Posted in

அப்பாவின் திண்ணை

This entry is part 7 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. எல்லோருக்கும் மனைவியும் உண்டு. 

எல்லோரும் ஏதோ ஒரு வீட்டில்தான் வாழ்கின்றோம். வீடு என்பது வீடு மட்டுமல்ல, உணர்வுகளின் ஊஞ்சல். 

தோழமையின் கூடு!.

சாமி அங்கிள், என் அப்பாவைத்தேடி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருவார். வீட்டு திண்ணையில் அமர்ந்துக்கொண்டு, அந்த வார அரசியல், சினிமா, பழைய நண்பர்களைப்பற்றி பேசி, ஒருவித சந்தோஷம் அடைந்து, அடுத்த வார வேலைகளைப்பற்றியும் பேசுவார்கள். 

அப்பாவின் நண்பர் வந்துவிட்டாலே, அம்மா மூஞ்சில் கடுகு வெடிக்கும். 

க்கும்….வெட்டிக்கதை பேச இதுகளுக்கு ஆளு கிடைக்கறான்கள்…பாரு என்று வெடித்து தள்ளுவார். 

ஒரு சில நேரங்களில், அந்த நண்பர் காதுபடவே பேசுவாங்க அம்மா. 

நண்பரும் கண்டுகொள்ளாமல், போய்விடுவார். 

சில நேரங்களில், அப்பாவின் நண்பர் வரும் நேரம் பார்த்து, திண்ணையை கழுவி விட்டு கோலம் போட்டுவிடுவாள். 

ஒருநாள், அந்த நண்பர் அதையும் பொருட்படுத்தாமல், தெருவின் முனையில் நின்றுக்கொண்டிருப்பார்,

அப்பாவின் வருகைக்காக. 

பக்கத்து வீட்டு சண்முகம் மாமாவும், மாமியும் எல்லோரிடமும் சகஜமாக பேசுபவர்கள். தெரியாதவர்களிடமும் பேசி நட்பு வட்டத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.

அப்படித்தான், ஒரு நாள், அப்பாவின் நண்பர் தெருமுனையில் நின்றுக்கொண்டிருந்தார். அவரை அழைத்துக்கொண்டு, சண்முகம் மாமா அவர் வீட்டுத்திண்ணையில் அமரவைத்தார். அவர்கள் அரசியல் அபத்தங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சீரியலில் மாமியார்கள் கொடுமைகளையும், மருமகள்களின் அட்டூழிங்களையும்

கண்ணீர்மல்க பேசுவார் சண்முகம் மாமாவின் மனைவி. 

சண்முகம் மாமா, சூரியா செய்த கல்விக்கான நல்ல காரியத்தை சொல்வார். அவருக்கு அக்கபோரான அரசியல் பிடிக்காது. 

அப்பா இறந்த பிறகும், அப்பாவின் நண்பர், சண்முகம் மாமா வீட்டுத்திண்ணையில்தான் அமர்ந்திருப்பார், கையில் காபி தம்பளருடன், கலகலப்பான பேச்சுடன். 

சண்முகம் மாமா மனைவியும், சினிமா துணுக்குகளை அள்ளிவிடுவார். 

பக்கத்து வீட்டிலிருந்து, அம்மா, அவரை வருத்தமான முகத்துடன் 

பார்த்துக்கொண்டே வீட்டினுள் சென்றுவிடுவார். இப்போதெல்லாம் எங்கள் வீட்டுத்திண்ணை காலியாகத்தான் இருக்கின்றது, எங்கம்மா நெற்றியைப்போல.

சில இரவு நேரங்களில், என் அப்பாவின் ஒரு கை சோற்றை உண்ட, ஒரு அநாதை

நாய்தான் அப்பாவின் திண்ணையில் படுத்துறங்கும். 

எல்லா இரவுகளிலும், காவி உடுத்திய, கோடிவீட்டு அநாதையாகிபோன, நமசிவாய பண்டாரம்தான் படுத்துறங்கி,.விடியற்காலையிலேயே, 

வெண்ணற்றாங்கரைக்கு குளிக்க போய்விடுவார். 

இப்பொழுதெல்லாம், அப்பாவின் திண்ணையில் யார் படுத்தாலும் 

அம்மா திட்டுவதில்லை.

  -ஜெயானந்தன்.

Series Navigationஅசோகமித்திரனின் “ஒற்றன்”சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *