பா.சத்தியமோகன்
பிடுங்க முடியாத துயரம் போல்
முளைத்தோங்கி கிளை பரப்பிய
விரி மரத்தின் இலைகள்
மறப்பற்று ஏற்று சகிப்பைக் கற்க பயனாகும் இம்மழை.
பூமித் தரையின் பெருமார்பில்
பயிராகும் பச்சை ரோமமென
ஆங்காங்கு தோன்றும்
புல்லுக்கு நல்வரவாகும் இம்மழை.
நாக்கு வார்த்தை நாடகமும்
குதறும் பல் கொண்ட பற்றாக்குறை வருத்தமும்
தவிர்த்தமூவயது பிள்ளைப்
பருவத்திற்கு தரும் குதியாட்டம் இம்மழை.
ஏன் பிறந்தோமென்றும்
எதை நோக்கி நகர்கின்றோமென்றும்
ஏதுமறியா என் குறுபுத்திக்கு மட்டும் தான்
ஆபீஸீக்கு லீவாய் தெரியுது இம்மழை.
***