வெங்கடேசன் நாராயணசாமி
கோபிகைகளின் இனிய கீதம்
கோபிகைகள் கூறுகின்றனர்:
[ஶ்ரீம.பா. 10.31.1]
வெல்க
இவ்விரஜ பூமி
இங்கு நீர் பிறந்ததால்
தங்கினாள் திருமகள்
இங்கு நிரந்தரமாக.
உம்மிடமே உயிரை வைத்து
உம்மையே சாரும் உன்னடியார்
உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம்
உற்று பாரும் அன்பரே!
[ஶ்ரீம.பா. 10.31.2]
குதிர்காலக் குளத்தில்
பூத்த பங்கயத்தைப் பழிக்கும்
செங்கமலக் கண்ணா! வரதா!
கூலியில்லாக் கொத்தடிமைகள் எம்மை
கொல்லாமல் கொல்கிறாயே நின்
கடைக்கண் பார்வையாலே எமதன்புக் காதலா!
[ஶ்ரீம.பா. 10.31.3]
யமுனையின் விடநீர்,
மலைப்பாம்பாம் அகாஸுரன்,
இந்திரன் ஏவிய பெருமழை பேய்க்காற்று,
காட்டுத்தீ மின்னல்,
எருதாம் அரிஷ்டாஸுரன்,
மாயையின் மகனாம் வியோமாஸுரன், முதலிய
தீங்கனைத்தும் அழித்து
ஒவ்வோர் முறையும் எம்மைக் காத்தருளிய
ஆணழகா! அடலேறே!
[ஶ்ரீம.பா. 10.31.4]
அசோதை மைந்தன் மட்டும் அல்ல அமுதனே நீர்,
அனைத்துயிர் உள்ளுறை ஸாக்ஷி ஆன்மா.
அகிலம் காக்க அயன் வேண்ட
அறம் வளர்த்த யது குலத்தில்
அவதரித்த அமரர் ஏறே!
[ஶ்ரீம.பா. 10.31.5]
பிறவித் துயர் நீக்கி
மருளாத் துணிவு மற்றும்
வேண்டுவன வழங்கும்
திருவின் திருக்கரம் பற்றிய
தாமரைக் கரந்தனை தங்கள்
திருவடி பற்றிய எம்முடியில் வைத்து
திருவருள் புரிவீர் விருஷ்ணி குல திலகமே!
[ஶ்ரீம.பா. 10.31.6]
விரஜ மக்கள் வியஸனம் தீர்க்கும் வீரனே!
நின்னடியார் வீண் செருக்கை
வீழ்த்தினாய் இன்முறுவலால்.
ஏற்ப்பாய் எடுபிடிப் பெண்களாம் எம்மை
எழில் பொங்கும் நின் கமல வதனம் காட்டி.
[ஶ்ரீம.பா. 10.31.7]
பணிவோரின் பாவம் அழித்தும்,
ஆமேய்த்தும், அலைமகள் உய்த்தும்,
அரவின் தலைவைத்து அசைத்தும் ஆன
செங்கமலச்சீரடிகள் எம்
கொங்கையில் வைத்து,
அணைப்பீரெமகக் காமத்தீ!
[ஶ்ரீம.பா. 10.31.8]
தேனினும் இனிய குரலால்
வஶீகரிக்கும் பேச்சால்
கற்றோரைக் கவர்ந்திழுக்கும் கருத்தால்
மயங்கி நிற்கும் தாசிகள் எம்மை
செங்கமலக்கண்ணா! நும்
திருக்கனி வாயமுதம் ஈந்து
திருப்தி செய்து தேற்றுவீரே!
[ஶ்ரீம.பா. 10.31.9]
நின் திருக்கதையமுதம், தித்திக்கும்
தீங்கனிச் சுவையமுதம்,
முத்துயரால் வாடுவோரை
வாழவைக்கும் உயிரமுதம்,
உயர்ந்த கவியமுதம்,
பாவம் போக்கும் புனித நதியமுதம்,
செவிமடுத்துக் கேட்க நிறையும் நெஞ்சமுதம்,
சீர்மிகு செல்வம் தரும் செழிப்பமுதம்,
திசையெட்டும் திரளும் தெள்ளு தமிழமுதம்,
இப்புவியில் பாவலரால் பாடிப் பரவும் பண் அமுதம்,
இதுவே எம்மின் நல்லூழ் நலமமுதம்.
[ஶ்ரீம.பா. 10.31.10]
அன்பே! தங்கள்
இன்முறுவலும், கனிவு கனிந்த கண்ணாடலும்,
இன்ப அந்தரங்க திருவூடலும் கூடலும்
இன்னமும் தியானிக்கத் தெவிட்டா தேனமுதம்.
தன்னந் தனிமையில் தாங்கள் பேசிய
உணர்வையுன்னும் காதல் மொழிகள், கள்வரே!
எமது உள்ளத்தைக் கிறங்க அடிப்பதேன்?
[ஶ்ரீம.பா. 10.31.11]
ஆநிரை மேய்க்க ஆய் விட்டு கானேகும்
செந்தாமரையைப் பழிக்கும் நின் செவ்விய சேவடி, நாதனே!
