Posted in

மழை புராணம் – 6 மழை நேரம்

This entry is part 5 of 10 in the series 2 நவம்பர் 2025


                             பா.சத்தியமோகன்

நம்மை அறியாமல்
நம் இதயம் அருகே அன்பால் வரும் நண்பனைப் போல்
சொட்டு சொட்டாகப் பழகி
விடாமல் பிடித்துக் கொண்டது மழை
சற்று நேரத்தில் செஞ்சாறாய் மாறுகிறது தெருமண்
காற்று கலந்த மழையின் குளிரால்
அடைக்கலமாய் வீட்டில் சுருள்கிறது
கழுத்துப்பட்டைக் கொண்ட வளர்ப்பு நாய்
நனைவதிலும் துவட்டுவதிலும் நிலவும் போதாமையால்
தும்மல் சளிக் கவலைகள் கையெழுத்திட
குழந்தைகளின் ஈரக்கால்கள்
குறு அறைக்குள் நடை பழகின
புகை எழும்பும் மூட்டம் போல்
நெடுக்காக நின்று
அடர்த்தியாய் ஊரை
வெட்ட வெளியில்  புணர்கிறது மழை
ஆட்டமாய் ஆடி
அசோக மர இலைக்காம்பின் பிடிப்பு தளர்ந்த
இலை ஒன்று
அரை மணிநேரத்திற்கும் மேலாய்
வேகமாய் படபடக்கிறது நனைந்து
காய்ச்சல் வந்தால் போல்
சொல்லின் சில்லில்எத்தனை அடக்கினாலும்
எழுத்துக்கு அப்பால் பெய்வது தான் மழை.

Series Navigationஓவியமோ நீ?கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *