சோம. அழகு
பேரு பெத்த பேரு – அமேஏஏஏரிக்கா! எந்த மாகாணத்திற்குச் சென்றாலும் ஒரே மாதிரியான அறிவியல் பூங்கா, உயிரியல் பூங்கா, மீன்கள் பூங்கா(acquarium), கண்களுக்குச் சலிப்பைத் தரும் தற்கால கட்டிடக் கலையின் கைங்கர்யத்தில் ஒரே மாதிரியாக நிற்கும் பசுங்காரைத் தொகுதிகள் (cement blocks)….! அரிதினும் அரிதாக Grand Canyon போன்ற வித்தியாசமான நிலப்பரப்புகள், சுதந்திர தேவி சிலை, நயாகரா அருவி… அவ்வளவுதான். சுற்றிப் பார்ப்பதற்கோ ரசிக்கத்தக்கதாகவோ ஒன்றும் கிடையாது. இவர்களது அருங்காட்சியங்கள் கூட சுமார் ரகம்தான்.
ஐரோப்பாவில் ரோம், வெனீஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என உலகின் ஆகச்சிறந்த இடங்களுள் சிலவற்றைக் கண்டுவிட்டதால் வந்த மனநிலையோ? இந்த ஊர்களில் உள்ள ‘வரலாற்றுச் சிறப்புமிக்கவை’யையெல்லாம் கண்டு வியந்த பின் அமெரிக்கா தந்த உணர்வை இவ்வாறாக உவமிக்கலாம் – மிக்கேல் ஆஞ்சலோவின் Sistine Chapelக்கு அடுத்த அறையில் பித்து பிடித்தவனின் கிறுக்கல்கள் போன்ற நவீன ஓவியங்கள்(!) பல இருந்ததைப் பார்த்த போது மனம் கதறியவாறே நினைத்தது, “நான் மீண்டும் ஒரு முறை Sistine Chapelஐ பார்த்து வருகிறேன். தயவுசெய்து என் கண்களில் யாரேனும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிடுங்கள்”. ஒன்றோ அதற்கு மேற்பட்ட ஒழுங்கற்ற கோடுகளையோ ஓவியங்களாகப் பாவிக்கும் அளவு கலையறிவு இன்னும் வளரவில்லை எனக்கு! அடியேனின் ‘யானைக் கண்’ அவ்வளவுதான். ஆனால் இவ்விஷயத்தில் இப்படியே ஞானசூனியமாகவே இருந்துவிட்டு மடிவதில் எவ்வித வெட்கமும் இல்லை.
மனதின் அளவுகோல் படு உயரத்தில் இருக்கிறாதா அல்லது அமெரிக்காவில் ஒன்றும் இல்லையா எனத் தெரியவில்லை. சுத்தமான காற்று, Walmart, Aldi, Dollar Store, Target, McD, Chick-fill-A….. – இவ்வளவுதான் அமெரிக்கா. மக்களைச் சுற்றுலாவின் பெயரில் அங்குமிங்கும் அலைக்கழித்து வருத்த விரும்பாத நாடு இது. ‘பாதசாரி’ என்னும் இனத்தையே ஒழித்துக் கட்டிய பெருமையும் இவர்களையே சேரும். ஐரோப்பாவின் அவ்வீதிகளைக் கால்களால் அளந்த நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அமெரிக்காவில் கண்டு களிக்கும் அளவிற்கு இடங்கள் இல்லாததாலோ என்னவோ போதுமான ரயில் வசதி கிடையாது. அறவே பேருந்து வசதிகளும் கிடையாது.
உலக நாடுகள் அனைத்தும் இவர்களுக்கு எண்ணெய் கொடுக்கவென நேர்ந்து விடப் பட்டிருப்பதால் ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழுந்து. எனவே எவ்வளவு நீண்ட பயணமானாலும் ரெக்ஸின் வாடை குமட்டலைப் பரிசாகத் தரும் அதே ஊர்தியில்தான். முடிவற்ற சாலைகளைப் பின்னால் தள்ளும் முயற்சியில் நாம் விக்கிரமாதித்தனாகி விக்கித் தக்கி வீடு வந்து சேர்வதற்குள் வேதாளமே விடுகதைகள் தீர்ந்து வெறுத்துப் போய்விடும். நெடுஞ்சாலைகளிலும் எறும்பென சாரை சாரையாக நின்று நிதானமாக நகர்ந்து நம் பொறுமையை வளர்க்க உதவும் இந்நாடு நமக்கு வாழ்வில் எதையோ கற்றுத்தர விரும்புகிறது!
உலகில் தமக்கென ஒரு பண்பாடோ சமையல் வகையோ(cuisine) இல்லாத நாடும் இதுதான். என்னத்துக்கு ‘பாரம்பரியம்’ என்ற ஒன்றைக் கட்டிப்பிடித்து பழம்பெருமை பேசிகிட்டு? கோக் – தேசிய பானம்; தேசிய உணவென்று பொரிக்கப்பட்ட வஸ்துகளை வேண்டுமானால் சொல்லலாம்; உவர்ப்பு மற்றும் இனிப்பைத்(இனிப்பில் ‘அசட்டுத்தனமான’ இனிப்பு என்ற வகையைக் கண்டுபிடித்துப் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்!) தவிர தடை செய்யப்பட்டிருக்கும் மற்ற சுவைகள்; எந்த உணவிலும் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற சுவைச்சாறுகள்(sauce) மற்றும் தேவைக்கு மிக மிக அதிகமாக சீஸ் ஆகியவற்றைச் சேர்க்கவில்லை எனில் அது உட்கொள்வதற்கு உகந்ததல்ல போன்ற தாரக மந்திரங்கள், பாதாளம் நோக்கிச் செல்லும் கல்விமுறை – இவ்வாறாக இந்நாடு குறித்த எனது பொது அறிவை வளர்த்துக் கொண்டிருந்த சமயம் அது. பாலை ஒரு கலன் என்னும் அளவில்தான் வாங்க முடியும் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் காலாவதி தேதி பத்து நாட்கள், 3 மாதம், 6 மாதம் என ரக ரகமாக அச்சிடப்பட்ட கலன்கள் ‘அது பால்தானா?’ என்ற ஐயத்தை கிளப்பவும் அச்சந்தேகம் எவ்வளவு அற்பமென நினைவுபடுத்திப் பகடி செய்தது அமெரிக்கா. உச்சகட்டமாக Stress free eggs என்று பார்த்தவுடன் கோழிகளைக் கூட அவர்கள் சீராட்டும் விதம் புல்லரிக்க வைத்தது.
ஒவ்வொரு மாதமும் பால், முட்டை, ரொட்டி, காய்கறி,…. என ஏதேனும் ஒரு பொருள் மோசமான தரம் காரணம் காட்டப்பட்டு மில்லியன் கணக்கில் நாடு முழுக்க திரும்பப் பெறப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதனால்தான் நம்மைப் போல் மளிகைப் பொருட்கள் வாங்கிச் சமைத்துண்டு உடல் நலத்தைக் கெடுத்துக்(!) கொள்ள விரும்பாமல் அநேகமாக எல்லா வேளையும் உணவாகவே கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஆரோக்கியமான(!) கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். பல்பொருள் அங்காடிகளில் குழந்தைகளுடன் வருபவர்கள், ‘விஷம்’ என்னும் சொல்லைப் பலவாறாகக் கையாளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அக்குழந்தைகளுடன் ஓர் ஓரமாகத் தள்ளுவண்டிகளில் இருத்தித் தள்ளிச் செல்லும் போது அவ்வுணவுகளில் உள்ள அளவிற்கு அதிகமான உப்பு, இனிப்பு மற்றும் செயற்கை நிறமிகள் எல்லாம் தமது கோரப் பற்களைக் காட்டி அழகாகப் புன்னகைப்பது போல் தென்படும்.
சேமிப்பு என்னும் கெட்ட பழக்கம் இல்லாததால் செலவு பிய்த்துக் கொண்டு போனாலும் பரவாயில்லை என இவர்கள் உடல்நலத்தை பேணும் விதத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. மருத்துவம்தான் இலவசமாயிற்றே? விபத்தில் அகப்பட்டு உடலில் ஏதோ குத்திக் கிழித்த நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றால் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத நிதானத்தைக் காத்திரமாகக்(அப்பாடா! நானும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தீட்டேன்!) கடைபிடிப்பார்கள். பரபரப்பு சற்றும் இல்லாத அந்தப் பரிவான பண்பாட்டை நாம் வியந்து கொண்டிருக்கும்போதே உடனடியாக ‘Emergency’ என்றொரு ரசீதைத் தந்து குறைந்தது ஒரு அரை மணிநேரம் காத்திருக்கச் சொல்லி அடுத்ததாக மாரடைப்பு வந்த ஒருவருக்கான ரசீதைத் தயார் செய்வதில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவார்கள். இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவ்விருவருக்கும்தான் போட்டியே! வெற்றி பெறுபவருக்கு மருத்துவரின் சிகிச்சை என்றதொரு சிறப்புப் பரிசும் உண்டு. இருவரின் கண் முன்னும் தத்தமது மொத்த வாழ்க்கையும் ஒரு நொடி மின்னி மறையும் அந்த அற்புத வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இம்மருத்துவ வசதிகளுக்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் வரியை வாரி இறைக்கலாம்! அவசர உதவி இவ்வளவு துரிதமாகக் கிட்டுவதால், பிற பிணிகளைப் பொறுத்த வரை நமது ஜாதகம் நாம் சந்திக்க இருக்கும் மருத்துவரின் ஜாதகம், நாள், கோள், திசை, கிழமை, நல்ல நேரம் எல்லாம் பொருந்தி வந்தால்தான் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். சனி, ஞாயிறு மற்றும் இன்ன பிற விடுமுறை நாட்களில் மட்டும் உயிர் போகும் சூழல்களைத் தவிர்த்து விடுதல் நலம். மற்றபடி ஒன்றும் பிரச்சனையில்லை!
இம்மாதிரியான வெளிநாட்டு விநோதங்களையும் அரும்பெரும் தகவல்களையும் செரிப்பதற்கென்றே ஒரு நாள் தேசிய விடுமுறை அறிவிக்கலாம். இவை குற்றாச்சாட்டுகள் அல்ல. வெறும் பதிவு, ஆதங்கம் அவ்வளவே!
அப்புறம் என்ன கார்மேகக் குழலுக்கு அமெரிக்காவில் இருக்கிறாய்? அதானே? கொஞ்சமே கொஞ்சம் பொருள் ஈட்ட என்பது எனக்கு இரண்டாம் காரணம்தான். ’90’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கும் உலகப் புகழ்பெற்ற அந்நிறுவனம் ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஆகக் கழிசடையான கஞ்சப் பிரபு ஆகையால் துணைவனுக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்திற்கும் இங்குள்ள விலைவாசிக்கும் கொஞ்சம்தான் சேர்க்க முடிகிறது. ஆனாலும் பரவாயில்லை. முதற்காரணமாக, கிட்டினர் அண்ணியர் என எல்லோரையும் அந்நியராக்கிய இத்தூரத்தினால் கிட்டுகின்ற மன அமைதி அளப்பரியது. அதனால்தான் இங்குள்ள ‘இல்லை’களும் ‘கிடையாது’களும் அவ்வளவு பெரிய குறையாகத் தெரியவில்லை. வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்தாலும் நிறைந்திருக்கும் நிம்மதி நன்றாயிருக்கிறது. நசநசப்புகளற்ற இயல்பான வாழ்க்கை என்றால் என்ன என மீண்டும் நினைவூட்டி உணர வைத்திருக்கிறது இச்சூழல். இதற்காகவே ‘அமெரிக்கா பிடிக்காதுன்னு சொல்றதுக்கு ஒண்ணும் பெரிய காரணமில்லை’யிலிருந்து அமெரிக்கா கொஞ்சமாகப் பிடிக்கத் தொடங்கியது.
சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் நுழையும் மெக்சிகோ நாட்டவரைக் காட்டிலும் சட்டப்பூர்வமாகக் குடியேறிய இந்தியர்களைத்தான் அதிகம் வெறுப்பதாக ஒரு கணக்கெடுப்பில் அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அவ்வளவிற்கு நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறார்கள் சக இந்தியர்கள்! ஆனால் சும்மா சொல்லக் கூடாது. இங்கு சிலர் நல்ல சொகுசாக இருந்து கொண்டு இந்திய நாடு கடந்த பத்து ஆண்டுகளில் கடுமையான வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் காவிக்கு முட்டு கொடுப்பதையும் பார்த்தால் எனக்கும் அமெரிக்கர்களுடன்தான் நிற்கத் தோன்றுகிறது. கடல் கடந்து இவ்வளவு தூரம் வந்த பிறகும் இடுங்கிய பார்வையையும் குறுகிய மனப்பான்மையையும் அப்படியே பாதுகாத்து வரும் பெரும்பாலான இந்தியர்களைப் பற்றி இங்கு ஆண்டாண்டு காலமாக வசிக்கும் விஜி சித்தி கூறி கொஞ்சம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
அமெரிக்காவில் இந்தியக் குழந்தைகளின் வளர்ப்பு முறையை இடியாப்பச் சிக்கலோடு உருவகிக்கலாம். இந்திய பண்பாட்டின் படி சில சூழ்நிலைகளில் ‘முடியாது’, ‘வேண்டாம்’ என்றும் கூற முடியாமல் அமெரிக்க பழக்க வழக்கங்களின்படி பெரும்பாலானவற்றிற்கு so called முற்போக்குவாதி முகமூடிகளை இட்டுச் ‘சரி’ என்றும் ஒப்புதல் அளிக்க முடியாமல்…. ஒரே “அவஸ்தைப்படுறேண்டா ச்சாரி” தருணங்கள் பலவற்றை இந்தியப் பெற்றோர் எதிர்கொள்வது அப்பட்டமாகத் தெரிந்தது. பிழைப்பின் பொருட்டு ஒரு குறுகிய காலம் மட்டுமே இங்கிருப்பதால் வனத்தில் மேய்ந்து கூடிய சீக்கிரம் இனத்தில் அடையப் போகும் தேற்றுதல் உண்டு. இங்கேயே குடியுரிமை பெற்று வீடு வாங்கி குடியேறியவர்கள் அதற்கான மாபெரும் விலையாக, இம்மண்ணில் இல்லாத ஈரத்தையும் ஒட்டுதலையும் தேடும் பணியை வாழ்நாள் முழுவதற்குமாக ஏற்றிருக்கிறார்கள். காலப்போக்கில் மறந்து போகும் அத்தேடல், ‘நம் பிள்ளைகள் இங்குள்ளவர்கள் போல் கிடையாது. எல்லாம் நாம் வளர்ப்பதில்தானே இருக்கிறது?’ என்னும் ஆழமான நியாயமான நம்பிக்கையில் மறைந்தே போய்விடும். பிள்ளைகள் வளர்ந்த பிறகு ஒரு கட்டத்தில் முதன்முறையாக அத்தேடல் வீட்டிற்குள் துளிர்க்கும்போது ‘பெற்றோர்கள் எங்ஙனம் அதை எதிர்கொள்வார்கள்?’ என்கிற பச்சாதாபம் மேலிடும் என் கேள்விக்குத்தான் யாரிடமும் பதிலிருப்பதாகத் தெரியவில்லை.
- சோம. அழகு