கல் முள் புல் தைத்து நுணங்கி நோகுமென
கலங்கியே எமது நெஞ்சம்,
எண்ணியெண்ணி மலங்கும் காந்தனே.
[ஶ்ரீம.பா. 10.31.12]
கானகம் விட்டு கருக்கலில்
கோகுலம் திரும்பி,
கனத்த புழுதி படர்,
கருங்குழல் மறைத்த நின்
கமலத் திருமுகம் காட்டி,
அனுதினமும் காமன் அம்புகளால்
அடிமைகளாமெம் நெஞ்சினில் இன்பக் கனலை
எழுப்பி நினைவழிக்கும் நீலவண்ணரே!
[ஶ்ரீம.பா. 10.31.13]
மலரவன் வணங்கும் மலரடி,
அடியவர் கோரிய வரந்தரும் வள்ளல் சீரடி,
பூமியின் பூடணமாம் பொன்னடி,
ஆபத்தில் உதவும் அருட்சேவடி,
நலம் பல நல்கும் நற்கழலடி,
மன நிறைவளிக்கும் மால் திருவடி,
மனத்துக்கினியானே! வைப்பீர் நின் மணியடியை
எமது ஸ்தனங்களில்!
ஒழிப்பீரெமது மன உளைச்சலை!
[ஶ்ரீம.பா. 10.31.14]
மாற வீரரே! சிறிது பருகத் தருவீர்
நினது பவளவாய் உதட்டமுதம்!
அறனீனும் திறனீனும் இல்லற இன்பமுமீனும்
நின் திருக்கனிவாயமுதம்.
துயர் நீக்கும் நற்றுணையமுதம்.
மாயப் பற்றறுத்து மெய்ப்பொருளை
ஓதியுணர்த்தும் நான்மறை நற்சுடரமுதம்.
குழல் பருகிய நின் கொவ்வைச் செவ்வாயமுதம்
குவலயத்தை மயக்குவிக்கும் கோலக் குயிலமுதம்,
இம்மானுடம் உய்ய எல்லையிலா
இன்பமூட்டும் இறையமுதம்.
[ஶ்ரீம.பா. 10.31.15]
காலையில் கானகம் ஏகிய கண்ணனைக்
காணா ஒவ்வோர் கணமுமோர் கற்பம்.
மாலை திரும்புகையில், சுருள் கருங்குழல் கூடியக்
காந்தன் திருவதனம் தன்னைக்
கண்ணிமைத்துக் காணும் கணிமை கடிவோம்!
கணிமை கணித்தவன் கற்றறியா
மூடனோ? அந்தகனோ? அனந்தலோ?
[ஶ்ரீம.பா. 10.31.16]
மணாளர் மக்கள் உற்றார் உறவினர்
உடன் பிறப்புகள் என்று
அனைவரையும் அப்படியே விட்டுவிட்டு
வந்தோமிங்கு அச்சுதரே! உமதினிய
வேய்ங்குழல் பொழி
மதுர மோஹன கீதம் மயங்கி
ஒவ்வோரசைவின், செயலின் குறிப்பறிந்து
இந்நடுநிஶியில் உமதருகில் வந்த எம்மை
விட்டகல்பவர் வேறெவர்
வஞ்சகரே, உம்மைத் தவிர?
[ஶ்ரீம.பா. 10.31.17]
தனிமையின் இனிமையில் தாங்கள் நடத்திய
அந்தரங்க நகைச்சுவை உரைகள்
எங்களிதய அரங்கில் எழுப்பும் இன்ப அலைகளை.
புன்னகை பூத்த தங்கள் திருமுகம்,
அன்புகனிந்த தங்கள் திருப்பார்வை,
அகன்று விரிந்த அலர்மேல் மங்கையுறை திருமார்பு இவற்றைத்
திரும்பத் திரும்ப கண்டுகளித்து
எமதுள்ளத்துள் மூண்ட மோகத்தணல்
ஆர்வமெனும் ஆநெய்யால் கொழுந்து விட்டெரிய
வெந்தும் வேட்கை தணியா தப்தாய பிண்டமானோம்.
[ஶ்ரீம.பா. 10.31.18]
அன்பரே! அகிலமனைத்திற்கும்
நலமருளும் தங்கள் திருவவதாரம்
ஆயர்பாடி மற்றும் வனமுனிகட்கும் ஏற்படும்
தீமையைச் சுட்டெரிக்கத்தானே?
உமது அடியவர்களின் மன உளைச்சல் நீங்க
மருந்து ஏதாவது இருப்பின்,
அடிமைகளாமெமக்கும் சிறிது
அளித்தருளுங்கள்.
[ஶ்ரீம.பா. 10.31.19]
மெல்லினும் மென்மையாமுமது செந்தாமரைச்
சேவடிகள் நுணங்கி நோகுமென்றஞ்சியே
மென்னினும் மெல்ல வைப்போமெமது கடின கொங்கைகள் மேலே.
அச்செவ்விய சீரடிகள் அடவியை அளக்கும்போது, அன்பரே!
ஆங்கே கூறான கற்கள் முட்கள் குத்தி வருந்துமோ என்று
அடிமையெமுயிராமும்மை எண்ணியே கலங்கி நிற்போம்.