சங்கஇலக்கியங்களில் அடிக்கருத்தியல் சிந்தனை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 5 of 7 in the series 26 ஜனவரி 2025

முனைவர் ந.பாஸ்கரன்
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பெரியார் கலைக்கல்லூரி,
கடலூர் – 1.

தமிழில் இலக்கியங்கள் காலந்தோறும் ஒவ்வொருவகையில் உருவாகிக் கொண்டே வருகின்றன. இதனை காலஅடிப்படையில் சங்கஇலக்கியங்கள், ஆற்றுப்படை இலக்கியங்கள், அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை இலக்கியங்கள், கதை இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள் என உருவாகி வருகின்றன. அதனதன் தன்மைகளுக்கும் அமைப்புகளுக்கும் பாடுபொருளுக்கும் ஏற்ப இவற்றைப் பிரித்தறிய முடிகிறது. இலக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வியலையும் அவ்வாழ்வியல் மேம்படுவதற்கானப் பாதைகளையும் எடுத்தியம்பும் மொழிப் படைப்பு எனலாம். செய்யுள் வழக்கு, உலகியல் வழக்கு என்ற இருநிலைகளிலும் சான்றோர்களால் படைப்படும் படைப்பாக இலக்கியம் விளங்குகிறது என்று தமிழ்ச் சொல்லகராதி (ப.474) கூறுகிறது. மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களைக் காலந்தோறும் கவிஞர்கள் தமது சிந்தனையின்வழி உயிர்த் துடிப்புடன் பிறப்பிக்கும் பதிவேடாக இலக்கியம் இலக்கியம் உள்ளன என்பது ஹட்சன் என்பாரின் கூற்றாகும். இத்தகைய இலக்கியங்களில் உள்ள செய்யுள் அல்லது கவிதைகளில் அமைந்துவரும் அடிக்கருத்தியலின் விளக்கத்தையும் அதனை சங்கஇலக்கியத்தில் பொருத்திப் பார்க்கும் தன்மையையும் இக்கட்டுரை விளக்குகிறது.

அடிக்கருத்தியல் விளக்கம்:
ஓர் இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் ஒரு கருத்தை உணர்த்துவதாகவே இருக்கும். இதனை இலக்கியத்தின் தலைமைச் செய்தி எனலாம். தலைமைச் செய்தி இலக்கியத்தின் உயிர்க் கூறாகவும் மையப் பகுதியாகவும் கருதப்படும். இது இலக்கியத்தின் உள்ளாகவோ வெளியாகவோ அல்லது அதன் ஊடாகவோ செல்லக் கூடியதாக இருக்கும். இதன்படி பார்த்தால் ஒவ்வொரு படைப்பும் ஒரு கருவைக் கொண்டே புனையப் பட்டிருக்கும். மையக்கரு அல்லது தலைமைக்கரு என்று அறியப்பட்ட இதனையே அடிக்கருத்து என்று குறிப்பிடுகின்றனர். கவிதையின் உயிர்நிலையாக அடிக்கருத்து அமைந்திருக்கும். இதுவே Themotalogy என்னும் அடிக்கருத்தியலாக வளர்ச்சி அடைந்துள்ளது. Themotalogy என்னும் ஆங்கில பதத்திலுள்ள Theme என்பது அடிக்கருத்து ஆகும். இந்த அடிக்கருத்தை இலக்கிய வயப்படுத்தி பன்முகத்தன்மையில் சித்தரித்துக் கொண்டே சென்றால் அச்சித்தரிப்பின் ஊடாகவே இணைந்து பயணிப்பவையாக உள்ள உவமை, உத்திகள், அணிகள் போன்ற அணிப்பொருட் கூறுகளைக் கருத்தலகுகள் அல்லது அடிக்கருத்துக் கூறுகள் என்பர். இதனை ஆங்கிலத்தில் Thematic unit என்பர். படைப்பாளனின் இந்த படைப்புச் செய்நேர்த்தியால் ஒரு படைப்புக் கலை என்கின்ற Art நிலைக்குப் பருவமெய்துகிறது. மேலும், படைப்புக்கு அச்சாணியாகத் துணைநிற்கும் அடிக்கருத்துடன் உயிர்த் தொடர்புள்ள செய்திகளை இணைக்கும் கலைக்கூறை அடிக்கருத்துரு அல்லது அலகு (Motive) என்பதாக சுட்டுவர். அடிக்கருத்தையும் கருத்தலகுகளையும் ஒன்றிணைத்து அதன் பண்புத் தன்மைகளை விளக்கிக் கூறுவதாக அமைவது அடிக்கருத்தியலாகும். இவ்வகையில் ஒரு படைப்பினை முழுவதுமாக வாசித்தப் பின்னரே அதன் அடிக்கருத்தை உணர வாய்ப்புள்ளது. இக்கருத்துகளின் அடிப்படையில் அடிக்கருத்து, அடிக்கருத்துக் கூறுகள், இவற்றை இணைக்கும் அலகு என்பனவற்றின் ஒட்டுமொத்த உருவமாக அடிக்கருத்தியல் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இந்த அடிக்கருத்தியல் சிந்தனை என்பது ஒப்பாய்வில் மிகவும் முக்கியமான ஓர் ஆய்வுக் கூறாகக் கருதப்படுகிறது.

இலக்கியத்தில் அடிக்கருத்து:
ஒரு படைப்பாளன் தனக்குவேண்டிய ஒரு செய்தியை இயற்கையிலிருந்தோ அல்லது சமுதாய வாழ்க்கையிலிருந்தோ எடுத்தாளும்போது அச்செய்தி அப்படைப்பில் அடிக்கருத்தாக மாறுவதற்கு முன்பு மூலப்பொருள் என்னும் தன்மையில் இருக்கும். சான்றாக, பாரதியின் பாஞ்சாலிசபதத்தின் மூலப்பொருள் மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் அதனை அப்படியே திரும்பச் சொல்லாமல் பாரதி தமது பாப்புனைவு செய்நேர்த்தியால் மெருகூட்டி இலக்கிய நலம், அரசியல், மெய்ஞானம், வாழ்வியல் என்னும் கூறுகளை அதனோடு இணைத்துக் கூட்டி அம்மூலப்பொருளை தமது படைப்புக்கான அடிமூலக் கருத்தாக மாற்றுகிறார். இக்கருத்தை ஓர் அடிக்கருத்து பலப்பல வடிவங்களில் அடிமூலச் செய்தியோடு தொடர்புடையதாக வெளிவந்து கொண்டே இருக்கும் என்ற ஒப்பியல் அறிஞர் வை.சச்சிதானந்தம் கருத்துடன் ஒத்துணர முடிகிறது. (வை.சச்சிதானந்தம் – ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம் – ப.153)

அடிக்கருத்து வகைகள் :
ரேமான்ஹுஸ் என்பார் வீரயுகப் பாடல்களில் வரக்கூடிய தலைவர்களில், சூழல் சார்ந்த இலக்கிய பின்னணிகளில், வரலாற்று நிலைகளில் உள்ள படைப்புகளில் காணப்படும் காலம், இடம், உண்மைவீச்சு போன்ற கூறுகளில் அடிக்கருத்துகள் அமைந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்தை முன்வைக்கிறார். இக்கருத்துகளையும் துணையாக கொண்டு அடிகருத்துகளை,
1.இயற்கை சம்பவங்களினால் விளைபவை
2.தலைமை புனைவு கூறுகளிலிருந்து வருபவை
3.தொன்மபாத்திரங்கள் (அல்லது)
பாத்திரபண்புநலன் அடிப்படையில் வருபவை
4.இனக்குழுக்கள்.
என்ற நிலைகளில் வகைப்படுத்தி அறியமுடிகிறது.

கருத்துக்கூறுகள்:
படைப்புகளில் பல்வேறு தன்மைகளிலும் பல்வேறு வகைகளிலும் கருத்துகள் வரும். அக்கருத்துகளைத் அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப பலகூறுகளாக பிரித்துப் பார்க்க வாய்ப்புள்ளது. உதாரணமாக ஆற்றுப்படைப் பாடல்களை எடுத்துக் கொண்டால் அதில் முதன்மையானதாக ஆற்றுப்படுத்துதலைப் பார்க்க முடிகிறது. அதற்கு அடுத்த நிலையில் அதில் பாடப்பெறும் மன்னனுடைய புகழைப் பாடுதலைக் காணமுடிகிறது. எனவே, ஆற்றுப்படையில் இவ்விரண்டையும் இரண்டு கருத்துக் கூறுகளாக அறியலாம். இவ்வாறு, அணுக்கமான உறவுடைய கூறுகளைத் தொகுத்தும் பிரித்தும் பார்க்கலாம். ஒரு படைப்பில் ஓர் அடிக்கருத்துதான் வர வேண்டும் என்பதில்லை ஒன்றிற்கு மேற்பட்ட அடிக்கருத்துகளும் இடம்பெறலாம். உதாரணமாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மூன்று செய்திகளுக்கு முதன்மைக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறார். இதனை மூன்று அடிக்கருத்துகள் கொண்டதாகப் பார்க்கலாம்.

