அம்மனாய்! அருங்கலமே!

 

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே

எல்லாப் பெண்பிள்ளைகளிலும் இவள் மிகச் சிறப்பானவள். இவள் கண்ணனுக்குப் பக்கத்துவீட்டுப் பெண்ணாவாள். நினைத்த போதெல்லாம் கண்ணனை அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றவள்.

”கிருஷ்ணனுக்கு அகலமாய் இடைச்சுவர் தள்ளிப் பொகட்டு ஒரு போகியாக அனுபவிப்பளை எழுப்புகிறார்கள்” என்பது வியாக்கியானம்.

‘க்ருத க்ருத்யத்வம்’ என்று வட மொழியில் வழங்கப் படும் ’சித்த சாதனை’ என்னுமொரு பெரிய தர்மம் எங்கு பேசப்படுகிறது. அதாவது நமக்கு என்று விதிக்கப்பட்ட கடமைகளை நாம் செய்து முடித்து விட்டால் இறைவன் நமக்குக் கண்டிப்பாய் அருள் புரிவான். அப்படி தனக்குரிய தர்மங்களை எல்லாம் செய்துவிட்டு கண்ணன் தன்னிடம் ஓடிவருவான் என்று படுத்திருப்பவள் எங்கு எழுப்பப் படுகிறாள்.

வெளியில் இருப்பவர்கள் உறங்குகின்ற பெண்ணிடம்,

“நீ நேற்றே நோன்பு நோற்று விட்டதுபோல் தெரிகிறதே; எங்களுடன்

சேர்ந்து நோற்பதாகக் கூறினாயே? இப்படி முன்பே நோற்றுவிட்டு அதனால் கிருஷ்ணானுபவமான சுவர்க்கத்தை இப்போது அனுபவிக்கிறாயே! எழுந்து வா” என்கிறார்கள்.

இவர்களுக்கு சுவர்க்கம் என்பது என்ன? சீதாபிராட்டி சொல்வாள்

”ராகவரே! உம்முடன் சேர்ந்திருப்பதே எனக்கு சொர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்கும் இருப்பே நரகம்”

கிருஷ்ணனை யார் உண்மையாக அறிகிறார்களோ அவர்களுக்கு எல்லாநோன்புகளும் முடிந்துவிட்டன என்பது அர்த்தம். அப்படிப்பட்டவள் இவள்.

’அம்மனாய்’ என்பதால் நீ எங்களுக்குத் தலைவி போன்றவள்; தாயைப் போன்றவள் என்று பொருள் கொள்ளலாம்.

”நாங்களெல்லாம் உன் திருவடி போன்றவர்கள்” என்கிறார்கள்.

ஆஞ்சநேயரால் இப்படி வார்த்தை கேட்ட சீதாபிராட்டி  ஆனந்தத்தாலே நெருக்குண்டு ஒருவார்த்தையும் பேசவில்லையாம் அது போல இவளும் பேசாமல் கிடந்தாளாம் அல்லது இவர்களுக்கு அடிமையான தம்மைப் போய் தலைவி என்கிறார்களே என்று பேசாமல் இருந்தாளாம்.

’சரி, நீ எழுந்து வந்து வாசலைத் திறக்க வேண்டாம்;  உன் வாயையாவது திறந்து பேசக் கூடாதா?

உன் அழகைக் கண்ணனுக்குத் தந்தவள் பேச்சை எங்களுக்குத் தரக்கூடாதா?

ஐஸ்வர்யம் விஞ்சினால் உறவினரும் அந்நியராகி விடுவரோ?

படுகுலையடிக்கும் எங்களுக்குத் தண்ணீர் வார்த்தல் ஆகாதா?

உன்னுடைய கிருஷ்ணனைத்தான் தரவில்லை; உன்னையாவது நீ தரக்கூடாதா?”

வாருங்கள் என்று சொல்லாவிடினும் செல்லுங்கள் என்றாவது வாய் திறந்து சொல்லக் கூடாதா?’ என்று கேட்கிறார்கள்.

ஏனெனில் சொல்லுக்கு எப்பொழுதும் சக்தி அதிகம். அதுவும் நமக்கு வேண்டியவர் சொல்லை கேட்க நாம் மிகவும் விரும்புவோம்.

இராமன் ஆஞ்சநேயனிடம்,

”நீ சீதையைப் பார்த்ததைப் பிறகு சொல்; என் சீதை சொன்ன சொல்லை என்னிடம் முதலில் சொல்; அவள் பேச்சைக் கூறு” என்று சொன்னாராம்.

”வாசல் செம்மியானால் வாயும் செம்ம வேண்டுமோ?” என்பது வியாக்கியானம்.

”பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே” என்ற ஆழ்வாரின் குரல் இங்கே கேட்கிறது.

”நீ எங்களை என்ன செய்யப் போகிறாய்?” என்று இவர்கள் கேட்பது ஒரு தாய் திருவிடவெந்தைப் பெருமாளிடம் கேட்டதைப் போல் இருக்கிறது.

தாய் தன் பெண்ணைப் பார்க்கிறாள். அவள் திருவிடந்தையின் இறைவனிடம் மீது மையல் கொண்டுவிட்டது தெரிகிறது. அதனால் இப்பெண் தன் தோழிகளிடம் புன்சிரிப்பையும் விட்டுவிட்டாள். முலைக்குச் சாந்து பூசுதல், குவளைக் கண்ணுக்கு மை தீட்டுதல், கூந்தலுக்கு மலர் சூட்டுதல் போன்ற அலங்காரங்களையெல்லாம் விட்டுவிட்டாள். திருவிடந்தைப் பிரானே! நீ இவளை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்பது போன்ற பாசுரம் இது.

“துளம்படு முறுவல் தோழியர்க்கருளாள்

துணைமுலை சாந்து கொண்டணியாள்

குளம்படு குவளைக் கண்ணினையெழுதாள்

கோல நன்மலர்க் குழற்கணியாள்

வளம்படு முந்நீர் வையம் முன் அளந்த

மாலென்னும்; மாலினமொழியாள்

இளம்படி இவளுக்கென் நினைந்திருந்தாய்

இடவெந்தை யெந்தைபிரானே

இவர்கள் இவ்வாறு பேசப் பேச அவளுக்குக் கோபம் வருகிறது.

”வீணாக என் மீது ஏன் பழி சொல்கிறீர்கள்? நான் கண்ணனை அனுபவிக்கவும் இல்லை. அவன் இங்கு வரவும் இல்லை; போங்கள்”

என்கிறாள்.

”பகவான் வரவில்லையா? நீ அவை அனுபவிக்கவில்லையா? நீ பொய் உரைத்தால் நாங்கள் நம்பி விடுவோமா? அவன் வந்தான் என்று கோள் சொல்ல ஒன்று இருக்கிறதே’ என்று கேட்கிறார்கள்.

இந்த இடத்திற்கு மூவாயிரப்படி வியாக்கியானத்தில் ‘கோயில் சாந்தை ஒழிக்கப்போமோ?” என்று அருளிச் செய்கிறார் பெரியவாச்சான் பிள்ளை.

அதாவது திருக்கோயில்களுக்குச் சென்றால் ஒருவிதமான மணம் வீசும். அப்படிப்பட்ட மணம் உள்ளிருந்து வருகிறது. அதுதான் திருத்துழாய் எனும் துளசியின் வாசனை.

”கமழ்கின்ற அம்மணம் அவன் வந்து சென்றதைக் கோள் சொல்கிறதே: நீயும் அவனும் சேர்ந்து மறைக்கப் பார்த்தாலும் அவன் உன்னிடம் வந்துவிட்டுப் போயிருக்கிறான் என்ற திருத்துழாய் வாசனையை மறைக்க முடியுமோ?”என்கிறார்கள்.

“உன்னைபோலே புறப்படாத தத்வமோ அவன் சூடின தத்வம்” என்பது நாலாயிரப் படி வியாக்கியானம்.

ஆனால் உள்ளே இருப்பவள் பதில் சொல்கிறாள்.

“நீங்கள் சொல்வது சரியன்று அவன் இங்கு எப்போதோ வந்து சென்றான். அந்த வாசனை அது. அவன் ஒரு தடவை வந்து சென்றாலும் அந்த திருத் துழாய் மணம் ஒன்பது தடவை வீசிக்கொண்டிருக்கும். அதை வைத்துக்கொண்டு அவன் உள்ளே இருக்கிறான் என்று சொல்லாதீர்கள்;மேலும் நீங்களெல்லாம் வெளியில் இருக்கும்போது அவன் எப்படி இங்கு வர முடியும்/

அதற்கு இவர்கள்,

’அவன் நாராயணன் அல்லவா? அவன் நீங்கள் பார்க்காமலேயே வரக் கூடியவன்; அவனுக்கு எங்களைப் போலெ கதவு திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை.” என்கிறார்கள்.

அவன்வரக் கூடிய வகைக்கு இப்பாசுரத்தின் விளக்கம் காணலாம்.

ஆடியாடி அகம்கரைந்து, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்கா வென்று,

வாடி வாடுமிவ் வாணுதலே

[திருவாய்மொழி  2-4-1]

இதற்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானத்தில்,

“எங்கும் நாடி நாடி என்றானிலே கம்பமன்றியிலே அவனுடைய வருகை எங்கிருந்தும் வரக்கூடுமே’

என்று நம்பிள்ளை எழுதுகிறார். அதாவது அவன் ஸர்வ வ்யாபி; அவன் எங்கிருந்தும் வரலாம்; எப்படி வேண்டுமானாலும் வரலாம்  என்பது பொருளாகும்.

அவன் ”நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன்” என்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு சிறப்பைக் காணலாம்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் நாராயணன் எனும் திருநாமத்திற்கு முன்னும் பின்னும் அதன் பொருளைச் சொல்லும் மரபு ஒன்று உண்டு.

“எண்பெருக்கந்நலத் தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்’

“நாரணன் மூவேழுலகுக்கும் நாதன்”

‘நானுன்னையன்றியிலேன் கண்டாய் நாரணனே நீ என்னையன்றியிலை”

”காராயின காளநன் மேனியினன் நாராயணன்”

ஆகிய இடங்களில் இதைக் காணலாம்.

அதேபோன்று இங்கும் ”நாற்றத் துழாய்முடி நாராயணன்” என்று கூறுகின்றனர்.

நம்மால் என்பதால் சாதாரணமான எளிய இடைச்சிகளாலும் போற்றத்தக்கவன் என்று கொள்ளலாம். போற்றுதல் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தந்தையார் பெரியாழ்வார் ’பல்லாண்டு’ பாடியதால் அவரைப் பின்பற்றி ஆண்டாளும் ’போற்ற’ என்கிறாள்.

போற்றினால் பறை தருவான். அதாவது கைங்கர்யமான பலனைத் தருவான். மேலும் அவன் புண்ணியன். புண்ணியம் தரும் பிற உபாயங்களைக் காட்டிலும் அவன் மிகச் சிறந்த புண்ணியன் ஆவான்.

“கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,

தோற்று முனக்கே பெருந்துயில் தந்தானோ”

என்று இந்த இடத்தில் கும்பகர்ணன் கூறப்படுகிறான்.

அதுவும் கும்பகர்ணன் யமன் வாயிலே தானாக விழுந்தான். தண்ணீர் குடிக்க வந்தவர் ஏரியில் வீழந்த்தைப் போலவும், விளக்கில் வந்து விட்டில் வீழ்ந்த்தைப் போலவும் அவன் வீழ்ந்தான்.

கும்பகர்ணன் என்றும் ஜீவித்திருக்க நித்தியத்துவம் என்று வரம் வேண்டித் தவமிருந்தவன் நித்திரைத்துவம் என்று கேட்டு விட்டதால் தூக்கமே தலையாகக் கொண்டான். அவன் பேருறக்கம் கொண்டவன். அவ்வளவு எளிதாய் யாரும் அவனின் தூக்கத்திலிருந்து அவனை எழுப்ப முடியாது. போருக்கு அனுப்ப அவனை எழுப்ப படாத பாடு படுகிறார்கள். அவன் மீது ஐநூறு குதிரைகளை ஓட்டியும் மார்பில் உரலை வைத்து அதில் உலக்கையால் குத்தியும் எழுப்புவதைக் கம்பன் பாடுவான்.

”உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்

இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!

கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,

உறங்குவாய், உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய்!

”அப்படிப்பட்ட கும்பகர்ணன் கூட தூக்கத்தில் உன்னிடம் தோற்று விட்டான்போலும். தோற்றவர் வென்றவர்க்குப் பொருள் தருவது போல உனக்குத் தன் உறக்கத்தையும் அவன் தந்துவிட்டானா?

பரசுராமன் கையில் இருந்த வில்லை அவரை வெற்றி கொண்ட இராமன் வாங்கியதுபோல நீ கும்பகர்ணனிடம் உறக்கத்தை வாங்கினாயா? அவனுடையது சாதாரண துயில்தான்; உன்னுடையதோ பெருந்துயிலாகவன்றோ இருக்கிறது.

கும்பகர்ணன் பெருமாளிடமிருந்து ஒருத்தியைத்தான் பிரிக்கத் துணை செய்தான்.  ஆனால் நீயோ இந்த ஊரையே பிரித்து உறங்குகிறாயே?’

என்று சொல்லி எழுப்புகிறார்கள்.

உள்ளே இருப்பவள் ”தனக்குப் போயும் போயும் ஒர் அரக்கனையா ஒப்பாகச் சொல்வது” என எண்ணி ‘க்ருஷ்ண, க்ருஷ்ண’ என்று சோம்பல் முறிக்கிறாள். உடனே இவர்கள்,

”ஆற்ற அனந்தல் உடையாய்” என்கிறார்கள். நாங்கள் இவ்வளவு சொல்லியும் நீ எழுந்திருக்கவில்லையே? எவ்வளவு சோம்பேறித்தனம் உனக்கு”

என்கிறார்கள். அவள் எழுந்து உட்காருகிறாள். சாளரத்தின் வழி அவள் அழகைப் பார்க்கிறார்கள். ’அருங்கலமே’ என்றழைக்கின்றனர்.

“நீ எங்களுக்கு சத் பாத்திரம் போன்றவள். நீ எங்கள் கோஷ்டியில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? வந்து கதவைத் திற” என்கிறார்கள். அதுவும் அவள் பின்கட்டில் இருப்பதால்

”உன்னைத் திருத்திக் கொண்டு தடுமாறாமல் நிதானமாய் வா” என்கிறார்கள்.

 

இந்த இடத்தில் தாரையைப் போல் வராதே என்பது வியாக்கியானம்.

”நாள்கள் பல ஆயிற்றே; சுக்ரீவன் இன்னும் வானரசேனை கொண்டு வரவில்லையே’ எனக் கோபமாய் வந்த இளைய பெருமாளின் முன் வாலியின் மனைவியான தாரையானவள் மது மயக்கத்தாலான கண்களை உடையவளாகவும், நெகிழ்ந்த உடையுடனும் தொங்குகின்ற ஆபரணங்களை உடையவளாகவும் வந்தாள். அப்படி வராதே; திருத்திக் கொண்டு வா” என அழைக்கிறார்கள். இது வால்மீகி இராமாயணம் காட்டும் தாரை.

ஆனால் இங்கே கம்பன் காட்டும் தாரையும் கவனிக்க வேண்டும் கம்பனின் தாரை விதவைக் கோலத்தில் வந்ததைக் கண்டதும் இலக்குவன் தன் கண்களில் நீர் வரத் தலை குனிந்தான்.

”மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்

கொங்கலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டாப்

பொங்கு வெம்முலைகள் பூசுக்கழுத்தொடு மறையப் போர்த்த

நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான்’

”எனவே இங்கே வெளியில் நிறைய இருக்கிறோம். சமூகத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வா; போய் நோன்பு நோற்போம்’ என அவளை அழைக்கிறார்கள்.

இப்பாசுரத்தின் மூலம் பேயாழ்வார் எழுப்பப்படுகிறார்.

இவர் முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவர். மூவரும் திருக்கோவலூரில் சந்திக்கின்றனர். முதலில் பொய்கையாழ்வார் வருகிறார். அடுத்துப் பூதத்தாழ்வார் வர அவருக்குப் பொய்கையாழ்வார் வாசல் திறக்கிறார். அடுத்துப் பேயாழ்வார் வர அவருக்குப் பூதத்தாழ்வார் வாசல் திறக்கிறார்.

பேயாழ்வாருக்குப் பின் யாரும் வராததால் அவர் வாசல் திறக்க வேண்டியதில்லை. எனவே ‘வாசல் திறவாதார்’ என்பது இவருக்குப் பொருந்தும்.

இப்பாசுரத்தில் திருத்துழாயின் மகிமை பேசப்படுகிறது. பேயாழ்வார் திருத்துழாய் பற்றி,

“பொன்தோள் வரைமார்பில் பூந்தந்துழாய் அன்று

கண்டு கொண்ட திருமாலே”           என்றும்

“மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்

தனத்துள்ளான் தந்துழாய் மார்பன்”      என்றும்

பாசுரங்கள் அருளிச் செய்துள்ளார்.

’உன் பெயரே பேயாழ்வார் என்று இருப்பதால் யாவரும் பயப்படப் போகிறார்கள். அதனால் பேய்த்தன்மையாய் வராமல் திருத்தமாக அதாவது ”தேற்றமாய் வந்து திற’ என்கிறார்கள்.

‘அருங்கலமே’ என்பது பாத்திரத்தைக் குறிக்கும். பேயாழ்வார் எம்பெருமானைப் பெற்ற ஸத்பாத்திரமாவார்.

எனவே இப்பாசுரத்தின் மூலம் பேயாழ்வார் எழுப்பப் படுகிறர் என்பது விளங்குகிறது.

Series Navigation