விடுதலை

author
0 minutes, 9 seconds Read
This entry is part 4 of 4 in the series 15 செப்டம்பர் 2024

கங்காதரன் சுப்ரமணியம்

நான் அந்த பெண்மணியை முதன்முதலாக சந்தித்தது எங்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே இருந்த காய்கறிக்கடையில் தான். அடுத்த சில நாட்களுக்கு வேண்டிய காய்கறிகள், பழங்களை வாங்கிய பின், மொபைல் ஃபோனை எடுக்க ஜோல்னா பைக்குள் கையை விட்டு துழாவிய போதுதான், வீட்டிலேயே மறந்து வைத்து வந்தது தெரிந்தது. கூகுள்பே, பேடீயெம் என்று வசதிகள் வந்தபின், பர்ஸை எடுத்துக் கொண்டு வரும் பழக்கம் அறவே போய்விட்டது. சில்லறைக்கு அலைய வேண்டியதில்லை, பாருங்கள். என்னுடைய நிலமையைப் புரிந்து கொண்ட கடைக்காரர், “பரவாயில்லை சார். நாளைக்கு குடுங்க” என்றார். எனக்கு அதில் உடன்பாடில்லை. காரணம், இப்பொழுதெல்லாம் ஞாபகமறதி ஜாஸ்தியாகி விட்டது. தினமும் மூக்குக் கண்ணாடியைத் தேடவே நேரம் போதவில்லை. இதில், யாருக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்பதை எங்கே நினைவில் வைத்துக் கொள்வது. பில்லை வாங்கிக் கொண்டு,  “ஒரு அரை மணி நேரத்தில் கொண்டு வந்து குடுத்துடறேன்” என்றேன். 

அப்பொழுது தனக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க வந்த அந்த பெண்மணி, “மாமா, நான் உங்களுக்கும் சேர்த்து குடுத்துடறேன். நீங்க அப்பறமா பணம் குடுத்தனுப்புங்கோ” என்றார் சிறிய புன்சிரிப்புடன். அவருக்கு கிட்டத்தட்ட ஒரு அறுபது வயது இருக்கும். சிவந்த நிறத்துடன், பார்க்கவே லக்ஷ்மிகரமாக இருந்தார். இன்னும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பெண்கள் நகரங்களில் இருக்கிறார்களா என்ன? என்னுடைய மனைவி மீனாக்ஷி இருந்தவரை மஞ்சள் தேய்த்துக் குளித்து பார்த்ததில்லை. ‘யார் இவர்? எங்கோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது, அந்த மாமி “நாங்க E-504’ல இருக்கோம். உங்க வீட்டு கிச்சன்லேர்ந்து பார்த்தீங்கன்னா, எங்க வீட்டு கிச்சன் தெரியும். உங்க வீட்ல வேல செய்யற சரோஜாதான் எங்க வீட்டலேயும் வேல செய்யறா. அவகிட்டே நீங்க பணம் குடுத்தனுப்புங்கோ போதும்” என்றார்.

பணம் கொடுத்தபின், இருவரும் ரோட்டைக் கடந்து அபார்ட்மெண்ட்டை நோக்கி நடந்தோம். ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக, “மாமா எங்கே வேலையில் இருந்தார்” என்று கேட்டேன். “ரயில்வேஸ்லே இருந்தார், மாமா. இப்போ ரிடையர் ஆகி பத்து வருஷம் ஆறது. மெட்ராஸ்ல சொந்த வீட்டுல இருந்தோம். எங்க பையன்தான் ‘நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் தனியா அங்கே இருக்கீங்க? பெங்களூருக்கே வந்துருங்கோன்னு’ சொல்லி இந்த ப்ளாட்டை வாங்கி எங்களை இங்க தங்க வைச்சுட்டான்.  அவன் சர்ஜாபூர்லே இன்னொரு ஃப்ளாட்ல இருக்கான். சின்ன பையன் பூனாலே இருக்கான். நாங்க இங்கே வந்து ரெண்டு வருஷம் ஆச்சு” என்றார். தொடர்ந்து, “உங்காத்து மாமியைப் பத்தி இங்கேயிருக்கிற லேடீஸ் எல்லாம் அடிக்கடி ரொம்ப உயர்வா பேசிப்பா. சரோஜா உங்களைப் பத்தியும்  சொல்லி இருக்கா” என்றார். அதற்குள் வீட்டிற்கருகில் இருந்த பார்மஸியை நெருங்க, “கொஞ்சம் மெடிசன்ஸ் வாங்கணும். வரேன் மாமா” என்று விடை பெற்றுக் கொண்டார். “ரொம்ப தேங்க்ஸ்” என்றேன். “ஐயோ, எதுக்கு தாங்க்ஸ் எல்லாம்” என்றார்.

‘நம்ம அபார்ட்மென்ட்லயே ரெண்டு வருஷமா இருக்காங்க. எனக்கு தெரியவே இல்லையே’ என்று நினைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இங்கேயே இருந்தாலும், ஒரு சிலரைத் தவிர யாரையும் எனக்கு பழக்கமில்லை. காலை வாக்கிங் போகும் போது எதிர்ப்படும் சிலரைப் பார்த்து ‘ஹலோ’ என்று கை அசைப்பதோடு சரி. சுபாவமாகவே நான் கொஞ்சம் சங்கோஜி. யாரிடமும் அதிகமாக பேசமாட்டேன். வெளியாட்களுடன் மட்டுமில்லை, உறவினர்களுடனும்தான். கண்யாணமான புதிதில் ‘என்ன, மாப்பிள்ளை யாருடனும் ஒட்டமாட்டேன்கிறார்’ என்று ஆதங்கப்பட்ட என் மாமனார், பிறகு அது என் சுபாவம் என்று புரிந்து விட்டு விட்டார். ஆனால், மீனாக்ஷி எனக்கு நேர் எதிர். எல்லோருடனும் சகஜமாக பழகுவாள். அபார்ட்மென்ட்டில்  லேடீஸ் க்ரூப்புக்கு அவள்தான் தலைவி. இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவாள். எல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன் அவள் திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் போவதற்கு முன்பாக.

நாளைக்கு மாமிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மறக்காமல் சரோஜாவிடம் கொடுத்தனுப்ப வேண்டும் என்று நினைத்து, டைனிங் டேபிள் மேல் நூறு ரூபாய் நோட்டை வைத்து, அதன் மேல் ஒரு டம்ளரையும் வைத்தேன். சரோஜா என்னைப் பற்றி சொன்னாள் என்று மாமி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவள்தான் இங்கே ‘ஆல் இண்டியா ரேடியோ’. அபார்ட்மெண்ட்டிலுள்ள எல்லார் வீட்டிலும் என்னென்ன நடக்கிறது என்ற தகவல்களை சேகரித்து மற்றவர்களிடம் சொல்லவில்லை என்றால் தலையே வெடித்து விடும் அவளுக்கு. ‘என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாள்?’ என்று யோசித்தேன். என்ன பெரிதாக இருக்கிறது சொல்ல? அரசாங்க உத்யோகத்திலிருந்து ரிடைர்ன்மெண்ட் ஆகி பத்து வருடங்களாகிறது. மீனாக்ஷி போனதிலிருந்து நான் மட்டும் தனியாகவே இந்த ஃப்ளாட்டில் சமைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. போகப்போக பழகிவிட்டது. எங்களுடைய பெரிய பையன் கிஷோர் அமெரிக்காவில் வேலை செய்கிறான். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை குடும்பத்தோடு வந்து போவார்கள். வாரந்தோறும் ஃபோன் செய்து பேசுவான். சின்னவள் சித்ரா இங்கேயே டீச்சராக வேலை செய்கிறாள். மாப்பிள்ளைக்கு ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. என்னைப் பார்க்க வரும் போதெல்லாம் தன் கூடவே வந்துவிடும்படி சித்ரா வற்புறுத்துவாள். எனக்குத்தான் எங்கேயும் போக விருப்பமில்லை. கை கால்கள் சரியாக இருக்கும் வரை தனியாகவே இருந்து விட்டுப் போகிறேன். ரொம்ப முடியவில்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

காலையில் சரோஜா வேலையை முடித்து விட்டு கிளம்பும் போது, அவளிடம் ரூபாயைக் கொடுத்து,  “E-504’ல இருக்கிற மாமிகிட்டே குடுத்துடு. காய்கறிக்கு வாங்கிருந்தேன்” என்றேன். ‘யாரு, பத்மா மாமி கிட்டயா? ” என்று சரோஜா கேட்டவுடன் தான் மாமி பெயர் பத்மா என தெரிந்தது. “ரெண்டு வருஷமா இங்கேயே இருக்காங்களாம். பார்த்ததில்லை. மாமாவை எப்போதாவது வாக்கிங் போகும்போது பார்த்திருக்கேனோ, என்னவோ” என்றேன். “பாத்திருக்க மாட்டீங்க ஐயா. அவராலே நடக்க முடியாது. டயாபடீஸ் ஜாஸ்தியாகி கால் புண்ணு ஆனதாலே காலை எடுத்துட்டாங்க. எல்லாமே இப்போ படுக்கையிலேதான். ரெண்டு மூணு நர்ஸ்ஸுங்கள போட்டுப் பார்த்தாங்க. ஆனா மாமா பண்ற கலாட்டா தாங்காம ரெண்டே நாள்ல ஓடிப் போய்ட்டாங்க. ரொம்ப கோபக்காரரு. வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவாரு. மாமி தான் இப்போ பாத்துக்கறாங்க. பாவம் ரொம்ப கஷ்டப்படறாங்க” என்றாள் சரோஜா. அடப்பாவமே, மாமிக்கு இப்படி ஒரு கஷ்டமா  என்று வருத்தப்பட்டேன்..

சில வாரங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் சரோஜா வழக்கத்திற்கு மாறாக எந்த அக்கப்போரையும் பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, பரபரவென்று தரையை துடைத்துக் கொண்டிருந்தாள். சரி ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். “என்ன விஷயம்” என்றேன். அவ்வளவுதான். துடைத்துக் கொண்டிருந்த மாப்பை கீழே வைத்துவிட்டு, “இன்னிக்கி என்னால பொறுத்துக்க முடியல்லேய்யா. அந்த பத்மா மாமியோட ஊட்டுக்காரரை நல்லா கத்தி தீர்த்துட்டேன். எல்லாத்துக்கும் ஒரு அளவு வேணாமா? தெனமும் காபிலே சர்க்கரை தூக்கலா போட்டு, கொதிக்க, கொதிக்க குடிக்கணும் அவருக்கு. மாமி எவ்வளவோ சொல்லிட்டாங்க, டயாபடீஸ் ஜாஸ்தியானா கஷ்டம்னு. கேக்கவே மாட்டாரு. முந்தாநாள், காபிலே சர்க்கரை கம்மியா இருக்குன்னு கோவிச்சிக்கிட்டு அப்படியே காபி டம்ளரை விட்டேறிஞ்சுட்டாரு. அந்த கொதிக்கிற காபி மாமியோட கைலையும், வயத்துலையும் தெறிச்சு கொப்பளமே வந்துடுச்சு. நான்தான் போயி ஆயின்ட்மெண்ட் வாங்கி குடுத்தேன். இன்னைக்கு என்னடான்னா, சாப்பாட்டுல உப்பு கொஞ்சம் மேலேகீழே இருந்துச்சுன்னு  தட்டை விட்டெறிஞ்சுட்டாரு. நான் அப்போதான் தரையை பெருக்கி, மெழுகியிக்கேன். தரையெல்லாம் சாப்பாடு கொட்டிடிச்சு. திரும்ப அந்தம்மா எல்லாத்தையும் அள்ளி கிளீன் பண்ணாங்க. நீங்களே சொல்லுங்கய்யா.  கையாலாகாமே நாம படுத்திருக்கோமே, நம்ம பொண்டாட்டி தெனமும் குளிப்பாட்டுரதுலேருந்து, பாத்ரூம் போனா கழுவி விடர வரைக்கும் எல்லாத்தையும் ஒண்டி ஆளா பாத்துக்கறாங்களேன்னு ஒரு நன்றி உணர்ச்சி வேணாமாய்யா, ஒரு மனுஷனுக்கு? அதுக்குமாறா, என் முன்னாடியே மூதேவி, முண்டை, இன்னும் என்னென்னவோ கெட்ட வார்த்தயெல்லாம் சொல்லி அந்த மாமியை திட்டுராருய்யா. அந்த பொம்பளையால எவ்வளவுதான் தாங்கிக்க முடியும்? என்னாலேயே தாங்கிக்க முடியலேய்யா. நல்லா கேட்டுட்டேன் இன்னைக்கி. ‘கையாலாகாமே படுத்திட்டுருக்கும்போதே இந்த ஆட்டம் ஆடுறியே, இன்னும் நல்லா இருந்தேன்னா அந்தம்மாவே என்ன பாடு படுத்தியிருப்பே’ன்னு கேட்டுட்டேன்யா. பத்மா மாமி என்னை ‘சும்மா இரு, பேசாதே’ன்னு சொல்லி அடக்கிட்டாங்க. அந்தாளு என்னையும் நல்லா திட்டிட்டாரு. எனக்கு ஒண்ணும் இல்லைய்யா. அவங்க வீட்டை விட்டுட்டு வேற வீட்டை புடிச்சுக்குவேன். ஆனா பத்மா மாமிக்குத்தான் கஷ்டம். அதனாலேதான் சும்மா இருக்கேன்.  நானா இருந்தேன்னா அந்த ஆளுக்கு வெஷம் வெச்சு கொன்னுட்டுருப்பேன்யா. அப்போதான் அந்தம்மாவுக்கு ஒரு விடுதலை கிடைக்கும்“ என்றாள் படபடப்பாக. “சேச்சே, அப்படியெல்லாம் பேசாதே” என்று சொல்லி சமாதானப்படுத்தி அவளை அனுப்பி வைத்தேன்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து மாலையில் வாக்கிங் போகும்போது மாமியைப் பார்த்தேன். கூடவே ஒரு டாக்டர் ஸ்டெத்தஸ்கோப்பை தோளில் போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அருகில் மாமியின் பெரிய பையன் போலிருக்கிறது, டாக்டருடைய பையை தூக்கிக்கொண்டு, டாக்டருடன் பேசிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். மாமியின் முகத்தில் கவலை அப்பியிருந்தது. மாமாவுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை சரோஜா வேலைக்கு வந்தவுடன் அன்றைய தகவலை ஒலிபரப்பினாள்.  மாமாவுக்கு சுகர் லெவல் தாறுமாறாக ஏறிப் போய்விட்டது, உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டாராம். ஆனால் மாமா ஆஸ்பத்திரியில் சேர மாட்டேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாராம். பூனாவிலுள்ள சிறிய பையனுக்கும் தகவல் அனுப்பி இருக்கிறார்களாம். மாமியின் பாடு இனிமேல் திண்டாட்டம் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை காபி போட்டுக் குடிக்க கிச்சனில் தயார் செய்து கொண்டிருக்கும் போது, மாமியின் வீட்டிலிருந்து யாரோ அழும் சத்தம் கேட்டது. தொடர்ந்து “ஐயோ, எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே. நாங்க என்ன பண்ணுவோம்” என்று கதறும் சத்தமும் கேட்டது. ஐயோ பாவம், மாமா போய்விட்டார் போலிருக்கிறது. ஒரு வேளை ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்தால் உயிர் பிழைத்திருந்திருப்பாரோ என்னவோ. வீண் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றியது. கூடவே ஒரு விபரீதமான எண்ணமும் வந்தது. மாமா போனது ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. மாமிக்கு அவருடைய தொந்தரவிலிருந்து ஒரு விடுதலை கிடைத்தது என்று நினைத்தேன். இனிமேல் மாமி எங்கே போய் இருப்பார்? இங்கேயே பெரிய பையனுடன் இருப்பாரா இல்லை பூனாவிற்கு போய்விடுவாரா? மருமகள்கள் எப்படிப்பட்டவர்கள்? மாமியை நன்றாக வைத்துக் கொள்வார்களா? கடைசி காலத்திலாவது பேரன், பேத்திகளோடு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்குமா, என்றெல்லாம் என் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

காலிங்பெல்லை தொடர்ந்து அழுத்தும் ஒலியில் என்னுடைய சிந்தனைகள் கலைந்தன. கதவைத்திறந்தும் சரோஜா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தாள். “உள்ளே வா. எதுக்கு இப்படி அரக்கபரக்க வரே. உனக்கு ஏதாவது ஆயிடப் போறது. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்“ என்றேன். “இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லைய்யா. நேத்து வரைக்கும் நல்லா இருந்தாங்க. இன்னிக்கி சுமங்கலியா போயி சேர்ந்துட்டாங்க” என்றாள். தூக்கி வாரிப்போட்டது எனக்கு. என்னது போனது மாமியா? “என்னடி சொல்றே நீ?” என்னை அறியாமல் கத்தி விட்டேன். “ஆமாய்யா, பத்மா மாமி தூக்கத்திலேயே நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க. ஹார்ட் அட்டாக்காம்.” என்று சொல்லி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். எனக்கு தலையை சுற்ற ஆரம்பித்தது. டைனிங் டேபிளில் இருந்த கூஜாவிலிருந்து சிறிது தண்ணீர் குடித்துவிட்டு சுதாரித்துக் கொண்டேன். இவ்வளவு வருட வேதனையிலிருந்து மாமிக்கு ஒரு நிரந்தர விடுதலை கிடைத்து விட்டது. இனி மாமா என்ன செய்யப் போகிறார்? இவருடைய சுபாவத்திற்கு யாரிடம் போய் இருக்க முடியும்? மாமாவின் பாடுதான் இனிமேல் திண்டாட்டம் என்று நினைத்துக் கொண்டேன். என்ன விளையாட்டெல்லாம்  விளையாடுகிறான் அந்த ஈசன்.

சரோஜாவை அனுப்பிவிட்டு, ஒரு நடை போய் துக்கம் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *