீங்க “  கோவத்தில் பொறிந்து தள்ளினாள்.  

“பத்மா,  தயவு செய்து புரிஞ்சுக்கோ, அந்த பெண்ணுக்கு குழந்தை பெத்துக்கற பாக்யம் இல்லை, ஏதோ உடம்புல குறைன்னு டாக்டர் சொல்லிட்டாராம், அது தான் கெஞ்சிக் கேட்கறாங்க, பார்த்தா பாவமா இருக்கு,  நமக்கு தான் ஒண்ணுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கே, நாம விட்டு கொடுத்துடலாம்னு தோணுது,  மேலயும் நம்ம பையன் ஆபரேஷனுக்கு ஐம்பதாயிரம் கொடுக்கறதா வேற சொல்லியிருக்காங்க “ ராமப்ரசாத் சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தார்.

“ஓஹோ  சபாஷ், பணத்துக்காக ஒத்துக்கிட்டிங்களாக்கும் “  ஏளனமாக சிரித்தாள்.  விரக்தியுடன்  “சரி சரி,  நீங்க கொண்டு வந்த குழந்தை, நீங்க என்ன வேணா செய்யலாம், நான் யார் தடுக்கறதுக்கு, நான் பதினைந்து நாள் அம்மா தானே  “  சொல்லிவிட்டு அங்கு நிற்க பிடிக்காமல்  கண்ணீருடன் சற்று நகர்ந்தாள்.

இரண்டு அடி எடுத்து வைத்தவள், கலங்கிய கண்களுடன் சொன்னாள், “குழந்தை சாதனாவை அவர்களிடத்தில் கொடுக்கும் போது இங்கு நான் இருக்க விரும்பவில்லை,  என்னால் தாங்கிக் கொள்ளவும் முடியாது,  அவர்கள் போன பின் எனக்கு ஃபோன் செய்யுங்க, நான்  பக்கத்துல இருக்கற கோவிலுக்குப் போய் விட்டு வறேன்  “

ராமப்ரசாத்துக்கு அவள் வருத்தம் புரிந்து தான் இருந்தது, ஆனால் பெண் குழந்தையாயிற்றே, வளர்ப்பது சிரமம், பிற்காலத்தில் சிலவுகள் அதிகம், பையனின் ஆபரேஷன் சிலவுகள் வேறு  கண் முன் நிற்கிறது.  இப்போது வாய்ப்பு வரும்போது அவர்களிடத்தில் கொடுத்து விடலாம், அவர்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை என்று  கூட்டிக் கழித்துப் பார்த்ததில் அவர் மனதில்  அவர் எடுத்த முடிவு சரிதான் என்று மனதில் எண்ணங்கள் ஓடியது. 

அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்.   ஹரிபாபுவும் சந்தியாவும் குழந்தை சாதனாவை இன்னமும் ஆசையுடன்  தொட்டுப் பார்த்து விளையாட்டு காட்டி கொஞ்சிக் கொண்டிருந்தனர்.  

ராமப்ரசாத் குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்தார், சந்தியாவின் கைகளில் ஒப்படைத்தார்.

“ உங்க விருப்பப்படியே குடுத்துட்டேன்,  நல்லபடியா வளர்ப்பது உங்கள் கையில்தான் இருக்கு, ஆல்  தி பெஸ்ட் “ 

“ சார் பெரிய உதவி பண்ணி இருக்கீங்க, ரொம்ப நன்றி, இந்த உதவியை எப்பவும் மறக்க மாட்டோம்.  இந்தாங்க இந்த கவரில்  ஐம்பதாயிரம் இருக்கு, எங்கலாள முடிஞ்சது, பையன் ஹார்ட் ஆபரேஷன் சிலவுக்கு வச்சுக்கோங்க, ஆபரேஷனை நல்லபடியா முடிங்க  “  ஹரிபாபு நன்றியுடன் கொடுத்த கவர் கை மாறியது.

அப்போது அங்கு இருக்கப் பிடிக்காமல் கோவில் வரை சென்று விட்டுவருகிறேன் என்று சொல்லிச் சென்ற பத்மாவதி கோவிலுக்குள் செல்லாமல் பாதி வழியிலேயே மனது மாறி வேக வேகமாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் நடையில் கோபமும்,  முகத்தில் கலவரமும், படபடப்பும் தென்பட்டது.  வீட்டினுள் புயலென நுழைந்தாள்.  எதிரே குழந்தை சாதனாவை தோளில் சாய்த்தபடி  ஹரிபாபுவும் சந்தியாவும் புறப்பட தயாராக இருந்தார்கள்.

பத்மாவதிக்கு  கண்ணில் நீர் தளும்பியது,  ஓவென்று அழுதாள், “ ஒரு நிமிஷம் நில்லுங்க, குழந்தைய தயவு செய்து இப்படி குடுங்க. “ 

குழந்தை சாதனா கை மாறியது

பத்மாவதி கண்டிப்பான குரலில் “ பிளீஸ் மன்னிச்சுடுங்க, என்னால இந்த குழந்தையை உங்ககிட்ட குடுக்க முடியாது,  மனதளவிலும், உடலளவிலும் நான் இந்தக் குழந்தைக்கு ஏற்கெனவே  தாயாகி விட்டேன்,  நான் மட்டும் இல்ல என் ரெண்டு  பையன்களும் எங்கள் வீட்டுல பிறந்த பெண்ணாக,  தங்கச்சி பாப்பாவாதான் நினைக்கிறாங்க, எங்கள் வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி இவள், திருப்பி அனுப்ப முடியாது  “ 

“ அன்னைக்கே இரயில்லே,  சார் உங்களைக் கேட்டபோது சரின்னு சொல்லி கொண்டு போய் இருந்தீங்கன்னா நான் பிக்சர்லயே வந்து இருக்கமாட்டேன், ஆன இப்போ என்னால கண்டிப்பா  குடுக்க முடியாது,  ரொம்ப சாரி “ என்று சொல்லிவிட்டு விருட்டென்று  குழந்தை சாதனாவை நெஞ்சோடு அணைத்து  தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.

ராமப்ரசாத், அவர்கள் முன் செய்வதறியாது நின்றிருந்தார்.  உணர்ச்சிகளின் பிழம்பில் எல்லோரும் இருந்த நிலையில், ஹரிபாபுவின் கையில்  ஐம்பதாயிரம் பணம்  உள்ள கவரை வலுக்கட்டாயமாகத் திணித்து கை கூப்பி அவர்களுக்கு விடையனுப்பினார் .

வி. ஆர். ரவிக்குமார்

===0000===

Series Navigationசந்தைக்குப் போனால்…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *