துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்

துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்
This entry is part 1 of 9 in the series 28 செப்டம்பர் 2025

அழகுராஜ் ராமமூர்த்தி 

      துப்புயி லூயிஸ் சவினியன் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பாதிரியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் துப்புயி உலகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் 2024ல் ஆறாம் பதிப்பு கண்டுள்ளது. நூல் வெளியான 1842லிருந்து 2024 வரை ஆறு பதிப்பைக் கண்டுள்ள இந்த நூலின் 2024 ஆம் ஆண்டு அறிமுக உரையில் அந்நிய வேத போதக சபை குருவாக 1831ஆம் ஆண்டில் துப்புயி புதுச்சேரிக்கு வந்ததாக ஆ. ச. அந்தோணிசாமி அடிகளார் குறிப்பிடுகிறார். துப்புயி நினைவாக புதுச்சேரியில் செயல்படக்கூடிய இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியிட்ட ஆதிசுவடி ஒழுக்கமாலையில் 1832ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி துப்புயி புதுவைக்கு வந்ததாக தேதியுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்விரண்டு செய்திகளின் வாயிலாக 1830களின் தொடக்கத்தில் துப்புயி புதுச்சேரிக்கு வந்திருப்பதாக கொள்ளலாம். இந்தியாவின் புதுச்சேரி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் இறைப்பணியும் நிர்வாகப் பணியும் செய்து வந்த துப்புயி புதுவை மிஷன் அச்சகம் மூலம் பல நூல்கள் பதிப்பிற்கு வருவதற்கு காரணமாக விளங்கியவர் என தெரிய வருகிறது. மேலும், புதுவையில் பெண்கள் கல்விபெறுவதற்கென கல்வி நிலையங்களைத் தொடங்கியதோடு அகராதி மற்றும் இலக்கியப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். துப்புயி அடிகளாரையும் அவர் தொகுத்தளித்துள்ள கதாமஞ்சரி தொகுப்பையும் அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் தன்மையையும் பற்றிய வாச்சியத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

   கதாமஞ்சரி தொகுப்பை மக்களிடையே புழக்கத்திலிருந்த கதைகளின் எழுத்து வடிவமெனலாம். இதில் உள்ள சில கதைகள் பின்னாட்களிலோ அல்லது சமகாலத்திலோ தனியாக வளர்த்தெடுக்கப்பட்ட கதை நூல்களின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன. சான்றாக அப்பாஜி, தெனாலிராமன் கதைகளைச் சொல்லலாம். விக்ரமாதித்தன், ஈசாப் கதைகளைப் போல தெனாலிராமன், அப்பாஜி யுக்தி கதைகள் போன்றவை சிறு சிறு தொகுப்புகளாக மலிவு விலையில் அதிகம் விற்கப்படுகின்றன. கதாமஞ்சரி என்ற இத்தொகுப்பின் பெயரையும் அதில் இடம்பெற்றுள்ள கதைகளையும் குறித்து இலக்கிய வரலாற்றின் வழி பார்த்தோமானால், “நாட்டுப்புற இயல் ஆய்வு” என்ற நூலில் டாக்டர் சு. சக்திவேல் நாட்டுப்புற கதைத் தொகுப்புகள் குறித்த பட்டியலில் 1873ல் சி. மாணிக்க முதலியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நூலையும் 1951இல் தாண்டவராய முதலியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நூலையும் குறிப்பிடுகிறார். ஆனால் மு.வரதராசன் தன்னுடைய “தமிழ் இலக்கிய வரலாறு” நூலில் 1826ல் கதாமஞ்சரி நூலை தாண்டவராய முதலியார் வெளியிட்டதாக கூறுகிறார். Tamil Digital Library தளத்தில் படிக்க முடியாத அளவிற்கான எழுத்துருவில் அமைந்த 1826ஆம் ஆண்டில் வெளியான கதாமஞ்சரி நூலின் ஒளிப்படப் பிரதி கிடைக்கிறது. அந்த நூலில் இடம் பெற்றிருக்கக்கூடிய கதைகளே துப்புயி லூயிஸ் சவினியன் தொகுப்பில் இருக்கின்றன. இதன் மூலம் தாண்டவராய முதலியாரைப் பின்பற்றி துப்புயி இந்த தொகுப்புப் பணியை மேற்கொண்டு இருக்கலாமென எண்ணத் தோன்றுகிறது. மேலும், டாக்டர் சு. சக்திவேல் கருத்துபடியான 1951 என்ற காலக் குறிப்பு தாண்டவராய முதலியாரின் கதாமஞ்சரியின் அடுத்தடுத்த பதிப்புகள் வெளியான ஆண்டில் ஒன்றாக இருக்கலாம் என கருத முடிகிறது. சி. மாணிக்க முதலியாரின் கதாமஞ்சரி தொகுப்பு குறித்த எந்த விவரமும் கிடைக்கவில்லை. அதே சமயம் புஷ்பரத செட்டியார் என்பவர் வினோதரச மஞ்சரி என்ற நூலை வெளியிட்டதாக ஒரு குறிப்பு உண்டு. ஆனால் நமக்கு கிடைப்பது 1891ல் வெளியான வீராசாமி செட்டியார் பதிப்பித்த வினோதரச மஞ்சரி. இரண்டும் ஒரே நூலா அல்லது இரு வேறு நூல்களாக என்பதும் கவனிக்கத்தக்கது. புஷ்பரத செட்டியார் கலாரத்நாகர வச்சுக்கூடம் என்ற அச்சுக்கூடத்தை நடத்தி வந்துள்ளார். இந்த அச்சுக்கூடத்தில் 1880களில் நூல் பதிப்புப் பணி நடந்துள்ளது. அதிலும் விநோதரச மஞ்சரி குறித்த தெளிவான குறிப்புகள் ஏதும் இல்லை. வீராசாமி செட்டியாரின் விநோதரச மஞ்சரி “தினவர்த்தமானி” இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இருப்பினும் அதில் இடம்பெற்றுள்ள பரமார்த்த குரு கதை, சிறுகூனன் கதை ஆகியன நாட்டார் பாணி கதை இலக்கியத்தோடு தொடர்புடையன.

     கதாமஞ்சரியைத் தொகுத்து பதிப்பித்த துப்புயியின் பெயர் இலக்கியப் பணி செய்த ஐரோப்பியர்களின் பட்டியலில் எங்கேனும் இதுவரை  சொல்லப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய “கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும்”, “தமிழ் கிறிஸ்தவம்” ஆகிய நூல்களில1 1533ஆம் ஆண்டில் இருந்து 1986 வரை உள்ள கிறிஸ்தவம் சார்ந்த அறிஞர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய பல பதிவுகள் கிடைத்தாலும் கூட துப்புயி பெயர் குறிப்பிடப்படவில்லை. தமிழகம் சார்ந்த தமிழ்ப் பணி மட்டுமே அந்நூல்களில் இடம்பெற்றுள்ளன என்றும் சொல்லி விட முடியாது. பரமார்த்தகுரு கதை பற்றிய தகவலில் 1822ஆம் ஆண்டிற்கு பின் 1851ல் பாண்டிச்சேரியில் நூல் பதிப்பிக்கப்பட்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது. துப்புயி‌ லூயிஸ் சவினியன் 1840 முதல் 1874 வரை புதுச்சேரி மிஷின் அச்சகத்தின் மேலாளராக இருந்துள்ளார். கதாமஞ்சரியும் கூட இந்த அச்சகத்தின் வாயிலாகவே வெளிவந்திருக்க வேண்டும். அதேபோல 1812 முதல் 1854 வரை செயல்பட்ட “சென்னை கல்விச் சங்க”த்தின் வாயிலாக தாண்டவராய முதலியாரின் கதாமஞ்சரி வெளிவந்துள்ளது. அவர் “சென்னை கல்விச் சங்க”த்தின் முக்கியப் பொறுப்பிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     துப்புயி கதாமஞ்சரி தவிர்த்து ஆதி சுவடி, நீதிசார வாக்கியங்களில் தெரியலானவை போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார். துப்புயி உலகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் வெளியாகியுள்ள கதாமஞ்சரி ஆறாம் பதிப்பில் கதாமஞ்சரியுடன் நீதிசார வாக்கியங்களில் தெரியலானவை இணைத்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர்கள் தமிழ் மாமணி துறை மாலிறையன், அருட்பணி ஆ. ச. அந்தோணிசாமி அடிகளார், பேராசிரியர் ராஜ்ஜா ஆகியோராவர். துப்புயி பெயர் தமிழ் இலக்கிய மற்றும் சீர்திருத்த வரலாற்றில் வெகுவாக பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு கிறித்துவ சமயத்திற்குள் நிகழ்ந்த பிரிவினை மோதல்களும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கத்தோலிக்கம் மற்றும் சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கு இடையில் நிகழ்ந்த மோதல் பற்றிய தகவல்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. கத்தோலிக்கர்கள் நாட்டார் மரபை நன்கு உள்வாங்கி தேர் இழுத்தல் போன்ற சடங்குகளை கிறித்துவத்திற்குள் வருவித்து அதனை வெகுமக்களிடையே கொண்டு சென்று வளர்த்தனர். மேலும், நாட்டார் விவிலியம் என்ற வழக்கும் தமிழில் இருந்திருக்கிறது. பரதவர்களுக்கு ஏற்ற வகையிலான நாட்டார் மரபில் கிறிஸ்தவத்தைப் போதிக்கும் முயற்சியில் இறை பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை ஹன்றிக் அடிகளார் 1586ல் புன்னைக்காயலில் பதிப்பித்த விவிலிய பதிப்பின் வழியில் தெரிந்து கொள்ளலாம் என்கிற செய்தியை பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். வீரமாமுனிவரின் தேம்பாவணியை முதலில் பதிப்பித்தவர் துப்புயி என்கிற செய்தி இதயா கல்லூரி வெளியிட்டுள்ள ஆதிசுவடி ஒழுக்கமாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியின் வழியே துப்புயி பதிப்புச் செயல்பாடுகளையும் ஈண்டு நோக்க வேண்டியுள்ளது. 

    கதாமஞ்சரியின் ஆறாம் பதிப்பிற்கு அறிமுக உரை கொடுத்துள்ள ராஜ்ஜா விக்ரமாதித்தன், விஷ்ணு சர்மா, 1001 இரவு அரபு கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன், அப்பாஜி போன்ற கதைகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இத்தொகுப்பிலேயே தெனாலிராமன் மற்றும் அப்பாஜி கதைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் தொன்மம் மீதான  தனது நம்பிக்கையை உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். “வியாசர் கண்களை மூடிக்கொண்டு அருவி போல் மகாபாரத்தை கொட்ட அதற்கு எழுத்து வடிவும் கொடுத்துக் கொண்டிருந்த பிள்ளையார் பெருமானின் எழுத்தாணி சொல்பவரின் வேகத்துக்கும் எழுதுபவரின் அதிவேகத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் உடைந்து போக அற்புதமான கதை காணாமல் போகக்கூடாது என்ற சீரிய நோக்குடன் தன் யானை முகத்தில் இருந்த தந்தத்தில் ஒன்றை முறித்து எழுத்தாணியாக்கிக் கொள்ளவில்லையா!

   பிள்ளையார் போன்று பொறுப்புணர்ச்சி கொண்டவர்களால் தான் செவிவழிக் கதைகள் இன்னும் நாம் படிக்கக் கிடைக்கின்றன. அப்படி ஏதோ ஒரு நல்ல ஆத்மா அன்று இருந்ததினால் தான் இன்றும் நமக்கு விக்கிரமாதித்தன் ஆபூர்வ கதைகளும், தெனாலிராமன் விகடக் கதைகளும், ராயர் அப்பாஜி அதிவிவேகக் கதைகளும், சரியான தீர்ப்பு சொல்லி நம்மை சபாஷ் போட வைக்கும் மரியாதை ராமன் கதைகளும், பதுமைகள் சொன்ன பவளக்கதைகளும், கிளி சொன்ன கிளு கிளு கதைகளும் நமக்குக் கிடைக்கின்றன. அந்த நல்ல ஆத்மாக்கள் அன்று இருந்திரா விட்டால் கதைகள் பல நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்” என்ற கூற்றிலிருந்து நான் மாறுபடுகிறேன். நாட்டுப்புற கதைகளுக்குள் தொன்மம் சார்ந்த கதைகளும் அடக்கம் என்றாலும் கூட இத்தொகுப்பிற்கான உரையில் பிள்ளையாரால் மகாபாரதம் எழுதப்பட்டது என்கிற புனைசுருட்டை உண்மையாக தொகுப்புப் பணியில் ஈடுபட்டவர்களின் உழைப்புடன் தொடர்புபடுத்தி கூறியுள்ளது இத்தொகுப்பில் உள்ள குருடனுக்குப் பிள்ளை பிறந்த கதையில் சொல்லப்படும் உவமைக்கு ஒப்பானது. 

     தற்போது நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் குறுங்கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. இதற்குரிய முன்மாதிரியை நாட்டுப்புற கதைகளில் இருந்து எடுக்கலாம். கதாமஞ்சரி தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளையும் குறுங்கதை என்ற வகைமைக்குள் அடக்கலாம். ஏமாற்றம், துணிச்சல், சாதுர்யம், நீதி, பகடி என தான் சொல்ல வந்த பொருளை குறைவான மொழியில் கூர்மையாக சொல்லும் பாங்கு இத்தொகுப்பில் இருக்கிறது.  விடுகதையை அதன் சொல்லல் முறை மற்றும் உட்பொருள் அடிப்படையில் கதை என்ற வகைமைக்குள் வைத்து சிந்தித்துப் பார்ப்பதற்குரிய விரிவு இருக்கிறது. விடுகதையும் நாட்டுப்புற இலக்கியத்தின் ஒருவகையே ஆகும்.  உரையாடலுக்குள் கதைத்தன்மை பொருந்திய கேள்வியை கேட்கும் வகைமையாக விடுகதை இருக்கிறது. இதில் சிறப்பு அதனுடைய குறைவான மொழிப் பயன்பாடு ஆகும். குறைவான மொழிப் பயன்பாடு விடுகதையைத் தாண்டி நாட்டுப்புற கதைகளுக்கேயுரிய பண்பாட்டு அம்சமாகவும் அமையப்பெற்று இருப்பதை நாட்டுப்புறக் கதை தொகுப்புகளின் வழி காணலாம். இத்தன்மையை எவ்விதத்திலும்  சேதப்படுத்தாமல் கதைகள் எழுதப்பட்டுள்ளன. வாசிக்கத் தொடங்கும்போது ஆர்வத்தையும் போகப்போக சலிப்பையும் ஏற்படுத்தும் வகையிலான மொழிப்பயன்பாடு இருப்பதாக தோன்றுகிறது. ஒருவேளை கதைகளை எழுத்தாக்கம் செய்தவர்கள் இரு வேறு நபர்களாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு. இக்கதைத் தொகுப்பின் அமைப்பு முறையில் தமிழ் எண்கள்(க,உ,ங) எண்ணிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாண்டவராய முதலியாரின் கதாமஞ்சரி தொகுப்பும் இந்த முறையிலேயே அமைந்துள்ளது. மேலும் இரண்டு நூல்களின் அமைந்துள்ள கதைகளின் எண்ணிக்கையும் ஏறத்தாழ ஒத்துள்ளன தாண்டவராய முதலியாரின் தொகுப்பில் உள்ள எழுத்துரு பிரச்சனையால் தெளிவான முறையில் எண்ணிக்கையை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை எனினும் ஏறத்தாள கதை வரிசை இரண்டு தொகுப்புகளிலும் ஒத்துள்ளன. 

இனி நூல் குறித்து,

     பர்வத ராஜா குலத்தவர் என்று அழைக்கப்படும் செம்படவன் பற்றிய கதை முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. இவர்கள் சோழமண்டலத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதியைச் சார்ந்தவர்கள். இதன் வழி கதை உருவான  இடம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.. பறி என்ற சொல்லால் மீன்கூடை இக்கதையில் குறிக்கப்பட்டுள்ளது. இன்றளவும் பாண்டிச்சேரி பகுதி மீனவர்கள் பறி என்ற சொல்லாலேயே மீன் கூடையை அழைக்கின்றனர். இதன் வழி மக்கள் பயன்படுத்திய மொழி வழக்கும் தெரிய வருகிறது. நாட்டுப்புற கதைத் தொகுப்புகளில் இருக்கும் மிக முக்கியமான அம்சம் மக்கள் வழக்கிலிருக்கும் சொற்களை இலக்கியத்தில் இடம்பெறச் செய்வதாகும். மக்கள் வழக்குச் சொற்களை இலக்கியத்திற்குள் இணைக்கும் நடைமுறையை மையமிட்ட கதை ஒன்றை “கவிச்சக்கரவர்த்தி” என்ற நாடகமாக கு. அழகிரிசாமி எழுதியுள்ளார். கம்பர் காலத்திலேயே இச்செயல்முறை இருந்தது அரசல் புரசலாக இதன்வழி தெரிய வருகிறது. இதனை முதன்மைப்படுத்தி அணுகுவதற்கு சில காரணங்கள் உண்டு. ஏனென்றால் தமிழ் இலக்கிய மரபில் யாப்பு நெறிப்பட்ட செய்யுள் ஆக்க முறைமைக்கென தேர்வு செய்யப்பட்ட சொற்களே பயன்படுத்தப்பட்டு வந்த காலத்தில் அவ்விலக்கணத்திற்கு பொருந்திய சொற்களை வைத்து மட்டுமே செய்யுள் இயற்றினர். இதில் பிறமொழிச் சொற்கள் அடக்கமென்றாலும் மக்கள் பேச்சு வழக்கில் இருந்த சொற்கள் செய்யுளுக்குள் எந்தளவு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தனித்த ஆய்வுக்குரியது.

 காலணித்துவ வருகையையொட்டி இலக்கியம் தொடர்புடைய அல்லது இலக்கியத்தையும் தனக்குள் ஒரு கூறாகக் கொண்ட புதிய துறைகள் பல தோற்றம் பெற்றன. அதில் மொழியியல், மானிடவியல், நாட்டுப்புறவியல் போன்றவை குறிப்பிடத்தக்கன. இவையெல்லாம் ஐரோப்பியர்கள் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் மக்களை மொழி மற்றும் பண்பாட்டு ரீதியில் புரிந்துகொள்ள வேண்டுமென்ற முனைப்பில் எழுந்தவை. மானிடவியல் மற்றும் நாட்டுப்புறவியலில் சாதிகள் மற்றும் சாதிக்குரிய பழக்க வழக்கங்கள் பற்றிய பதிவுகள் முதன்மை பெறுவதுண்டு. இத்தொகுப்பில் மல்லக செட்டி என்ற சாதிப்பிரிவு இருந்ததும் அவர்கள் மல்யுத்தம் விளையாடியதும் பதிவாகியுள்ளன. இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தில் வரும் மல்யுத்த கள நகைச்சுவைக் காட்சியை இது நினைவுபடுத்தியது. வரலாற்றை மையமாக வைத்து எழுதப்படும் புனைவுகளிலும் திரைப்படங்களிலும் இருக்கும் சில சம்பவங்களை நாம் பண்பாட்டியல் தொடர்புடன் ஆராய்ந்தால் சில புதிய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புகள் மேலதிகமாக உண்டு. 

    இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளுக்கும் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளுக்கும் இடையே பல வகைகளில் தொடர்புண்டு. கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் மலையை எடுத்து வையுங்கள் நான் தூக்குகிறேன் என்று உரையாடல் வருவதுபோன்ற நாட்டார் கதை ஒன்று இத்தொகுப்பில் இருக்கிறது. படையப்பா படத்தில் மாப்பிள்ளை இவர்தான் அவர் போட்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது என்ற காட்சி வரும். அதையொத்த கதை ஒன்று இத்தொகுப்பில் இருக்கிறது. சுறா திரைப்படத்தில் வடிவேல் சங்கீதம் கேட்கும் காட்சியில் மூச்சிழுத்துப் பாடினால் செத்துவிடுவாய் என சைகை செய்வதையொத்த கதை ஒன்று உண்டு. அதில் பாடகன் ராகத்திற்காக கையுயர்த்தி பாடுவதைப் பார்த்தவன் இவனுக்கு வலிப்பு நோய் வந்துவிட்டது சூடுபோட்டால் சரியாகிவிடும் என்கிறான். “ஒரு குருக்கள் தம் சீஷனுக்கு ஞானங்கள் உபதேசித்தார். உபதேசிக்கும்போது சீஷன் தன் வளையிலே நுழையப் போகும் எலியைப் பார்த்து அதன்மேலே நினைப்பாக இருந்தான். குரு உபதேசித்து ஆனவுடனே சீஷா, எல்லாம் நுழைந்ததா என்றார். சீஷன் : எல்லாம் நுழைந்தது; வால் மாத்திரந்தான் நுழையவில்லை என்றான். ஆதலால் மூடர்களுக்குச் சொல்லுகிற புத்தி இப்படி இருக்கும்.” இந்தக் கதையை ஒத்த பல காட்சிகள் திரைப்படங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு திரைப்படங்களில் வரக்கூடிய நகைச்சுவைக் காட்சிகள் நடந்த சம்பவங்களாகவும் நடந்த உண்மை நிகழ்வுகளுடன் கற்பனையை இணைத்தவையாகவும் ஏற்கனவே மக்கள் வழக்கில் நெடுங்காலம் கதைகளாக இருந்திருக்கின்றன என்பதற்குரிய சான்றுகளை இத்தொகுப்பின் வழி முன்வைக்க முடியும். திரைப்படப் பாடல்கள் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்படுவது போல திரைப்படக் காட்சிகள் நாட்டார் வழக்கில் மக்களிடையே சொல்லப்பட்டு வந்த கதைகளால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

     தெருப்பாடகர்கள் பாடும்போது கழுதை போல உள்ளது, வலிப்பு நோய் வந்துவிட்டது எனச் சொல்லப்படுவதை வைத்து அன்றைய பொழுதுபோக்குகள் எப்படியானவையாக இருந்திருக்கும் என்பதை எல்லாம் பண்பாட்டு வரலாற்றிடையே தேட முடியும். தமிழில் பாணர் மரபின் வீழ்ச்சியும் புலவர் மரபின் எழுச்சியும் அரசனுக்குரிய நில அதிகாரப்பங்கீடு வேளாளரிடையே சென்றதோடு தொடர்புடைய பின்னணி உடையது. அதேபோல தெருப்பாடகர்கள் பலர் இருந்த காலகட்டத்தையும் அப்போதைய சூழலையும் அடிப்படையாகக் கொண்ட கதைகளென பாடகர்கள் வருகைபுரியும் கதைகளை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். பிராமணர்களும் அவர்களுக்குரிய பழக்கவழக்கம் மற்றும் ஆட்சியாளர்களுடனான தொடர்பு போன்றவற்றை சுட்டும் வகையிலான கதைகள் அதிகம் இத்தொகுப்பில் உண்டு. நாட்டார் மக்கள் கதைத்தொகுப்பில் பிராமணர்கள் அதிகம் இடம்பெறுவதை நாம் தனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அரசன், மந்திரி, பிராமணன், செட்டி, குதிரைக்காரன், வண்ணான், வேடன், தையற்காரன், அம்பட்டையன், வர்த்தகன், குடியானவன், துலுக்கன், குயவன் என பல தொழில்களைச் செய்பவர்களும் சாதிப்பிரிவினரும் கதைக்குள் இடம்பெறுகின்றனர். ஆனால் அதிகமாக அரசன், மந்திரி கதைகளும் பிராமணன் கதைகளுமே இருக்கின்றன. செட்டி பற்றிய கதைகள் அதற்கடுத்தபடியாக உள்ளன. துலுக்கன், தமிழன் என்ற வேறுபாட்டு பதமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியன் என்பதன் மரூவு சொல்லே துலுக்கன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சாதியை நுணுக்கமாக போதிக்கும் வகையிலான கதை ஒன்றில் வண்ணான் இடம்பெறுகிறான். குறியீட்டுப் பொருளாக கழுதை மற்றும் நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. செய்யும் வேலையை வைத்து மனிதர்களை அடையாளமிடும் போக்கும் சில கதைகளில் வெளிப்பட்டுள்ளன.

     நீதி போதனைக் கதைகள் இத்தொகுப்பில் அதிகமுண்டு. பெற்றோரே முதல் ஆசிரியர், குடும்பமே முதல் வகுப்பறை என்பதை மெய்ப்பிக்கும் கதையொன்று உண்டு. பெற்றோர்களைக் குழந்தைகள் கூர்ந்து கவனித்து அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதைச் செயல்படுத்துகிறார்கள். தாத்தாவுக்கு ஓட்டில் உணவு வைக்கும் அப்பாவைப் பார்த்து வயதான காலத்தில் தன்னுடைய அப்பாவுக்கு உணவளிக்க ஓட்டைப் பத்திரப்படுத்துகிறான் மகன். இப்படி நீதியைச் சொல்வதும் நீதி வழங்கும் முறைகளும் நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டுமென்ற அறிவுரையோடு நன்றியுணர்வற்றவர்களை உடன் வைத்திருப்பதால் ஏற்படும் தீமைகளும் புத்திசாலித்தனமான யோசனைகளும் நேரத்திற்கேற்ற சாதுர்யமான செயல்பாடும் வேடிக்கை, நக்கல், நையாண்டி உணர்வோடு சொல்லப்பட்டுள்ளன. தெனாலிராமனும் அப்பாஜியும் ஒரே கதையில் இரண்டு பாத்திரங்களாக இடம்பெறும் வகையிலான கதை ஒன்றும் உள்ளது. கல்வி அறிவு, உலக அறிவு பட்டறிவு ஆகிய மூவகை அறிவுகளும் ஒவ்வொருவரிடமிருந்தும் எப்படி வெளிப்படுகிறது என்பதை வெவ்வேறு முறைமையில் இக்கதைகள் கூறுகின்றன.

   மூடனைப் பற்றிய கதைகளும் திருடனைப் பற்றிய கதைகளும் அங்காங்கே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பரமார்த்த குரு கதையில் வரும் மூடன், புத்தியீனன் போன்றோருடைய சாயல் வெளிப்படும் கதையும் ஒன்று உண்டு. திருடனைப் பற்றிய கதைகளில் மறைவாக ஒளிந்திருக்கும் செயலே திருடனின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பணம் எப்படி ஆட்கொல்லியாக செயல்படுகிறது என்பதற்கான உதாரணக் கதை ஒன்றும் உண்டு. கணவன் மனைவிக்கு இடையில் மூன்றாமவர் நுழைவதால் ஏற்படும் பிரச்சனையைப் பற்றிய கதையும் பந்தயமாடித் தோற்று பணத்திற்குப் பதிலாக உண்டியல் சீட்டு எழுதிக் கொடுக்கும் செல்வந்தன் ஒருவன் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பணத்தை நேரில் பார்த்து பணத்தின் மதிப்பு கருதி சூதாடாமல் திருந்தும் கதையும் நிகழ்கால பொருத்தப்பாடுடையன. உண்டியல் சீட்டுக்கு ஒப்பாக தற்போது பயன்படுத்தப்படும் இணையவழி பணப் பயன்பாட்டு முறையைக் கூறலாம். பணத்தை வெறும் எண்ணாகக் கருதி செலவழிக்கும் முறைமையின் வழி எவ்வளவு செலவளிக்கிறோம் என்கிற பிரக்ஞை இழப்பு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்காலத்தன்மையின் பொருத்தப்பாடுடனான கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. 

சில கதைகள் 

  “சில பிறவிக்குருடர்கள் ஓர் இடத்திற் சேர்ந்து இரந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யானையைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டு, ஒரு யானைப்பாகனை வேண்டிக்கொண்டார்கள். அவன் யானையை நிறுத்தி, இதைப் பார்த்துப் போங்கள் என்றான். நல்லதென்று ஒரு குருடன் காலைத் தடவிப் பார்த்தான். ஒரு கபோதி தும்பிக்கையைத் தடவிப்பார்த்தான். ஓர் அந்தகன் காதைத் தடவிப் பார்த்தான். இப்படிப் பார்த்துவிட்டு இவர்கள் அப்புறம் போனபிறகு ஒருத்தருக்கு ஒருத்தர்  யானையின் தன்மை பேசத் தொடங்கினார்கள். அப்போது காலைத் தடவினவன் யானை உரல்போல் இருக்கிறதென்றான். தும்பிக்கையைப் பார்த்தவன் யானை உலக்கைபோல் இருக்கிறதென்றான். காதைத் தடவிக் கண்டவன் யானை முறம் போல் இருக்கிறதென்றான். வாலைத் தடவிக் கண்டவன் துடைப்பம்போல் இருக்கிறதென்றான். இப்படி ஒருவர்க்கொருவர் மாறுபடச்சொல்லி ஒழியாமற் சண்டையிட்டுத் திரிந்தார்கள். மனதுக்கு எட்டாத கடவுளின் தன்மையை இத்தேசத்துப் பல சமையவாதிகளுந் தங்கள் மத நூலைக் கொண்டு நிச்சியப்பது இப்படியே இருக்கின்றது.” இது மதச் சண்டையைப் பற்றிய கதை. அனைத்து மதங்களும் கற்பிக்கும் வீடுபேறு ஒன்று என்பதும் அதனை அடையும் வழி வெவ்வேறானவையாக இருப்பதால் அதனை முதன்மைப்படுத்தி நிகழும் சண்டைகள் மற்றும் விரோதங்களில் இருக்கும் அறியாமையை இக்கதை உணர்த்துகிறது.

     “ஒரு குருடனுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளை சில நாள் இருக்கையில், ஒரு நாள் பால் புரைக்கேறி இறந்துபோச்சுது. அந்தக் குருடனண்டை வந்து, உன் பிள்ளை செத்துப்போச்சுதென்றார்கள். ஐயோ, என்னமாய் இறந்ததென்றான். பால் குடிக்கயிைல் இறந்ததென்றார்கள். பால் என்னமாய் இருக்கும் என்றான். வெளுப்பாக இருக்குமென்றார்கள். வெள்ளை எப்படி இருக்கும் என்றான். கொக்குப் போல் இருக்கும் என்றார்கள். கொக்கு என்னமாய் இருக்கும் என்றான். கையைக் கோணலாக வளைத்து, பார் என்றார்கள் அவன் தடவி, நீண்டு வளைந்து கோணலாக இருப்பதை அறிந்து, ஐயோ, இந்த முரட்டுப் பால் குழந்தை வாயில் நுழைந்தால், சாவாமல் பிழைக்குமா என்று அலறி அழுதான். ஆதலால் ஒரு பொருளை அறியும் அறிவில்லாதவர்களுக்குப் பொருந்தா உவமையாய்ச் சொல்வது விபரீதமாகும்.” இக்கதையில் வரும் உவமை சொல்லும் முறையை உரையைப் பார்த்து உரை எழுதி மூல நூலிலிருந்து அதிகமாக விலகி கோணலாகி வெளிவரும் புதிய நூலுக்கும் கூட ஒப்பிடலாம். 

    “ஒரு நாள் திருமலைராயன் ஒரு ஏரி கரைமேலே சாரி போனான். போகும்போது தனக்குள்ளே ஒன்றை ஆலோசித்துக் கொண்டு, கூட வருகிறவர்களில் சில பேரைப் பார்த்து, இந்த ஏரி சலம் எப்படி இருக்கிறது என்றான். அவர்கள் பால் போல் இருக்கிறது என்றும், முத்துப் போல் இருக்கிறது என்றும் தெளிவாய் இருக்கிறது என்றும், இப்படி பலவிதமாகச் சொன்னார்கள், பிறகு மந்திரியாகிய அப்பாஜியைப் பார்த்தான், அப்பாஜி மகா ராசாவே, சலம் கரையாலே இருக்கின்றது என்றான், இராயன் சந்தோஷித்தான்.” இக்கதையில் எப்படி என்ற சொல் பண்பு மற்றும் இடத்தின் தன்மையைக் குறிக்கும் இருவேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் சொற்களில் பெயர் சொற்கள் மட்டுமன்றி வினாச் சொற்களும் பல பொருள் உணர்த்துவனவாக இருப்பதற்கு இக்கதையை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

எடுத்தாளப்பட்டவை

  • கதாமஞ்சரி, தொகுப்பாசிரியர். துப்புயி லூயிஸ் சவினியன், 2024, துப்புயி உலகப் பண்பாட்டு இயக்கம், புதுச்சேரி 
  • ஆதிசுவடி ஒழுக்கமாலை, லூயிஸ் சவினியன் துப்புயி, இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுச்சேரி.
  • நாட்டுப்புற இயல் ஆய்வு, சு. சக்திவேல், 2022, மணிவாசகர் பதிப்பகம்.
  • கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும், ஆ. சிவசுப்பிரமணியன், 2010, காலச்சுவடு பதிப்பகம்.
  • தமிழ் கிறிஸ்தவம், ஆ. சிவசுப்பிரமணியன், 2016, காலச்சுவடு பதிப்பகம்.
  • https://share.google/wsFoNAP2SKQEeNKvX கதாமஞ்சரி – தாண்டவராய முதலியார்.
  • அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள் இயற்றிய விநோதரச மஞ்சரி – நூல் https://share.google/9fPBh7VCFq1djsm3V
  • https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=241
Series Navigationஷோபாசக்தியின் வாழ்க – கலந்துரையாடல் அனுபவம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *