தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது.
இவரது எழுத்துக்கள், ஒரு வகையான Mystism, மாயாவாத காமத்தை, காமரூபணியாக காண்பித்து, மனதை பித்து நிலைக்கு கொண்டு செல்லும்.
மேலும், இவரது எழுத்துக்கள், வாலிப பருவத்தின் வாசலை தொடுவோர்க்கு காமரூபனின் காட்சி சாலையாக மாறி, உடலின் மிருகத்தை தட்டி எழுப்பிவிடும்.
கூடவே, தி.ஜா.வின் சாட்டை, காமக்குதிரையை அடக்க, கதையின் அடுத்த கட்டத்தில், அம்பாளையும் , சங்கீத கீர்த்தனைகளையும் சேர்த்து மிருதுவாக தடவி கொடுத்து, மிருகத்தை அடக்கிவிடும்.
மத்ய பருவத்தில், லெளகீக வாழ்க்கையோடு இணைந்தவர்களுக்கு, சம்சார சங்கீதத்தை கற்றுத்தரும்.
மனைவியின் வீணை வாசிப்பில், அவள் மடியில் படுத்து, சாகுந்தலம் படிக்க வைக்கும். மனைவியை, அம்பாளோடு சேர்த்து காண்கின்ற ரஸவாதத்தை செய்துவிடும். அடுத்த பெண்மணியை, மதிக்க கற்றுதரும்.
வாழ்வின், சாயங்கால பருவத்தில், பிள்ளைகளின் மேல் அன்பு படிந்து, குடும்பத்தை செம்மையாக நடத்திட வழி வகுக்கும்.
நல்ல இலக்கியங்களை, பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க, தி.ஜா. வழி காட்டுவார்.
முதுமையில், திருவையாற்றில் இறங்கிவிடுவார்.
காவிரியின் சங்கீதத்தில் கரைந்தவர். அதன் துணை ஆறுகளில் வயலின் வாசித்தவர். பிராமண அடையாளங்களை, ஆழமான பார்வையில் துளைத்தெடுத்தவர்.
நல்ல ஒழுக்கங்களோடு வாழ்வதே பிராமணம் என்பார். ஆசாரம் நிறைந்த பிராமண குடும்பத்தில் பிறந்து, ஆசாரத்தின் ஆழமான அர்த்தங்களை தேடி, அனர்த்தங்களை வெளிச்சம் காட்டியவர்.
சங்கீத சூட்சமமங்களை சொல்லி, இந்திய கலாச்சார தொன்மங்களை, கோயில் கோபுரங்களில் காட்டிவிட்டு, கங்கையின் புனிதத்தையும், காசியின் கடைசி படிவரை அழைத்து செல்வார்.
வாழ்வின், ஒவ்வொரு அடுக்கிலும் ஒளிந்துள்ள அழகை ஆராதனை செய்தவர்.
யார், யாருக்கு எப்போது படகுவரும் யாருக்கும் தெரியாது, அவர் உப்பட.
நதிகேசன், அலைகளோடு படகை ஓட்டி வரூவான்.
தி.ஜா. வின் படகோட்டி சீக்கிரமே வந்து விட்டான்.
காவிரி கரையோரம் காத்திருக்கும் நமக்கு, அவரது எழுத்தே நம்பிக்கையை தரும்.
ஏதோ ஒரு நதியில்,
ஏதோ ஒரு அலை.
ஜெயானந்தன்.