சசிகலா விஸ்வநாதன்
ராம திலகம் நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள். எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி இவளையே பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. “சட்” என் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அருகில் இருந்த குத்து விளக்கை ஏற்றும் போதும் அவளுடைய பார்வை குறுகுறு வென அவள் மேல் படர்ந்தாற் போல் உணர்ந்தாள். எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆசி அளிக்கிறாளா?
வீடு பெரிதல்ல. இரண்டு படுக்கையறை கொண்ட மத்திய தர குடும்பம் வாசிக்கக் கூடிய சாதாரண குடியிருப்பு தான். இதில்தான் அவளுடைய வாழ்வின் பெரும் பகுதி கழிந்தது. புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் செய்யவேண்டிய கடமைகள் யாவும் முடிந்தன. இறுதியில், நாலைந்து வருடமாக படுக்கையில் இருந்த அத்தையின் இறப்பும் மூன்று மாதங்களுக்கு முன் அங்கேயே தான்.மணவாழ்க்கையில் இதெல்லாம் கடமைகள்தான். ஆயினும் ஒரு அங்கிகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவள் இல்லத்திற்கு அவளுடைய உழைப்பு, பணம் ஆதரவு அனுசரணை,மனப் புரிதல்,பெரும்போக்கு, பிணை கையொப்பம், அரசு பணியின் செல்வாக்கின் பலன் அனைத்தும் தேவையாய் இருந்தது, ஆனால் “அவள்” என்னும் மனிதியின் தேவையில்லாமல் இருந்தது. அவளால் ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை. எல்லோரும் மலையும் தலையுமாகி விட்டனர். அந்த வீட்டுக்கு,அவள் செய்ய வேண்டிய கடமைகள்; என்று ,இனி எதுவும் இல்லை. இனியும் அவள் அங்கு இருக்க வேண்டிய நிர்பந்தம் என்ன; என்று யோசிக்க; ராமதிலகத்திற்கு ஒரு அரிய வாய்ப்பு வந்தது.
இனியாவது தன் குரல் கேட்டு மதிப்பளிக்கும் வாழ்வை வாழ முடிவெடுத்தாள். அவளை ஒரு மனிதியாக நடத்தும் இடத்தை கண்டுவிட்டாள்.தன் அடையாளத்தை தானே மறந்தது போல் மறுக்கப்பட்ட வாழ்வு எதற்கு? தொய்வில்லாமல் விடாமல் செய்து கொண்டிருந்த கடமைகளை இனி தனக்கு மரியாதை அளிக்கும் ஒரு இடத்தில் செய்ய முடி வெடுத்தாள்.
கும்பகோணத்தருகே நன்னிலம் கிராமத்தில் ஒரு முதியோர் இல்ல காப்பகத்தில் காப்பாளராக அவளுக்கு பணி கிடைத்தது.
இதோ ! கிளம்பி விட்டாள். தனது ஓய்வூதிய ஆவணங்களையும் உடுப்புகளையும் மட்டும் எடுத்துக் கொண்டாள். எந்த ஒரு பண விவகாரங்களையும் மாற்றத் தோன்றவில்லை. இருப்பது , இருந்தபடியே இருக்கட்டும். என் கையொப்பம் எதற்காவது வேண்டுமானால்,அது என்னைத் தேடி கண்டு கொள்ளும்.
வீட்டு சாவியை ஸ்வாமி மாடத்தில் வைத்தாள். ராம திலகம் அந்த அறையை எட்டிப் பார்த்தாள். பாலகிருஷ்ணன் கணினியில் ஏதோ மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே சென்று தான் புறப்படுவதாகச் சொன்னதும்; வழக்கமான ” ம்ம்” என்ற முனகலும், கூடுதலாக ” “எப்போ?” என்ற கேள்வியும்… ஒரு போனஸாக. ” “இப்போதான்” என்ற ஒற்றைச் சொல் பதிலுக்கு தலையசைத்தான்; பாலகிருஷ்ணன். “நாளையிலிருந்தே பூரணி மாமி சமைக்க வருவாள். மாதம் பத்தாயிரம் பேசியிருக்கு. வீடு சுத்தம் செய்து பாத்திரம் தேய்க்கும் மாரம்மாவுக்கு மூவாயிரம் சம்பளம். இரண்டு பேருக்கும். தீபாவளிக்கு ஒரு மாத சம்பளம் போனஸ். நான் கிளம்புகிறேன்.” என்று சொல்லிய வண்ணம் அறையிலிருந்து வெளியேறினாள்
இத்தனை வருடம் உறங்கிக் கழித்த இரவுகளையும், உறங்காமல் கவலையில் கழிந்த இரவுகளையும், சந்தோஷமான தருணங்களையும் நினைத்துப் பார்க்க, மொத்தத்தில் நான் வெற்றியின் இலக்கைத் தொட்டு விட்டதாகக் தான் தோன்றியது. கணவருக்கு தன் விடைபெறும் கடிதத்தில், தன் முதியோர் இல்ல முகவரியைத் தெரிவித்து தன்னை பார்க்க விரும்பும் நேரம் வந்து போகலாம் என்றும் தானும் முடிந்த போது வருவதாக தெரிவித்து, தான் தன் அடையாளத்தைத் ஆவலுடன் தேடிப் போவதாக… மிக்க மகிழ்ச்சியுடனும் கூட…
சசிகலா விஸ்வநாதன்