Posted in

காலாதீதன் காகபூஶுண்டி

This entry is part 4 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி

இது ஏற்கனவே நடந்திருக்கிறது.
முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.
ஏதோவோர் மதுரை ஞாபகம் போல்
எங்கேயோ பார்த்துப் பழகின பேசிய ஞாபகம்!
எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது.

புதிதாக ஒன்றும் இல்லை.

காலம் இவ்வுலகை பட்சணமாய்த் திண்கிறது.
ஓட்டைக் குடத்தில் ஒழுகும் நீர்போல்
நொடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.
காலம் உண்ணும் இவ்வாழ்க்கையைக்
காலாதீதன் நான் கூறுகிறேன்!
கோடி பிரம்மாக்களை உண்டுவிட்டேன்.
எத்தனை தடவை இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம்

நடந்தாயிற்று! பார்த்தாயிற்று!
எத்தனை தடவை கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு
கீதோபதேஶம் செய்தாயிற்று!

எத்தனையெத்தனை தேவதைகள் அஸுரர்கள் மானுடர்கள்

தாவர-ஜங்கமங்களனைத்தையும்,
எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டேன்.
எத்தனையெத்தனை மஹாப் பிரளயங்கள்,
எத்தனையெத்தனை மஹா ஸ்ருஷ்டிகள்,
எத்தனையெத்தனை மஹா ஸ்திதிகள்!
காலம் வாழ்க்கையை விழுங்கிக் கொண்டேயிருக்கிறது.
இமாலயத்தில் உயரிய ஓர் மரத்தின் பொந்தில் காக்கையாக

வஸிக்கின்றேன்.

என்னைப் பார்க்க வந்தார் வஸிஷ்ட மாமுனி
இருபத்தியெட்டாம் (28-வது) தடவையாக.
நாங்கள் பத்து யோக-யோகினிகளாகப் பிறந்தோம்

எங்கள் பெற்றோர்களுக்கு.

எனக்கு மாத்திரம் இச்சரீரத்தை ஸ்வீகரிக்கும் நிலை.

என் விதி நான் மட்டும் இப்படி.

2

மற்ற ஒன்பதின்மரும் ஒழிந்து போனார்கள் காலப்போக்கில்.

ஒவ்வோர் மஹாப் பிரளயத்திலும்
பூமி ஜலத்தில் மறையும்போது
ஜலமாகி விடுவேன்!
ஜலம் நெருப்பில் மறையும்போது
நெருப்பாகி விடுவேன்!
நெருப்பு காற்றில் மறையும்போது
காற்றாகி விடுவேன்!
காற்று வெளியில் மறையும்போது
வெளியாகி விடுவேன்.

ஒவ்வோர் மஹா ஸ்ருஷ்டியின்போதும் இவையெல்லாம் தலைகீழ்!
வெளியிலிருந்து காற்றாய், காற்றிலிருந்து நெருப்பாய்,

நெருப்பிலிருந்து நீராய்,
நீரிலிருந்து நிலமாய்,

அடுத்த கல்பத்தில் இதே காக்கையாக
இதே மரத்தில் அமர்ந்திருப்பேன்.
என்னைக் காண வருகிறார் வஸிஷ்ட மாமுனி
இதே நேரத்தில் இதே இடத்தில்
இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே
இருபத்தியெட்டாம் (28-வது) தடவையாக!

மாயைக்குள் என்னவெல்லாமோ இருக்கலாம்! நடக்கலாம்!
சொல் ஒரு சூது! இருபுறமும் ஓடும் காக்கைக் கண்!
காலமும் ஒரு சூதே! பிரதக்‌ஷிணமாகவோ அல்லது
அப்பிரதக்‌ஷிணமாகவோ ஓடும் பச்சோந்திக் கண்!
நீர்க்குமிழியைப் போல் காலம் நிலைக்காமல்,
லக்ஷ்மியும் அப்படித்தான்! ஶபலை!
எங்கேயும் நிலைப்பதில்லை!
மின்னலைப் போல் ஜீவிதம்!
ஶ்ரீமாந் நாராயணன் எங்கேயோ அங்கேயே
ஸ்திரமாய் இருக்கிறாள் லக்ஷ்மி!
மின்னலைப் போல் வாழ்வு
தோன்றி மறைந்து
மறைந்து தோன்றி

3

ஸம்ஸார சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கின்றது,

ஜாக்கிரதை!

பகவானிடம் இறைஞ்சு! ஶரணாகதி பண்ணு!
காப்பாய்! காப்பாய்! காப்பாய்! இறைஞ்சுவாய்!

இந்தச் சாக்கடையிலிருந்து
கரையேத்து எம்மை ஶ்ரீமந் நாராயணரே!
பிறக்கும்போது அழுதுகொண்டேதானே

பிறக்கிறோம்.
எங்கிருந்தோ வருகிறது
உணவும் ஸமாதானமும்!
அழுதால் உம்மைப் பெறலாமோ?
வலி வந்தால் நிவாரணமும்
நிவிருத்தியும் நிச்சயமாக வருமோ?

ஸம்ஸார துக்கத்தின் அடி ஆழத்தைத் தொட்டோமானால்

வராமலிருப்பாரா குரு?
விவேகமிருந்தால் வைராக்கியம்,
வைராக்கியமிருந்தால் ஞானம்,

ஞானமிருந்தால் முத்தி, முத்தியானால் வீடுபேறு!

ஞானி உண்கிறான் காலத்தை!
அஞ்ஞானி உண்ணப்படுகின்றான் காலத்தால்!
விவேகிகளுக்கு எங்கேயும் எதிலும்
துக்கம்தான், துன்பம்தான்,
தன்னைத்தவிர.

விட்டில் பூச்சிகளையும் மின்மினிகளையும் பார்த்து

விடுகின்றேன் ஏக்கப் பெருமூச்சு!
மறதியும் மரணமும் மடமையும்

மட்டற்ற மகிழ்வா? துக்கமா? ஒப்பு-உயர்வில்லா வரமா? ஶாபமா?

எல்லாமே பூரணந்தான்!
பூரணம் பூரணத்திடம் கேட்கிறது.
பூரணம் பூரணத்திடம் சொல்கிறது.
அதுவும் பூரணம், இதுவும் பூரணம்!
நீயும் பூரணம், நானும் பூரணம்!
பூரணத்திலிருந்தே பூரணம் வந்தது.

4

பூரணத்திலிருந்து பூரணத்தையெடுத்தால்

பூரணமே எஞ்சும்!

யோகியும் இல்லை! போகியும் இல்லை! ரோகியும் இல்லை!
ஞானியும் இல்லை! அஞ்ஞானியும் இல்லை!
இரட்டைகள் மற்றும் முப்புடிகள் வெறும் தோற்றமே!

ஸம்ஸாரம் நிஜத்தில் இல்லை!

பாலகிருஷ்ண நாயரை அவரது நான்காவது குழந்தை
ஒன்பது வயதேயான அரவிந்தனின் மரணம் அடியோடு மாற்றியது.
அரவிந்தன் “ௐ நம: ஶிவாய” பஞ்சாக்ஷர ஜெபத்தினிடையில்
ஆஸ்பத்திரியில் கொடிய நோயின் வலியிலும்
முகத்தில் முறுவலுடன் நிறைவாக உயிர் துறந்தான்.

நாயர் எடுத்தார் சபதம், தான்

விட்டால் உயிரை அரவிந்தனைப் போல் விடுவேனென்று.
நாயரும் தன் படிப்பு ஆராய்ச்சியை அத்வைத
தத்துவ விளக்கத்திலும் பிரசாரத்திலும் செலவிட்டார்.
ப்ரௌடமான பாஷ்யம் இயற்றினார் பிரஸ்தான த்ரயத்திற்கு.

அத்வைத தத்துவ ஆசார்யரானார்.
கேரளமெங்கும் நாயரின் ப்ரவசனம் நடந்தேறிற்று.

பாலகிருஷ்ண நாயரின்
காகபூஶுண்டி உபாக்யானத்திலும்

காக்கை வந்தது!

முதலில் ஜன்னலில் அமர்ந்து கேட்டது!
பிறகு அவர் தோளில், பின்னர் அவர் மடியில்

அமர்ந்து கேட்டது!

அவரும் அதைப் பொருட்படுத்தாமல் உரையாற்றி முடித்தார்.

புராணங்கள் மற்றும் ஶாஸ்திரங்கள் கூறும்
யோகிகள் வெவ்வேறு ஶரீரங்கள் எடுப்பதில்லையா,
அம்மாதிரி யாராவது வந்திருப்பார்களாக்கும்!

ஓர் நாள் நாயரும் மறித்துப் போனார் மருத்துவ சாலையில் நோயில்

கிடந்து

அவர் நோயுற்றிருந்தபோது யாராவது உடல்நலம் விசாரித்தால்
“மண்ணாங்கட்டி! ஆஸ்பத்திரி, டாக்டர்கள், இச்சரீரம், வியாதி இவை
எதுவும் இல்லை, பிரம்மம் ஸத்தியம், ஜகத் மித்தை” என்று வைவார்.

5

“ஏக ப்ரஹ்ம வஸ்துவே எங்குமுளது, வேறேதுமில்லை” என்று

உயிர்துறந்தார்.
ஞானி காலத்தை உண்கிறான்.
ஜீவனைக் காலம் உண்கிறது.

ப்ரஹ்ம மாயையே காலமும்-கல்பமும், சொல்லும்-சூதும்.

இது ஏற்கனவே நடந்திருக்கிறது.
முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.
எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது.

புதிதாக ஒன்றும் இல்லை.

Series Navigationபசியாறலாமா?கனடா, குரும்பசிட்டி நலன்புரி சபையினரின் நூல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *