– பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய, செப்டம்பர் 24, 2005 புதன் இரவு அமெரிக்கக் கிழக்கு நேரம் 8:30 மணிக்கு, வாராந்திர சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஷோபாசக்தியின் வாழ்க சிறுகதை இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதிவரை கலந்து கொண்டு, இறுதியில் உரையாற்றிப் பின் கேள்விகளுக்கும் பதில் சொல்லிச் சிறப்பித்தார் ஷோபாசக்தி. நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது அவருக்கு நேரம் காலை 2:30 மணி. அப்போதிருந்து இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாகக் கூட்டத்தில் அழைப்புக்கிணங்கிக் கலந்து கொண்ட ஷோபாசக்தியின் தோழமையுணர்வுக்கும், அன்புக்கும் நன்றிகள்.
அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 38+ பேர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் வந்து, இருந்து, இடையில் சென்றவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 45+ பேர்களாவது கலந்து கொண்டிருப்பார்கள்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கதைப்போமா நண்பர்கள் குழுமத்தின் சிறப்பு அடையாளமான கருத்துக் கணிப்பு இடம் பெற்றது. எட்டுக் கேள்விகளுக்குப் பங்குபெற்றவர்களில் 82% சதவீதத்துக்கும் மேல் பதில் சொன்னார்கள். பதில்கள் யார் சொன்ன பதில் என அடையாளம் தெரியாமல் பெறப்பட்டு முடிவுகள் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பி.கே. சிவகுமார் தயாரிப்பில் இடம் பெறும் கேள்விகளும், பதில்களுக்கான தேர்வுகளும் விரும்பியோர் விடையளிக்கும் வண்ணமும், சிந்தனையைத் தூண்டும் வண்ணமும் அமைந்துள்ளன எனப் சில வாரங்களாகப் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டது. உதாரணமாக, கதையின் சிறப்புகளில் ஒன்றாகச் சொல்லப்பட்ட, authenticy – கருத்துக் கணிப்பில் ஒரு கேள்விக்குப் பதிலாக இருந்ததைக் கோபால் ராஜாராம் சுட்டிக் காட்டினார். கருத்துக் கணிப்பு நடத்துவது செயற்பாட்டில் ஒரு புதுமை எனில், எழுத்தாளர் / கதை குறித்த பொருத்தமான, உரையாடலுக்குப் பாதைகள் திறக்கும் கேள்விகள் கருத்துக் கணிப்பில் அமைப்பதும் ஒரு புதுமையே.
கூட்டத்தில் 28+ பேர் கதை குறித்த தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். கதை குறித்த பலப் பரிமாணப் பார்வையை இவை வழங்கின. வர்ணகலா, தேவதை சொன்ன கதை, கடவுளும் காஞ்சனாவும் போன்ற ஷோபாசக்தியின் பிற கதைகளும் சுட்டப்பட்டன.
அகராதி இல்லாமல் ஈழத்தமிழர்களின் எழுத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என 1980-களில் சுஜாதா சொன்னதை நினைவுகூர்ந்து பேச ஆரம்பித்த ஷோபாசக்தி, தன் கதைகளில் ஈழத்தமிழ் மட்டும் அல்லாமல், சிங்களம், தாய், பிரெஞ்சுச் சொற்களும் இடம் பெறுகின்றன. ஆனால் அவற்றுக்குச் சொல்லகராதி கொடுப்பதில் தனக்கு ஆரம்பம் முதலே உடன்பாடில்லை. வாசகர்கள் படித்துப் புரிந்து கொள்கிறார்கள் என்றார். பேசப்பட்ட கதை காதல் கதை இல்லை என்றும் தன் கதைகள் தான் பார்த்த, அனுபவித்த வாழ்க்கையின் தொகுப்பு என்றும், அவற்றுக்குப் பின்னே அவர் பார்த்த அரசியலும் இருக்கிறது என்றார். ஈழப்போராட்டத்தைப் பொருத்தவரையில் அது ஏன் ஈழத்தில் ஜாதியை ஒழிக்க இயலவில்லை எனில், சோசலிசத் தமிழீழம் என்கிற உயர்ந்த லட்சியங்களுடனேயே போராளி குழுக்கள் பிறந்தன. பின்னர் அது சிங்கள ராணுவத்துக்கெதிரான, ஏன் தங்களை ஏற்காத பிற / தன் மக்களுக்கெதிரான ராணுவப் போராக (மிலிட்டிரி கான்பிலிக்ட்) ஆக மாறி அப்படியே முடிந்துவிட்டது என்றார். தன் கதையை 40 பேர் அமர்ந்து பேசி உரையாடுவது புதிய அனுபவம் என்றார். அவர் கதைகள் பேசுகிற அரசியலால் ஈழத்தில்கூட அவருக்கு இவ்வளவு அதிக வாசகர்கள் இருப்பார்களா என்பது கேள்வி என்றார்.
மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை விரிவாகப் பேசுகிற்ந் ஷோபாசக்தி காந்தியைக் குறித்து அதிகம் பேசாதது ஏன், எழுதுவது என்பது சிலுவையைச் சுமப்பது என ஒரு பேட்டியில் ஷோபாசக்தி எந்தக் காரணத்தால் சொன்னார், இனம் என்கிற பெயரில் அணி திரட்டப்படும் தமிழர்களுக்கிடையேயான சாதிப்பிரிவினைகள் ஏன் அதிகம் இனத்தை முன்வைப்போரால் பேசப்படவில்லை, எஸ்.பொ. முன்வைத்த நற்போக்கு அவருக்குப் பின் இலங்கைத் தமிழ் எழுத்தில் இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குச் ஷோபாசக்தி விரிவான பதில் அளித்தார்.
வாரந்தோறும் நிகழ்ச்சியிலும், கதைப்போமா நண்பர்கள் குழுமத்திலும் பலர் வாராந்திரச் சிறுகதை கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தரிசனம் தருவதாகவும் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் நோக்கமே இதுதான்.
அடுத்த வாரம் – இதே நேரம் கி. ராஜநாராயணின் கோமதி சிறுகதையைக் குறித்து உரையாடுவோம் என்கிற அறிவிப்புடன், அனைவருக்கும் நன்றி சொல்லிக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
நன்றி!
- துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்
- ஷோபாசக்தியின் வாழ்க – கலந்துரையாடல் அனுபவம்
- காற்றுவெளி மின்னிதழ்
- மன்னிக்கத் தெரியாவிட்டால்….
- மழைபுராணம் – 2
- இலக்கியப்பூக்கள் 353
- காலேஜ்…
- கடற்கரை
- கடப்பதன் தவிப்புகள்