——-வளவ. துரையன்
இந்த ஆற்றங்கரையில்
இருள் வரப்போகும் இச்சூழலில்
என் சொற்களால்
ஒரு நிலவை வரைந்து கொண்டிருக்கிறேன்
அச்சந்திரனின் கிரணங்கள்
வெண்மை பொழியத் தொடங்கிவிட்டன.
உறவுகளின் கைவிடுதல்களுக்குப்பின்
உள்ளம் எல்லாவற்றையும்
குருதி நிறத்திலேயே காண்கிறது.
குளுமையான இந்தக் காற்று கூட
உடலைச் சிற்றுளிகளால்
துளைப்பது போல எரித்துக் கொண்டிருக்கிறது.
அறியாச் சிறுவனின் கைநூலை விட்டு
அகன்று ஓடிவிட்ட பட்டமொன்று
தத்திப் போகிறது.
அவன் அருகே வரும்போது அது
அவசரமாகப் பறப்பது போலவும்
அதன்பின் அமைதியாக
ஆழக்கிடப்பது போலவும்
ஆட்டம் காட்டுகிறது.
அந்தக் காட்சி என்னுள்ளே
அந்தச் சிறுவன்தான் நானா
அல்லது
நான் அந்தப் பட்டமா எனும்
விடைதெரியா வினாக்களை எழுப்புகிறது.
- உப்பு, புளி,மிளகாய்
- விடை தெரியா வினாக்கள்