அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 29வது (2024) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரைகளிலிருந்து 2024 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக கீழ்காணும் எழுத்தாளர்களையும், கலைஞரையும் விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது.
- பேராசிரியர் கார்லோஸ் சபரிமுத்து (எ) தமிழவன் – புனைவிலி இலக்கியம்
- எம். கோபாலகிருஷ்ணன் – புனைவிலக்கியம்
- ஓவியர் சந்ரு – நுண்கலை
ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
விருதாளர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவங்களைப் பற்றிய நடுவர் குழுவின் குறிப்புகளும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
‘விளக்கு’ செயற்குழு
அக்டோபர் 28, 2025
தமிழவன்

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பணிகளும்
கார்லோஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழவன் அடிப்படையில் தமிழ் பேராசிரியர். திறனாய்வாளர்,படைப்பாளர், இதழாளர் என பல தளங்களில் செயற்பட்டவர். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகேயுள்ள மணலிக்கரை என்ற ஊரில் 1945ஆம் ஆண்டு பிறந்தார்.பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படித்த இவர் கேரள பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழிலக்கியம் நிறைவு செய்தார். புனித சவேரியார் கல்லூரியிலும், பாலக்காடு சித்தூர் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராக சில காலம் பணியாற்றிவிட்டு பெங்களூர் கிறிஸ்து கல்லூரியிலும் பெங்களூர் பல்கலைக்கழக கன்னட ஆய்வு மையத்திலும் பணியாற்றினார்.தமிழ் கன்னட நாட்டுப்புறக் கதைகள் பற்றிய ஒப்பாய்வு என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.பிறகு போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக பணியாற்றி திரும்பினார்.அதன் பிறகு குப்பத்திலுள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.தமிழ், ஆங்கிலம்,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் தெரிந்தவர்.தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.முழுநேர எழுத்துப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
வ.ஐ.சுப்பிரமணியம்,ச.வே.சுப்பிரமணியம் ஆகியோர்களிடம் பயின்ற தமிழவன் மரபு இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் ஆர்வமுடையவராக இருந்தார்.எண்பதுகளில் இலக்கு என்ற இயக்கத்தை நண்பர்களோடு சேர்ந்து நடத்தியது இவருடைய முக்கியமான பங்களிப்பு.எண்பதுகளில் கலை இலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும்,புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற கருத்தரங்குகள் அதன் சார்பாக நடத்தப்பட்டன.எண்பதுகளில் நடந்த முக்கியமான இலக்கிய சந்திப்பு மையங்களாக இந்த அரங்குகள் அமைந்தன. தமிழ்க் கோட்பாட்டு சிற்றேடுகளில் முக்கியமானதான படிகள் இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.தமிழவனின் எழுத்துகள் அதில் தொடர்ந்து இடம் பெற்றன. பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த மேலும் ஆய்விதழின் ஆலோகர் குழுவில் இருந்தார். தொடர்ந்து நாகர்ஜூனன், எஸ்.சண்முகம், நஞ்சுண்டன் உள்ளிட்ட நண்பர்களோடு சேர்ந்து வித்யாசம் என்னும் நவீன கோட்பாட்டு சிற்றிதழையும் நடத்தினார்.
தமிழ் இலக்கியங்களை வாசிப்பதற்கு மரபான திறனாய்வு முறைகள் மட்டுமல்லாது மேற்குலகின் இலக்கிய திறனாய்வுக் கோட்பாடுகளை பயன்படுத்தி வாசிக்கும் போக்கும் உருவான போது அத்தகு கோட்பாடுகளை தமிழில் அறிமுகப்படுத்தியவராகவும்,அவற்றை தமிழிலக்கியங்களோடு பொருத்தி விவாதித்தவராகவும் தமிழவனின் இடம் அமைகிறது. அந்தவகையில் அவர் எழுதிய ஸ்டரக்சுரலிசம் (1982), அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991), தமிழும் குறியியலும் (1992) அமைப்பியலும் அதன்பிறகும் (2019) போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த நூல்களிலுள்ள கோட்பாடுகளும் விவாதங்களும் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ச் சூழலுக்கேற்ப உள்வாங்கப்பட்டு முதன்முறையாக எழுதப்பட்ட கோட்பாட்டு அறிமுக நூல்களாகும்.வெளியான காலத்தில் பல்வேறு விவாதங்களுக்கும், புதிய கோட்பாடுகளின் அறிமுகத்திற்கான முன்னுதாரணங்களாகவும் இந்நூல்கள் இருந்தன.கோட்பாட்டு அறிமுகத்தை மட்டுமல்லாமல் அவற்றின் அடிப்படையில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியது மூலம் புதுவிதமாக வாசிப்பதற்கான முறையையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும் (1992, 1995) பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள் (2009) தமிழவன் கட்டுரைகள் போன்ற நூல்கள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை. இக்கோட்பாடுகளின் யோசனை முறைகளை உள்வாங்கியும் விலகியும் நாவல்களையும் சிறுகதைகளையும் கூட அவர் படைத்தளித்திருக்கிறார். அப்படைப்புகளும் வெளியான காலத்தில் கவனத்தை ஈர்த்தன. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தில் படிந்த நிழல்கள், ஜி.கே.எழுதிய மர்ம நாவல் போன்றவை அத்தகைய நாவல்களாகும்.பின்னாட்களில் தமிழ் என்னும் சிந்தனை குறித்து அவர் எழுதி வந்த கட்டுரைகள் தமிழ்ச் சமூகம், வரலாறு, பண்பாடு குறித்த முக்கியமான வாசிப்புகளாக அமைந்தன. இன்றைய தமிழ் என்னும் அடையாளத்தை புரிந்து கொள்வதில் அவை முக்கியமான கோட்பாடுகளை அளிக்கின்றன. இவைத்தவிர தொகுப்பு, பதிப்பு, மொழி பெயர்ப்பு என்கிற வகையில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் அவர். அவையும் பின்நவீனத்துவம், கன்னட தலித் இலக்கியம்,ஈழத்துக் கவிஞர்கள், பெண் கவிஞர்கள் தொடர்பான நூல்களேயாகும்.
படைப்புகள்
திறனாய்வு மற்றும் கோட்பாட்டு நூல்கள்:
- ஸ்ட்ரக்சுரலிசம்
- அமைப்பியலும் அதன் பிறகும்
- படைப்பும் படைப்பாளியும்
- தமிழும் குறியியலும்
- தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும்
- நவீனத்தமிழ் விமர்சனங்கள்
- புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்
- தமிழுணர்வின் வரைபடம்
- தமிழவன் கட்டுரைகள் |,||
- புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்
- நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
- இருபதாம் நூற்றாண்டில் கவிதை
- திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்
- நானும் சிந்தனையாளர் படைப்பாளி யூலியா கிறிஸ்தோவாவும்
- பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்
நாவல்கள்:
- ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் (1985, 2021)
- சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்
- ஜி.கே. எழுதிய மர்மநாவல்
- முஸல்பனி
- ஆடிப்பாவை போல
- வார்ஸாவில் ஒரு கடவுள்
சிறுகதைத் தொகுப்புகள்:
- இரட்டைச் சொற்கள்
- நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
- தமிழவன் கதைகள்
- கருஞ்சிவப்பு ஈசல்கள்
எம். கோபாலகிருஷ்ணன்

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பயணமும்
தமிழில் சிறுகதை, நாவல்,கவிதை,இதழியல், கட்டுரை,மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வரும் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்.திருப்பூர் குமரானந்தபுரத்தில் 1966 ஆம் ஆண்டு பிறந்த எம்.கோபாலகிருஷ்ணனின் இலக்கியப் பயணம் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து எண்ணங்கள் என்ற கையெழுத்து இதழை தொடங்கி நடத்தியதிலிருந்து ஆரம்பிக்கிறது.பக்தவச்சலமும் சுப்ரபாரதிமணியனும் இணைந்து நடத்திய சூத்ரதாரி இதழ்ப் பணிகளிலும் பங்கேற்றார். திருப்பூரிலிருந்து வெளிவந்த குதிரை வீரன் பயணம் இதழில் எழுதிய போது தான் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு சூத்ரதாரி என்ற புனைப்பெயரை சூட்டினார் யூமாவாசுகி. தொடர்ந்து அவர் எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பாக பிறிதொரு நதிக்கரை என்ற நூல் 2000 ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு முந்தைய 1999 ஆம் ஆண்டிலிருந்து ஜெயமோகன், செந்தூரம் ஜெகதீஷ் ஆகியோரின் இணைப்பில் சொல்புதிது இதழில் பணியாற்றி அதன் ஆசிரியராகவும் இருந்தார். வணிகவியலிலும், இந்தி இலக்கியத்திலும் பட்டமேற்படிப்பை முடித்த எம்.கோபாலகிருஷ்ணன் காப்பீட்டுத் துறையில் பணியாற்றினார். ஆரம்பத்தில் சூத்திரதாரி என்ற புனைப்பெயரிலேயே எழுதி வந்த அவர் பின்னர் முழுதும் இயற்பெயரிலேயே வெளிப்பட்டார்.அம்மன் நெசவு,மணல்கடிகை,மனைமாட்சி,தீர்த்த யாத்திரை போன்ற கவனம் ஈர்த்த நாவல்களை எழுதினார்.தமிழின் கொடுமுடி நாவல்களாக நிலைக்கயிருப்பவற்றுள் இவரின் நாவல்களுக்கும் இடமிருக்கும். தமிழின் முக்கியமான நாவலாசிரியராக விமர்சகர்களாலும் கருதப்படுகிறார். அன்றாடத்தின் நம்பகமான சித்திரங்களை துல்லியப்படுத்தும் இவர் படைப்புகள் அதேவேளையில் வாழ்வின் நுட்பங்களையும், மனித உறவின் நுண்மைகளையும் சித்தரித்துக் காட்டுவதில் வல்லவை.
அம்மன் நெசவு இவரெழுதிய முதல் நாவலாகும்.இந்நாவல் நெசவாளர் குடிகளான தேவாங்கர் சமூகத்தினரின் இடப்பெயர்ச்சியைப் பற்றி பேசியது. தொன்மத்தில் தொடங்கினாலும் சமகாலம் வரையிலும் இந்நாவல் நீடிக்கிறது. நெசவு குடும்ப பின்னணியில் பிறந்த எம்.கோபாலகிருஷ்ணன் முதல் நாவலின் தொடர்ச்சியாய் தொழில்மயமாகி வந்த திருப்பூரின் பின்புலத்தில் வைத்து மனித வாழ்க்கையின் நுட்பமான மாற்றங்களை மணல் கடிகை என்ற நாவலாக அடுத்து எழுதினார்.ஐந்து கணவன் மனைவிகள், ஐந்து வெவ்வேறு ஊர்கள் சார்ந்து நடக்கும் மாற்றங்களை தீவிரம் குன்றாமல் சித்தரிக்கிறது இந்நாவல்.ஆண்பெண் உறவின் நுட்பங்களை ஆழமாக சித்தரித்த நாவலாசிரியர்களில் முதன்மையானவராக சந்தேகமே இல்லாமல் எம்.கோபாலகிருஷ்ணன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். மனைமாட்சி நாவல் அந்த விதத்தில் குறிப்பிடவேண்டிய படைப்பாகும்.ஒருபடைப்பு வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தின் வழியாக ஒட்டுமொத்த வாழ்வைக் குறித்த உங்கள் பார்வைக்கு கூடுதலான பரிமாணத்தை தரவல்லதாக இருக்க வேண்டும் என்றும், இதுவரைக்குமான உங்கள் பார்வையில் புதிய ஒரு கோணத்தை சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிற அவர் அதற்கேற்ப எழுதியிருக்கும் படைப்புகளே இவை. அவருடைய சிறுகதைகளும் இதே பண்பு கொண்டவையோகும். வெவ்வேறு மொழிகளின் படைப்புகளை வாசித்த போது தமிழ் படைப்புக்குலகின் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்துடன் அவர் மொழிபெயர்ப்புகள் அமைந்தன. ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்லாமல் இந்தியிலிருந்தும் தமிழுக்கு படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் இவர் ஜெயமோகனோடு இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பும், ரேமண்ட் கார்வரின் சிறுகதை க.மோகனரங்கன் செங்கதிர் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.
அதேபோல இலக்கிய அரங்குகளிலும், இலக்கிய இதழ்களிலும் மொழி பிரக்ஞையும் வாழ்வு நுட்பங்களையும் விவரித்துப் பேசுகிற இலக்கிய விமர்சகராக வலம் வருகிறார். கதா (1999), ஸ்பாரோ (2021) உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
படைப்புகள்
நாவல்கள்:
- அம்மன் நெசவு (2002)
- மணல்கடிகை (2004)
- மனைமாட்சி (2018)
- தீர்த்த யாத்திரை (2021)
- வேங்கைவனம் (2022)
குறுநாவல் தொகுப்புகள்:
- வால்வெள்ளி (2018)
- மாயப் புன்னகை (2020)
சிறுகதைத் தொகுப்புகள்:
- பிறிதொரு நதிக்கரை (2000, 2015)
- முனிமேடு (2007)
- சக்தியோகம் (2018)
- மல்லி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) (2019)
- அமைதி என்பது… (2022)
- சுழல் (2024)
கவிதைத் தொகுப்பு:
- குரல்களின் வேட்டை (2000)
கட்டுரைத் தொகுப்புகள்:
- நினைவில் நின்ற கவிதைகள் (2018)
- மொழி பூக்கும் நிலம் (2019)
- ஒரு கூடைத் தாழம்பூ (2019)
- தமிழ் நாவல்களின் தடம் (2024)
மொழிபெயர்ப்புகள்:
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
- ஈஷாவாஸ்ய உபநிஷத் – ஒரு அறிமுகம் (1999)
- ஒரு அடிமையின் வரலாறு – வாழ்க்கைச் சரிதம் – பிரடெரிக் டக்ளஸ் (2001)
- வாழ்விலே ஒரு நாள் – நாவல் – சோல்ஸெனிட்சன் (2003)
- காதலின் துயரம் – நாவல் – கதே (2006)
- அறிவு – நாராயண குருவின் பாடல்களுக்கான நித்ய சைதன்யயதியின் உரை, (2021)
- ஆன்டன் செகாவ் கதைகள் (2021)
இந்தியிலிருந்து தமிழுக்கு:
- சிவப்புத் தகரக் கூரை – (2013)
- துயர் நடுவே வாழ்வு – திகார் பெண் கைதிகளின் கவிதைகள் (2015)
- வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்யாயன் (2020)
ஓவியர் சந்ரு

வாழ்க்கைக் குறிப்பும் கலைப் பயணமும்
தமிழ் நவீன ஓவியக்கலைஞர்களில் மூத்தவரும், சென்னை ஓவியக்கலை கல்லூரியின் ஆசிரியரும் முன்னாள் முதல்வருமான திரு.சந்ரு சிறந்த சிற்பக்கலைஞர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் தலித் கலை இலக்கியச் செயல்பாட்டாளர். “சந்ரு மாஸ்டர்” என மாணவர்களால் அழைக்கப்பட்டுவரும் இவரது இயற்பெயர் சந்திரசேகரன் குருசாமி. “கலை என்பது விருதுகளுக்காக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை” என்பது இவர் கூற்று. குருவனம் என்ற திறந்தவெளி அருங்காட்சியகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் திருநெல்வேலி ஓவியப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர். குருவனம் திறந்தவெளி அருங்காட்சியகத்தில் தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்காக மார்பளவு சிலைகள் அமைத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிற்பங்களை தனது அகக் கண் முன் கொணர்ந்து ஓவியமாக வரையக் கூடியவர். தொடர்ந்து கலை இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் ஈடுபடுவதுடன் தனது மாணாக்கர்களையும் அவ்வழி நடத்தி வருபவர்.
1951ல் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த இவர் சென்னை கவின்கலை கல்லூரியில் ஐந்து வருடங்கள் வண்ணக்கலை (Painting) துறையில் இளங்கவின்கலை (B.F.A) பட்டமும் பின் ஆலையக சுடுமண் வடிவமைப்பு (Industrial Design in Ceramic) துறையில் முதுகவின்கலை (M.F.A) பட்டமும் பெற்றவர்.
ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றிய இவர் பிறகு, 1977 முதல் சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஆலையக சுடுமண் வடிவமைப்பு துறையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் கல்லூரியின் முதல்வராகி ஓய்வு பெற்றார்.
முதன்முதலாகத் தன் ஓவியங்களை 1996-ல் மைலாப்பூரில் ‘கலைக்கு எதிராக கலை’ என்ற தலைப்பில் தனிக்கண்காட்சியாக வைத்தார். பின்னர் 2023 ஆண்டு கலை-அரசியல் (ART-POLITICS) என்ற தலைப்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தக்ஷிண்சித்ராவில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சென்னை மாநகரின் வட்டவடிவப் பாதைகளில் வைக்கப்பட்டுள்ள மரப்பாச்சி, தெருக்கூத்து, புலிவேடமிட்ட ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தொழிலாளர் பிரச்சினை ஆகிய சிலைகள் இவரால் வடிக்கப்பட்டவை. உச்ச நீதிமன்ற நீதிபதி பகவதியின் மார்பளவு சிலை, சித்தா ஆராய்ச்சி மையத்திலுள்ள அயோத்திதாச பண்டிதரின் மார்பளவு சிலை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலுள்ள டாக்டர் ரமணன் மார்பளவு சிலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, மதுரை உயர்நீதிமன்றத்திலுள்ள காந்தியின் உருவச் சிலை, திருநெல்வேலியில் உள்ள லெனின் சிலை, சென்னை வணிக வளாகத்தில் உள்ள தமிழரின் ஆதி கலாச்சாரத்தினை வரையறுக்கும் பெண்கள் அணியும் பாம்படம், நீலகிரியின் அடையாளமான வரையாடு போன்றவை இவரின் முக்கிய படைப்புகள்.
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு
- அவன், இவன், வுவன்
கலை தொடர்பிலான புத்தகங்கள்
- திருத்தப்பட்ட பதிப்பு (ஓவியம்)
- செப்பாடி தப்பாடி (தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம்)
- நேர்காணலும் நிறைகாணலும் (காவ்யா வெளியீடு)
- உருவெளியில் (நிர்வாண வரைபடங்களைப் பற்றிய புத்தகம்)
- ஓவியம் என்றொரு மேஜிக் – ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்
- (ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்)
- சாதி கெட்ட கலை (படிக வெளியீடு)
கவிதைத் தொகுப்பு
- சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள் (வம்சி பதிப்பகம்)
- சந்ருவின் கவிதை
விருதுகள்
- 1993-ல் கலாமேளாவில் சிறந்த மேடை வடிவமைப்புக்கான தேசிய அளவிலான விருது
- 1996-ல் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பனி சிற்ப திருவிழாவில் இரண்டாம் பரிசு
- 1997-ல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா மற்றும் வர்த்தக விழாவில் முதல் பரிசு
- சிறுகதை விருது – (என்.எல்.சி 2007) நெய்வேலி
- கோபம்
- நேசம்
- மெஹரூன்
- ஓவியமோ நீ?
- மழை புராணம் – 6 மழை நேரம்
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
- அப்பாவின் சைக்கிள்
- சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
- 2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”
விளக்கு விருது பெறும், அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அவர்களுடைய சிறப்பான பங்களிப்பு, தமிழின் உயரத்தை மேலும் காட்டுகின்றது.
ஜெயானந்தன்.