அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
நெஞ்சே நீ கலங்காதே
சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே
நான் என் செய்வேனென்று
நெஞ்சே நீ கலங்காதே
வஞ்சர் பகை செய்தாலும்
வாரா வினை பெய்தாலும்
நெஞ்சே நீ கலங்காதே
பட்டயம், பஞ்சம் வந்தாலும்
பாடு நோவு மிகுந்தாலும்
மட்டிலா வறுமைப் பட்டாலும்
மனுஷர் எல்லாம் கைவிட்டாலும்
நெஞ்சே நீ கலங்காதே
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் – கீர்த்தனை
பழங்குடித் தலைவர், சிம்பாரி இனம், பாப்புவா நியூ கினியா
நிலவு, பால் போலக் காய்ந்துகொண்டு இருந்தது. மூங்கில் காட்டிற்குச் செல்லும், அந்த காட்டுப் பாதையில், நான் நடக்க, நடக்க, ஒற்றையடிப் பாதையின், கீழே இருந்த காய்ந்த சருகுகள், சரக் சரக் எனச் சத்தம் எழுப்பின.
எனக்கு மட்டும், மனம் திக் திக் என்று இருந்தது. நான், அந்த இரவில், மசளையானை பார்க்கப் போய்க்கொண்டு இருந்தேன்.
“அட.. கிறித்துவர்களாக இருந்து விட்டுப் போகட்டுமே. ஆனாலும், இறந்து போகிற அனைவரும், நம் இனம் அல்லவா? இது ஏன், இந்த மசளையானுக்குப் புரியவில்லை?”
“எத்தனை பேரைத்தான் இப்படி கொலை செய்வான் இந்த மசளையான்.. ஊர்த் தலைவன் நான்.. எனக்கு, இப்படி ஒரு அவப்பெயரை வாங்கித் தருகிறானே, இந்த மசளையான்?”
நான், மனதில் புலம்பிக்கொண்டே அந்தக் காட்டுப் பாதையில் நடந்தேன்.
“விருக்” என்று ஒரு பெரிய சத்தம். “ஐயோ..” நான் பயந்து போனேன். இரண்டு காட்டு முயல்கள், பாதையின், அருகில் இருந்த, குற்றுச்செடிகள் அடர்ந்த புதரில் இருந்து, வெளியே, தாவித் தாவி ஓடின.
வேறொரு நாளாக இருந்தால், நானே, இந்த முயல்களைத் துரத்திப் பிடித்து இருப்பேன். ஆனால், இப்போதோ, நான் மசளையான் பயத்தில், உடல் நடுநடுங்க, நடந்து போய்க்கொண்டு இருக்கிறேன்.
முயல்களின் சத்தத்தை, புறம்தள்ளி, நான், நடந்து போய்க்கொண்டு இருந்தேன்.
தூரத்தில் சில நரிகள் ஊளையிடும் ஓசை, என் காதில் கேட்டது. ஒரு வேளை, அந்த நரிகள், பீட்டர் இறந்து போன, அந்த இடத்தில் இருந்துதான், ஊளையிடுகின்றனவா? நான், சத்தம் வந்த திசையை நோக்கி, நடக்கலானேன்.
“பீட்டர் என்றுதான், அவனை, ஊர்க்காரர்கள் கூப்பிட வேண்டுமாம். ஊர் ஒன்று கூடி, செம்படயான் என்று அவனுக்கு வைத்த பெயர், அவனுக்கு வேண்டாமாம். என்ன கொடுமை இது?” எனக்கு, இறந்து போன, செம்படையானை நினைத்து வேதனை வந்தது.
“மகனே.. இத்தனை நாட்கள்.. இத்தனை வருடங்கள்.. நம் பழங்குடிகள் எல்லாம், ஒன்றாகத்தானே வாழ்ந்து கொண்டு இருந்தோம்? நாம், எப்போதும், பசியால் துடிக்கவில்லையே?”
“காய்களையும், கனிகளையும், காடைகளையும், காட்டுப் பன்றிகளையும், நமது தேவன், இதுநாள் வரை, குறைவில்லாது, வழங்கிக்கொண்டுதானே இருக்கிறார்?”
“நாம், இதுநாள் வரை, ஆரோக்கியமாகத் தானே வாழ்கிறோம். நோய் நொடிகள் வந்தால், நாம் மருத்துவம் பார்த்துக் கொள்ள, நமது காடு, நமக்கு, எண்ணிறந்த மூலிகைகள் கொடுத்து இருக்கிறதே?”
“மகனே.. இப்படியெல்லாம் இருக்க, செம்படையான் என்ற உன் பெயரை, பீட்டர் என்று மாற்றிக்கொண்டால், நீ மனிதன் ஆகி விடுவாயா? பெயரை மாற்றாத நாங்கள், காட்டுமிராண்டிகள் ஆகி விடுவோமா”
“எதை எதையோ பேசி, மசளையான் கோபத்துக்கு ஆளாகி, இறந்து போனாயே எனது மகனே” நான், கண்ணீருடன் நடந்தேன்.
மூங்கில் காடுகள் வந்து விட்டது. நான் பிணத்தைத் தேடினேன்.
என்னைப் பார்த்ததும், பிணத்துக்கு அருகில் இருந்த நரிகள் சில உறுமின. பின்னர், எனது கையில் இருந்த ஈட்டியைப் பார்த்ததும், அங்கிருந்து நகன்றன.
நான், பிணத்தின் அருகில் போய்ப் பார்த்தேன். திடீரென்று, ஒரு மலைப்பாம்பு சரசரவென ஊர்வது என் கண்களில் பட்டது.
மலைப்பாம்பு தாக்கியதில்தான், செம்படையான் என்ற பீட்டர் இறந்து போய் இருக்கிறான்.
நான், அந்த ஆளுயர, மலைப்பாம்பினை உற்றுப் பார்த்தேன். நான் உற்றுப் பார்க்க, உற்றுப் பார்க்க, எனக்கு உண்மை புரிந்து போனது.
மலைப்பாம்பு வடிவில், உருமாறி இருப்பவன், மசளையான்தான். என் உடல், இப்போது சில்லிட்டது. எனது கைகளும், கால்களும், பயத்தில், வெடவெடத்தன.
மலைப்பாம்பு, இப்போது ஊர்ந்து போக ஆரம்பித்தது. நான், மசளையானைப் பின் தொடர்ந்து நடந்தேன்.
முதலையாய் வந்து, மசலையான் முன்னர் என்னைக் கூட்டிச் சென்ற, அதே ஏரி. அதே குகை.
போன தடவை, குகையின் பின்புறம், முதலை வடிவில், நீர்வழியே கூட்டிக்கொண்டு போனான் மசளையான். இந்த முறை, மலைப்பாம்பு வடிவில், பாறைகளின் வழியே, குகையின் முன்புறம் வழியாகக் கூட்டிக்கொண்டு போகிறான்.
பாறைகள் வழுக்கின. பாம்பு எளிதாக, அந்த வழுக்கல் பாறைகள் வழியாக, ஊர்ந்து போனது. ஆனால், என்னால், அந்த வழுக்கல் பாறைகள் வழியே, எளிதே நடந்து போக முடியவில்லை.
நான், உட்கார்ந்தும் தவழ்ந்தும், வழுக்கல் பாறைகளைக் கடந்து குகையை அடைந்தேன்.
குகையின் முன்புறத்தில், குறுகிய ஒரு வாசல் இருந்தது. பாம்பு எளிதில் உள்ளே சென்றது. ஆனால், நான், குகையை அடைந்து, அந்தக் குறுகிய வாசலுக்குள் குதிக்க, எனக்கு நீண்ட நேரம் ஆனது.
அதற்குள், பாம்பு மசளையானாக மாறி இருந்தது. அங்கே, அங்கே நான் கண்ட காட்சி…
மசளையானைச் சுற்றி ரத்த வாடை. அவன் உடம்பில் இருந்து, ஒரு வகை கெட்ட ரத்தம், வழிந்து, கீழே ஓடிக்கொண்டே இருந்தது. அந்த இரத்தத்தின் கெட்ட நாற்றத்தை என்னால், சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
எனக்கு வாந்தி வருவது போல இருந்தது. கஷ்டப்பட்டு நான் அடக்கிக் கொண்டேன்.
நான் கெஞ்சினேன். “மசளையான்.. நம் இனத்தை, இப்படிக் கொலைக்கு மேல் கொலை செய்து, நீயே அழித்து விடாதே. தவறு நடக்கவேயில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதற்கு தண்டனை, கொலைகள்தானா” மசளையானிடம் நான் கதறினேன்.
மசளையான், என்னைக் கோபமாய்த் திரும்பிப் பார்த்து கர்ஜித்தான். அவனது மீசை துடித்தது. காடு போல வளர்ந்து இருந்த அவனது முடியை, இப்படியும் அப்படியும் அவன் ஆட்டியது, மிகவும் கொடூரமாக இருந்தது.
“முடியவே முடியாது. உனது இனத்தை ஒழுங்காக வாழச்சொல். எனக்கு, எனது வார்த்தைகளுக்கு கட்டுப்படாத எவனும் இந்த உலகத்தில் வாழ முடியாது”
நான், மசளையானின் கோபமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, குகையை விட்டு, ஓடினேன். பயத்தில், வழுக்கல் பாறைகளில், என்னால் மறுபடியும் ஏற முடியவில்லை. ஆனால், நான் விடாமல் ஏறினேன்.
எனது உடம்பு முழுவதும் காயங்கள்.
எனது குடிலுக்கு வந்து சேர்ந்ததுதான் தாமதம். நான், அப்படியே படுக்கையில் விழுந்தேன்.
மறுநாள் காலையில், ரொம்ப தாமதமாக, நான் படுக்கையை விட்டு எழுந்தேன்.
“என்ன, நேற்று இரவு, கள் குடித்தது, போதையை, அதிகமாக்கி விட்டதா” என்று இருளன், என்னைப் பார்த்து, கேலி செய்த போது, அவனிடம், என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
மசளையான் குறித்து, இருளனிடம் பேசவும், எனக்கு மனதில்லை.
வில்லாளன், சிம்பாரி மலை அடிவாரம், பாபுவா நியூ கினியா
நாங்கள் வந்த வேன், இனி மலை மேலே போக முடியாது. காரணம், வேன் போகுமளவிற்கு, மலையில் இன்னும் பாதை அமைக்கப்படவில்லை.
எனவே நடந்துதான் போகவேண்டும். அதுவும், பத்து மைல் தூரம் மலை ஏற வேண்டும்.
நாங்கள், அனைவரும், மலை அடிவாரத்தில் இருந்து, காலையிலேயே, மலை ஏறத் தொடங்கி விட்டோம்.
சிம்பாரி இளம் பிள்ளைகளுக்கு, மலை ஏறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. காரணம், அவர்கள், மலையில் ஏறி, இறங்கி, நடந்து கொண்டு இருப்பவர்கள்.
எனக்கும், பாதர் ஜேம்சுக்கும்தான் பிரச்சினை. நாங்கள் இருவருமே, பாபுவா நியூ கினியாவின், தலைநகரில் உள்ள திருச்சபைக்கு பணி புரிய வந்து, பல வருடங்கள் ஆகிவிட்டது.
அங்கே பணி புரிய வந்த நாளில் இருந்து, நாங்கள் இருவருமே, எந்த மலையும் ஏறவில்லை. இருவருமே, அதற்கு முன்னர், மலையில் பணி செய்தவர்கள்தான்.
இருப்பினும், கால இடைவெளி, எங்கள் இருவரின், இன்றைய மலையேற்றத்தை, கடுமையாகச் சோதித்தது. நாங்கள் இருவருமே, மலையேற சிரமப் பட்டோம்.
மலையேற்றம் சிரமமாக இருந்ததற்கு, இன்னொரு காரணம், எங்கள் இருவரின் வயது. நாங்கள் இருவருமே, அறுபது வயதை நெருங்கும் கிறித்துவ ஊழியர்கள்.
மலையேற்றத்தின் சிரமத்தை மறக்க, ஜேம்ஸ் பாதர், அந்த சிம்பாரிப் பிள்ளைகளுடன் சேர்ந்துகொண்டு, அவர்களுடன் பேசிக்கொண்டே நடந்தார்.
எனக்குத்தான் துணை இல்லாமல் இருந்தது. நல்ல வேளை.. தம்பி ராபர்ட், என்னோடு சேர்ந்துகொண்டான். நான் மெதுவாக ஏறுவதைப் பார்த்து, ராபர்ட்டும், தனது மலையேறும் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். நாங்கள் இருவரும், மெதுவாக மலையேறினோம்.
ராபர்ட்டிடம் எனக்கு ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றியது.
“தம்பி ராபர்ட்.. உனக்கு ஆங்கிலத்தில் படிக்கத் தெரியுமா? நீ ஆங்கிலம் கற்றுக் கொண்டாயா?” நான் ராபர்ட்டிடம் வினவினேன்.
மலையேறிக்கொண்டே பேசினான் ராபர்ட். “ஆம் அண்ணா. நான் கிறித்துவத்துக்குள் வந்து, இத்தோடு ஆறு வருடங்கள் ஆகிறது. இந்த ஆறு வருடத்தில், நமது மலையில் இருக்கும், கிறித்துவ போதகர், எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தார்.” என்ற போது, எனக்கு ஆச்சரியம் வந்தது.
“பரவாயில்லையே தம்பி.. அப்படியென்றால், உனக்கு புத்தகம் படிக்கும் வழக்கமும் வந்து இருக்குமே?”
ராபர்ட், இப்போது உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.
“ஆம் அண்ணா.. எனக்கு புத்தகம் படிப்பதென்றால் கொள்ளை ஆசை அண்ணா. சிம்பாரி மலையில் இருக்கும், நமது கிறித்துவ போதகர் அண்ணா, எனக்கு நிறைய கிறித்துவம் சார்ந்த புத்தகங்கள், உலக வரலாறு சார்ந்த புத்தகங்கள், கொடுத்து இருக்கிறார். அவைகளை எல்லாம் படித்து, நான் நிறையத் தெரிந்து கொண்டேன் அண்ணா.”
“நமது திருச்சபை வந்தபோது கூட, அங்கே தங்கியிருந்த நாட்களில், நான் திருச்சபை நூலகத்திற்கு, எனது ஓய்வு நேரங்களில் போய், நிறையப் புத்தகங்கள் படித்தேன்.”
“உங்களுக்குத் தெரியுமா அண்ணா… நமது திருச்சபை நூலகத்தில், கிறித்துவ மதம் மட்டுமல்ல… இந்து மதம், இசுலாமிய மதம் பற்றிய நூல்கள் கூட, அங்கே எனக்குப் படிக்கக் கிடைத்தது அண்ணா” ராபர்ட்.. பேசி முடித்தான்.
நான், ஆச்சரியத்துடன் சொன்னேன். “ராபர்ட்.. நீ நல்ல அறிவாளி.. சரி உன்னிடம் ஒரு கேள்வி” என்றேன்.
அந்த என் கேள்வியை, ராபர்ட்டிடம் எப்படி கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், தயங்கித் தயங்கி, அந்த என் கேள்வியை, அவனிடம் நான் கேட்டே விட்டேன்.
“தம்பி ராபர்ட்.. நீ நமது புனிதக் குழல் திருவிழாவில், மூங்கேன்யு ஆக இருந்து, பதின்ம வயதுக்கு வரப்போகும், சிறுவர்களுக்கு, ஆண் பால் புகட்டியதாகச் சொன்னாய். அப்போதெல்லாம், நிர்வாணமாக நின்று, சிறுவர்களுக்கு ஆண்பால் புகட்டியது, உனக்கு கூச்சத்தைத் தரவில்லையா? இப்போது, ஒரு கிறித்துவனாக, அந்தப் பழைய விசயங்களை நினைக்கையில், உனக்கு அந்த விந்து புகட்டும் நிகழ்ச்சி வெட்கத்தைத் தரவில்லையா?”. நான், அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்.
ராபர்ட் என்னைக் கடிந்து கொள்வான் என்று நினைத்தேன். ஆனால், அவன் மிகவும் தெளிவாகப் பேசினான்.
“அண்ணா.. நமது திருச்சபையில், அப்பம் சாப்பிடுகிறோம். காரணம், அந்த அப்பம், இயேசு பிரானின் சரீரம் என்று நாம் நம்புகிறோம். அது நம்பிக்கை.”
“நமது திருச்சபையில் திராட்சை ரசம் பருகுகிறோம். அந்த திராட்சை ரசம், இயேசு பிரானின் இரத்தம் என்று நாம் நம்புகிறோம்.. அது நம்பிக்கை”
“அதே போலவே, சிம்பாரி மலையின், நமது பூர்வீகக்குடிகள், பெரிய வீரர்களின், ஆண் பால் விந்துவை, இளம் சிறுவர்களுக்குப் புகட்டுவதால், அந்த இளம் சிறுவர்கள், பெண்மையை விட்டு அகன்று, ஆண்மையை அடைவார்கள் என்று நம்புகிறார்கள். இதுவும் ஒரு நம்பிக்கைதானே?”
நான் வியந்துபோய், ராபர்ட்டின் பேச்சுக்கு, தலையாட்டினேன். ராபர்ட் தொடர்ந்தான்.
“அண்ணா.. நான் நமது திருச்சபை நூலகத்தில், இந்து மதம் படித்தேன், இசுலாமிய மதம் படித்தேன். இந்து மதத்திலே, இறைவனுக்காய், அலகு குத்தி, வாயைக் கிழித்துக் கொள்கிறார்கள். நெஞ்சிலே ஈட்டி ஏற்றி, தேர் இழுக்கிறார்கள். அவர்கள் எல்லாம், வாய், நெஞ்சு புண்ணாகி இறந்து போனார்களா?”
“இசுலாமிய மதத்திலே, சியா பிரிவிலே, மக்கள், இறைவன் பட்ட பாடுகளை நினைவூட்ட, தோளிலும், நெஞ்சிலும், வாயிலும், வயிற்றிலும், கத்தியால் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் புண்ணாகி, இறந்து போனார்களா?”
“ஏன் நமது கிறித்துவ மதத்திலே.. பாஸ்கா பண்டிகையின் போது, இயேசு பிரான் போலவே, தங்களையும் சிலுவையில் அறைந்து கொள்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எல்லாம் சிலுவைக் காயங்களால் இறந்து போனார்களா?”
நான், ராபர்ட் பேசுவதை, அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தேன்.
“காயங்களை மனிதர்கள், இறைவனுக்காக ஏற்படுத்திக் கொள்வது என்பது, அவர்களது மத நம்பிக்கை. அது போன்ற, மத நம்பிக்கைதான், நமது சிம்பாரி மலையின் , விந்து புகட்டல் நம்பிக்கையும்.”
“இப்படி, ஆண்பால் சாப்பிட்டு, எத்தனை சிறுவர்கள், நம் சிம்பாரி இனத்தில் இறந்து போனார்கள் அண்ணா? அங்கேயும், இங்கேயும் ஒன்று இருக்கலாம். ஆனால், அப்படி இறந்தவர்களும், ஆண் பால் சாப்பிட்டுத்த்தான், இறந்து போனார்கள் என்பதற்கு, ஆதாரம் இருக்கிறதா அண்ணா”
நான், இல்லை என்று, தலை ஆட்டினேன்.
“அண்ணா.. நமது இனத்தின் எத்தனை ஆண் பிள்ளைகள், ஆண் பால் குடித்து, பெண் ஆக மாறிப் போனார்கள்? யாரும் இல்லையே… ஒன்றிரண்டு சிறுவர்கள்.. பிறப்பிலேயே ஆண் மீது ஆசை கொண்டு, தன்பாலின ஈர்ப்பு ஆண்களாகப் பிறக்கிறார்கள். அவர்களைக் கூட, நம் சிம்பாரி மதம், அரவணைத்தே செல்கிறது. ஆனால், இந்த நற்குணம், கிறித்துவ மதத்தில் கூட, இன்று வரை இல்லையே அண்ணா?” ராபர்ட், மழை பொழிவது போலப் பேசினான்.
நான் கேட்டேன்.. “அப்புறம் ஏன் நீ கிறித்துவத்திற்கு மாறினாய்?” எனது இந்தக் கேள்விக்கு, ராபர்ட் நிதானமாக பதில் சொன்னான்.
“உலகத்தின் எந்தக் கடவுளிடமும், மனிதர்கள் நன்கு வாழ்வதற்காய், தன்னைத் தானே, மாய்த்துக்கொண்ட சரித்திரம் இல்லை. இயேசு பிரானிடம் மட்டுமே, இந்தத் தனித்துவம் இருக்கிறது. எனக்கு இந்தத் தனித்துவம் பிடித்து இருக்கிறது. எனவே நான் மாறினேன்.”
“அண்ணா.. இறுதியாகச் சொல்கிறேன்.. நீங்கள் நம்முடைய கிறித்துவ இறையியல் புத்தகங்கள் படித்துப் பாருங்கள். தனித்துவவாதம், உள்ளடக்கவாதம், பன்மைத்துவம் என்ற மூன்று கொள்கைகளை போதிப்பதே, கிறித்துவ இறையியல்.”
“மற்ற கடவுள்களை விட, இயேசு பிரானிடம் இருக்கும் தனித்துவத்தை நாம் போற்றுவோம். இயேசுவையே இன்னும் கும்பிடாத, நம் சிம்பாரி இன மக்களையும், தனது பிள்ளைகளாக நினைத்து, இயேசு, இரட்சிப்பு வழங்குவார் என்ற உள்ளடக்கவாதத்தை நாம் நம்புவோம். மற்ற மதங்களிலும், நல்ல விஷயங்கள் உள்ளன, அவர்களுடைய இறைவனிலும், நாம் இயேசுவைக் காண்போம், என்ற பன்மை வாதத்தை நாம் நம்புவோம். இதுதான் உண்மையான கிறித்துவம் அண்ணா”
நான் இப்போது ராபர்ட் தம்பியை, அருகில் இழுத்து, அவனை அணைத்து, முத்தமிட்டேன். “தம்பி.. தம்பி…” என்று நான் கண்ணீர் விட்டேன்.
ராபர்ட் இப்போது பேசினான். “அண்ணா.. பத்து நாட்களாக உங்களை கவனிக்கிறேன்.. ஏதோ சோகமாகவே இருக்கிறீர்கள். அப்புறம், நேற்று பூவரசி குறித்துக் கேட்டீர்கள். நீங்கள் மூங்கேன்யு ஆகி ஆண்பால் கொடுத்த அனுபவக் கதையையும், உங்கள் பூவரசி காதல் கதையையும், என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா அண்ணா?” என்று என்னிடம் கேட்டபோது, என்னால் அவனது வேண்டுகோளைத் தட்டிக் கழிக்க முடியவில்லை.
நான் என் எனது மூங்கேன்யு கதை சொல்ல ஆரம்பித்தேன்.
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்
- முறி…
- மௌனம் பேசும்
- பிரியாணி
- மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு
- …பிறந்த பொன்னாடும்…
- ஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்
- கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன
- சமூகம் கொடுக்கும் அழுத்தம்…
- அதுவும் கவிதைதான்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை
- ஆண் பால் -அத்தியாயம் ஐந்து