தொன்மப்பாத்திரத்தின்வழி அடிகருத்துகள் அறிதல்:
படைப்புகளில் உள்ள அடிக்கருத்துகளின்வழி படைப்பாளனின் பண்புநலனை அறியலாம். அவ்வவ் காலத்தில் தோன்றும் இலக்கியங்கள் அவ்வவ் காலத்து சமுதாயத்தை வெளிப்படுத்துவதாக அமையும். அதனால் அடிக்கருத்துகளும் ஒவ்வொரு படைப்புகளிலும் மாற்றமும் புதுமெருகும் பெற்றனவையாகவே காணப்படும். அடிக்கருத்துகளை முடிந்த முடிபுகளாக தீர்மானித்துக் கொள்ளக் கூடியனவாகவும் இருப்பதில்லை. படைப்பாளர்கள் படைப்புகளின் கருத்துகளை சொல்லி விட்டுதான் படைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. வாசிப்பாளர் அனைவருக்கும் ஒரே அடிக்கருத்துதான் புலப்பட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஒரு வாசிப்பாளருக்கு முதல் வாசிப்பில் புலப்படும் கருத்து அடுத்த மறுவாசிப்பில் வேறொரு கருத்துப் புலப்பாட்டைக்கூட ஏற்படுத்தும். இப்பின்னணியில் தொன்மப் பாத்திரத்தின் பண்புநலனைப் பல கோணங்களில் பல அடிக்கருத்துகளுக்கு உரியதாக அமைக்கலாம் என்பது புலனாகிறது. இவ்வாறு மாறும் தன்மையுடைய அடிக்கருத்தை க.கைலாசபதி அடிக்கருத்தியல் சுழற்சி Themetic cycle என்னும் பதத்தால் சுட்டுகிறார்.
ஓர் இயல்புநிலையில் படைக்கப்பட்ட ஒருபிரதிக்கு மாற்றுப் பிரதியாக மற்றுமொரு படைப்பாளரால் படைக்கப்படுவது படைப்புலகத்தில் பந்நெடுங்காலமாக இருந்து வருகிறது. அத்தகைய மாற்றுபடைப்பு முந்தைய படைப்புக்கான எதிர்நிலைக் கருத்தை வலியுறுத்துவதாய் அமைந்து விடுவதுண்டு. இந்நிலையில் முந்தைய படைப்புகான அடிக்கருத்தை மறுக்கும் அல்லது எதிர்க்கும் தன்மைகொண்ட பிறிதொரு அடிக்கருத்தைக் கொண்டதாக படைக்கப்படுகிறது. இராவணகாவியம், கம்பரசம், மருட்பா போன்ற படைப்புகளை இதற்கு எடுதுக்காட்டாக பார்க்கமுடிகிறது. இதனை எதிர்நிலைப் புனைவு மற்றும் வடிவமுரண் படைப்புகள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடிக்கருத்தியல் நோக்கில் சங்கஇலக்கியப்பாடல் :
அடிக்கருத்து மற்றும் அடிக்கருத்துக் கூறுகள் என்ற இரண்டையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து நெய்யும் வேலையைப் படைப்பாளன் செய்திருப்பான். சங்கஇலக்கியச் செய்யுள்களில் பயின்றுவரும் திணை, துறை, உவமை, உருவகம் என்னும் கலைப் புனைவுக்கூறுகள் அடிக்கருத்துகளுடன் பின்னிப் பிணைந்து அவற்றை மேல்நோக்கிக் கொண்டுவரும். அதன்மூலம் வாசகனுக்கு ஒரு புதுக்கருத்து வெளிச்சத்தைக் கிடைக்கச் செய்யும். ஒவ்வொரு கவிதையிலும் இத்தகைய செய்நேர்த்தியைக் காணமுடியும். அந்த வகையில் சான்றாக சங்கஇலக்கிய தொகை நூலில் ஒன்றான அகம்சார்ந்த குறுந்தொகையின் அறுபத்து ஒன்பதாம் (69) பாடலான,
“கருங்கண் தாக்கலை பெரும் பிரிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே”
என்ற கடுந்தோட்கர வீரனாரின் பாடலைக் காணமுடிகிறது. இது குறிஞ்சித் திணையில் தோழியின் கூற்றாக அமைந்த பாடல். இப்பாடல் கருத்தைப் பொருள்சிதைவு இல்லாமல் சற்றுப் பார்ப்போம். தலைவனோடு களவுக் காதலில் உறவாடி மகிழ்ந்த தலைவி. அந்தத் தலைவன் நீண்ட காலமாக வராததால் துன்புறுகிறாள். உயிர் அகத்ததோ புறத்ததோ என்று தடுமாறுகிறாள். உடலும் உள்ளமும் இளைத்துப் போகிறாள். இதனை காணப் பொறுக்காதத் தோழி தலைவியின் துன்பத்தை உடனடியாக போக்க எண்ணுகிறாள். அதற்குத் தலைவன் அவன் நாட்டிலிருந்து உடனே வந்து இவளை மணம் புரிவதே ஒரே வழி என எண்ணுகிறாள். எண்ணியதோடு நிற்காமல் தலைவன் ஆட்சிசெய்யும் மலைநிலத்திற்கு வேகமாக தூது செல்கிறாள். தலைவியின் துன்பத்தைப் போக்க உடனே வா என்று அழைத்து வருவதே அவள் தூது பயணத்தின் நோக்கம். செல்கிறாள். தலைவனைக் காண்கிறாள். ஆனால், தலைவனிடம் தலைவி நிலையைச் சொல்லாமல் வழியில் தான் கண்ட வேறு ஒரு சித்தரிப்பை விவரிக்கிறாள். அதாவது. தலைவா…உன்னைக் காண்பதற்காகவும் உன்னிடம் தலைவியின் நிலைபற்றிச் சொல்வதற்காகவும் வந்தேன். வரும் வழியில். உன்னுடைய மலைநாட்டில் ஒரு காட்சியைப் பார்த்தேன். அது என்ன தெரியுமா? உனது உயர்ந்த மலையில் மிக உயரமான மரங்கள் பல உள்ளன. அந்த மரங்களில் ஒரு மரத்தின் கீழ் ஒரு பெண்குரங்கு தனது குட்டிக் குரங்குடன் இருந்தது. அந்த குட்டிக்குரங்கு மரத்தைப் பார்த்துச் சிரித்து சிரித்து குதித்துக் கொண்டிருந்தது. காரணம் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தேன். தனது குட்டியைச் சந்தோஷப் படுத்துவதற்காக அப்பாகுரங்கு மரத்தின் உயரத்தில் கிளைக்குக் கிளைத் தாவித்தாவி ஏறிக்கொண்டே இருந்தது. குட்டியின் சந்தோஷத்தை மட்டுமே எண்ணிய அப்பாகுரங்கு உச்சிவரைச் சென்று அங்கிருந்த சிறிய கிளையைப் பிடித்தது. கிளை முறிந்தது. கீழுள்ள ஒவ்வொரு கிளைகளிலும் மோதிமோதி அடிபட்டு கடுமையான மொட்டைப் பாறையை நோக்கி விழுந்துகொண்டே இருந்தது. ஆபத்தை அறியா குட்டிக்குரங்கு அப்பாவின் அபரிமிதமான விளையாட்டில் அதையும் ஒன்றென்று எண்ணி துள்ளிக் குதித்தது. ஆபத்தை உணர்ந்த அம்மா குரங்கு குட்டியை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டது. கீழே விழுந்த அப்பாக் குரங்கு தலைநொறுங்கி சிதறி செத்துப் போனது. தலைவியாகிய பெண்குரங்கு தனது குட்டியை அழைத்துச் சென்று தனது பட்டாளத்துத் தளபதியிடம் ஒப்படைத்தது. அதன்பின் அந்த மலையை நோக்கி திரும்பி சென்றது. குட்டியுடன் குரங்கு பட்டாளம் பின்னாலேயே சென்றதன. தலைவி குரங்கு அதே மரம்… அதே உயரம் ..ஏறியது… விழுந்தது.. சிதறியது… செத்துப்போனது… தலைவா.. உன் நாட்டுக் குரங்குகளுக்குக்கூட இத்தனைக் காதலா சென்று வருகிறேன்… என்று திரும்பி சென்று விட்டாள். இந்த பொருள் முழுமையும்தான் இந்த பாடலில் உள்ளது. தோழி தான் சொல்லப்போன செய்தியைச் சொல்லவே இல்லையே என்றால் சொன்னாள். அந்த கருத்தை அந்தப் பாட்டுள் அடிக்கருத்தாக்கி விட்டாள். அந்த அடிக்கருத்தை அருமையான உவமையின் வழி உணர்த்தவும் செய்துவிட்டாள். தலைவன் உணர்ந்தான். தலைவிக்கு மரணம் நேராமல் காதல் திருமணத்தால் காத்தான் என்பனவற்றை எல்லாம் அடிக்கருத்தியல் உணர்த்தும் செய்திகளாக கடுந்தோட்கரவீரனார் இப்பாடலில் காட்டியுள்ளார். பெண்ணானவள் தமது இணையருக்குத் துன்பம் நேர்ந்து விட்டால் தமக்குக் குழந்தை இருந்தாலும் அதற்குப் பாதுகாப்பை ஏற்படுத்தி விட்டுத் தானும் இறந்து போவாள் என்பது பாடலின் பொதுக்கருத்து. தலைவன் இரவுக்குறியில் வரும் போதெல்லாம் என்ன நேருமோ என்று தலைவியின் மனதில் எழும் பரிதவிப்பு. மலை நிலம், நள்ளிரவுப் பொழுது என்ற முதற்பொருளும், ஓங்குவரை அடுக்கம், மந்தி, சாரல்நாடு என்னும் கருப்பொருள்களும் வரைவுகடாதல் என்னும் துறையின் மையப்பொருள் வாயிலாக புதை நிலையிலிருந்த புணர்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை உரித்துப் பலாப்பழத்தின் உள்ளிருக்கும் சுளையை மேலெடுத்து வந்து அடிக்கருத்தைத் தித்திப்பாய் தந்துள்ளது எனலாம்.
நன்றி… வணக்கம்..

பயன்பட்ட நூல்கள் :
1.கிழக்கும் மேற்கும் – மருதநாயகம்
2.ஒப்பிலக்கியம் – க.செல்லப்பன்
3.தமிழ் கற்பனையியல் – ஜான் சாமுவேல்
4.அடிக்கருத்தியல் கொள்கைகள் – சாரதாம்பாள்

..

Series Navigationஜகமே மந்திரம்,  ஜகமே தந்திரம்இழுத்துவிட்டதன் அசௌகரியம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *